பூவிதழ் புன்னகை - Page 15
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
இதெல்லாம் கூட அவ செய்யட்டும். நான் தடை போடலியே? வீட்டையும், குடும்பத்தையும் பார்த்துக்கிட்டா எவ்ளவு நல்லா இருக்கும்? டிஸ்கொதே போய் நடுநிசி வரைக்கும் ஆட வேண்டியது. வீட்டுக்கு லேட்டா வரும்போது 'ஏன் லேட்'ன்னு நான் கேட்கக் கூடாது. படிப்பு இருக்கு, அதனால கிடைச்ச வேலை இருக்குன்னு திமிரா, அவ கால் போன போக்குல போறா. மனம் போன போக்குல வாழறா. 'நல்லபடியா இரேம்மா'ன்னு அறிவுரை சொன்னப்ப... என் கூட பெரிசா சண்டை போட்டுக்கிட்டு வீட்டை விட்டு போயிட்டா. ஆனா.... அப்பப்ப... எங்கேயாவது பார்த்தாள்ன்னா 'எனக்கு உடம்பு சரி இல்லை. ட்ரீட்மென்ட் எடுக்கணும்'னு சாக்கு சொல்லி என்கிட்ட பணம் பிடுங்கிட்டுப் போறா. அவளை எந்த லிஸ்ட்லயும் சேர்க்க முடியாது...''
''கவலைப்படாதீங்கப்பா. அம்மா நல்ல அம்மாவா நமக்கு திரும்பக் கிடைப்பாங்க. ஸ்வாதி அக்காகிட்ட ராதா ஆன்ட்டி அப்பப்ப எனக்காக எனக்குப் பிடிச்ச சாப்பாடு, பலகாரமெல்லாம் குடுத்தனுப்பறாங்க. எவ்ளவு டேஸ்ட்டா இருக்கும் தெரியுமா? எப்பவாச்சும் ஆன்ட்டி ஸ்கூலுக்கு வரும்போது அவங்களைப் பார்க்கறதுதான். அவங்க நம்ம வீட்டுக்கு வரவே மாட்டேங்கிறாங்க...''
''அட நீ என்னம்மா... ராதா ஆன்ட்டி வீடு எவ்ளவு தூரத்துல இருக்கு? அவங்களுக்கு கார் இருக்கு. டிரைவர் இல்லை. அந்த பெரியப்பா ஆபீஸ்ல பிஸியா இருக்கறவர். அவர் கூப்பிட்டுகிட்டு வந்தாத்தான் உண்டு...''
''இது வரைக்கும் ரெண்டு தடவைதான் திலீப் பெரியப்பா, ராதா ஆன்ட்டியை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கார். வந்தப்ப கூட... அவசரம் அவசரமா கிளம்பச் சொல்லி கூட்டிட்டு போயிட்டாரு. நாம அவங்க வீட்டுக்குப் போலாமாப்பா...?''
''ஓ... போலாமே... இப்ப நாம ஸ்கூலுக்கு போலாமே...'' ராகம் போட்டு வினோத் பேசியதும் சிரித்துவிட்டாள் மஞ்சு.
மஞ்சுவை அழைத்துச் சென்று காரில் உட்கார வைத்து, வினோத்தும் காரினுள் ஏறி காரை ஸ்டார்ட் செய்தான். அப்போது அங்கே பவித்ரா வந்தாள். காரின் முன் நின்று கொண்டாள். ஸ்டார்ட் செய்த காரை நிறுத்தினான் வினோத். கதவைத் திறந்தான்.
அதற்குள் பவித்ரா இடது பக்கம் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த மஞ்சுவை நோக்கி வந்தாள். கார் கதவைத் திறந்தாள்.
''என் செல்லக்குட்டி... புஜ்ஜிமா...'' என்று கொஞ்சி முத்தம் கொடுத்தாள்.
''ஐய்யய்யோ... என்னடி செல்லம்... உன்னோட உடம்பு சூடா இருக்கு? ஜுரம் அடிக்குது போல... வா... நாம ஹாஸ்பிடல் போகலாம்.''
''ம்கூம். நான் வரலை. எனக்கு ஒண்ணும் இல்லை. நான் நல்லாத்தான் இருக்கேன்.''
''இல்லம்மா. உனக்கு உடம்பு சூடா இருக்கு. நாம ஹாஸ்பிடல் போயே ஆகணும்...''
குறுக்கிட்டான் வினோத்.
''பவித்ரா... ஸ்கூலுக்கு லேட்டாகுது. அவளை விடு... என்னமோ... உனக்குத்தான் பிள்ளை மேல அக்கறை இருக்கற மாதிரி...''
''பின்னே... எனக்கு இல்லாத அக்கறையா? மஞ்சு செல்லம். சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்து ரெடியா இரு. நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போவேன்...'' என்று மஞ்சுவிடம் கூறியவள், வினோத்திடம் திரும்பினாள்.
''மஞ்சுவை டாக்டர்ட்ட காட்டணும். எனக்கு பணம் வேணும். குடுங்க...''
''பெரி...ய்...ய வேலைக்குப் போற பெரி...ய்...ய அமௌன்ட் சம்பளமா வாங்கற.''
''அதெல்லாம் காலி... ''
''அடிப்பாவி... மாசம் பிறந்து ரெண்டு வாரம் கூட முடியல. அதுக்குள்ள பணம் காலின்னு ஜாலியா சொல்றியே...''
''இதென்ன புதுசா உங்களுக்கு? பணம் குடுங்க...'' ஸ்கூலுக்கு லேட் ஆகிக் கொண்டே போனதால் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து பவித்ராவிடம் கொடுத்தாள். காரில் ஏறி அமர்ந்தான்.
''என்னைக் கொஞ்சம் ஆபீஸ்ல ட்ராப் பண்ணிடுங்களேன். போற வழிதானே... என்னோட கார்ல பெட்ரோல் இல்லை...''
தலையில் அடித்துக் கொண்டான் வினோத். ''சரி... சரி... வந்து ஏறு...'' பவித்ரா ஏறிக்கொண்டாள். அம்மா என்றாலும் கூட அவளிடம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள் மஞ்சு. பிஞ்சு மனதில், பெற்ற தாயின் அலட்சியப் போக்கு வேதனையை விதைத்தது.
கார் விரைந்தது.
17
ஸ்வாதியும், மஞ்சுவும் அவ்வப்போது பள்ளிக் கூடத்தில் சந்தித்துக் கொண்டனர். இருவரும் ஒரே பள்ளிக் கூடத்தில படித்தபடியால் இது சாத்தியமாயிற்று.
அன்றும் தற்செயலாக மதிய உணவு இடைவேளையில் இருவரும் சந்தித்துக் கொள்ள நேரிட்டது.
''என்ன மஞ்சு ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன ஆச்சு?...'' ஸ்வாதி கேட்டாள்.
''வழக்கமா என்ன ஆகுமோ... அதுதான் ஆச்சு... இன்னிக்கும் என்னோட அம்மா வந்தாங்க. வழக்கமா பண்ற டிராமாவைப் பண்ணி, அப்பாகிட்ட இருந்து காசு வாங்கிட்டுப் போயிட்டாங்க... அம்மா இப்பிடி நடந்துக்கறது எனக்கு எவ்ளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?...''
''டிராமான்னு தெரியுதுல... எதுக்காக உங்கப்பா பணம் குடுக்கறாரு...?''
''உனக்கு தெரியாது ஸ்வாதிக்கா. குடுக்கலைன்னா போகவே மாட்டாங்க. ரோட்ல நின்னு கத்துவாங்க. எனக்கும் ஸ்கூலுக்கு வர லேட்டாயிடும். வேணும்னே அதே டைமுக்கு வந்துக்கிட்டிருக்காங்க. என் மேல ரொம்ப அக்கறை எடுத்துக்கற மாதிரி பேசி அப்பாட்ட இருந்து பணம் வாங்கிட்டு போயிடறாங்க.''
''உங்கம்மாவாவது வேலைக்கு போறாங்க. கை நிறைய பணம் சம்பாதிக்கறாங்க. ஆனா எங்கம்மா...? அவங்களுக்கு எதுக்கெடுத்தாலும் எங்க அப்பாவைத்தான் கேக்கணும். சில நேரம் வீட்டு செலவுக்குப் பணம் வேணும்ன்னு கெஞ்சுவாங்க பாரு. பாவமா இருக்கும் அம்மாவைப் பார்த்தா. அப்பா நிறைய சம்பளம் வாங்கறாரு. ஆனா அம்மாவுக்கு குடுக்கறதுன்னா... அம்மா நூறு தடவை கேட்ட பிறகுதான் குடுப்பார். ஏன், எதுக்குன்னு ஆயிரம் கேள்வி கேட்டு குடைவார். அது சரி, உங்கம்மா வேலைக்கு போறாங்கள்ல்ல... பின்ன எதுக்கு வினோத் அங்கிள்ட்ட பணம் பிடுங்கறாங்க...?''
''எங்க அம்மா தேவை இல்லாம செலவு பண்ணுவாங்கக்கா... ஃப்ரெண்ட்ஸ் கூட ஹோட்டல், சினிமான்னு எக்கச்சக்கமா செலவு பண்ணுவாங்க...''
''உனக்கு உங்க அம்மா உன் கூட இல்லையேன்னு மனசு கஷ்டமா இருக்கா?...''
''ஆமா... எனக்கு கஷ்டமாதான் இருக்கு. ஆனா... அவங்க என் மேல பாசமா இல்லாம என் கூடயும் இல்லாம இப்பிடி அலட்சியமா இருக்கறதை பார்த்து கோபமா வருது, வெறுப்பாவும் இருக்கு...''
''நேத்திக்கு எங்க அப்பா ஒரு டி.வி.டி. பார்த்துக்கிட்டிருந்தாரு. அதில பாய்சும், கேள்ஸ்சும் அசிங்க அசிங்கமா துணி இல்லாம டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தாங்க. எங்கம்மா வந்து அப்பாவை கண்டிச்சாங்க. நானும் என்னோட ரூம்ல... கம்ப்யூட்டர்ல டான்ஸ் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்ப... திடீர்னு அம்மா வந்துட்டாங்க. அவங்களுக்கு கம்ப்யூட்டர்ல, இன்ட்டர்நெட்லெல்லாம் தெரியாது. ஆனா நான் ஏதோ பார்க்கக் கூடாதததைப் பார்க்கறேன்னு கண்டு பிடிச்சுட்டாங்க.