பூவிதழ் புன்னகை - Page 11
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8112
உன்னைப் பார்த்து ஆனந்தப்பட்ட அவர், என்கிட்டயும் சந்தோஷமா பேசினார். 'என்னை அப்பாவாக்கிட்டியே...'ன்னு சொல்லி சொல்லி தன்னோட சந்தோஷத்தை என்கிட்ட பகிர்ந்துக்கிட்டார்.
அப்போ அங்கே ரௌண்ட்ஸ்க்கு வந்த டாக்டரம்மா, உங்கப்பாவை என்னமா கேலி பண்ணினாங்க தெரியுமா? 'வீட்ல யாருக்கும் தெரியாம வந்து பொண்டாட்டியைப் பார்க்கறீங்களா சுந்தர்?'ன்னு அவங்க பண்ணின கேலி இன்னமும் என்னோட மனசுல 'பச்'ன்னு ஒட்டி இருக்கு.
அப்பிடி அவர் அவங்கம்மா, அப்பாட்ட பொய் சொல்லி, நாடகமாடி என்னைப் பார்க்க வந்தது ஒரு சுகம். குடும்பத்துல யார் மனசையும் கஷ்டப்படுத்தாம தன்னோட மனைவியின் உணர்வுகளையும் புரிஞ்சு நடந்துக்கற மனோபாவம் இருந்துட்டா... இல்லற வாழ்க்கை இனிக்கும்.
ஆனா... பிரசவ டைம் முழுசும் மனைவி கூடவே இருந்து அக்கறையா பார்த்துக்கற கணவன் இருக்கற இந்தக் காலத்துல உன்னோட புருஷன், ஏனோ.... தானோன்னு வந்தாரு. போனாரு. ஏதோ இந்த மட்டுக்கும் குழந்தையையாவது பார்த்து ரசிச்சாரே... அதுவே பெரிய விஷயம்தான். ஒரு பானை சோத்துக்கு ஒரு பருக்கையை பதம் பார்த்தா போதும்ங்கற மாதிரி உன்னோட புருஷனோட ஒரு நாள் நடவடிக்கையில அவரோட குணாதிசயத்தைக் கண்டுபிடிச்சுட்டேன். மாமியார் எப்பிடி இருந்தாலும் பரவாயில்லை... புருஷனோட அன்புங்கற அஸ்திவாரம் இருந்தா போதும்ன்னு நாங்க நினைச்சது தப்பா போச்சு.... உன் புருஷன் உன்கிட்ட அன்பா இருக்காரா? உன் புகுந்த வீட்ல என்ன நடக்குது? நாங்க வேதனைப் படுவோம்ன்னு எங்ககிட்ட மறைச்சுட்ட... அது எனக்கும் புரியுது. இனி அது தேவை இல்லை. சொல்லும்மா. நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லு...''
''அம்மா...'' என்று வாய்விட்டு அழுது, தன் துக்கத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தாள் ராதா.
''அந்த வீட்ல என்னை யாரும் மதிக்கறதில்லைம்மா. நான் படிக்காததுனால என்னால வேலைக்கும் போக முடியல. நான் ஆபிசுக்கு வேலைக்கும் போகாததுனாலயோ என்னவோ... என்னை வீட்டு வேலைக்காரியா நடத்தறாங்க. இந்தக் காலத்துல வேலைக்காரியைக் கூட கடுமையா பேசிட முடியாது. லேசா அதட்டி வேலை வாங்கினா கூட மறுநாள்ல்ல இருந்து வேலைக்கு வரமாட்டாங்க வேலை செய்றவங்க. ஆனா... இந்த வீட்டு மருமகளான நான்... மாமியாரோ... என் புருஷனோ... எவ்ளவு கடுமையா பேசினாலும் அதையெல்லாம் சகிச்சுக்கிட்டுதான்மா வாழ வேண்டியதிருக்கு. மாமியார் திட்டினா... புருஷன்ட்ட சொல்லி ஆறுதல் அடையலாம். ஆனா... மாமியார் திட்டறதை அவர்ட்ட சொன்னா... ஆறுதலா ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டார். ஆறுதல் சொல்லாட்டா கூட பரவாயில்ல... என் மேல எரிஞ்சு விழுவார். வீட்ல இருக்கற வாஷிங் மெஷின், க்ரைன்டர், மிக்ஸி மாதிரி நானும் ஒரு மிஷின். அங்கே என்னோட நிலைமை இதுதான். வயித்து பிள்ளைக்காரி... இப்பத்தானே சாப்பிட உட்கார்ந்திருக்காள்ன்னு கூட யோசிக்க மாட்டாங்க. எப்பவும்... நான் சாப்பிட உட்கார்ந்த அடுத்த நிமிஷம் கூப்பிடுவாங்க. ஏதாவது வேலை குடுப்பாங்க. அரைகுறையான சாப்பாட்டுல எழுந்திருக்கற என்னால மறுபடியும் அந்த சாப்பாட்டை சாப்பிடவே முடியறதில்லை. வெறுப்பா ஆயிடும். ஒரு ஊறுகா கூட பண்ண விடமாட்டாங்க. எண்ணெய் அதிக செலவு ஆகிடுமாம். வெளிலயும் வாங்க விட மாட்டாங்க. நீங்க கொடுத்தனுப்பற ஊறுகாதான் செத்துப் போய் கிடந்த என்னோட நாக்குக்கு உயிர் குடுத்துச்சு. வேற எது இருக்கோ... இல்லியோ... ஊறுகாயை வச்சே... ஒம்பது மாச காலம் அங்கே சமாளிச்சுட்டேன்.
நினைச்ச நேரம் காஃபி வேணும் என்னோட மாமியார்க்கும், மாமனாருக்கும். ஒரு நாளைக்கு ஏகப்பட்ட காஃபியை குடிப்பாங்க, அதுக்கு ஆகற செலவெல்லாம் கணக்கு பார்க்க மாட்டாங்க. மாமனார் ரெண்டுங்கெட்டான். ஆனா... எனக்கு அவரால எந்தத் தொல்லையும் கிடையாது. தஞ்சாவூர் பொம்மை தலையாட்டற மாதிரி... மாமியார் சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டுவார். அவருக்கும் பிடிக்காததையோ... நியாயம் இல்லாததையோ மாமியார் செஞ்சாங்கன்னா... அவர் பாட்டுக்கு பேசாம... வாயை இறுக மூடிக்குவார். அவர்... வாயைத் திறந்தா... வீடே ரெண்டாகற அளவுக்கு கத்துவாங்க. அதனால அவர் மௌனமே கதின்னு இருந்துடுவார். மாமனார், மாமியார் ரெண்டு பேரும் எப்பிடியோ இருந்துட்டு போறாங்கம்மா. என்னோட புருஷனும் என்கிட்ட அன்பா இல்லாததுதான்மா ரொம்ப வேதனையா இருக்கு...''
தாயின் மடியில் தலை வைத்து தன் துயரங்களைக் கொட்டினால் அந்த துயரம் தரும் துக்கங்கள் தணியும் என்ற பாச உணர்வில், தன்னுடைய புகுந்த வீட்டு வாழ்க்கை பற்றி அழுது கொண்டே மேலும் விரிவாக எடுத்துக் கூறினாள் ராதா.
''அம்மா... குழந்தையைப் பார்த்து அவர் மனசு மாறும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்குமா...''
''நம்பிக்கைதான்மா வாழ்க்கை. உன்னோட நம்பிக்கையை வீணாக்க நான் விரும்பலை. குழந்தை முகம் பார்த்து உன் புருஷன் குணம் மாறட்டும். மனைவியை ஒரு சமையல்காரி போலவும், வேலைக்காரி போலவும், போகப் பொருள் போலவும் இழிவா நினைச்சு நடத்தற ஆண்கள் எதுக்காகக் கல்யாணம் பண்ணிக்கணும்? தனியாவே இருந்து, வாழ்ந்து சுதந்திரமா திரிய வேண்டியதுதானே? இப்பேர்ப்பட்ட ஆண்களுக்கு எதுக்காகக் கல்யாணம்? குடும்பம்... குழந்தை... குட்டிங்க? இதில்லாம... பணம் குடு, நகை குடுன்னு அம்மாக்காரி கெடுபிடி பண்றதையும் தடுக்கறது இல்லை. பொண்ணைப் பெத்தவங்க பாடு இவ்ளவு கீழ்த்தரமா ஆயிடுச்சு...''
''குழந்தை மேல ஒரு ஈர்ப்பு இருக்கும்மா அவருக்கு. அந்த ஒரு பிடிப்புல அந்த அன்பு... என் மேலயும் அவருக்கு உண்டாகும்ன்னு எதிர்பார்க்கறேன்மா...''
பெருமூச்சு விட்டாள் வனஜா.
''நீ சகல வசதிகளோட சந்தோஷமா, சௌகர்யமா வாழணும்ங்கறதுக்காகத் தான் உன்னோட கல்யாணத்துக்கு ஏகப்பட்ட பணம் செலவு பண்ணினோம். உன்னோட மாமியார் பணம், நகைன்னு அரிச்சு எடுக்கறா. அவ கேட்டதையெல்லாம் செஞ்சும் கூட... உன்னைத் தன் மகன் கூட அண்ட விடாம வச்சிருக்கா...''
''அவங்களால மட்டுமில்லம்மா. இவரோட இயல்பே கொஞ்சம் விட்டேத்தியா... அலட்சியமான போக்காத்தான்மா இருக்கு...''
'' 'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... பின் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே' அப்பிடின்னு கவியரசு பாடி இருக்கார். உன் மாமியாரோட வளர்ப்பு அப்பிடி. அவ வயித்துல சுமந்து அப்புறம் பெத்து வளர்த்து இப்பிடி பாழாக்கியிருக்கா மகனை. உன் வயத்துல நீ சுமந்து பெத்தது மூலமா உன்னோட புருஷனைத் திருத்து...''
''ஆமாம்மா... குழந்தையைப் பார்த்தப்ப அவரோட முகத்துல தெரிஞ்ச அந்த சந்தோஷம்... ஆசை... இதையெல்லாம் நான் கவனிச்சேன். அதை வச்சு அவரை மாத்திடலாம்னு மனசார நம்பறேன்மா...''