பூவிதழ் புன்னகை - Page 26
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
''ஐய்யோ அப்பா... ஸாரிப்பா. நான் நல்ல பிள்ளையா இருப்பேன்ப்பா. திட்டாதீங்கப்பா ப்ளீஸ்...''
''சரிம்மா. பிள்ளைகளுக்கு முன்னுதாரணமா பேரன்ட்ஸ் இருக்கணும். உனக்கு உங்க அம்மா சரி இல்லை. ஸ்வாதிக்கு அவளோட அப்பா சரி இல்லை...''
''ஆமாம்ப்பா. திலீப் பெரியப்பா, ராதா ஆன்ட்டியை எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருப்பாறாம். ஆன்ட்டிகிட்ட அன்பாவே இருக்க மாட்டாராம்...''
''அதுக்காக? நீங்க ரெண்டு பேரும் அவங்க ரெண்டு பேர் மாதிரியே மனம் போன போக்குல போகணுமா? நல்ல பிள்ளைங்களா வளர்ந்து, நல்லபடியா வாழ்ந்து காட்டணும்...''
''காட் ப்ராமிஸா... இனிமே நான் நல்ல பிள்ளையா உங்களுக்குப் பிடிச்ச மஞ்சுவா நடந்துப்பேன்ப்பா...''
''சரிம்மா. நான் உன்னை நம்பறேன். நீயும், ஸ்வாதியும் சின்னப் பிள்ளைங்க. பெரியவங்களைப் பார்த்து அவங்ககிட்ட இருக்கற நல்லதை மட்டும்தான் எடுத்துக்கணும். கெட்டதையெல்லாம் விட்டுடணும். சரியா..?''
''சரிப்பா...''
''நீ போய் தூங்கும்மா. காலையில சீக்கிரமா எழுந்திருச்சு ஸ்கூலுக்கு போகணும்ல்ல...''
''சரிப்பா...'' வினோத்தின் கன்னத்தில் முத்தமிட்டு 'குட் நைட்' சொல்லி விட்டு, படுக்கப் போனாள் மஞ்சு.
29
எது எதைப்பற்றி கவலைப்படுகிறதோ இல்லையோ, காலம், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தது. நினைத்தால் வீட்டிற்கு வருவதும் சில நாட்களில் வீட்டுப் பக்கமே வராமல் இருப்பதுமாக திலீப்பின் நடவடிக்கைகள் இருந்தன.
செலவிற்கு பணம் கேட்டால் முணங்கிக் கொண்டே கொடுப்பான். ஐநூறு ரூபாய் கேட்டால் முந்நூறு ரூபாய் கொடுப்பான்.
'வருவேன்... வரமாட்டேன்...' என்று அறிவிக்கவும் மாட்டான். ஒரு நாள் செலவிற்கு கையில் பணம் இல்லாத நிலை. பின்னிரவில் மதுவின் போதையில் அரைகுறை நினைவோடு வீட்டிற்கு வந்தான்.
கதவைத் திறந்து விட்டாள் ராதா. மதுவின் நெடி குமட்டியது. காலையில் ஸ்வாதிக்கு புத்தகம் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டது. ஸ்வாதி ஏழரை மணிக்கெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு கிளம்பி விடுவாள். திலீப் எழுந்திருக்கவே எட்டரை மணி ஆகிவிடும். எனவே அவனிடம் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தாள் ராதா. எனவே அவனிடம் பேச்சைத் துவங்கினாள்.
''உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...''
''என்ன?''
''ஸ்வாதிக்கு புத்தகம் வாங்கறதுக்கு பணம் கட்டணும். எண்ணுரறு ரூபா கேட்டிருக்கா. குடுத்துட்டுப் போய் படுங்க...''
''குடிச்சுட்டுதானே படுக்கப் போய்க்கிட்டிருக்கேன்? குடுத்துட்டு படுக்கச் சொல்ற...'' திலீப் பேசவில்லை. அவனது போதை வெறி பேசியது.
''காலையில ஸ்வாதி சீக்கிரமா ஸ்கூலுக்கு போயிடுவா. இப்ப எனக்கு பணம் குடுத்துடுங்க. நீங்க காலையில லேட்டா எழுந்திருப்பீங்க...''
''நான் எப்ப வேண்ணாலும் படுப்பேன். எப்ப வேண்ணாலும் எழுந்திருப்பேன். உனக்கென்ன அதைப் பத்தி...?''
''எனக்கு எதுவும் இல்லை. நாளைக்கு பணம் கட்ட கடைசி நாள். ஸ்வாதிக்கு குடுத்தனுப்பறதுக்கு பணம் வேணும். வீட்டு செலவுக்கும் பணம் இல்லை. அதுக்கும் சேர்த்து குடுங்க...''
''காலையிலதானே வேணும்? காலையில குடுக்கறேன்...''
''ஐய்யோ... நீங்க நிச்சயமா காலையில அவ ஸ்கூலுக்கு போறதுக்குள்ள எழுந்துக்கமாட்டீங்க...''
''எழுந்துப்பேன்...''
''நிறைய தடவை இப்பிடி சொல்லி இருக்கீங்க. ஆனா... காலையில சீக்கிரமா எழுந்துக்க மாட்டீங்க. இப்பவே குடுத்துடுங்க...''
''முடியாது. இப்ப குடுக்க முடியாது...''
''ஏன் முடியாது?...''
''என்னடி... ஏன்... எதுக்குன்னு கேள்வியெல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்ட...?''
''குடும்பத்துல என்ன நடக்குது... எப்பிடி நடக்குதுன்னு என்னை கேட்க வேண்டிய நீங்க... எதைப் பத்தியும் கவலைப்படாம இருக்கறதுனாலதான் நான் உங்களை கேள்வி கேட்க வேண்டியதிருக்கு... நீங்க எப்பிடியோ இருந்துக்கோங்க. எனக்கு செலவுக்கு பணம் குடுங்க. அன்னிக்கு ஆஸ்பத்திரி பில் கட்ட, பணம் இல்லை... இல்லைன்னு நூறு தடவை கேட்டேன். நீங்க வரவும் இல்லை. பணம் தரவும் இல்லை. சரி, அதுதான் போகட்டும், வீட்டுக்கு வந்தப்புறமாவது 'பணத்துக்கு என்ன செஞ்ச?'ன்னு கேட்டீங்களா?....''
''என்ன செஞ்சுருப்ப? உன் அத்தை மகன்... அந்த வினோத்தை கூப்பிட்டிருப்ப... அவன் ஓடோடி வந்திருப்பான் பணத்தோட...''
வினோத் மீது எப்போதும் சந்தேகம் கொண்டவன் திலீப். அதன் எதிரொலியாக இப்போது மறைமுகமாக அவன் பேசியதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினாள் ராதா.
''வேற வழி இல்லாமத்தான் வினோத் அங்கே வரவேண்டியதாயிடுச்சு. அது சரி... அடிபட்டது நம்ம குழந்தை. வினோத் எதுக்காக செலவு பண்ணனும்? அதைப் பத்தி யோசிச்சீங்களா? ஹாஸ்பிட்டல்ல பணம் கட்டலைன்னா... எவ்ளவு அசிங்கம், அவமானம்... அதைப்பத்தி யோசிக்சீங்களா? என் கையில மொபைல் கிடையாது. க்ரெடிட் கார்ட் கிடையாது. என்ன செய்வேன்னு யோசிக்காம, வினோத் வர்றதைப் பத்தி குதர்க்கமா பேசறீங்க...?''
''ஓ... க்ரெடிட் கார்ட், மொபைல் ஃபோன் பத்தியெல்லாம் போதனை பண்ணினானா?...''
''அடிப்படைத் தேவைகள் மொபைலும், க்ரெடிட் கார்டும், இதுக்கு யாரோட போதனையும் தேவை இல்லை. எதுக்கு இப்ப தேவை இல்லாம பேசிக்கிட்டு? பணம் குடுங்க. ''
''பணமெல்லாம் தர முடியாது...''
அவனது உரத்த குரல் கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட ஸ்வாதியின் நெஞ்சம், புறாக் குஞ்சுவிற்கு பயத்தில் துடிப்பது போலத் துடித்தது.
''பணம் குடுக்கலைன்னா நான் என்ன பண்ண முடியும்?''
''என்னமோ பண்ணிக்க...''
''ஏங்க இப்பிடி இரக்கமே இல்லாம பேசறீங்க? நீங்க குடுக்கற பணத்துக்குள்ள சிக்கனமா செலவு பண்ணி குடும்பத்தை நடத்தறேன். கை நிறைய சம்பாதிக்கற உங்களுக்கு... எனக்கு குடுக்கறதுக்கு மனசு வரமாட்டேங்குது. நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவ படிச்சு முன்னேற வேண்டாமா? நாளைக்கு காலையில பணம் கட்டலைன்னா... ஸ்கூலை விட்டு அனுப்பிடுவாங்க.''
''போய் அந்த வினோத்கிட்டயே வாங்கிக்கோயேன்..''
''இப்ப எதுக்கு வினோத்தை இழுக்கறீங்க? அவன் உதவி செய்யலைன்னா நானும், ஸ்வாதியும் செத்து ஒழிஞ்சுருப்போம். நான் என்ன நகை நட்டு பட்டு புடவைன்னா கேக்கறேன்? தேவைக்கு மட்டும்தானே கேக்கறேன்... ?''
''எதுக்குக் கேட்டாலும் தர முடியாது...''
''சம்பாதிக்கற பணத்தையெல்லாம் எவளுக்கோ தண்டம் அழுதுட்டு வர்றீங்க. நான் பணம் கேட்டா குடுக்க முடியாதுன்னு மனுஷத்தன்மையே இல்லாம சொல்றீங்க?''
''ஏய்... என்னடி... எவளுக்கோ அது... இதுன்னு இழிவா பேசற?...''
''பின்ன? இழிவானவங்களைப் பத்தி இழிவாத்தானே பேச முடியும்? அவகிட்டயே எல்லாப் பணத்தையும் குடுத்துட்டு எனக்கு செலவுக்குக் கூட பணம் தர முடியாதுன்னு சொல்றீங்க... தாலி கட்டின மனைவியைவிட அந்த வேலி தாண்டின வெள்ளாடுதான் பெரிசா உங்களுக்கு...?''
''ஆமா... அவதான் எனக்கு எல்லாம். நீ ஒரு வெத்து வேட்டு. பட்டிக்காடு... இனி உன்னோட சகவாசமே வேண்டாம்....'' என்று கூறியவன், அறைக்கு சென்று பெட்டியில் தன் துணிமணிகளை எடுத்தான்.