பூவிதழ் புன்னகை - Page 14
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8112
பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக் கூடாதுங்கற தவறான கருத்துல என்னை ஸ்கூலுக்கு அனுப்பாம விட்டுட்டாங்க. ஃபிட்ஸ் பிரச்னை உள்ளவங்க டாக்டராகலாம், வக்கீலாகலாம், இன்ஜினியராகலாம்... எல்லா துறையிலயும் ஈடுபடலாம்ன்னு டாக்டரம்மா சொன்னாங்க. ஆரம்பத்துலயே அந்த டாக்டரம்மாவைப் பார்த்திருந்தா... அவங்களோட அறிவுரைப்படி நானும் படிச்சிருக்கலாம்.
அந்த டாக்டரம்மா பேர் ப்ரித்திகா சாரி. அவங்க ரொம்ப திறமைசாலி. தன்னோட வாழ்க்கையையே வைத்தியத் துறைக்காக தியாகம் பண்ணி வாழறாங்க. அவங்களால வலிப்பு நோய்ல இருந்து முழுமையா குணமானவங்கள்ல்ல நானும் ஒருத்தி. ஆனா... என்னோட துரதிர்ஷ்டம்... அவங்களோட அறிமுகம் கிடைக்க ரொம்ப லேட்டாயிடுச்சு.
தற்செயலா அப்பாவோட மேலதிகாரி என்னோட ஃபிட்ஸ் பிரச்னை பத்தி தெரிஞ்சப்ப... அப்பாவுக்கு டாக்டர் ப்ரித்திகா சாரியைப் பத்தி சொல்லி இருக்காரு.
உடனே என்னை அவங்ககிட்ட அப்பா கூட்டிட்டு போனார். கல்யாணமாகி, ஒரு பெண் குழந்தைக்கு, தாயாகி, அந்த நோயோட எந்த அடையாளமும் இல்லாம நான் இன்னிக்கு வாழற வாழ்க்கைக்குக் காரணம் அந்த டாக்டரம்மாவோட திறமை. அவங்களோட அக்கறையான கவனிப்பு. இதுக்காக என்னோட வாழ்நாள் முழுசும் அவங்களுக்குக் கடமைப்பட்டிருக்கேன். எங்கம்மா... உன்னோட பாட்டி, அவங்களை 'தெய்வம்'ன்னு சொல்லுவாங்க. அதே பாட்டி, எனக்கு ஃபிட்ஸ் வந்த, ஆரம்ப காலத்துல என்ன பண்ணினாங்க தெரியுமா? யாரோ அவங்க மனசுல விதைச்ச மூட நம்பிக்கையை நம்பி, எனக்கு கோயில்ல வச்சு பேய் ஓட்டற வேலையெல்லாம் பண்ணினாங்க. இன்னும் என்னென்னவோ செஞ்சாங்க.
ஒரு வழியா டாக்டரம்மா அறிமுகம் கிடைச்சு அவங்களோட ட்ரீட்மென்ட்டால நான் பரிபூரணமா குணமாகிட்டேன். ஆனா என்னோட படிப்புதான் நின்னு போச்சு.
இன்னிக்கு நான் கவலைப்படற மாதிரி பிற்காலத்துல நீ கவலைப்படக் கூடாது. படிப்புதான் பிரதானம். வாழ்க்கைக்கு ஆதாரம். ஆண் சம்பாதிச்சுக் குடுக்க, பெண் குடும்பத்தைப் பார்த்துக்கற அந்தக் காலம் மலை ஏறிப் போச்சு. உன்னோட சொந்தக் கால்ல நீ நிக்கறதுக்குத் தேவையான கல்வியை நீ அடையணும்.
மனசை அலைபாய விடாம விடாமுயற்சியா படிப்புல ஈடுபட்டு நீ முன்னுக்கு வரணும். உன்னோட இந்த வயசு... ரெண்டுங்கெட்டான் வயசு... படிப்பைத் தவிர ஆர்வமுள்ள வேற பல விஷயங்கள்ல்ல ஈடுபடத் தூண்டும்.
ஆனா கட்டுப்பாடுங்கறது நம்ம கிட்டதானே இருக்கு... கடிவாளம் போட்டு மனசை... அடக்கிட்டா... இந்த உலகத்தையே ஜெயிக்கலாம். மனசு இடற கட்டளைகளுக்கு நாம அடி பணியக் கூடாது. நாமதான் அதுக்குக் கட்டளையிட்டு நம்ம வழிக்குக் கொண்டு வரணும்.
உங்கப்பா.... என்னை எப்பப் பார்த்தாலும் பத்தாம் பசலி.... பத்தாம் பசலி.... பட்டிக்காடுன்னு திட்டிக்கிட்டே இருக்கார். 'தான் பெரிய படிப்பு படிச்சிருக்கோம், இவ படிக்காதவ' அப்படிங்கற மனோபாவம் அவருக்கு ரொம்ப உண்டு...''
''ஆமாம்மா... அப்பா உங்களை அப்பிடி திட்டறது எனக்கும் பிடிக்கலை...'' பாசத்துடன் கூறிய ஸ்வாதியை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தாள் ராதா.
''பெண்கள், நிறைய படிச்சுட்டு... சொந்தக்கால்ல நிக்கறமேன்னு திமிர் பிடிச்சு நடந்துக்கவும் கூடாது. படிச்ச படிப்பை நல்வாழ்க்கைக்கு பயன்படுத்தணும். படிச்சிருக்கோம்ங்கற ஆணவமோ... கர்வமோ ஏற்படக்கூடாது. இக்கட்டான சூழ்நிலையில யாரையும் சார்ந்திருக்காம தைரியமா வாழற வாழ்க்கைக்கு படிப்பு முக்கியம். அந்தப் படிப்பையும், அது குடுக்கற தைரியத்தையும் தவறான வழிக்கு பயன்படுத்தக் கூடாது.''
''சரிம்மா.''
ஸ்வாதியின் அறையிலிருந்து வெளியேறினாள் ராதா.
16
ஸ்டவ்வில் தோசை கருகிக் கொண்டிருந்தது. மகள் மஞ்சுவின் ஸாக்ஸைத் தேடி எடுப்பதற்குள் சமையலறையில் தோசை, தனக்கு கறுப்பு உடையை உடுத்திக் கொண்டது.
தீய்ந்த வாசனையை உணர்ந்து, ஸாக்ஸை மஞ்சுவிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்கு ஓடினான் வினோத்.
''ஹய்யோ...'' வேறு தோசை சுட்டான். அது கருகிய வாசனையில் இருந்தது. அவசரம் அவசரமாக ஃப்ரிட்ஜை திறந்து ரொட்டியை எடுத்தான். ஜாமை அதன் மீது தடவினான். டேபிள் மீது கொண்டு போய் வைத்தான்.
ஸாக்ஸை அணிந்து கொண்ட மஞ்சு, சாப்பிட வந்தாள். கத்தினாள்.
''என்னப்பா... இன்னிக்கும் ரொட்டியா?'' கோபமாகப் பேசியவள், வினோத்தின் பரிதாபமான முகம் பார்த்து... தணிந்த குரலில் பேச ஆரம்பித்தாள்.
''என்னப்பா இது... தினமும் ரொட்டி, ஜாம் அல்லது முட்டைன்னு குடுக்கறீங்க. போர் அடிக்குதுப்பா...''
''இல்லைடா கண்ணம்மா. தோசைதான் சுட்டேன். நீ ஸாக்ஸை காணோம்னு கூப்பிட்ட உடனே அங்கே வந்தேன்ல... அப்போ... தோசை கருகிப் போச்சு...''
''அன்னிக்கு ஒரு நாள் ராதா ஆன்ட்டி வீட்டுக்குக் கூட்டிட்டு போனீங்கள்ல்ல... ஆன்ட்டி எவ்ளவு சூப்பரா... முறுகலான தோசை போட்டுக் குடுத்தாங்க தெரியுமா? அவங்க வைக்கற சாம்பார் ரொம்ப நல்லா இருக்கு. ஸ்வாதி அக்காவுக்கு ராதா ஆன்ட்டி எல்லாமே பார்த்து பார்த்து செய்யறாங்க. என்னோட அம்மா மட்டும் ஏம்ப்பா நம்பளை விட்டுட்டு போனாங்க...?'' ஏக்கம் தொனிக்க கேட்டாள் மஞ்சு.
''அவ இங்க இருந்தப்ப மட்டுமென்ன? எனக்கும், உனக்கும் விதவிதமா சமைச்சுப் போட்டு, நம்பளை ரொம்ப அக்கறையா கவனிச்சுக்கிட்டா பாரு... ராத்திரி பத்து மணி வரைக்கும் ஊர் சுத்திட்டு... வெளில நல்லா தின்னுட்டு வந்து, வந்ததும் வராததுமா பெட்ல போய் படுத்து, உடனே தூங்கிடுவா. நீ சாப்பிட்டியா, நான் சாப்பிட்டேனா... எதையாவது என்னிக்காவது கவனிச்சுருக்காளா...?''
''அதுதான் கேக்கறேன். ஏன் ராதா ஆன்ட்டி மாதிரி என்னோட அம்மா இல்லைன்னு...?''
''ஏன்னு என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்? நல்ல பொண்ணுன்னு சொந்தக்காரங்க சிபாரிசு பண்ணித்தான் அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க எங்கம்மா.... அவங்க சீக்கிரமே மண்டையை போட்டுட்டாங்க. இப்ப என் மண்டை காயுது...''
''பாட்டி இருந்தாலாவது இங்கே வந்து என் கூடவே இருந்து என்னை நல்லா கவனிச்சிருப்பாங்க. என்னோட 'பேட் லக்'... என் பாட்டியும் இறந்து போட்டாங்க. அம்மாவுக்கு இங்கே என்னப்பா குறை?''
சிறுமியான மஞ்சு... பெரிய அளவில் சிந்தித்து அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
சோகத்துடன் சிரித்துக் கொண்டான் வினோத். ''குறையேதும் இல்லாததே சில பேருக்கு குறைதான்மா. உங்கம்மாவும் அந்த ரகம்தான். அவளுக்கு கட்டுப்பாடு, கமிட்மென்ட்... எதுவும் இருக்கக் கூடாது. ஆபீஸ் வேலைக்கு மட்டும் ஒழுங்கா போவா. மாசம் பிறந்தா முழுசா பணம் வரும்ல்? மத்த நேரங்கள்ல்ல அவளுக்கேத்த மாதிரி ஃப்ரெண்ட்ஸோட ரெஸ்ட்டாரண்ட்டுக்கு போய் பெருந்தீனி திங்கணும். ஐஸ்க்ரீம் சாப்பிடணும். ஒவ்வொரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸா சுத்தி, கையில இருக்கற காசைக் கரைச்சு கடை கடையா ஏறி இறங்கி இஷ்டப்பட்டதை வாங்கிப் போடுவா. வீட்ல அவளோட உடைகளை வச்சுக்கக் கூட இடம் இல்லை. கிட்டத்தட்ட அம்பது... அறுபது ஜோடி செருப்பு வச்சிருப்பா.