பூவிதழ் புன்னகை - Page 25
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
''சொல்லுங்க. இப்பிடி எதுவே பேசாம இருந்தா... என்ன அர்த்தம்?''
''என்ன பேசணும்ங்கற? என்ன சொல்லணும்ங்கற?''
''காதல் வசனம் எழுதி மெஸேஜ் அனுப்பி இருக்காளே? அவ யார்? நம்ம மகளுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில இருந்தப்ப அவளைப் பார்க்கக்கூட வர முடியாம அவ வீட்ல இருந்துட்டு, வெளியூர், ஆபீஸ் வேலைன்னு பொய்தானே சொல்லி இருக்கீங்க? கையில பணம் இல்லாம தவிச்சுக்கிட்டிருக்கேன்னு சொல்லியும் 'வர முடியாது' சொன்னீங்களே? அதுக்குக் காரணம் அவதானே? கல்யாணம் பண்ணி, பன்னிரண்டு வயசு பொண்ணுக்கு தகப்பனான நீங்க... இப்பிடி எவ கூடயோ உருண்டு புரண்டுட்டு வரீங்களே? அசிங்கமா இல்லையா? பதில் சொல்லுங்க. அவ யார்...?'' ராதா பேசப் பேச, திலீப்பிற்கு கோபம் தலைக்கு ஏறியது.
''ஏய்? அவ மிருணா. நான் அவளைக் காதலிக்கிறேன். கொஞ்ச வருஷமாவே எனக்கும் அவளுக்கும் நெருங்கின பழக்கம். போதுமா உன் கேள்விக்கு பதில்? அவதான் எனக்கு எல்லாமே. அவ மேல என் உயிரையே வச்சிருக்கேன். போதுமா உன் கேள்விக்கு பதில்? நான் இப்பிடித்தான். எதுவும் எனக்கு அசிங்கம் இல்லை. போனா போகுதுன்னு உன் கூடயும் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கேன். என்னோட இஷ்டப்படிதான் நான் இருப்பேன். இதில உனக்கு கஷ்டம்ன்னா இங்கிருந்து போயிடு. போக முடியலைன்னா... எதையும் கண்டுக்காம வெந்த சோத்தைத் தின்னுட்டு விதியேன்னு கிட. உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது. முடியும்ன்னா உன்னால ஆனதைப் பார்த்துக்க...''
குடி மயக்கத்தில் வாய் வார்த்தைகள் குழறியபடி மனம் போன போக்கில் பேசி முடித்த திலீப், அறைக்கு சென்று 'தொப்' என்று படுக்கையில் விழுந்தான். அடுத்த நிமிடம் எந்த அசைவும் இன்றி தூக்கத்தில் ஆழ்ந்து போனான்.
'தன்னிடம் சமாளித்துப் பேசுவான், தன்னை சமாதானம் செய்யும் விதமாகப் பேசுவான்... உண்மைகள் மறைத்து சாக்கு போக்கு சொல்வான்' என்றெல்லாம் எதிர் பார்த்திருந்த ராதா, அவனது குதர்க்கமான பேச்சால் நிலை குலைந்து போனாள். அவளது இதயத்தைத் தொட்டுக் கொண்டிருந்த தாலி, அவளை முள்ளாக உறுத்தியது.
'என்னிடம் அன்பு செலுத்த முடியாத கணவன், வேறு பெண்ணிடம் மனதளவிலும் அன்பு செலுத்துகிறானே... என்னிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இயந்திர கதியாய் வாழும் கணவன், எவளிடமோ உணர்வு பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் வாழ்கிறானே... அவர் கட்டிய இந்த தாலிக்கு எவ்ளவு மரியாதை கொடுத்து வாழ்கிறேன்? அவர் மேல இருக்கக் கூடிய மரியாதை, இப்போது சரிந்து போன மணலாகி விட்டதே... 'நான் இப்படித்தான்' என்று அழுத்தம், திருத்தமாகக் கூறி விட்டாரே... இனி இவரை நான் என்ன கேட்க முடியும்? இருமனம் கலக்கும் திருமண வாழ்வில் ஒரு மனம் கசந்து போனாலும், நறுமணம் நீங்கிப் போகுமே, வசந்தம் காணாமல் போகுமே... என்பது புரிந்திருந்தாலும், இதுவே என் விதிவசம் எனும்போது நான் என்ன செய்வேன்? வேறிடத்தில் மனதைக் கொடுத்து, உடலையும் கொடுத்து வாழும் இவர் மீது தீராத வெறுப்பு ஏற்பட்டாலும் சேர்ந்து வாழ முடியாத வீறாப்பு உருவானாலும், இவரைப் பிரிந்து, என் மகள் ஸ்வாதியை என்னால் வளர்க்க முடியுமா? எப்படி முடியும்? அவளைப் படிக்க வைக்க முடியுமா? எப்படி முடியும்? என்னோட கல்யாணத்தினால கடன்காரனாகி, சொந்த வீட்ல சுதந்திரமா வாழ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு, அதைத் தாங்க முடியாத துயரங்களால உலகத்தை விட்டே போய்ச் சேர்ந்த என் அம்மா அப்பாவின் ஆதரவும் இல்லாம எப்படி முடியும்? இனி என் கதி? அதோ கதிதான், இவர் என்ன அக்கிரமம் பண்ணினாலும் சகிச்சுக்கிட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும், துர்பாக்கிய நிலைமைக்கும் என்னைத் தயார் பண்ணிக்கணும். ஸ்வாதிட்ட சொன்ன மாதிரி, எதுக்கும் அழக் கூடாது...' மனதைத் திடப்படுத்திக் கொள்வதற்கு சிந்தித்து முடிவு எடுத்தாள் ராதா.
'மகளுக்காக இங்கே, இவருடன் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. என் உயிருக்கு உயிராக நேசித்த என் பெற்றோரையே இழந்துட்டு வாழறேன். என் மீது துளி கூட அன்பு இல்லாத அவர், எங்கேயோ வெளியே தன்னை இழந்து விட்டு வருவதற்காக நான் ஏன் துக்கப்பட வேண்டும்? வெட்கப்பட வேண்டியவர் அவர்... எனக்கென்ன வந்தது? இவரோட அடாவடி நடிவடிக்கைகளையும், அடாத செயல்களையும், முடாக்குடியன் போல குடிச்சுட்டு வந்து முடங்கிக் கிடக்கற மூர்க்கத்தனத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு, வேதனையும் பட்டுக்கிட்டு என் மகளை வளர்த்தாக வேண்டியதுதான்...' மீண்டும் மீண்டும் எழுந்து துக்க நினைவுகள் அவளுக்குள் மன அழுத்தத்தையும், மன இறுக்கத்தையும் பெருவாரியாக உருவாக்கியது என்றாலும் அவளுக்குள் இருந்த தாய்மை உணர்வு அவளுக்கு தைரியத்தையும், கணவன் திலீப்பின் மோசமான நடத்தையைத் தாங்கிக் கொள்ளும் மனோதிடத்தையும் அளித்தது. இமை மூடாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த அவள், இதுவே என் விதி, என் வாழ்வு என்ற முடிவிற்கு வந்த பின்னர் தூங்கினாள்.
28
ரெஸ்ட்டாரண்ட்டில் ஏற்பட்ட அடிதடி கலாட்டா சமயம், ஸ்வாதி அடிபட்டு மருத்துவமனையில் இருக்க, வீட்டிற்கு தன்னுடன் அழைத்துச் சென்ற மஞ்சுவைக் கண்டித்தான் வினோத். அன்றைய தினத்திற்குப் பிறகு அடிக்கடி அது பற்றி மஞ்சுவைக் கண்டித்துக் கொண்டே இருந்தான் வினோத். அன்றும் அந்த நிகழ்வு ஞாபகம் வந்து திட்ட ஆரம்பித்தான். ''பத்து வயசுதான் ஆகுது உனக்கு. இந்த வயசுலயே 'பீர்' குடிக்கணுமா உனக்கு...?''
''இல்லைப்பா. இதுதான் முதல் தடவை. 'ஹோட்டல்ல தின்னுட்டு, பீர் குடிச்சுட்டு, ஊரில் இருக்கற ஷாப்பிங் காம்ப்ளெக்சுக்கெல்லாம் போய் சுத்திட்டு திமிங்கலம் மாதிரி தூங்குவா உங்க அம்மா'ன்னு அம்மாவை நீங்க திட்டுவீங்கள்ல்லப்பா... அம்மா மாதிரி நானும் அந்த பீயரை குடிச்சுப் பார்த்தா என்னன்னு தோணுச்சுப்பா. அ... அ... அதனால... ஸ்வாதி கூட ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போனப்ப பீர் குடிச்சுப் பார்த்தேன்ப்பா. நிறைய தடவை சொல்லிட்டேன்லப்பா... இனிமேல இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ண மாட்டேன்னு...''
''உங்க அம்மா புத்தி உனக்கு வந்துடக் கூடாதுன்னு நான் பாடு பட்டுக்கிட்டிருக்கேன். வெளில எங்கேயும் போகாம, ஆபீஸ்ல வேலை முடிஞ்சதும் உன்னைக் கூப்பிட ஸ்கூலுக்கு வர்றது, உன் கூடவே டைம் ஸ்பென்ட் பண்றதுன்னு உனக்காக நான் இருக்கேன். நீ என்னடான்னா... ஸ்வாதி கூட கூட்டு சேர்ந்து ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு ஊரை சுத்தற... உங்க அம்மாவைத் திருத்தறதுக்காக படாத பாடு பட்டேன். முடியலை. நீயும் அவளை மாதிரி திருந்தாத ஜென்மமாவே இருந்துடப் போறியா...?''