பூவிதழ் புன்னகை - Page 30
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
31
''ஹாய் டார்லிங்! சமையல் பண்ணனும். கொஞ்சம் கூட வந்து ஹெல்ப் பண்ணுங்களேன்...''
''என்ன? சமையல் ஹெல்ப்பா? நானா?''
''ஆமா டார்லிங். சின்ன சின்ன ஹெல்ப் பண்ணினா அரை மணி நேரத்துல உங்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாயிடும். நாம ஆபீஸ் போகணும்ல்ல? ரா...த்திரி முழுசும் தூங்க விடாம... தொல்லை பண்ணீங்கள்ல்ல...'' என்றபடியே திலீப்பின் கழுத்தில் மாலை போலத் தொங்கிக் கெஞ்சினாள் மிருணா.
அதில் மயங்கிய திலீப், 'இப்ப நான் என்ன பண்ணனும்?'' என்றான்.
''சிம்ப்பிள்! இந்த வெங்காயத்தை மெல்லிசா நறுக்கிக் குடுங்க...'' வெங்காயத்தையும், கத்தியையும் கொடுத்தாள் மிருணா.
வெங்காயத்தை எடுத்த திலீப், அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் கத்தியை எடுத்து வெங்காயத்தை வெட்ட முயற்சித்தான்.
பகபகவென சிரித்தாள் மிருணா.
''இதென்ன கூத்து? வெங்காயத்தை உரிக்காமயா நறுக்கறது?''
அசடு வழிந்தான் திலீப். வெங்காயத்தை உரித்துக் கொடுத்தாள் மிருணா.
தட்டுத் தடுமாறி... வெங்காயத்தை நறுக்கிக் கொடுத்தான் திலீப்.
''அந்த தண்ணிய எடுத்துக் குடுங்க.''
''அந்த காயை எடுத்துக் குடுங்க...''
''ஃப்ரிட்ஜில் இருந்து தக்காளி எடுத்துக் குடுங்க.''
இவ்விதம் அடுக்கடுக்காய் திலீப்பை வேலை வாங்கினாள் மிருணா. மனசுக்குள் 'என்னடா இது' என்று தர்ம சங்கடமாக இருந்தாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தவித்துப் போனாலும் மிருணாவின் மையல், அவனது மனதில் புயல் போல் மையம் கொண்டது. எனவே, சாவி கொடுத்த பொம்மை போல் இயங்கினான்.
ஒரு வழியாக 'எக் நூடுல்ஸ்' தயாரித்து முடித்தாள் மிருணா.
இருவரும் அரட்டை அடித்தபடியே ஆனந்தமாக சாப்பிட்டனர். இந்த வீட்டில் இவ்விதம் வேறு குணச்சித்திரமாக மாறிக் கொண்ட திலீப், தன் சொந்த வீட்டில் டைனிங் டேபிளில் உணவு வகைகளை எடுத்து வைத்து, ஒரு பணியாள் போல அருகே நின்று பரிமாறும் ராதா ஓர் கணம் அவளது நினைவில் வந்து போனாள். கடல் மணலை அடித்துச் செல்லும் கடல் அலை போல, அந்த ஓர் கண நினைவையும் மிருணாவின் மோகவலை அழித்துச் சென்றது.
''நூடுல்ஸ் பிரமாதமா இருக்கு மிருணா...'' அவளது கன்னத்தில் தட்டினாள் திலீப்.
''தேங்க் யூ டார்லிங்...'' குரலில் தேனைக் குழைத்து அவனை ஈர்த்துக் கொள்வதில் கெட்டிக்காரியாக இருந்தாள் மிருணா. வெள்ளை, நொள்ளையை மறைக்கும் என்பது போல லட்சணம் என்பது மிக மிக அளவுடனே இருந்தது மிருணாவிடம். மாயை கண்ணை மறைக்கும் பொழுது, பேயைக் கூட காதலிக்கும் ஆண் இனம்தானே திலீப்?
மிருணாவும் கார் வைத்திருந்தாள். ஆனால் திலீப் அங்கே வந்த பிறகு திலீப்பின் காரிலேயே அவனுடன் தொற்றிக் கொண்டாள் மிருணா. மிருணாவை அவளது ஆபிஸில் விட்டுவிட்டு தனது ஆபிஸிற்கு சென்றான் திலீப்.
32
மிருணா வேலை பார்த்து வரும் ஆபிஸில் இருந்து அவளை அழைத்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தான் திலீப்.
''அப்பார்ட்மென்ட் ஓனர் வந்தார். 'தேதி நாளாச்சு. இன்னும் வாடகை தரலியே'ன்னு கேட்டார். உங்க பேக்ல இருந்து கேஷ் எடுத்துக் குடுத்துட்டேன். இது ஒரு பெரிய தொல்லை டியர். மாசா மாசம் ஒரு தொகை வாடகைக்கு போயிடுது...''
'உங்க 'பேக்'ல இருந்து கேஷ் எடுத்தேன்'னு மிருணா கூறியது கேட்டு மனத்தில் நெருடியது திலீப்பிற்கு. அவனது தோளை உரசி, சற்று நெருக்கமாக உட்கார்ந்து தன் பேச்சைத் தொடர்ந்தாள் மிருணா.
அந்த ஸ்பரிஸ சுகத்தில், மனதின் நெருடல் மாயமாகிப் போனது.
''சொந்தமா ஒரு வீடோ அப்பார்ட்மென்ட்டோ இருந்துட்டா இந்த வாடகை, ஹவுஸ் ஓனர்... பிரச்னை எதுவும் இல்லாம நிம்மதியா இருக்கலாம்.''
மேலும் நெருக்கமாக அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
''நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். கொஞ்ச நாள் பொறுத்துக்க. ஏற்கெனவே நான் வாங்கி இருக்கற வீட்டு லோன், சீக்கிரமா அடைஞ்சுடும். அதுக்கப்புறம் புதுசா இன்னொரு லோன் போட்டு நமக்கு ஒரு வீடோ... அப்பார்ட்மென்ட்டோ வாங்கிடலாம். 'ச்சீப்பா கிடைக்குதே'ன்னு ஒரு காலி நிலம் வேற வாங்கிப் போட்டிருக்கேன். அதை வித்தா நல்ல விலைக்கு போகும். ஒரு பெரிய தொகை கிடைக்கும். அதையும் போட்டு வீடு வாங்கிடலாம்...''
''ம்... எதுக்கு டார்லிங்.... புதுசா இன்னும் வேற லோன் போட்டுக்கிட்டு? ஏற்கெனவே ஒரு வீடு வாங்கி வச்சிருக்கீங்கள்ல்ல? நம்ம அந்த வீட்டுக்குப் போயிடலாம்...''
இதைக் கேட்ட திலீப் சற்று அதிர்ச்சி அடைந்தான். சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான்.
''என்ன டார்லிங் யோசிக்கறீங்க? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?'' என்று கூறியபடியே... அவனது கன்னத்தில், தன் கன்னத்தை வைத்து உரசினாள்.
''உங்களுக்கு அதில உடன்பாடு இல்லைன்னா வேண்டாம் டார்லிங். மறுபடி உங்களுக்கு எதுக்காக கடன் சுமைன்னுதான் நான் சொன்னேன்...''
முகபாவத்தை சோகமாகவும், ஏக்கமாகவும் வைத்துக் கொண்டு கேட்ட பேசிய மிருணாவைப் பார்த்து மனம் இளகியது திலீப்பிற்கு. மிருணாவின் தந்திர வலைக்குள் அவளது மந்திரச் சொற்களால் சிக்கிக் கொண்ட திலீப்... தன்னை மறந்திருந்தான்... தன் நிலையை மறந்திருந்தான். குடும்பம், மனைவி ராதா, மகள் ஸ்வாதி ஆகியோர் மீதுள்ள ஓரளவு ஈடுபாடும் கூட மரத்துப் போயிருந்தன அவனுக்கு.
''என்ன டார்லிங்! இவ்ளவு நேரமா என்ன யோசனை?....''
''அது... அ... அது வந்து... அங்கே ராதாவும், ஸ்வாதியும் இருக்காங்க...''
''அதனால...'' விருட்டென்று அவனது பிடியை உதறிவிட்டு எழுந்திருக்க முயற்சித்த மிருணாவை தோள் தொட்டு உட்கார வைத்தான் திலீப்.
''எதுக்காக இந்த கோபம்? ம்? உனக்கு இல்லாததா? அங்கே இருக்கற அவங்களை என்ன பண்றதுன்னுதான் யோசிக்கிறேன்...''
''என்னமோ பண்ணட்டும். நான் உங்களுக்கு வேணும்னுதானே அவங்களை விட்டுட்டு வந்தீங்க? பிறகென்ன யோசனை? வீட்டை காலி பண்ணிக் கேளுங்க. அது உங்க வீடுதானே? உங்க பேர்லதானே இருக்கு? அதை விக்கறதுக்கோ... அங்கே இருக்கறவங்களை காலி பண்றதுக்கோ... எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு. எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு நீங்க நினைக்கிறீங்களா?...''
குரல் கம்ம பேசுவது போல வசனம் பேசி மிகச் சிறப்பாக நடித்தாள் மிருணா. அவளது அசத்தல் நடிப்பில்... அசடு வழிந்தான் திலீப்.
''என்ன மிருணா இது? உனக்கு இல்லாத உரிமையா? நீதான் சகலமும்ன்னு உனக்காக வந்திருக்கேன். உன் கூடவே இருக்கேன். இப்ப என்ன? அந்த வீட்டை காலி பண்ண வச்சு... நாம அங்கே குடி போகணும். அதானே? எவ்ளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளவு சீக்கிரம் நாம அங்கே போறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். இப்ப சந்தோஷம்தானே?''