பூவிதழ் புன்னகை - Page 12
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8112
''அதெல்லாம் சரிதான். வழக்கமா... பொண்டாட்டி மேல உள்ள அன்புக்கும், ஆசைக்கும் அடையாளமாத்தான் ஆம்பளைங்க அப்பா ஆகறாங்க. உன் புருஷன் என்னடான்னா... குழந்தை மேல உள்ள ஆர்வத்துனால பொண்டாட்டியான உன்கிட்ட அன்பு செலுத்தப் போறானாக்கும்... ம்... ம்.. உன்னோட நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பல.''
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுந்தரபாண்டி வந்து விடவே, தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர். குழந்தையும் அழுதபடியால் அதற்கு பாலூட்ட ஆரம்பித்தாள் ராதா.
13
குழந்தைக்குக் கயிறு கட்டும் சுபநிகழ்ச்சி நிறைவுற்றது. அதிக வட்டிக்கு கடன் வாங்கி தன் பேத்திக்கு நகைகள் வாங்கிப் போட்டிருந்தார் சுந்தரபாண்டி. அது தவிர வெள்ளி சாமான்கள், பட்டுப்புடவை விருந்து செலவு என்று ஏகப்பட்ட பணம் செலவாகி, சந்தரபாண்டிக்கு நெஞ்சு அடைத்தது.
'அப்படியாவது மாமியாரை திருப்திப்படுத்தி, அதன் காரணமாக தன் மகளை அன்புடன் நடத்த மாட்டானா... மாப்பிள்ளை திலீப், மகள் மீது பாசம் கொள்ள மாட்டானா' என்ற ஆதங்கத்தில் ஆகாயக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார் சுந்தர பாண்டி.
திலீப்பின் அலட்சியப் போக்கைப் பற்றி முன்தின இரவில் சுந்தரபாண்டியிடம் கூறி இருந்தாள் வனஜா. வனஜாவினால் உள்ளத்திற்குள் எதையும் ஒளித்து வைக்க முடியவில்லை. அவரிடம் கூறுவதன் மூலம் தனக்கு ஆறுதல் தேடிக் கொண்டாள்.
குழந்தைக்கு ஸ்வாதி என்று பெயர் சூட்டி இருந்தனர். பெயர் தேர்ந்தெடுத்ததும் திலகாதான். திலீப், குழந்தையைக் கொஞ்சியதைப் பார்த்து ஆனந்தப்பட்டனர் வனஜாவும், ராதாவும்.
'கல்லுக்குள்ளும் ஈரம் தென்படுகிறதே...' என்று அம்மாவும், பொண்ணும் ஒரே விதமாக நினைத்துக் கொண்டனர்.
குழந்தைக்கு வினோத், மிகச் சிறிய... ஆனால் மிக அழகிய தங்க ஜிமிக்கிகள் வாங்கி வந்து பரிசளித்திருந்தான். தங்கத்தைப் பார்த்து வாயெல்லாம் பல்லானாள் திலகா.
''என்ன வினோத்... எதுக்காக இவ்ளவு விலையில ஜிமிக்கி? இப்பதான் வேலையில சேர்ந்திருக்க...'' தன் அழகிய புன்னகையுடன் கேட்டாள் ராதா.
''இது ரொம்ப சிம்ப்பிள்... இன்னும் நிறைய வாங்கிக் குடுக்கணும்ன்னு ஆசைதான்.''
''ஆசைக்காக செஞ்சுட்டு... அப்புறம் காசுக்கு நீதானே கஷ்டப்படணும்?...''
''இஷ்டப்பட்டு குழந்தைக்காக வாங்கிக் குடுத்திருக்கேன். நீ கொஞ்சம் சும்மா இருக்கியா...?'' செல்லமாக ராதாவை மிரட்டினான் வினோத்.
குழந்தை ஸ்வாதியைத் தூக்கி, திலீப்பிடம் கொடுத்தான் வினோத்.
''திலீப் அண்ணா.... ஸ்வாதியை பார்த்தீங்களா? இப்பவே துறுதுறுன்னு இருக்கா. இவ வளர்ந்து பெரியவளாகி, பெரிய டாக்டரா ஆகப்போறா...''
குழந்தையை வாங்கிக் கொண்ட திலீப் சிரித்தான். 'அப்பாடா.... நரசிம்மராவுக்கு சிரிப்பு வருதே...' ராதாவின் இதயம், திலீப்பை கிண்டல் செய்தது.
'ஏய்... போதும் உன் கிண்டலும், கேலியும். நான் நம்பின மாதிரி குழந்தை மேல அவருக்கு இருக்கற அன்பை வச்சு, அவரையும் அன்பானவரா மாத்துவேன் பாரு...' ராதா பேசியதைக் கேட்டு மறுபடியும் அவளது இதயம் பேசியது.
'மகளே.... உன்... சமர்த்து...'
'சரி... சரி... உன் வாயைக் கொஞ்சம் மூடிக்கோ' என்றாள் ராதா.
சிறிது நேரம் குழந்தை ஸ்வாதியை ஆசையாக தன் கையில் வைத்திருந்த திலீப், அவனது மொபைல் அழைத்ததும் குழந்தையை ராதாவிடம் கொடுப்பதற்காக வந்தான். அப்போது குறுக்கே நுழைந்து, குழந்தையை தன் கைகளில் வாங்கிக் கொண்டாள் திலகா.
'உனக்கும், உன்னோட புருஷனுக்கும் நடுவுல கோடு போட்டுக்கிட்டிருந்தா உன் மாமியார், இப்ப... குழந்தைக்கும், உனக்கும் நடுவுல வந்துக்கிட்டிருக்கா. இவ என்ன... ஒரு பெண்ணா... பேயா...? தாயா...? அல்லது நா...?' துடுக்குத்தனமாகப் பேசிய இதயத்தின் மறுபக்கத்தை ஒரு துடுப்பு கொண்டு தடுத்தாள் ராதா.
'வாய் ரொம்ப நீளுது... கொஞ்சம் பொத்து...' என்று கூறி அடக்கினாள்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களை தன் வீட்டிற்குள் கொண்டு போவதற்காக மூட்டை கட்டிக் கொண்டிருந்தாள் திலகா. அநாகரீகமான அவளது அந்த செய்கையை திலீப்பும் கண்டிக்கவில்லை. நாராயணனும் கண்டு கொள்ளவில்லை.
புதுப் பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டு, புகுந்த வீட்டிற்குக் கிளம்பினாள் ராதா. செந்தாமரை வண்ணப் புடவையில் குழந்தை பெற்றதால் ஏற்பட்டுள்ள கூடுதல் மெருகுடன் காணப்பட்ட ராதாவை கள்ளம், கபடம் இன்றி ஒரு பெண் தெய்வத்தைப் பார்ப்பது போல பார்த்தான் வினோத்.... பரவசமானான்.
கைகளில் குழந்தையுடனும், கண்களில் கண்ணீருடனும் மனதிற்குள் தோன்றிய ஒருவித பயத்துடனும் கால் டேக்ஸியில் ஏறினாள் ராதா. பாதுகாப்பு அதிகாரி போல அவளைப் பின் தொடர்ந்தாள் திலகா. அதிகாரியின் பணியாளர் போல திலகாவைப் பின் தொடர்ந்தார் நாராயணன்.
வனஜாவும், சுந்தரபாண்டியும் பொங்கி வந்த அழுகையை அடிக்கிக் கொண்டு ராதாவை வழி அனுப்பி வைத்தனர்.
14
ஐந்து வருடங்கள் உருண்டோடின. வேலை மாற்றலாகி, பெங்களூருக்கு குடித்தனம் வந்திருந்தனர் ராதா, திலீப், குழந்தை ஸ்வாதி மூவரும். திலகா அவர்களுடன் பெங்களூர் வருவதற்கு மறுத்துவிட்டாள். அவளுக்கு சென்னையை விட்டு வேறு எங்கும் வருவதற்கு உடன்பாடு இல்லை. விருப்பமும் இல்லை. திலீப்பிற்கு அதிகமான தொகை கூடுதல் சம்பளமாகக் கிடைப்பதனால் அவனைப் பிடித்திருந்த உடும்புப் பிடியைத் தளர்த்திக் கொண்டாள். குடும்பப் பற்றுதலை விட பணத்தின் மீதுதான் திலகாவிற்கு அதிகப் பற்றுதல் இருந்தது.
மூன்றாம் தேதி ஆனதும் திலீப்பிடம் இருந்து பணம் வரவில்லை என்றால் பணம் கைக்கு வந்து சேரும்வரை அவளது மொபைலில் நச்சரித்து விடுவாள்.
ராதா அங்கிருந்து போனதில் இருந்து, வீட்டு வேலை பார்க்காமல் வீடு மிகவும் அசுத்தமாக இருந்தது. சமையல் மட்டும் ஏனோ தானோவென்று செய்துவிட்டு மீதிப் பொழுதை டி.வி., தூக்கம் என்று கழிப்பாள்.
பெரும்பாலான நேரங்களில் நாராயணனை ஹோட்டலுக்கு அனுப்பி டிபன், சாப்பாடு வாங்கி வரச்சொல்லி சாப்பாட்டு பிரச்னையை முடித்துக் கொள்வார்கள்.
'நிறைய பணம் செலவாகிறதே ஹோட்டலுக்கு' என்று தப்பித் தவறி நாராயணன் வாயை விட்டுட்டார்ன்னா போச்சு. அன்று முழுவதும் அவருக்கு அர்ச்சனைதான்.
''நான் என்ன உங்க அப்பன் வீட்டுப் பணத்துலயா வாங்கி சாப்பிடறேன்? என் மகன் சம்பாதிக்கற பணத்துல வாங்கி சாப்பிடறேன்...'' என்று நிஷ்டூரமாகப் பேசுவாள்.
'அவன் எனக்கும்தான்டி மகன்' என்று வாதாட இயலாமல் தன் வாயை இறுக மூடிக் கொள்வார் நாராயணன்.
'பசிக்கு உணவு கிடைக்கிறதா? சாப்பிடு. படுத்துக்க இடம் கிடைக்குதா? நிம்மதியா தூங்கு. திலகாவாச்சு... மகன் திலீப் ஆச்சு...' என்கிற ரீதியில் தன் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு தன் வாழ்க்கை முறையை பழக்கப்படுத்திக் கொண்டார் நாராயணன். சென்னையில் அவர்களது வாழ்க்கை முறை இவ்விதம் மாறிப் போக, பெங்களூரில் ராதா, திலீப் வாழ்க்கை எவ்வித மாறுதலும் இன்றி நகர்ந்து கொண்டிருந்தது.