பூவிதழ் புன்னகை - Page 21
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகே, ராதாவிற்கு ஃபோன் செய்து தகவல் கூறி இருந்தார் மேனேஜர்.
மருத்துவமனையில், மருத்துவர் முதல் சிகிச்சையாக ரத்தம் வெளியேறுவதை நிறுத்திய பின், அடுத்த சிகிச்சையாக ஸ்வாதியின் கண்ணுக்கு மேல் பகுதியில் புகுவத்திற்கு சற்று கீழே கிழிபட்டிருந்த சதைப் பகுதியில் தையல் போட்டார்.
மருந்தின் மயக்கத்தில் இருந்த ஸ்வாதியை ஸட்ரெச்சரில் வைத்து தனி அறைக்குக் கொண்டு சென்று படுக்க வைத்தனர்.
வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த ராதா, அங்கே ஸ்வாதி இருக்கும் நிலைமை பற்றி விசாரித்தாள். ஸ்வாதி இருக்கும் அறை எது என்று அறிந்து அங்கே சென்றாள்.
அனஸ்திஸ்யாவின் விளைவால் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த ஸ்வாதியைப் பார்த்து பயத்தில் மேலும் வியர்த்துப் போனாள் ராதா. நெஞ்சில் இடி இடித்தது போல் இருந்தது அவளுக்கு. வலது கண் முழுவதும் மறைக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தபடியால் கண்ணிற்கு ஆபத்தோ என்று கதி கலங்கி அழுதாள். அப்போது அங்கே வந்த நர்ஸ், ராதாவின் தோளைத் தொட்டு கூப்பிட்டாள்.
''இந்த பேஷண்ட் ஸ்வாதி, உங்க பெண்ணா மேடம்...?''
''ஆ... ஆமா... என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?..''
''நல்ல வேளை மேடம். என்ன புண்ணியம் பண்ணீங்களோ... வலது பக்கக் கண்ணுக்குள்ள பட வேண்டிய அடி, கண்ணுக்கு மேல பட்டதுனால கண் தப்பிச்சு, கண் பார்வையும் தப்பிடுச்சுச்சு...''
இதைக் கேட்டு நிம்மதி அடைந்தாள் ராதா.
''இவளுக்கு எப்பிடி அடிபட்டது? அதைப் பத்தி தெரியுமா...?''
அப்போது அந்த அறைக்கு வெளியே இருந்து குரல் கேட்டது.
''அதை நான் சொல்றேன்...'' வினோத் உள்ளே வந்தான். அவளுடன் தலை குனிந்தபடி நின்றிருந்தாள் மஞ்சு.
''இவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போகாம ரெஸ்ட்டாரண்ட்டுக்கு போயிருக்காங்க. அங்கே, மத்த ஸ்கூல் பையன்களும் வந்திருக்கானுங்க. ஏதோ தகராறு வாய் சண்டை கை கலப்பு சண்டையாயிருக்கு. ஒருத்தர் மேல ஒருத்தர் நாற்காலியை தூக்கிப் போட்டிருக்கானுங்க. இவங்க ரெண்டு பேரும் வெளியேறப் பார்த்தப்ப, ஸ்வாதியோட தலையை ஒரு நாற்காலியோட கால் பகுதி பதம் பார்த்துடுச்சு... ஹோட்டல் மேனேஜர் என்னோட நம்பர், உன்னோட நம்பர் ரெண்டையும் மஞ்சு கிட்ட கேட்டு வாங்கி ஃபோன் பண்ணினார். இவ, உனக்கும் எனக்கும் பயந்துக்கிட்டு ஹாஸ்பிட்டல் ரிசப்ஷன்ல மறைவா உட்கார்ந்திருந்தா. பார்த்து 'என்ன நடந்துச்சு?'ன்னு விசாரிச்சு கூட்டிட்டு வந்திருக்கேன்...''
''அடக்கடவுளே... ஸ்கூல்ல படிக்கற சின்னப் பிள்ளைங்க செய்யற காரியமா இது?...'' படபடப்பாக பேச ஆரம்பித்தாள் ராதா.
''ராதா... கொஞ்சம் பொறு. இப்போதைக்கு இதைப் பத்தி பேச வேண்டாம். ஸ்வாதி குணமாகட்டும். இவங்க ரெண்டு பேர்ட்டயும் அப்புறமா பேசலாம்...''
''ஸ்வாதிக்கு எவ்ளவு புத்திமதி சொல்லி இருக்கேன் தெரியுமா? நான்தான் படிக்காம கொள்ளாம அவதிப்பட்டுக்கிட்டிருக்கேன்னு பார்த்தா... இவ இப்பிடி பிஞ்சுல பழுத்துக்கிட்டிருக்காளே...''
''ராதா... நான்தான் சொல்றேன்ல... இப்ப எதுவும் பேச வேண்டாம். விஸிட்டர்ஸ் டைம் முடிஞ்சுது. நான் கிளம்பறேன்'' என்ற வினோத் அங்கிருந்து வெளியேறினான்.
மருத்துவமனை ரிஸப்ஷன் அருகே வந்த ராதா, அங்கு அனுமதி பெற்று, தொலைபேசியைப் பயன்படுத்தி திலீப்பை அழைத்தாள்.
''என்னங்க... ஸ்வாதிக்கு அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கு... நீங்க உடனே வாங்களேன்...''
''எப்பிடி அடிப்பட்டது? என்ன ஆச்சு?''
''அதையெல்லாம் நான் நேர்ல சொல்றேன். நீங்க இங்கே... தன்வந்திரி ஹாஸ்பிட்டலுக்கு வாங்களேன்.''
''எனக்கு இப்ப முக்கியமான வேலை இருக்கு. என்னால இப்ப வர முடியாது...''
''என்னங்க... ப்ளீஸ்... என் கையில பணமே இல்லை. எனக்கு இது எந்த ஏரியா... என்ன ஏதுன்னு எதுவும் தெரியாது. பணம் எடுத்துக்கிட்டு உடனே வாங்களேன் ப்ளீஸ்...''
''அறிவு கெட்டத்தனமா பேசாதே. என்னால இப்ப அவ்ளவு தூரம் வர முடியாது... வைத்தியம் முடிஞ்சதும் ஒரு டேக்ஸியில ஏறி வீட்டுக்குப் போய் பணம் குடு. அவ்ளவுதானே...?''
''அவ்ளவுதானன்னு சாதாரணமா சொல்றீங்க. ஆஸ்பத்திரியில ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் பில்லு குடுப்பாங்களே... அந்த தொகைய கட்டணும்ல? பணம் கட்டாம வெளியே விடமாட்டாங்க. அதனால எனக்கு பணம் வேணும். ஸ்வாதிக்கு இன்னும் மயக்கம் தெரியல. எனக்கு பயம்மா இருக்குங்க. ட்ரீட்மெண்ட் இப்போதைக்கு முடிஞ்சுடாது. தையல் போட்டிருக்காங்க. அதைப் பிரிச்சப்புறம்தான் வீட்டுக்கு விடுவாங்க. புரிஞ்சுக்காம... 'டேக்ஸி பிடிச்சு வீட்டுக்கு போ'ன்னு சொல்றீங்களே...''
''இங்க பாரு. உன்னோட புலம்பலை நிறுத்து. என்னால எங்கயும் வர முடியாது...''
அலைபேசி தொடர்பை துண்டித்தான் திலீப். இதற்குள் மயக்கம் தெளிந்து விழித்துக் கொண்ட ஸ்வாதி, தன் அம்மா ராதா, அப்பாவிடம் கெஞ்சுவதையும் அவர் வர மறுத்துப் பேசுவதையும் புரிந்து கொண்டாள்.
'ச்ச... அப்பா என் மேல பிரியமா இருக்கார். அதனால அவர் ரொம்ப நல்லவர்னு நினைச்சுக்கிட்டிருந்தேனே... ஆனா... எனக்கு இப்பிடி அடிபட்டு, நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு தெரிஞ்சு என்னைப் பார்க்க வர மறுக்கிறாரே... என்னை விட அவருக்கு அவரோட வேலைதான் முக்கியமாயிடுச்சா?!... அப்பிடி என்ன வேலை? அம்மா, தன் கையில பணம் இல்லைன்னு கெஞ்சியும், கல் நெஞ்சுக்காரரா 'இப்ப என்னால வர முடியாது'ன்னு சொல்றாரே...' இவ்விதம் நினைவுகளை சுழலவிட்ட ஸ்வாதி, மயக்க மருந்தின் வேகம் மீண்டும் அவளைக் கஷ்டப்படுத்தவே, அயர்ச்சியுடன் கண்களை மூடிக் கொண்டாள்.
'மகள் ஸ்வாதின்னா இவருக்கு ரொம்ப பிரியமாச்சே... இவ அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காள்னு சொல்லியும், உடனே வர முடியாத அளவுக்கு அப்பிடி என்ன தலை போகிற வேலை? தவிச்சுப் போய் நான் பேசறதுக்குக் கூட ஒரு வார்த்தை ஆறுதலா பேசலியே... அது கூட போகட்டும். கையில பணம் இல்லைங்கறேன். அதுக்குக் கூட அவர் எதுவுமே சொல்லலையே...' ராதா தனக்குள் நினைத்துக் கொண்டிருக்க, அவளது இதயம் அவளிடம் பேச ஆரம்பித்தது.
''மனைவியைப் பத்தியும் அக்கறை இல்லை. மகளைப் பத்தின கவலையும் இல்லை. 'சினிமாவுக்குப் போயிருக்கீங்களா? சரி... படம் முடிஞ்சதும் வாங்க'ன்னு சொல்ற மாதிரியில்ல பேசறீங்க? எனக்கு ஒரு ஸெல்ஃபோன் கிடையாது. க்ரெடிட் கார்ட் கிடையாது... எதுக்கெடுத்தாலும் உங்களை நம்பி, உங்களை எதிர்பார்த்து காத்து கிடக்க வேண்டியதிருக்கு... பிச்சைக்காரி மாதிரி நிக்க வேண்டியதிருக்கு. தாலி கட்டினவ மேல பெரிசா அன்பு இல்லாட்டா கூட பரவாயில்லை... மகளுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்காள்னு தெரிஞ்சும் கூட எந்தப் பரபரப்பும் இல்லாம... வேலை இருக்குன்னு சொல்றீங்களே...