பூவிதழ் புன்னகை - Page 23
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
''என்ன ராதா? என்ன ஆச்சு?''
''ஓ... ஒண்ணுமில்ல வினோத். கையில பணம் இல்லாம நட்டாத்துல தவிக்கற மாதிரியான நிலைமை...'' அவள் பேசி முடிக்கும் முன் வினோத் பேசினான்.
''கஷ்டமாத்தான் இருக்கும். உன்கிட்ட ஒரு மொபைல் இல்லை. க்ரெட் கார்ட் இல்லை. திலீப் அண்ணன்ட்ட நீ கேட்டியா... இல்லையா?...''
''ஒரு தடவைக்கு பல தடவை கேட்டாச்சு... 'நீ எங்கே வெளில போற? வீட்லதான் ஃபோன் இருக்கே'ன்னு சொல்றாரு. க்ரெடிட் கார்ட் பத்தி கேட்டா... 'அப்பிடி என்ன தலை போகற அவசரம் உனக்கு வரப்போகுது'ன்னு சொல்லிட்டாரு. 'வெந்த சோத்தைத் தின்னுட்டு... விதியேன்னு கிட அப்பிடிங்கற ரீதியில... அவர் என்னை நடத்துறார். நானும் 'என் தலைவிதியே'ன்னு இருக்கேன். வேற என்ன செய்ய முடியும்? இப்ப என்னடான்னா... எங்கேயோ பக்கத்து வெளியூர்ல இருக்காராம். வரக் கூடிய தூரம்ன்னாலும் கூட 'வர முடியாது' அப்பிடின்னு அழுத்தமா பேசறார்...''
''சரி... சரி.. விடு. இதைப் பத்தியெல்லாம் அப்புறம் சாவகாசமா பேசலாம். நீ ஏதாவது சாப்பிட்டியா இல்லியா? முகம் வாடிக் கெடக்கு. நான் போய் ஏதாவது வாங்கிட்டு வந்து குடுத்துட்டு போறேன்...'' என்றவன், வெளியே சென்று உயர்தரமான உணவகத்தில் ராதாவிற்காக இட்லி, தோசை வாங்கி வந்து கொடுத்தான். அதன்பின் கிளம்பினான்.
கார் நிறுத்தும் இடத்திற்கு வந்து காரை ஸ்டார்ட் செய்தான். அவனது நினைவலைகளும் ஆரம்பித்தன. 'பூவிதழ் புன்னகையோட இருக்கக் கூடிய ராதா... இப்பிடி புண்பட்ட மனசோட இருக்காளே. அவளைப் பார்க்கவே பாவமா இருக்கு. இந்த திலீப் அண்ணன் ஏன் இப்பிடி இருக்கார்? அவருக்கு ராதாவுடன் ஒரு அற்புதமான வாழ்வு வாழ குடுத்து வைக்கலை.
எக்கச்சக்கமா சம்பளம் வாங்கறார். ராதாவுக்கு தாராளமா பணம் குடுத்தா என்ன குறைஞ்சு போகுதாம்? அவர்ட்ட ஏதோ தப்பு இருக்கு. இல்லைன்னா ஸ்வாதியை பார்க்கக் கூட வராம இருப்பாரா? அழகான மாப்பிள்ளை... அந்தஸ்தான மாப்பிள்ளைன்னு அத்தையும் மாமாவும் ராதாவை, திலீப்புக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அழகும், அந்தஸ்தும் இருந்து என்ன பிரயோஜனம்? அன்பான மனசு இல்லியே? மனைவியை மதிக்கற பண்பு இல்லையே? பாவம் அத்தை... பாவம் மாமா... அவங்க உயிரோட இருந்த வரைக்கும் அவங்களை நிம்மதியா வாழக்கூட விடாம வீட்டுக்குள்ள சம்பந்திங்க வேற வந்து உட்கார்ந்துக்கிட்டிருந்தாங்க. நான் என் மனசார விரும்பிய ராதா... சந்தோஷமா இல்லியே....' அவனது ஆபீஸை நெருங்கி வந்தபின் காரை நிறுத்தினான். கூடவே தனக்குள் எழுந்த எண்ண அலைகளையும் நிறுத்தி வைத்து விட்டு, வேதனை கலந்த பெருமூச்சுடன் அவனது ஆபீஸிற்குள் சென்றான்.
26
ஸ்வாதி, வீட்டிற்கு வந்தபின், டாக்டர் கூறியபடி நான்கு நாட்களாக ஓய்வில் இருந்தாள். தையல் பிரிக்கப்பட்டு பரிபூரண குணம் அடைந்திருந்தாள் அவள். எனவே, அவளிடம் பேசுவதற்கு தயாரானாள் ராதா.
''ஸ்வாதி... உனக்கு படிச்சு படிச்சு புத்திமதி சொல்லி இருக்கேன் பலமுறை. உனக்கு வயசு பன்னிரண்டு. மஞ்சுவுக்கு வயசு பத்து. உறவுக்காரங்கன்றதுனால ஸ்கூல்ல வச்சு பார்த்துக்கறீங்க... பழகறீங்க... அதெல்லாம் சரிதான். ஆனா... இப்பிடி திட்டம் போட்டு, கள்ளத்தனமா ரெஸ்ட்டாரண்ட்டுக்கு போற அளவுக்கு துணிச்சல் வர்றது என்ன நியாயம்? படிப்புல கவனம் இருந்தாத்தான் உன்னோட எதிர்காலம் நல்லபடியா இருக்கும்ன்னு எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன்? சின்னப் பிள்ளைங்க நீங்க. பெரியவங்க துணையில்லாம ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போற வயசா இது?''
''அம்மா... ஸாரிமா. வெரி வெரி ஸாரிமா. இனிமேல் சத்தியமா தப்பு பண்ணவே மாட்டேன்மா...''
''உங்க அப்பாவோட குணம் உனக்கு வந்துடக் கூடாது. நீ அடிபட்டு ஒரு வாரம் ஆகப்போகுது. நேத்து ராத்திரிதான் உங்கப்பா ஆடி, அசைஞ்சு வீடு வந்து சேர்ந்திருக்காரு. உன்கிட்ட என்ன கேட்டாரு?''
''தப்பு பண்றதை திறமையா பண்ணத் தெரியலியா?'ன்னு கேட்டார் மா. 'ரெஸ்ட்டாரண்ட் போறதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்டு சிரிக்கிறார்மா...''
''அவருக்கென்ன? சிரிப்பார். குடும்பத்தைப் பத்தின அக்கறை இருந்தா... கவலைப்பட்டிருப்பார். அவருக்கு என்னைப் பத்தின அக்கறையும் இல்லை. உன்னைப் பத்தின கவலையும் இல்லை. பிச்சைக்காரி மாதிரி கையில காசு இல்லாம தடுமாற வச்சுட்டார். ஊரில இருந்து வந்தவர்... என்கிட்ட... ஒரு வார்த்தைகூட பேசலை... பணத்துக்கு என்ன பண்ணின்னனு கூட கேக்கலை. எனக்கு உதவி செய்ய எங்க அம்மா, அப்பாவும் உயிரோட இல்லை. இருந்திருந்தாலும் அவங்களால எவ்ளவு பணம் எனக்காக செலவு பண்ண முடியும்? அவங்க இவ்ளவு சீக்கிரம் செத்துப் போனதுக்கு காரணமும் உங்க அப்பாதான். உன்னோட ஐய்யாமா, எங்க வீட்டுக்குள்ள குடித்தனம் வர்றதுக்கு கேட்டா உடனே அதுக்கு சரி சொல்லி அவங்களை வீட்டுக்குள்ள விட்டுடணுமா? உன்னோட ஐய்யாமாவும், ஐய்யாபாவும் எங்க அம்மா வீட்டுக்குள்ள வந்ததுனாலதான் எங்கப்பா அம்மா சீக்கிரமா செத்து போயிட்டாங்க. அதனாலதான் நான் தன்னந்தனியா தவிக்கறேன். உனக்காகத்தான் இந்த உலகத்துல உயிரை வச்சுக்கிட்டு இருக்கேன்...''
''அம்மா... என்னை மன்னிச்சுடுங்கம்மா. உங்க கஷ்டமெல்லாம் எனக்கு புரிஞ்சு போச்சும்மா. அப்பாவோட அலட்சியப் போக்கு பத்தியும் புரிஞ்சுக்கிட்டேன்மா. இனிமேல் படிப்பைத் தவிர வேற சிந்தனையே இருக்காதும்மா எனக்கு... அப்பா என் மேல பிரியமா இருக்கார்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா... நான் அடி பட்டு ஆஸ்பத்திரியில இருக்கேன்னு தெரிஞ்சும், அவர் என்னைப் பார்க்கவும் வரலை... பணம் வேணும்ன்னு நீங்க கெஞ்சினப்ப அதுக்கு அவர் எந்த ஏற்பாடும் பண்ணலை. அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல நீங்க அவர்ட்ட கெஞ்சினதையும், அவர் அலட்சியமா பேசினதையும் கேட்டேன்.
அந்த நிமிஷத்துல இருந்து அவரை நான் வெறுக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் அவர் ஊர்ல இருந்து வந்தப்புறம் ஏதோ கடனுக்கு என்கிட்ட வந்து பேசினார்.
அது மட்டும் இல்லம்மா. இன்னொரு விஷயம். அப்பாவைப்பத்தி எனக்குத் தெரிய வந்துச்சு... அவர்... அவர்... உனக்கு மட்டும் புருஷன் இல்லம்மா...''
''ஸ்வாதி....'' வாய்விட்டு அலறினாள் ராதா.
''நீங்க அதிர்ச்சியாயிடுவீங்கன்னு தெரிஞ்சுதான் உங்கிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்....''
''நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு சொல்லாதே ஸ்வாதி...''
''கற்பனையோ... கனவோ... இல்லம்மா. இது நிஜம். சாட்சியோட நிரூபிக்க என்னால முடியும்மா... இங்கே பாருங்க...'' என்ற ஸ்வாதி, தன்னுடைய நோட்டு புத்தகத்தை எடுத்து வந்தாள். அதில் 'நீங்கள் இத்தனை நாள் என்னுடன் இருந்த நாட்கள் மிக மிக மகிழ்ச்சியான நாட்கள்.