பூவிதழ் புன்னகை - Page 24
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
நீங்கள் போனதில் இருந்து என் மனதில் சதா சர்வமும் உங்கள் நினைவுதான். மறுபடி எப்ப வருவீங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். உங்களுக்கு இன்னொரு குடும்பம் இல்லைன்னா... நீங்களும், நானும் ஒரு குடும்பமா வாழலாம், நீங்க என் விரல்ல போட்டுவிட்ட புது வைர மோதிரம், உங்களைப் போலவே என்னைப் பார்த்து, கண் சிமிட்டுது. சீக்கிரம் வாங்க. ஐ லவ் யூ... உங்கள் மிருணா.'
இந்த வாசகங்கள் ஆங்கிலத்தில் திலீப்பின் மொபைலுக்கு மேஸேஜாக வந்திருந்தது. தற்செயலாக 'கேம்ஸ்' விளையாடுவதற்காக திலீப்பின் மொபைலை எடுத்த ஸ்வாதிக்கு அந்த மெசேஜைப் பார்க்க நேரிட்டு அதை அப்படியே தனது நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துருந்தாள். கூடவே மெஸேஜ் எந்த நம்பரில் இருந்நு வந்திருந்ததோ... அந்த நம்பர்களையும் எழுதி வைத்திருந்தாள். ஆங்கிலத்தில் ஸ்வாதி எழுதி இருந்ததைப் படித்து புரிந்து கொண்டாள் ராதா. ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டாலும், ஓரளவு பேசுவதையும். எழுதுவதையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தது ராதாவிற்கு. எனவே அந்த மொபைல் ஃபோன் மேஸேஜ்ஜைப் படித்து, இதயத்தில் இடி விழுந்தது போல் இருந்தது. பெற்ற மகள் பார்த்து, தன் அப்பாவுடைய மறைமுக வாழ்க்கை பற்றி தாயிடம் வெட்ட வெளிச்சமாக்கிய அவலம் தன் வாழ்வில் நேரிட்டதை எண்ணி, குமுறி குமுறி அழுதாள் ராதா. தன்னுடைய அறைக்கு சென்ற கதவைப் பூட்டிக் கொண்டு அழுது தீர்த்த பின் வெளியே வந்தாள்.
கதவைப் பூட்டிக் கொண்ட அம்மா, 'என்ன செய்கிறாளோ' என்று திகிலுடன் இருந்த ஸ்வாதி, வெளியே வந்த ராதாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அழுதாள்.
''அழாதடா ஸ்வாதி. இனிமேல் அழறதுக்கு ஒண்ணுமே இல்லை. நான் அழ மாட்டேன். என் கண்ல இருந்து இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது...'' என்று வறண்ட குரலில் கூறிய ராதா, தன் நெஞ்சில் ஸ்வாதியை அணைத்துக் கொண்டாள்.
''இப்ப புரியுதாம்மா...? அப்பா ஏன் என்னைப் பார்க்க வரலைன்னு... உங்களை உதாசீனப் பண்றதுக்கு காரணமும் இதுதான்...''
''ஆனா... அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நாள்ல்ல இருந்தே அப்பிடித்தான் இருந்தார். சிரிக்க மாட்டார். கலகலன்னு பேச மாட்டார். ஆனா... இப்ப...''
''ஆனா... இப்ப... இன்னொருத்தி... அவர் கூட இருந்த நாட்களைப் பத்தி அருமை பெருமையா மெஸேஜ் அனுப்பி இருக்கா. அதைத்தானே சொல்ல வர்றீங்க? இரட்டை மனசு கொண்டவர் அவர்ன்னு புரிஞ்சு போச்சும்மா... ''
''அவருக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கான்னே எனக்கு சந்தேகமா இருந்துச்சு இத்தனை நாளா. நீ என்னடான்னா... ரெண்டு மனசு உள்ளவர்ன்னு சொல்ற?
''அம்மா... அப்பாகிட்ட இதைப் பத்திக் கேக்கப் போறீங்களாம்மா?''
''கேட்டுத்தானே ஆகணும்? என்னை இங்கே வேலைக்காரியா, சமையல்காரியா நடத்தறார். அங்கே எவளோ மிருணாவாம். அவளை மகாராணி போல நடத்தறார் போலிருக்கு?''
''எனக்கு அடிபட்டு ஆபத்தான நிலைமையில ஆஸ்பத்திரியில கிடந்தப்ப அங்கே அந்த மிருணா கூடத்தான் இருந்திருப்பார். என்னைப் பார்க்க வரக்கூட மனசு இல்லை. உங்களுக்கு செலவுக்கு பணம் குடுக்க மாட்டாராம். அந்த மிருணாவுக்கு வைர மோதிரம் வாங்கிப் போட முடியுமாம். என்னம்மா இது நியாயம்?''
''நியாயம் அநியாயமெல்லாம் பார்க்கறவரா இருந்தா அவர் ஏன் இப்பிடி ரெட்டை வாழ்க்கை வாழறார்? போகட்டும் விடு. அவர்ட்ட நான் பேசிக்கறேன். நீ சின்னப் பொண்ணு. உன் கண்ல படக் கூடாத விஷயம் பட்டுடுச்சு. உனக்குத் தெரியக் கூடாத விஷயம் தெரிஞ்சுடுச்சு. இந்த நிமிஷத்தோட இதையெல்லாம் மறந்துடு. இனிமேல உன்னோட ஒரே எண்ணம் படிப்புலதான் இருக்கணும்...''
''எப்பிடிம்மா மறக்க முடியும்? அவரை வெறுக்கத்தான் முடியுதே தவிர அவரோட மோசமான நடவடிக்கைகளை மறக்க முடியாது. அவர் எனக்கு அப்பாவே இல்லை. ஒரு அப்பாவா... கண்ணியமா அவர் நடந்துக்கவும் இல்லை.''
''நீ நல்லபடியா வளர்ந்து முன்னேறி வாழ்ந்து காட்டு, அதுக்கு நீ நிறைய படிக்கணும். உன் சொந்தக் கால்ல நிக்கணும். யாரையும் சார்ந்திருக்காத ஒரு வாழ்வை நீ அமைச்சுக்கணும்.''
''நீங்க கவலைப்படாதீங்கம்மா. என்னோட 'உயர் கல்வி'ங்கற உங்க கனவை நான் நனவாக்குவேன். நிஜமாக்குவேன். உங்களை நான் பார்த்துப்பேன். நீங்கதான் என்னோட உலகம். நீங்க மட்டும்தான் என்னோட உலகம்...''
உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய ஸ்வாதியை கட்டிப் பிடித்துக் கொண்டாள் ராதா.
''நீ சின்னப் பொண்ணு. பெரிசா... சிந்திக்கற... பேசற... இப்ப உன் மேல எனக்கு நம்பிக்கை வந்துருச்சு. ஆனா... நடந்ததைப் பத்தி யோசிக்காதே. அந்த நினைப்பு உன்னோட படிப்பைக் கெடுத்துடும்.''
''சரிம்மா. ஆனா... அப்பா கிட்ட அந்த மிருணா விஷயத்தைப் பத்தி நிதானமா பேசுங்கம்மா... ''
''இப்பத்தானே சொன்னேன்... வேற எதைப் பத்தியும் யோசிக்கக் கூடாதுன்னு... சாமி கும்பிட்டுட்டு படுத்துக்க.''
''சரிம்மா...''
ஸ்வாதி, அவளது அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.
27
இரவின் மடியில் நிலவு துயிலும் நேரம். இமைகள் மூடாமல் வேதனைகள் மறையாமல் திலீப்பிற்காகக் காத்திருந்தாள் ராதா.
முன்பு வீட்டில் மட்டுமே அறையில் வைத்து மதுபானம் குடித்துக் கொண்டிருந்த அவன், பிற மாதுவின் பழக்கம் ஏற்பட்ட பிறகு வீட்டிற்கு வரும் பொழுதே குடித்துவிட்டு போதையில் வந்து கொண்டிருந்தான்.
வீட்டுக் கதவைத் திறந்ததுமே மதுவின் நெடி, ராதாவின் வயிற்றைப் புரட்டியது. பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொண்டாள்.
உள்ளத்திற்குள் எழுந்த கோபத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் தவித்தாள். அதிர்ந்து பேசி பழக்கம் இல்லாத அவளால் அவஸ்தைப்படத்தான் முடிந்தது. என்றாலும் உரிமையின் குரல் உந்தித் தள்ளியபடியால் பேச ஆரம்பித்தாள்.
அறைக்கு சென்று கொண்டிருந்தவனை அழைத்தாள்.
''நில்லுங்க...''
அவளது குரல் திலீப்பிற்கு வித்தியாசமாக ஒலித்தது. வியப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்து, நின்றான்.
''என்ன?'' கேட்டான்.
''எங்கே இருந்து வர்றீங்க?'' எதிர் கேள்வி கேட்டாள் ராதா.
''என்ன கேள்வி புதுசா இருக்கு?'' நக்கலாக் கேட்டான் திலீப்.
''புதுசு புதுசா உங்களுக்குத்தானே வேண்டியதிருக்கு...?''
இதைக் கேட்டதும் சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை திலீப். அதன்பின் புரிந்து கொண்டான்.
'இவளுக்கு மிருணா விஷயம் தெரிஞ்சுருக்கு போல... ஹும்... தெரிஞ்சா என்னத்தை கிழிச்சுட முடியும் இவளால? பயந்தது போலவோ தயக்கப்படறது போலவோ காட்டிக்கக் கூடாது. தைரியமா பேசணும். நல்ல வேளை... உள்ள, போயிருக்கற சரக்கு எனக்கு துணிச்சலைக் குடுக்கும்.' திமிரில் மிதந்து கொண்டிருந்தை திலீப்பின் தீவிரமான எண்ணங்கள் ஏற்படுத்திய மௌனம், ராதாவால் கலைக்கப்பட்டது.