பூவிதழ் புன்னகை - Page 31
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8115
''நீங்க என்ன பண்ணினாலும் எனக்கு சந்தோஷம்தான். நீங்க என் கூட இருந்தா அதுவே பெரிய சந்தோஷம். நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை எண்ணி நினைச்சுக் கூட பார்க்க முடியலை டியர்... இன்னிக்கு உங்களுக்குப் பிடிச்ச கேசரியும், மெது வடையும் பண்ணித் தரேன்...''
'வாவ்...'
அவர்களது அரட்டை முடிப்பதற்குள் மிருணாவின் வீடு வந்து சேர்ந்தனர்.
அவனை வேலை வாங்கி ஒரு வழியாக கேசரியும், வடையும் தயாரித்த முடித்து, அவனுக்கு ஊட்டி விடாத குறையாக பரிமாறினாள்.
மிருணாவிடம் இருந்த குறைகள் எதுவும் திலீப்பின் மனதில் ஏறவில்லை. மிருணாவின் பசப்பல் நாடகமும், செயற்கையான பவ்யமும், அவற்றை மீறிய அவளது வசீகரிக்கும் திறமையும் அவனை ஆட்கொண்டன. அவனது தன்மான உணர்வுகளை உட்கொண்டன.
கானல் நீரை நிஜமான நீர் என நம்பிய அவன், வானத்தில் பறப்பது போல் மகிழ்ந்தான். ஆகாயத்தில் இருந்து வந்த அழகிய தேவதை என அவனது கற்பனையில் உருவகம் கொண்டிருந்தாள் மிருணா. எனவே அவளது அந்த மாயையை... கண்மூடித்தனமான மோகத்தை... இல்லற ஜோதியான ராதாவால் நீக்க முடியவில்லை... போக்க முடியவில்லை.
33
நாட்கள் ஆமை போல நகர்ந்தன ராதாவிற்கு.
எதிர்காலம் பற்றிய பயம், நெஞ்சைப் பிசைய அதன் வலியிலேயே வாழ்வைக் கடத்தினாள். ஸ்வாதியின் முகத்தில் எப்போதும் தோன்றும் சோகம் கண்டு அவளது இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது.
வினோத் கூறியது போல 'கோபம் தீர்ந்து வீடு திரும்புவான்' என்ற நப்பாசை தப்பாகிப் போனது. மறுமாதம், கட்ட வேண்டிய எலெக்ட்ரிக் பில் பூதம் போல பயம் காட்டியது.
முதல் தடவை, வினோத்திடம் கொடுத்த நகைகளை அவளிடமே கொண்டு வந்து கொடுத்திருந்தான். எவ்ளவோ மறுத்தும் அவன் அதை அவளிடமே கொடுத்து விட்டு ஒரு தொகையையும் கொடுத்து விட்டுப் போயிருந்தான்.
திலீப் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் வினோத் இருந்தான். ஆனால்... நாட்கள் செல்ல செல்ல அந்த நம்பிக்கை நசித்துப் போனது. அதன் உச்ச கட்டமாக நிகழ்ந்த நிகழ்வு, ராதாவை நிலை குலையச் செய்து விட்டது.
34
கன்னத்தில் கைகளை ஊன்றி, சிந்தனையில் இருந்தாள் ராதா. மன அழுத்தத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். மன அழுத்தத்தின் விளைவால் அவளது அடர்ந்த தலைமுடி கொட்ட ஆரம்பித்திருந்தது.
பெரும்பாலும் மௌனமாகவே காணப்படும் தன் தாயின் நிலை கண்டு பரிதவித்தாள் ஸ்வாதி. கன்னத்தில் ஊன்றி இருந்த ராதாவின் கைகளை எடுத்து விட்டாள்.
''என்னம்மா... எப்பவும் அமைதியா இருக்கீங்க? சிரிக்கவே மாட்டேங்கறீங்க? 'நீங்கதானே எப்பவும் அழவே மாட்டேன்'ன்னு சொன்னீங்க?''
''ஆமா. அழ மாட்டேன்னுதானே சொன்னேன்? சிரிச்சுக்கிட்டிருப்பேன்னு சொல்லலியே? என்னோட இருபதாவது வயசுல உங்கப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல இருந்து சிரிப்பையே மறந்து போன வாழ்க்கை. நீ பிறந்தப்புறம் உன் முகம் பார்த்து கொஞ்சறதுல கொஞ்சம் சிரிச்சேன். இப்போ? என்னோட வாழ்க்கையே சிரிப்பா சிரிச்சுப் போச்சு. நான் உயிரோட இருக்கறதே உனக்காகத்தான். இல்லைன்னா... என்னோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் செத்துப் போனப்பவே நானும் செத்திருப்பேன்... நான் எதுக்காக வாழணும்?''
''எதுக்காக வாழணும்ன்னு ஏம்மா நினைக்கணும்? எதுக்காக சாகணும்னு நினைங்கம்மா. தப்பு செய்றவங்களே நல்லா, சந்தோஷமா இருக்கும்போது, தப்பே செய்யாத நாம ஏன்மா சோகமா இருக்கணும்? எந்தவித குற்ற உணர்வும் இல்லாம நிம்மதியா வாழற வரத்தை நமக்கு கடவுள் குடுத்திருக்கார்மா...''
''கடவுள், கோயில்... இதிலயெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லாம போச்சும்மா... யாருக்கும் எந்தக் கெடுதலும் மனசால கூட நினைக்காத என்னோட அம்மா, அப்பா வயசான காலத்துல மன உளைச்சல்ல சிக்கித் தவிச்சாங்க. அவங்க கும்பிடாத தெய்வமா? அந்த தெய்வம் என்ன பண்ணுச்சு? உங்க அப்பா, எனக்கு கட்டின தாலிக்கு மரியாதை குடுத்து, மதிப்பு குடுத்து, குடும்பம்ங்கற நேயத்தைக் காப்பாத்தி அவருக்கும் சேவை செஞ்சு வாழ்ந்த எனக்கு அந்த தெய்வம் என்ன பண்ணுச்சு? என் மேல பெரிசா பிரியம் இல்லாட்டாலும் உன்கிட்ட கொஞ்சம் பிரியமா இருந்தாரே... அதுவும் போச்சுல்ல? அதுக்கு அந்த தெய்வம் என்ன பண்ணுச்சு?... ''
குறுக்கிட்டு பேசினாள் ஸ்வாதி.
''மிருணா கூட ஃப்ரெண்ட்ஷிப் ஆனப்புறம் என் மேல இருந்த பிரியம் ஓடிப் போச்சு...'' கேலியாக பேசி, ராதாவை சிரிக்க வைக்க முயன்றாள் ஸ்வாதி.
உண்மையாகவே மகளின் அந்தப் பேச்சு, ராதாவை சிரிக்க வைத்தது.
நீண்ட காலத்திற்குப் பின் மனம் விட்டு சிரித்தாள்.
''உன்னால சிரிக்கற நான், உன்னாலயே என்னிக்குமே அழற மாதிரி பண்ணிடாதடா ஸ்வாதி. நான் இனி சந்தோஷமா வாழாட்டாலும் சங்கடப்படற மாதிரி வாழாதது உன்கிட்டதான் இருக்கு. உங்கப்பாவைப் போல மோசமான குணங்கள் உனக்கு வரக் கூடாது. மனசை நாம அடக்கணுமே தவிர, மனசு நம்பளை அடக்கக் கூடாது. உயர் கல்வி, உனக்கு உயர்ந்த வாழ்க்கையைக் குடுக்கும். என்னை மாதிரி, யாரையாவது சார்ந்து வாழற வாழ்வு உனக்கு நேரிடக்கூடாதுன்னா அதுக்குத் தேவையானது படிப்பு. நீ நிறைய மார்க் வாங்கினா... ஸ்காலர்ஷிப் கிடைக்கும். அது நம்ப பொருளாதார வசதிக்கு கை குடுக்கும். பள்ளிக் கூட நாட்களும், கல்லூரி நாட்களும்தான் இனிமையான காலகட்டங்கள். அதை அனுபவி. ஆனா கூடா நட்பு வச்சுக்கிட்டு பாதை மாறி போகக் கூடாது. பாட்டு, டான்ஸ், ஜோக், அரட்டை இதெல்லாம் தேவைதான். ஆனா... அது அளவோட இருக்கணும். எந்த விஷயத்துலயும் எல்லை மீறி போகக் கூடாது. சீதைக்கு லஷ்மணன் போட்ட கோடு மாதிரி உனக்குள்ள ஒரு கோடு போட்டு வச்சுக்கோ. அந்தக் கோட்டுக்குள்ளேயே உன்னோட கவனம் இருக்கணும். 'என்னடா இது... திரும்பத் திரும்ப அறிவுரை சொல்லி அறுக்கிறாளே அம்மா'ன்னு நினைக்காதே. என்னோட உயிர் நீ. உலகம் நீ. நீ நல்லா இருக்கணும்னு தான் உனக்கு நல்வழி காட்டறேன். புரிஞ்சுக்கோடா...''
''சரிம்மா. எனக்குப் புரியுதும்மா. ஆனா நீங்க ரொம்ப 'டல்'லா இருக்கீங்க. அதுதான்மா எனக்குப் பிடிக்கலை.''
''என்னடா செய்யறது? என்கிட்ட இருந்த நகைகள்ல்ல நிறைய நகைங்களை வித்தாச்சு... மீதி கொஞ்சம்தான் இருக்கு. அதையும் வித்துட்டா செலவுக்கு பணமே இருக்காது... இந்த வீடு சொந்த வீடா இருக்கறதுனால வாடகை பாரம் இல்லாம இவ்ளவு நாள் தாக்கு பிடிக்க முடிஞ்சுது...''