பூவிதழ் புன்னகை - Page 19
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
''உருவாக்கினது அம்மா. மகள் பணக்கார வாழ்வு வாழப் போறா... அதுக்கு ஈடா எதை வேண்ணாலும் குடுக்கலாம்ங்கற குருட்டுத்தனமான தாய்ப்பாசத்துல வீட்டை எழுதிக் கொடுக்க வச்சாங்க...''
''எழுதிக் குடுத்தது வீட்டை மட்டும் இல்லைம்மா. உன் தலையெழுத்தையும் தான்...''
''தைரியமா இருங்கப்பா. என்னால முடிஞ்சதை நான் செய்யறேன். அம்மாவுக்கு கொஞ்ச நாளா ரத்த அழுத்தம் இருக்குன்னீங்க. அவங்களை திட்டாதீங்க. அம்மா பாவம். ஏதோ... பாசத்துல அப்பிடி பண்ணிட்டாங்க...''
''பாசம் இருக்கறது தாய்மையின் இயல்புமா. அதே பாசம் உன்னை... படுகுழியில தள்ளிடக் கூடாதேம்மா...''
''சரிப்பா. இனிமேல் என்னால முடிஞ்சதை நான் முயற்சி பண்ணி... இந்த வீட்டு விஷயத்துக்கு ஒரு முடிவுக்கு கொண்டு வரேன்... அவர்ட்ட பேசினப்புறம் உங்களுக்கு நான் ஃபோன் பண்றேன்.''
''சரிம்மா... பார்த்து பேசும்மா.''
''சரிப்பா...'' பெருமூச்சுடன் தொலைபேசியின் மூச்சை நிறுத்தினாள் ராதா.
22
இரவு உணவை முடித்தபின் ஃப்ரிட்ஜைத் திறந்து விஸ்கி பாட்டிலையும், ஐஸ் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்குப் போனான் திலீப்.
அவனைப் பின் தொடர்ந்தாள் ராதா.
''ஏ... அந்த வறுத்த முந்திரிப்பருப்பை எடுத்துட்டு வர மறந்துட்டேன். போய் எடுத்துக்கிட்டு வந்துடு...''
'ராதா' என்கிற அழகான பெயரின் அருமை தெரியாமல் எருமை மாடை குறிப்பிடுவது போல 'ஏ' அல்லது 'ஏய்' என்றே அழைப்பது திலீப்பின் வழக்கம். ஓரிருமுறையல்ல... ஓராயிரம் முறை சொல்லிப் பார்த்தும் அவன் அவளது பெயரை சொல்லி அழைப்பதில்லை. எனவே நாளடைவில் அதற்கும் பழகிப் போனாள் ராதா.
வறுத்த முந்திரிப்பருப்பை எடுத்துக் கொண்டு போய் திலீப்பிடம் கொடுத்தாள்.
''என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும். தயவு செஞ்சு... குடிக்காம நான் சொல்றதைக் கொஞ்சம் கேக்கறீங்களா?''
''கேக்கறேன். ஆனா குடிக்காமயெல்லாம் முடியாது...'' என்றபடியே விஸ்கியை க்ளாஸில் ஊற்றி, ஐஸ் துண்டுகளை போட்டு குடிக்க ஆரம்பித்தான்.
கை நிறைய முந்திரிப்பருப்பை அள்ளி எடுத்து வாய் நிறைய போட்டுக் கொண்டான்.
அவற்றை 'நொறுக்' 'நொறுக்' என்று மென்றுக் கொண்டே... ''என்ன... விஷயம்? சொல்லு''... என்றான்.
'பாவி... இப்பதான் அஞ்சு தோசை, ஒரு முட்டை தோசை சாப்பிட்ட... மறுபடியும் இப்ப... இவ்ளவு முந்திரிப் பருப்பைக் கொட்டிக்கறியே... நீ சினிமாக்கரன் மாதிரி அழகா இருக்கன்னு எங்கம்மா உனக்கு தன்னோட நகைகளையெல்லாம் குடுத்து என்னை கல்யாணம் பண்ணி வச்சாங்க. நீ என்னடான்னா தொந்தியும், தொப்பையுமா ஆகி, குடியினால கண்ணுக்கு அடியில பைகள் உருவாகி... இப்பிடி ஆகிட்டியே... இந்த லட்சணத்துல குடிப்பழக்கம் வேற... ச்... சீ...' வழக்கம் போல ராதாவின் இதயம் பேசியது.
''நீ வேற, நேரம் காலம் தெரியாம கண்டதையும் பேசிக்கிட்டு...'' சும்மா இரு. முக்கியமான விஷயம் பேசியாகணும். தொந்தரவு பண்ணாத...'' இதயத்திடம் திலீப்பை வசைபாடுவதை நிறுத்தச் சொன்னாள். அதன்பின் அவள், திலீப்பிடம் பேசுவதற்கு முன்னுரையைத் தேடி, தயக்கமானாள். மனதைத் திடப்படுத்திக் கொண்டு ஒரு வழியாக ஆரம்பித்தாள்.
''எ... எ... எங்கம்மா வீட்டுக்கு உங்கம்மா, அப்பா குடி வரப் போறாங்களா? இதைப் பத்தி நீங்க என் கிட்ட எதுவுமே சொல்லலியே?...''
''ஆமா... சொல்லலைதான். அதுக்கென்ன இப்ப? அவங்களுக்கு அந்த வாடகை வீட்ல இருக்க முடியாம சில பிரச்னைகள்... அதனால உங்கம்மா வீட்டுக்கு குடி போகப் போறாங்க...''
''அ... அ... அது எப்பிடிங்க... ? எங்கம்மா, அப்பா குடி இருக்கற வீட்ல அத்தையும், மாமாவும் போய் சேர்ந்து இருக்க முடியும்?''
''ஏன்... முடியாது?...''
''எங்க அம்மாவுக்கு ரத்த அழுத்தம் இருக்கு. முடிஞ்ச நேரம் வேலை செய்யறது... முடியாட்டா படுத்து ஓய்வு எடுக்கறதுன்னு இருக்காங்க. அத்தை, மாமா அங்கே போனா... அப்பிடி ஃப்ரீயா இருக்க முடியுமா? தயவு செஞ்சு யோசிச்சுப் பாருங்க. அத்தை மாமாவுக்கு வேற நல்ல வீடா பார்த்து வச்சுடலாம்ங்க...''
''என்ன நீ... நான் எடுத்த ஒரு முடிவை, மாத்தி பேசற?''
''உங்க முடிவை நீங்க மாத்திக்கறதுக்குத்தான் பேசறேன்... அத்தை, மாமா,,, எங்க வீட்டுக்குப் போற திட்டத்தை விட்டுடுங்க. நீங்க நிறைய சம்பாதிக்கறீங்க... வாடகை அதிகமானா என்ன இப்ப ? என்னமோ பணவசதி இல்லாத மாதிரி எங்கம்மா வீட்ல கொண்டு வந்து குடித்தனம் வைக்கப் போறதா சொல்றீங்க?''
அவள் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான் திலீப்.
''என்னடி... புதுப் பழக்கம்? குரல் ஓங்கிப் பேசற? அந்த வீடு உன்னோட வீடு. உன் பேர்லதான இருக்கு? நீ யாரு? என்னோட பொண்டாட்டி. உன்னோட வீட்ல எனக்கு இல்லாத உரிமையா?...''
''உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா உங்கம்மா, அப்பாவுக்கு?...''
வயிற்றில் சென்ற விஸ்கியின் மயக்கம் திலீப்பின் ரத்த நாளங்களை சூடேற்றியது. எனவே அவனது வாய் வார்த்தைகளில் வெறி ஏற்றியது.
''ஏய்... இங்க பாரு. அந்த வீட்ல என்னோட அம்மா, அப்பா குடி இருக்கறதுக்கு சம்மதிச்சாத்தான் நீ இந்த வீட்ல என்னோட குடி இருக்க முடியும். என் கூட சேர்ந்து வாழ முடியும். நான் வேணுமா? அல்லது உன்னோட வீடான்னு முடிவு பண்ணிக்க.''
'தன் வாழ்வின் அஸ்திவாரத்தையே அந்த வீட்டின் மூலமாக அசைத்துப் பார்க்கிறானே' என்கிற உணர்வில் அதிர்ந்து போனாள் ராதா.
'வீடு என்னோட வீடு. என்னோட பேர்ல இருக்கு. எங்கம்மா, அப்பா உயிரோடு இருக்கற வரைக்கும் அவங்க கூட வேற யாரையும் வந்து இருக்க விட மாட்டேன். உங்களால ஆனதைப் பார்த்துக்கோங்க. சேர்ந்து வாழறது மட்டுமே வாழ்க்கை இல்லை. மனம் சோர்ந்து போகாம சந்தோஷமா வாழறதுதான் குடும்ப வாழ்க்கை. அந்த சந்தோஷமே துளி கூட இல்லாம வாழற நான் எதுக்காக என்னோட வீட்டை உன்னைப் பெத்தவங்களுக்கு விட்டுக் குடுக்கணும்' அப்பிடின்னு கேக்க முடியலியா ராதா?' ராதாவின் இதயம் துடித்துப் போய் பேசியது. அதற்கு பதில் கொடுத்தாள் ராதா.
''கேக்க முடியாமத்தானே இப்பிடி வாயடைச்சுப் போய் உட்கார்ந்திருக்கேன். என்னோட இதயம் நீ... எனக்குள்ளே உட்கார்ந்துக்கிட்டு உன் இஷ்டத்துக்கு பேசிடுவ... என் வாழ்க்கையையே இதோ என்னோட புருஷன்ட்ட ஒப்படைச்சுட்டு திக்கு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். நான் எங்கே போவேன்? என்ன செய்வேன்? அப்பா, கடன்காரரா ஆகிட்டாரு. பணக்காரரா இருந்தா... நீ சொன்ன மாதிரி 'உன்னால ஆனதைப் பார்த்துக்க'ன்னு அவர்கிட்ட அடைக்கலம் போயிடலாம்.