பூவிதழ் புன்னகை - Page 29
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
வெளியில போய் நிறைய குடிச்சுட்டு முழு போதையில வருவார். ஸ்வாதிகிட்ட இருந்த கொஞ்ச நஞ்ச பிரியமும் கூட போயிடுச்சு. அன்னிக்கு ஸ்வாதிக்கு அடிபட்டப்ப, அவர் எந்த ஊருக்கும் போகலை. இங்கேதான் அவ வீட்ல இருந்திருக்கார். ஆனா அவ கூட அவர் எந்த ஏரியாவுல இருக்கார்ன்னெல்லாம் தெரியலை. அவதான் தினமும் குடிக்க வச்சு அனுப்பறாள்ன்னு நினைக்கறேன். என்னால எதையும் சரியா புரிஞ்சுக்க முடியலை. ஒருத்தி கூட தொடர்பு இருக்குங்கறதைத் தவிர மத்ததெல்லாம் என்னோட அனுமானம்தான்...''
''எவ கூடயோ தொடர்பு இருக்குன்னு உறுதியா எதை வச்சு சொல்ற?''
''அவருக்கு அவ மெஸேஜ் அனுப்பி இருக்கா. காதல் வசனம் அனுப்பி இருந்தா. கேம்ஸ் விளையாட அவரோட மொபைலை எடுத்த ஸ்வாதி அந்த மெஸேஜை என்கிட்ட காட்டினா. அதைப் பத்தி அவர்கிட்ட கேட்டப்ப அவரே சொல்லிட்டார். 'நான் அவளை காதலிக்கிறேன்'னு. என்னமோ... வாலிப விடலை இளைஞன்னு நினைப்பு. அன்னில இருந்து என்னோட கடமைகளை நான் சரிவர செஞ்சேனே தவிர வேற எதைப் பத்தியும் பேசறது இல்லை. பேசற மாதிரியா நைட்ல அவர் வரார்? குடி போதையில படுக்கையில வந்து விழுந்தார்ன்னா... காலையில ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருப்பார். இதுதான் எனக்கு விதிச்ச விதின்னு நானும் வாழ்க்கையை ஓட்டினேன். ஆனா... இப்பிடி எவ கூடயோ தொடர்பு வச்சுக்கிட்டு... இருந்த கொஞ்ச மன அமைதியையும் முழுசா பாழாக்கிட்டார். அதுக்கப்புறமும் அவர்தான் உலகம்ன்னு வாழ்ந்துக்கிட்டிருந்த என்னை வாய்க்கு வந்தபடி பேசிட்டார். செலவுக்குப் பணம் கேட்டதுக்கு பெரிசா தகராறு பண்ணினார். அந்த சமயத்துல என்னையும் அறியாம, 'அவ' மேட்டர் பத்தி பேசிட்டேன். அதை சாக்கா வச்சுக்கிட்டு, வீட்டை விட்டு கிளம்பிட்டார். வீட்டு செலவுக்கும் போதுமான அளவு பணம் தர்றதில்லை. ஸ்வாதியோட ஸ்கூல் செலவுக்கும் பணம் தர மாட்டேன்னு மறுத்தார். எங்களுக்குள்ள ஏற்பட்ட தகராறு முத்திப் போச்சு. அவருக்கு 'அவ' மேல இருக்கற ஆசையும் முத்திப் போச்சு. அவரோட கால்ல விழுந்து கண்ணீர் விட்டு கதறி, கெஞ்சி கேட்டேன். கல்நெஞ்சுக்காரரா என்னை உதறிவிட்டு போய்ட்டார்...''
''ஏதோ... கோபத்துல போறேன்னு சொல்லி இருப்பார். அதுக்காக வீட்டை விட்டு போயிட்டார்ன்னு சொல்றதா?''
''உனக்கு என்ன தெரியும் அவரைப் பத்தி? அவர் சொன்னா சொன்னதுதான். பெட்டியில அவரோட துணிமணிகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போயிட்டார். அவர் வர மாட்டார்...''
''எனக்கென்னமோ அப்பிடி தோணலை. கோபத்துல கிளம்பிப் போன அவர், திரும்பி வருவார்...''
''திரும்பியும் வரமாட்டார். திருந்தியும் வரமாட்டார்... நான் அப்பிடித்தான்ங்கற ரீதியில பேசிட்டு போயிட்டார். ஸ்வாதிக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கார்ன்னு தெரிஞ்சும் கூட ஓடி வரலியே... அந்த அளவுக்கு 'அவ' மேல மோகம் கொண்ட அவர் எப்பிடி வருவார்?''
''நான் வேணும்ன்னா பேசிப் பார்க்கட்டுமா?''
''வேற வினையே வேண்டாம். சும்மாவே உங்களை கரிச்சுக் கொட்டிக்கிட்டிருக்கார். இது வேறயா? அவர் கட்டின தாலிக்கு நான் மதிப்பு குடுக்கறேன். ஆனா... தாலி கட்டின அவரோ? வேலி தாண்டின வெள்ளாடாடோடு ஓடிப் போயிட்டார். படிப்பறிவு இல்லாத நான் பகுத்தறிவை மட்டும் வச்சு என்ன பண்ண முடியும்?''
''சென்னையில மாமாவோட வீடு உன் பெயரிலதானே இருந்துச்சு? அது என்ன ஆச்சு? மாமா, மாமிக்கப்புறம் அது உனக்குத்தானே பாத்தியப்பட்டது?''
''உன்கிட்ட சொன்ன... நீ வருத்தபடுவன்னுதான் சொல்லலை. என்னோட கல்யாணம், வளைகாப்பு, குழந்தை ஸ்வாதிக்கு செஞ்ச சீர்... இதுக்கெல்லாம் அப்பா வாங்கின கடன், வட்டிக்கு மேல வட்டியாகிடுச்சு. அவங்க ரெண்டு பேரும் இறந்த பிறகு கடன் குடுத்தவங்க வந்து ரொம்ப கண்டிஷனா பேசியிருக்காங்க. உடனே பணத்தையெல்லாம் ஸெட்டில் பண்ணச் சொல்லி இருக்காங்க. அந்த சமயத்துல என்னோட மாமியார், மாமனார் அங்கேதானே இருந்தாங்க? அவங்களால கடன் தொகையை கேட்டு வரவங்களை சமாளிக்க முடியல. அதை அவங்க அவமானமாவும் நினைச்சாங்க. என் கணவர்ட்ட சொன்னாங்க. அவர், அந்த வீட்டை வித்து கடனை அடைச்சுடலாம்னு சொல்லி, வீட்டை வித்துட்டாரு...''
''என்ன? கடன் தொகைக்காக வீட்டை வித்துட்டாரா? அந்த வீடு, நல்ல வீடாச்சே? பணத்தைக் கட்டி கடனை அடைச்சுட்டு, வீட்டை வச்சிருந்திருக்கலாமே?''
''அதுக்கெல்லாம் அவருக்கு மனசு வருமா? வித்து முடிச்சுட்டாரு. அவராலயும், அவரோட அம்மா, அப்பாவாலயும்தான் எங்கம்மா, அப்பா சீக்கிரம் செத்துப் போனாங்க. எங்க வீட்டுக்குள்ள போய் உட்கார்ந்து எங்கம்மா, அப்பாவை நிம்மதியா வாழ விடாம கொடுமைப் படுத்தி கொன்னுட்டாங்க. அப்பா உயிரோடு இருந்திருந்தா கடனை அவரே அடைச்சிருப்பார். வீட்டை வித்திருக்க மாட்டார்...''
''அது சரி... அந்த வீடு உன்னோடதுதானே? கடன் அடைத்து போக மீதிப் பணத்தை என்ன பண்ணினார் திலீப் அண்ணன்?''
''மீதிப்பணமா ? யானை வாய்க்குள்ள போன அல்வா கதைதான்...''
''நீ ஏன் இவ்ளவு அப்பாவியா இருக்க? அந்தப் பணத்தைக் கேட்டு வாங்கி உன் பேர்ல் டெபாஸிட் பண்ணி இருக்கலாமே?...''
''வாழ்க்கை முழுசும்... காலம் முழுசும் அவர் கூடத்தானே வாழப் போறோம்... உன் பணம்... என் பணம்னு எதுக்காக பேசணும்னு எதுவுமே கேட்கலை...''
''நகை, சீர்வரிசை, வீடு வித்த பணம்... இப்பிடி எல்லாத்தையும் வாங்கிக்கிட்ட அவர், உன்னை அன்பா பார்த்துகிட்டாலாவது பரவாயில்லை. அதுவும் இல்லையே? நீ என் இப்படி வாய் இல்லாத பூச்சியா இருக்க?...''
''பழகிப் போச்சு வினோத். பழகிப் போச்சு. சரி, அதை அப்புறம் பார்ப்போம். நகையை வச்சு அல்லது வித்து பணம் வேணும்னு சொன்னேன். காஃபி ஷாப்ல உட்கார்ந்து பஞ்சாயத்து பேசிக்கிட்டிருக்கோம்?...''
''ஸ்வாதிக்கு ஸ்கூல்ல பணம் கட்டியாச்சு. இன்னும் எதுக்கு நகையை விக்கணும்?''
''புரிஞ்சுக்க மாட்டியா வினோத்? கையில செலவுக்கு பணம் இல்லை. வீட்ல சமையலுக்குரிய மளிகை, குளியல் சோப், துணி சோப் எதுவும் இல்லை. எனக்கு இப்ப பணம் தேவை...''
''சரி. நகையை குடு. எனக்குத் தெரிஞ்சவர் நகை அடகு பிடிக்கறவர். நானே அவர்ட்ட குடுத்து பணம் வாங்கிட்டு வர்றேன்... உன்னை வீட்ல விட்டுட்டு நான் போய் பணத்தோட வர்றேன். அப்புறமா போகலாம்.''
''சரி. எனக்கும் வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு.''
இருவரும் காரில் ஏறிக் கொள்ள, ராதாவின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் வினோத்.