பூவிதழ் புன்னகை - Page 35
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8116
39
ஸ்வாதியை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பிவிட்டு லேண்ட் லைனில் இருந்து வினோத்திற்கு ஃபோன் செய்தாள் ராதா. அப்போது தற்செயலாக அங்கே வந்தான் வினோத். பணம் கட்டாதபடியால் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
''வா வினோத். உனக்குத்தான் ஃபோன் செஞ்சுக்கிட்டிருந்தேன். பணம் கட்டாததுனால டெலிஃபோன் லைனை 'கட்' பண்ணிட்டாங்க... நல்ல வேளை... நீயே வந்துட்ட...''
''முதல் வேலையா... உனக்கு ஒரு மொபைல் ஃபோனும், நம்பரும் வாங்கணும்...''
''அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதல்ல எனக்கு வீடு பார்க்கணும். எவ்ளவுக்கெவ்ளவு குறைஞ்ச வாடகைக்கு கிடைக்குதோ அவ்ளவுக்கவ்ளவு நல்லது...''
''என்னது?... வாடகைக்கு வீடா? இது சொந்த வீடுதானே?''
''யாருக்கு சொந்தமானது?''
''என்ன ராதா இப்பிடி பேசற? இந்த வீடு உங்களோட சொந்த வீடுதானே? திலீப் வாங்கின வீடுதானே?...''
''திலீப் யார்...?''
''என்ன ராதா? என்ன ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா? ஏன் இப்பிடி விரக்தியா பேசற?''
''நேத்து அவர் வந்தார். இந்த வீட்டை ஒரு மாசத்துக்குள்ள காலி பண்ணி, சாவியைக் குடுத்துரணுமாம்...''
''என்னது? வீட்டை காலி பண்ணனுமா? ஏன்? எதுக்காக..?''
''அதெல்லாம் அவர்ட்ட கேக்க முடியுமா? கேட்டாதான் சொல்லிடப் போறரா? 'வீட்டைக் குடு'ன்னு தேதி கூட கெடு வச்சுட்டார்...''
''என்ன இது... திலீப் அண்ணா செய்றது ரொம்ப முட்டாள்தனமா இருக்கே... சென்னையில உன் பேர்ல இருந்த வீட்டையும் வித்து சுருட்டிக்கிட்டார். இப்ப நீ குடி இருக்கற வீட்டையும் காலி பண்ணச் சொல்றாரு...?''
''இப்ப சொல்லு. நான்தானே முட்டாள்...?''
''இல்லை. நீ ஏமாளி. வாய் இல்லாத பூச்சி... 'சென்னை வீட்டையும் புடுங்கிட்டிங்க. இந்த வீட்டையும் கேக்கறீங்க... தர முடியாது'ன்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே? சட்டப்படி இது உனக்கு உரிமை உள்ள வீடுதானே?...''
''சட்டப்படி எதுவும் நடக்காது. அவரோட திட்டப்படிதான் எல்லாம நடக்கும்... அதுபோக, சட்டப்படி எந்த நடவடிக்கை எடுக்க எனக்கு விருப்பமும் இல்லை. கூட வாழ்ந்த மனைவி, கூடி சேர்ந்ததுக்கு அடையாளமான மகள்... இந்த பந்தத்தை விட... சொந்த வீடுதானே அவருக்கு தேவையா இருக்கு? முக்கியமா இருக்கு? உயிரோடும், ஜீவனோடும் இருக்கற எங்களை விட உயிர் இல்லாத ஒரு ஜடப் பொருள்தானே அவருக்கு பெரிசா தோணுது? அவரே வச்சுக்கட்டும். அவர் கூட வாக்குவாதம் பண்றதோ, வீட்டுக்காக சட்டப்படி போராடறதோ வீண் வேலை என்னைப் பொறுத்த வரை. என்னோட அம்மா, அப்பாவை கொல்லாம கொன்னுட்டார். அதுக்கப்புறம் என்னையும், ஸ்வாதியையும் கொல்லாம கொன்னுட்டார். இப்போ இந்த வீட்டையும் கேட்டு எங்களை நடைப் பணிமா ஆக்கிட்டார். இப்பிடி ஒரு கொலைகாரரோட சொத்து எனக்குத் தேவை இல்லை...''
''வைராக்கியத்துல இப்பிடி விட்டெறிஞ்சு பேசற... நடைமுறை பத்தி யோசிக்கணும்...''
''நடுத்தெரு நாராயணிகளா... என்னையும், என்னோட மகளையும் அவர் விட்டுடத் துணிஞ்ச அப்புறம் நிச்சயமா நான் நடைமுறை வாழ்க்கை பத்தி யோசிச்சுத்தான் ஆகணும். அதுக்காகத்தான் உன்னைக் கூப்பிட்டேன்... எனக்கு ஒரு வேலை வாங்கிக் குடு... ''
இதைக் கேட்டு, வினோத் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான்.
''அது... அது... உனக்கு எந்த மாதிரியான வேலை தெரியும்...?''
''நான் அதிகம் படிக்காததுனால ரொம்பத் தயக்கமா இந்தக் கேள்வியைக் கேக்கற. சமைக்கறதையும், வீட்டுப் பராமரிப்பையும் தவிர வேற என்ன வேலை எனக்குத் தெரியும்?''
''சபாஷ்! இந்த ரெண்டு வேலையுமே சூப்பர் வேலைதானே? உன்னோட சமையல் 'செம'யா இருக்குமே. ஒரு ஐடியா. எனக்குத் தெரிஞ்ச ஏழெட்டு ஸ்டூடன்ட்ஸும், ஆபீஸ் வேலைக்குப் போறவங்களும் ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காம கஷ்டப்படறாங்க. வீட்டு சாப்பாடு கிடைச்சா நல்லா இருக்கும்ன்னு அவங்க பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு நீ சமைச்சுக் குடு. அதுல நல்ல காசு கிடைக்கும். ஹோட்டல் தொழில்ல நூத்துக்கு நூறு சதவிகிதத்துக்கு மேல லாபம் வைப்பாங்க. அதே மாதிரி நாமளும் லாபம் வைக்கலாம். நல்ல, ருசியான ஆரோக்கியமான சாப்பாட்டுக்காக ஏங்கற அவங்க, பணத்தை ஒரு பெரிய விஷயமா நினைக்க மாட்டாங்க. உனக்கு சம்மதம்ன்னா சொல்லு ராதா... ''
''சந்தோஷமான சம்மதம். சமையல் எனக்குப் பிடிச்சமான ஒரு வேலை. வேலைன்னு சொல்றதைவிட ஒரு கலைன்னே சொல்லாம். முதல்ல வீட்டைப் பார்த்துட்டு அப்புறமா இதை செய்யணும். ஒரு ஹால், ஒரு ரூம், கிச்சன் இருந்தா போதும்.... ஹால்ல வச்சே சாப்பாடு போட்டுடுவேன். ஆபிஸ்க்கு, காலேஜ்க்கு டிபன் பாக்ஸ் கட்டிக் குடுக்கணும்ன்னாலும் குடுத்துடுவேன். வீடு மாத்தறதுதான் இப்ப முக்கியம். மனுஷத் தன்மையே இல்லாத அந்த மனுஷனோட வீட்ல குடி இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு முள் மேல இருக்கற மாதிரி இருக்கு... ப்ளீஸ் வினோத்....''
''கவலையே படாதே. கூடிய சீக்கிரம் உனக்கு வீடு பார்த்துடறேன். அது சரி, செலவுக்கு பணம் இருக்கா... இந்தா இதை வச்சுக்கோ... ''
சில நூறு ரூபாய் நோட்டுகளை ராதாவின் கைகளில் திணித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் வினோத்.
40
ஒரு வாரத்திற்குள்ளாகவே சில போர்ஷன் வீடுகள் மற்றும் சில சிறிய அப்பார்ட்மென்ட்களையும் ராதாவைக் கூட்டிச் சென்று காண்பித்தான் வினோத்.
அப்பார்ட்மென்ட்களை விட போர்ஷன் வீடுகள் வாடகை குறைவாய் இருந்தன. ஒரு சிறிய மாடி வீட்டின் கீழ்ப் பகுதியில் ஒரு படுக்கை அறை, ஒரு மைய ஹால், ஓரளவு வசதியான சமையலறை இருந்தது.
புதியதாக வண்ணம் பூசி, அப்பகுதியை சுத்தமாகப் பராமரித்து வைத்திருந்தனர் வீட்டின் உரிமையாளர்கள். அந்த வீடு இருந்த ஏரியாவும் நெருக்கடியாக இல்லாமல் அமைதியான ஏரிவாகவும், சுத்தமாகவும் இருந்தது.
பல வீடுகளைப் பார்த்த ராதாவிற்கு, அந்த கீழ் போர்ஷன் வீடு பிடித்திருந்தது.
''இந்த வீடு நல்லா இருக்கு வினோத்...''
''ரொம்ப சின்னதா இருக்கே ராதா...?''
''போதும் வினோத். நானும் ஸ்வாதி மட்டும்தானே? சாப்பிட வர்றவங்களுக்கு இந்த ஹால்ல டேபிள், சேர் போட்டு பரிமாறிடலாம். சமையல்கட்டு சிங்க்ல பாத்திரங்களைக் கழுவிக்கலாம்...''
''அவ்ளவு பெரிய வீட்ல வாழ்ந்த நீயும், ஸ்வாதியும் எப்பிடி இவ்ளவு சின்ன போர்ஷன்ல இருப்பீங்க? நல்லா யோசிச்சு சொல்லு...''
''வாடகை குறைவா... ஆனா... அதே சமயம் வசதியாகவும் இருக்கு. பெரிய வீடெல்லாம் எனக்குத் தேவை இல்லை. சமாளிச்சுடுவேன்...''
''சரி... ராதா. அட்வான்ஸ் குடுத்துடலாமா?''
''குடுத்துடலாம். என்கிட்ட கொஞ்சம் நகைகள் இருக்கு. அதை வச்சு...''
''அட்வான்ஸ் குடுத்துடலாமா? அதுக்கு மட்டும் பதில் சொல்லு...''