பூவிதழ் புன்னகை
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8109
சென்னை நகரின் அடுக்குமாடி வளாகங்களிலிருந்து, விடுபட்டு அழகாக காட்சி அளித்தது அந்த வீடு. சிறிய வீடு எனினும் தனி வீடு! பழைய காலத்து வீடு என்பதால் கதவுகள் செட்டிநாட்டு வீடுகளில் உள்ளது போல் பழமையின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தது.
வீட்டிற்கு முன்புறம் காணப்பட்ட முற்றம் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருந்தது. அங்கே அமர்ந்து செய்தித்தாள் படித்தபடி காஃபி குடிப்பது ஒரு சுகம். கால்களை நீட்டியபடி களைப்பு நீங்க, ஓய்வு எடுப்பது ஒரு சுகம்.
வீட்டின் மதில் சுவரோரம் நடப்பட்டிருந்த செடிகளில் பூத்திருந்த பூக்களின் சுகந்தம் ஒரு சுகம். வேப்ப மரக் காற்றின் குளிர்ச்சி ஒரு சுகம்.
இத்தகைய அருமையான சூழ்நிலையிலும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையிலும் வனஜா சூடாக இருந்தாள். வார்த்தைகளைப் பொரிந்து தள்ளினாள்.
''அட... நீங்க என்னங்க... சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு? உங்க அக்கா மகன் என்னத்தை சம்பாதிச்சுக் கிழிக்கறான்னு... அவனுக்கு நம்ம பொண்ணைக் கட்டி குடுக்கணும்ங்கறீங்க?''
கணவர் சுந்தரபாண்டியன் 'என்ன பதில் சொல்வது' என்று யோசித்தார்.
கடுமையாகிப் போன மனைவியின் முகம் பார்த்து, தானும் கடுப்பாகி விடாமல், தன்மையாகப் பேச ஆரம்பித்தார்.
''இங்க பாரு வனஜா... எங்க அக்காவுக்கு சொத்து, சுகம் எதுவும் இல்லைன்னாலும் தங்கமான பையனை பெத்து வச்சிருக்கா...''
அப்போது இடைமறித்துப் பேசினாள் வனஜா. ''தங்கமான பையனைப் பெத்து வச்சு என்ன பிரயோஜனம்? தங்கக் காசு சேர்த்து வச்சிருக்கானா? சொத்து... சுகம் வாங்கிப் போட்டிருக்கானா?...''
''த்சு... நான் சொல்ல வந்ததை முழுசா கேளு வனஜா. சொத்து... சுகம்ங்கறியே? இப்ப... இதோ... நாம குடி இருக்கற இந்த வீடு... நானோ நீயோ சம்பாதிச்சு கட்டினதோ... வாங்கினதோ இல்லை. எங்க அப்பாவோட பூர்வீக சொத்து. இன்னிக்கு வீடும், நிலமும் விக்கற விலைவாசியில நம்பளால வாங்க முடியுமா? இந்த வீடு இருந்ததுனால... வாடகை செலவு இல்லாம என்னோட சம்பளத்துல வாழ்க்கையை ஓட்டினோம்.
“நம்ம பொண்ணு ராதாவுக்கு நகை நட்டு வாங்கி வச்சிருக்கோம். கல்யாண செலவுக்கும் ஓரளவு பணம் சேர்த்து வச்சிருக்கோம். என்னோட ஓய்வு ஊதியத்துல கஷ்டப்படாம காலம் தள்றோம்.
இந்த வீடு எங்க பூர்வீக வீடுங்கறதுனால இதில எங்க அக்கா கமலாவுக்கும் சம உரிமை உண்டு. ஆனா... அவ எனக்கு விட்டுக் கொடுத்து, எழுதி, கையெழுத்தும் போட்டுக் குடுத்துட்டா.
'நம்ப தம்பிக்கு பொண்ணு இருக்கா. அவளோட கல்யாண செலவு இருக்கு... நம்ப மகன் சம்பாதிச்சு வீடு, வாசல் கட்டாயமா வாங்கிடுவான்'னு பெருந்தன்மையா விட்டுக்குடுத்திருக்கா. சட்டப்படி இந்த சொத்துல அவளுக்கும் உரிமை உண்டு. ஆனா... மனோ தர்மப்படி... அவ, இதில பங்கு கேட்கலை...''
''அதுக்காக? வீட்டை குடுத்துட்டு, என் பொண்ணை, வாங்கிப்பாங்களாமா உங்க அக்கா?...''
''ஏன் வனஜா... இப்பிடி நிஷ்டூரமாப் பேசற? இன்னிக்கு... சாதாரண வேலைக்கு போற எங்கக்கா மகன் வினோத்... இப்பிடியே இருந்துருவானா? முன்னேற மாட்டானா? அவன் கெட்டிக்காரன். முயற்சி பண்ணி, வெற்றிப் படிக்கட்டுல ஏறுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு...''
''நம்பிக்கையெல்லாம் நாக்கு வழிக்கக்கூட ஆகாதுங்க. இன்னிக்கு நடப்பு என்னவோ... அதைத்தான் பார்க்கணும். நாளைக்கு அவன் சம்பாதிப்பான்... முன்னேறுவான்னு... நல்லபடியா வாழ வேண்டிய பெண்ணை பரீட்சைக்கு அனுப்பற மாதிரி அனுப்ப முடியுமாங்க? நீங்க சொல்ற மாதிரி உங்க அக்கா மகன் வினோத்... நல்ல நிலைமைக்கு வரட்டும். முன்னேறட்டும். அது வரைக்கும் நம்ம பொண்ணு ராதா காத்திருந்தாலும், அவ வயசு காத்திருக்குமா?''
''வினோத் பெரிய அளவுல முன்னுக்கு வர்றதுக்கு நாளாகும்ன்னு ஏன் கணக்கு போடற?''
''இந்தப் பேச்சை இதோட நிறுத்திக்குவோம். எனக்கு ராதாவை அந்த வினோத்துக்கு குடுக்கறதுல துளிகூட விருப்பம் இல்லை. இது விஷயமா... பேசி நமக்குள்ள வீணா எதுக்கு சண்டை?''
''சண்டை போடணும்ங்கறது என்னோட எண்ணம் இல்லை. எந்த விஷயமா இருந்தாலும் தெளிவா, விரிவா பேசித்தான் முடிவு எடுக்கணும்...'' என்று கூறிய சுந்தர பாண்டியன், தயக்கத்துடன் பேச்சைத் தொடர்ந்தார்.
''அதில்ல வனஜா... நம்ப ராதாவும், வினோத்தை விரும்பறாளோன்னு எனக்குத் தோணுது...''
சட்டென்று கோபப்பட்டாள் வனஜா. ''என்னோட பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதா? நீங்க சொல்ற மாதிரி அப்பிடி ஏதாவது இருந்தா... ராதா என்கிட்ட சொல்லி இருப்பா. அது மட்டுமில்ல... அத்தை பையன்- மாமா பொண்ணுங்கறதுல சின்னதா ஒரு ஈர்ப்பு இருக்கறது பொதுவான விஷயம். வினோத்கிட்ட ராதா சிரிச்சு பேசறதை வச்சு நீங்களாவே எதையாவது கற்பனை பண்ணாதீங்க. நம்ம பொண்ணு, பெரிய இடத்துல வாழ்க்கைப்பட்டு சகல வசதிகளோட வாழணும்ன்னு நான் ஆசைப்படறேன்... நீங்க என்னடான்னா... இப்பத்தான் வினோத் ஏதோ ஒரு ஊர் பேர் தெரியாத சின்ன கம்பெனியில வேலைக்கு சேர்ந்திருக்கான். அவனுக்குப் போய் ராதாவை கட்டி வைக்கணும்ங்கறீங்க...''
''அப்பிடிப் பார்த்தா... நான் கூட சாதாரண க்ளார்க்காதான் என்னோட வேலையை ஆரம்பிச்சேன். படிப்படியா முன்னேறித்தானே மேனேஜர் ஆனேன்? ஆனாலும்கூட நாம என்ன பெரிய பணக்கார வாழ்க்கையா வாழறோம்?''
''அப்பிடி வாங்க வழிக்கு. நாமதான் குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டறோம்... நம்ம பெண்ணாவது கிள்ளி எடுத்து செலவு பண்ணாம... அள்ளிப் போட்டு செலவு பண்ணி சந்தோஷமா வாழ வேண்டாமா?''
''வேண்டாம்ன்னு நான் சொல்லலை வனஜா - எனக்கு மட்டும் நம்ம பொண்ணு ராதா, வசதியா வாழணும்ங்கற ஆசை இல்லையா என்ன? ஆனா... வாழ்க்கைக்கு பணம் மட்டும் இருந்தா போதுமா? பணம் மட்டுமே சந்தோஷத்தைக் குடுக்குமா? அதையும் யோசிச்சுப் பாரு.''
''வாழ்க்கைக்கு பிரதானமே பணம்தான்ங்க...''
''நீ நினைக்கறது தப்பு. பணத்தினால நிம்மதியையும், சந்தோஷத்தையும் விலைக்கு வாங்க முடியாது...''
''நீங்க குமாஸ்தாவா வேலை பார்த்தப்ப நம்ம சொந்தக்காரங்க நம்பளை எட்டிக்கூட பார்க்கலை. நீங்க முன்னேறி, மேனேஜர் ஆனப்புறம்...? அத்தனை உறவுகளும் 'ஆஹா... நம்ப சுந்தரபாண்டி... சுந்தரபாண்டி'ன்னு நெருங்கி வந்து உறவாடினாங்க. பணத்தை வச்சுதானே அவங்க, உங்களை மதிப்பீடு பண்ணினாங்க?...''
''அது... உறவுக் கூட்டம். பணத்துக்காக மதிச்சு நெருங்கி வந்தா தூரப் போங்கன்னு சொல்லப் போறதும் இல்லை. விலகிப் போனா... தேடிப் போய் உறவு கொண்டாடப் போறதும் இல்லை. ஆனா... கணவன்- மனைவிங்கற பந்தம் அப்பிடி இல்லை. வாழ்நாள் முழுசும் சேர்ந்து வாழப் போற தெய்வீகமான சொந்தம். இந்த பந்தத்துக்குள்ள பணம்ங்கறது ஒரு விஷயமே கிடையாது. குணமும், மனமும்தான் முக்கியமான பங்கு வகிக்குது. இதை புரிஞ்சுக்க.''