பூவிதழ் புன்னகை - Page 28
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
''என்ன ராதா...?''
''எ... எ... எனக்கு... என்னோட நகைகளை அடகு வைக்கணும் அல்லது விக்கணும்...''
''ஏன்? என்ன ஆச்சு... ஏன் உன் குரல் ஒரு மாதிரியா இருக்கு...?''
''அதெல்லாம் நேர்ல சொல்றேன். ஸ்வாதி ஸ்கூலுக்கு போறதுக்குள்ள எனக்கு நகையை வித்து, பணம் வேணும்...''
''சரி. நான் இப்ப உடனே அங்கே வர்றேன்...'' தொலைபேசியின் ரிஸீவரை வைத்து விட்டு கனத்த நெஞ்சத்துடன் சமையலறைக்குப் போக முற்பட்டாள்.
''அம்மா... அப்பா ஏம்மா இப்பிடி நடந்துக்கறார்? எனக்கு அவரை பிடிக்கவே இல்லை. முன்ன எப்பப் பார்த்தாலும் உங்களை திட்டிக்கிட்டே இருந்தார். இப்ப என்னடான்னா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம வீட்டை விட்டே போயிட்டாரே... நீங்க அவரோட கால்ல விழுந்து கெஞ்சி கேட்டும் கூட உதறி விட்டுட்டு போயிட்டாரே... எனக்கு வெறுப்பா இருக்கும்மா...''
''நீ இதைப் பத்தியெல்லாம் பேசாதே. உனக்கு படிப்புதான் முக்கியம். அதில மனசை செலுத்து...''
''படிப்புல மனசை செலுத்த முடியாம நேத்து நடந்தது என்னை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கும்மா.''
''மறக்க வேண்டியதை மறந்துதான் ஆகணும். இப்ப நீ குளிக்கப் போ. ஸ்கூலுக்கு ரெடியாகணும்ல? சீக்கிரமா கிளம்பினாத்தான் பணம் புரட்ட முடியும்...''
''சரிமா...'' ஸ்வாதி குளிக்கச் சென்றாள்.
மளமளவென்று காலை உணவையும், மதிய உணவையும் தயாரித்து முடித்தாள் ராதா. ஃப்ரிட்ஜிலும் வீட்டிலும் இருந்த காய்கறிகளை வைத்து சமைத்தாள். அவள் சமைத்து முடித்ததோடு சமையலறை அலமாரியில் இருந்த இதயம் நல்லெண்ணையையும், சில மளிகை பொருட்களும் முற்றிலுமாகக் காலியாகி இருந்தன. டிபன் பாக்ஸில் உணவு வகைகளை எடுத்து வைத்து விட்டு, தானும், குளித்து, தயாரானாள். இதற்குள் வினோத் அங்கே வந்தான்.
''வினோத் இப்ப எந்த விஷயமும் ஸ்வாதி முன்னால கேட்க வேண்டாம். அவளுக்குத் தெரியாத விஷயம் இல்லை. இருந்தாலும் கூட எதுவும் பேச வேண்டாம். அவளை ஸ்கூல்ல விட்ட பிறகு நாம பேசுவோம்...''
''சரி ராதா. இப்போதைக்கு நான் பணம் கொண்டு வந்திருக்கேன். அதில செலவு பண்ணிக்கலாம்.''
''ஆனா... நகையை வித்தப்புறம் அந்த தொகையை நீ வாங்கிக்கணும்...''
''அதை... அப்பறம் பார்க்கலாம்...''
''ம்கூம். இந்த நிபந்தனைக்கு நீங்க ஒத்துக்கிட்டாத்தான்.''
''சரி ராதா... ஆனா... இவ்ளவு சீக்கிரம் நகையை பணமாக்கற கடைகள், பேங்க்.. எதுவுமே திறந்திருக்காது. நிதானமா வாங்கிக்கறேன்...''
''சரி'' நான் போய் சாப்பிட எடுத்து வைக்கிறேன் என்ற ராதா நகர்ந்ததும், ஸ்கூலுக்கு ரெடியான ஸ்வாதி அங்கே வந்தாள்.
''குட்மார்னிங் வினோத் அங்க்கிள்...'' ஸ்வாதியின் குரலில் தென்பட்ட சோகம் உணர்ந்து வேதனைப்பட்டான் வினோத்.
''சாப்பிடுமா. ஸ்கூலுக்கு போகணும்ல்ல?''
''பசிக்கல அங்க்கிள்.''
''காலை நேரத்துல சாப்பிடாம இருக்கறது ரொம்ப தப்பு. வாய்வுத் தொல்லை வந்துடும். சாப்பிடு...''
ராதா, தோசைகளை எடுத்து வந்தாள்.
''நீயும் சாப்பிடு வினோத்...''
''நீ சொல்லாட்டாலும் நிச்சயமா நான் சாப்பிடுவேன்.'' அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையை சற்று தளர்த்துவதற்காக முயற்சித்தான் வினோத். சாப்பிட ஆரம்பித்தான்.
''ஆஹா... சாம்பார்... உன்னோட கைப்பக்குவத்துல எவ்ளவு டேஸ்ட்டா இருக்கு தெரியுமா? தோசை... இதயம் நல்லெண்ணெய்ல ஊத்தினதுதானே? நெய் தோசை மாதிரி சூப்பரா இருக்கு...''
''வீட்ல இருந்த சமையல் எண்ணெய் இதயத்தை வச்சு தோசையை சுட்டு முடிச்சு, மதிய சமையலையும் முடிச்சுட்டேன். ஸ்கூலுக்கு போய்ட்டு வரும்போது இதயம் வாங்கிட்டு வரணும்.''
''அது சரி... நீ ஏன் சாப்பிடாம உட்கார்ந்திருக்க? சாப்பிட்டுட்டு கிளம்பு.''
''எவ்ளவு பிரச்னை இருந்தாலும் சாப்பிடாமல்ல இருக்க மாட்டேன். வயிறை வாடப் போட்டா... எந்த வேலையும் என்னால செய்ய முடியாது...'' என்றபடி இரண்டு தோசைகளை சாப்பிட்டாள் ராதா.
''சாம்பார் எவ்ளவு ருசியா இருக்கு தெரியுமா? என்னவோ கிச்சன்ல... இதயம் காலியாப் போகுது, மளிகை குறைவா இருக்குன்னு சொன்ன? ஆனா... சாம்பார் எந்தக் குறையும் இல்லாம... மணம்மா இருக்கு. வீட்டு சாப்பாட்டே அநேகமா மறந்து போன நிலையில... இந்த சாம்பாரும், தோசையும் மரத்துப் போன என் நாக்குக்கு உயிர் குடுக்குது. பவித்ரா என் கூட வீட்ல இருந்தப்ப மட்டுமென்ன? நம்ம சாப்பாடை சமைச்சா போட்டா? ரொட்டித் துண்டை டோஸ்ட் பண்ணி, ஜாம் பாட்டிலை எடுத்து டேபிள் மேல வைப்பா. அதிக பட்சமா ஒரு முட்டையை ஆம்லெட் போட்டுக் குடுப்பா. நான் இப்ப ஓரளவு சமையல் பழகிட்டேன். தினமும் வெளில சாப்பிட்டு வயித்தைக் கெடுத்துக்கிட்டிருக்க முடியுமா? ஏதோ என்னால முடிஞ்சதை சமைச்சு நானும், மஞ்சுவும் சாப்பிட்டுக்கறோம்...'' வினோத் சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் மூன்று பேரும் வினோத்தின் காரில் கிளம்பினார்கள்.
வினோத்திடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்தில் இருந்து பள்ளிக்கூடத்தில் கட்ட வேண்டிய பணத்தை கட்டிவிட்டு வந்தாள் ராதா. சோக மயமாக ராதாவிற்கு கையசைத்து 'டாட்டா' சொன்னாள் ஸ்வாதி. பெருமூச்சுடன் காரில் ஏறினாள் ராதா.
கார் புறப்பட்டது. காஃபி ஷாப்-ல் காரை நிறுத்தினான் வினோத்.
''இறங்கு ராதா.''
''இப்பத்தானே வீட்ல சாப்பிட்டிருக்கோம். எனக்கு காஃபி வேண்டாம்...''
''காஃபி சாப்பிட வேண்டாம். உன்கிட்ட பேசணும். ஸ்வாதி முன்னால பேச வேண்டாமேன்னுதான் உன்கிட்ட நான் எதுவும் கேட்கலை...''
''சரி...'' என்றபடியே காரை விட்டு இறங்கினாள் ராதா. இருவரும் உள்ளே சென்றனர்.
''ரெண்டு க்ரீன் டீ'' ஆர்டர் எடுக்க வந்தவனிடம் கூறிவிட்டு ராதாவிடம் திரும்பினான் வினோத்.
''என்ன ஆச்சு? உன் முகமே சரி இல்லை. ஸ்வாதியும் சோகமா இருக்கா. என்ன நடந்துச்சு? நகையை அடகு வைக்க வேண்டிய அவசியம் என்ன?'' அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான் வினோத்.
சில நிமிடங்கள் மௌனமாக இருந்தாள் ராதா. அதன்பின் அவளே பேச ஆரம்பித்தாள்.
''அவர்... அவர்... வீட்டை விட்டு போயிட்டார்... கொஞ்ச நாளா அவர் சரி இல்லை...''
''சரி இல்லைன்னா?...''
''அவருக்கு வேற ஒருத்தி கூட தொடர்பு ஏற்பட்டிருக்கு. இது எத்தனை நாளா... எத்தனை மாசமா... எத்தனை வருஷமான்னெல்லாம் எனக்குத் தெரியலை. ஆனா சமீப காலமா அவர் ரொம்ப மாறிப் போயிருந்தார். பொதுவா அவர் சிரிச்சு பேச மாட்டார். மனம் விட்டுப் பேச மாட்டார்னு உனக்கே தெரியும்தானே? ஆனா நாள் ஆக... ஆக... எதுக்கெடுத்தாலும் எரிச்சல் படறது, கோபப்படறதுன்னு ஆரம்பிச்சுட்டார். முன்னயெல்லாம் வீட்ல மட்டும் ஏதோ கொஞ்சமா குடிச்சுக்கிட்டிருந்தார். வர... வர...