பூவிதழ் புன்னகை - Page 18
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
மேத்தா, வினோத்திற்கு நன்கு அறிமுகமான ஒரு செல்வந்தர். வட்டித் தொழில் செய்பவர். ஒரு நாள் மேத்தா ஏதோ கவனக் குறைவால் ஆட்டோவில் இருந்து இறங்கும்பொழுது தவற விட்டுவிட்ட பணப்பையை பத்திரமாக எடுத்து அவரிடம் ஒப்படைத்தான்.
அன்று முதல் அவருக்கு வினோத்தின் மீது அளவற்ற அன்பும், மதிப்பும் தோன்றி இருந்தது.
தன் உற்ற நண்பர்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பொழுது, மேத்தாவிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கு பணம் வாங்கிக் கொடுப்பான். ஒரு நாள் மேத்தாவின் கடைக்குப் போகும் பொழுது, பவித்ராவும் உடன் சென்றிருந்தாள். வினோத், தன் நண்பனுக்காக அவரிடம் கடனாக பணம் வாங்கியதை மனதில் குறித்து வைத்திருந்தாள் பவித்ரா.
வினோத்தை விட்டு பிரிந்த பிறகு மேத்தாவிடம் ஏற்கனவே பணம் வாங்கி இருந்தாள். சம்பளம் வந்ததும் மேத்தாவின் கடனை அடைத்தாள்.
ஒரு முறை குறித்த நாளில் பணத்தைத் திரும்பக் கொடுத்தபடியால் மறுமுறை கேட்கும்பொழுது தயங்காமல் கொடுத்தார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட பவித்ரா, தனது காரில் ஏறினாள். அவளுடைய பிறந்தநாளை ஆடம்பரமாக செலவு செய்து கொண்டாடுவதற்காக மேத்தாவிடம் கடன் வாங்கினாள்.
உயர்தரமான ஹோட்டலுக்கு சென்று, அவளுக்கும் அவளுடைய சிநேகிதிகள் எட்டு பேருக்காகவும் டேபிள் ரிஸர்வ் செய்தாள். அதன்பின் வணிக வளாகம் ஒன்றிற்கு சென்று, தனக்கு புதிய உடை வாங்கினாள்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குரிய முன் நடவடிக்கைகளில் மிக குஷியாக செயல்பட்டாள்.
21
விடுமுறை முடிந்து, பெங்களூர் வந்து சேர்ந்த ராதாவிற்கு வாழ்க்கை, 'அவள் ஒரு தொடர்கதை'யாக இருந்தது. திலீப் ஆபீஸ் போன பிறகு வீட்டு வேலைகளை முடித்த ராதா, 'சற்று கண் அயரலாம்' என்று படுத்தாள். பகல் நேரத் தூக்கம், விழித்த பின் அளிக்கும் புதிய சுறுசுறுப்பைப் பற்றி அனுபவம் பெற்றவள் ராதா.
படுத்தும் தூங்கிய ராதாவை வீட்டு தொலைபேசி தொல்லை படுத்தியது. எழுந்து சென்று ரிஸீவரை எடுத்தாள். பேசினாள்.
''அப்பா... என்னப்பா... எப்பவும் இந்த நேரத்துல கூப்பிடவே மாட்டீங்களே...''
''ஆமாம்மா. வீட்டு வேலைகளை முடிச்சுட்டு இந்நேரம் களைப்பா தூங்கிக்கிட்டிருப்ப. தெரியும். ஆனா... ஆனா...?''
சுந்தரபாண்டியின் குரலில் தென்பட்ட பதற்றம், ராதாவையும் பற்றிக் கொண்டது.
''என்னப்பா... ஏன் பதற்றமா இருக்கீங்க? என்ன ஆச்சு? எனக்கு படபடப்பா இருக்குப்பா. சொல்லுங்கப்பா...''
''அ... அ... அது... வந்தும்மா... உன்னோட மாமியாரும், மாமனாரும் இங்கே நம்ம வீட்ல வந்து இருக்கப் போறாங்களாம். அவங்க இப்ப இருக்கற வாடகை வீட்ல என்னமோ பிரச்னையாம். அதனால அந்த வீட்டை காலி பண்ணிட்டு இங்கே வரப் போறாங்களாம்...''
''என்னப்பா இது பைத்தியக்காரத்தனமா இருக்கு?''
''எனக்கே பைத்தியம் பிடிச்சுடும் போலத்தான் இருக்குமா...''
''யார் உங்களுக்கு சொன்னா? என்ன நடந்துச்சு?''
''மாப்பிள்ளை உன்கிட்ட ஒண்ணும் சொல்லையாம்மா?''
''எல்லா விஷயத்தையும் என்கிட்ட ஒண்ணுவிடாம சொல்றவராக்கும் என் புருஷன்? இப்ப என்னப்பா செய்யப் போறீங்க?''
''என்னம்மா செய்யறது? வீடு உன் பேர்ல இருக்கு. 'வெளியே போங்கன்னு' சொன்னா... போய்த்தானே ஆகணும்?''
''அப்பா... நான்... உங்களை... வீட்டை விட்டு போகச் சொல்றதா...?'' உணர்வுப் பெருக்கத்தில் துடித்தபடி பேசினாள் ராதா.
''அட நீ வேறம்மா. ஒரு பேச்சுக்கு சொன்னா...''
''சும்மா பேச்சுக்குக் கூட அப்பிடி சொல்லாதீங்கப்பா.''
''அதை விடும்மா. உங்க அம்மா இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கா. கடனோ... உடனோ... அது பாட்டுக்கு அது... எப்பாடு பட்டாவது கட்டிடலாம்ன்னு மத்த விஷயங்கள்ல்ல நிம்மதியா இருந்தோம். சொந்த வீடு, சொற்பமான வருமானம், அதுக்குள்ள கட்டுக் கோப்பான செலவு, பசிச்சா வயிறு நிறைய சாப்பிட உணவு, படுத்தா... படுத்ததும் தூங்கற நிம்மதி... அப்பிடின்னு ஏதோ ஓரளவுக்கு அமைதியா வாழ்ந்துக்கிட்டிருக்கற எங்களை ஒரேயடியா பாடு படுத்தறாங்கம்மா உன் மாமியார்...''
''அப்பா... நான் அவர்ட்ட பேசறேன்ப்பா. இது நியாயமான்னு கேக்கறேன்ப்பா. அவங்களை நம்ம வீட்டுக்குள்ள நுழைய விடாம நான் பார்த்துக்கறேன்ப்பா. நீங்க கவலைப்படாதீங்க...''
''கவலைப்படாம எப்பிடிம்மா இருக்க முடியும்? எங்களுக்காக நீ பரிஞ்சுப் பேச, மாப்பிள்ளை உன்னை புரிஞ்சுக்காம திட்டித் தீர்ப்பார். திட்டறது மட்டுமா? நீ சொல்றதை கேக்கவும் மாட்டார். எனக்கென்னமோ அந்த மனுஷன் நியாயமா நடந்துப்பார்ன்னு தோணலைம்மா. நீ எதுவும் பேச வேண்டாம்...''
''பேசித்தான்ப்பா தீரணும் சில நேரங்கள்ல்ல. பேசினாத்தான் நமக்கு நீதி கிடைக்கும்...''
''ஹூம்... நீதி... நியாயம்... நேர்மை... இதெல்லாம் என்ன விலைன்னு கேக்கற ஒரு தாய்க்கு பிறந்தவன்மா உன் புருஷன். காது குடுத்து கேட்பானா நீ பேசறதை...?''
''காது அவருக்கு இல்லைன்னாலும்... எனக்கு வாய் இருக்குப்பா. நான் பேசுவேன். வாய் இல்லாத பூச்சியா எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?''
''எத்தனை நாளைக்குன்னு கணக்கு சொல்ல முடியதுமா இதுக்கு. உன்னோட வாழ்நாள் முழுசும் அப்பிடித்தான் நீ இருக்க முடியும். ஏன் தெரியுமா? உனக்கு தெரியாதது இல்ல... உன்னை கல்யாணம் பண்ணின நாள்ல்ல இருந்து அடக்கியே வச்சிருக்கான் உன் புருஷன். அவன் என்ன குடும்ப சாம்ராஜ்யமா நடத்தறான்? அரச சர்வாதிகாரம்ல பண்ணிக்கிட்டிருக்கான்...?''
''சர்வாதிகாரத்துக்குக் கட்டுப்படற கொத்தடிமையா நான் இருக்கறதுக்கு காரணம் நான் படிக்காததுதான்ப்பா...''
''படிக்காத பொண்ணுகளோட புருஷனேல்லாம் இப்பிடித்தான் கூட வாழ வந்த பொண்ணை வாட்டி வதைக்கறானுங்களா?''
''வாட்டி வதைக்கும்போது, நான், வாடி வதங்கறதுக்குக் காரணம் அதிகம் படிக்காததுனால எனக்குள்ள ஏற்படற தாழ்வு மனப்பான்மைப்பா. எதிர்த்து வாதாடறதுக்கும், போராடறதுக்கும் எனக்கு துணிச்சல் இல்லாததுக்கு நான் படிக்காததுதான் காரணம்..''
''காரண காரியங்களை ஆராய்ச்சி பண்ற நேரம் இல்லைம்மா இது. வீட்டு விஷயத்துக்கு என்ன பண்ணலாம்ன்னு நீயே சொல்லு...''
''நான் சொல்றதை அம்மா கேட்டாங்களா? கல்யாணத்துக்கு முன்னாலயே, அவங்க நம்ப வீட்டை என்னோட பேருக்கு மாத்தி எழுதிக் கேட்டப்ப 'வேண்டவே வேண்டாம்'ன்னு எவ்வளவோ சொன்னேன். அம்மா கேக்கலை. பிடிவாதம் புடிச்சாங்க...''
''வாதத்துக்கு மருந்து இருக்கும்மா ராதா பிடிவாதத்துக்கு மருந்தே கிடையாது. இப்பிடி நாம சிக்கிக்கிட்டோமே...''
''சிக்கலை எடுக்கணும்ப்பா... ஆனா... அது எப்பிடின்னு தான் தெரியலை. கண்ணை கட்டி காட்டில விட்டது மாதிரி இருக்கு...''
''காடு 'வா' 'வா'ங்குது... வீடு 'போ'...'போ'ங்குதுன்னு சொல்லுவாங்க. அது நம்பளோட வாழ்வின் கடைசி காலத்தைக் குறிப்பிட்டு சொல்லுவாங்க. ஆனா அந்த நிலைமை இப்ப எங்களுக்கு உருவாயிடுச்சேம்மா...''