பூவிதழ் புன்னகை - Page 34
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8115
அன்றும் அது போன்ற மனநிலையில்தான் அங்கு வந்திருந்தான். புதியதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த லயன் ஓட்ஸ் மற்றும் அவர்களது முந்தைய தயாரிப்பான லயன் ஹனியையும் எடுத்துப் பார்த்தான்.
'இனி தினமும் காலையில ஓட்ஸ் குடிக்கலாமே?' என்று நினைத்துக் கொண்டே நான்கு லயன் ஓட்ஸ் பாக்கெட்களை எடுத்து ட்ராலியில் போட்டான் வினோத். அப்போது அவனது முதுகை யாரோ தட்டி அழைப்பதை உணர்ந்து திரும்பினான்.
அங்கே பவித்ரா நின்றிருந்தாள்.
''ஹாய்... என்ன பர்ச்சேஸா?''
''இல்லை... சினிமா பார்த்துக்கிட்டிருக்கேன்...'' கடுப்பாக பதில் கூறினான் வினோத்.
'' 'அபியும், நானும்' படத்துல வர்ற ஜோக்கை ஞாபகம் வச்சு பேசறீங்களே?''
''சரி... சரி... என்ன விஷயம் சொல்லு.''
''சொல்லாம போயிடுவேனா? எனக்கு உடம்பு சரி இல்லை...'' என்று ஆரம்பித்தவளை ஏற இறங்க பார்த்தான் வினோத். சிரித்தான்.
''உனக்கு உடம்பு சரி இல்லையா? நான் நம்பணுமா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். நல்லா... சீவி முடிச்சு சிங்காரிச்சுக்கிட்டு, ஒரு இஞ்சுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு... ஸ்டைலா... ஹேண்ட்-பேகை தூக்கிக்கிட்டு... ஹாய்யா, டிப்பார்ட்மென்ட்டல் ஸ்டோருக்கு வந்திருக்க. உனக்கு உடம்பு சரி இல்லையா?''
''நிஜம்மா எனக்கு உடம்பு சரி இல்லை. வேணும்ன்னா... என்னோட மொபைல்ல டாக்டரோட அப்பாயின்ட்மென்ட் டேட்டும், டைமும் குறிச்சு வச்சிருக்கேன் பார்க்கறீங்களா?'' அவன் பார்க்க மாட்டான் என்ற தைரியத்தில் கேட்டாள் பவித்ரா.
''உனக்கு இப்ப என்ன வேணும்? பணம்தானே? எவ்ளவு வேணும்? அடிக்கடி பணம் பணம்னு என்னைத் தொல்லை பண்ணாதே. சும்மா... எப்பப் பார்த்தாலும் பணத்தை அள்ளிவிட முடியாது. ஊதாரித்தனமா செலவு பண்ணாம பணத்தை சேர்த்து வைக்கப்பாரு'' என்று கூறிய வினோத், பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
''தேங்க்யூ... தேங்க்யூ...'' என்றபடி பணத்தை வாங்கிக் கொண்ட பவித்ரா, அங்கிருந்து நகர்ந்தாள். மூன்றடி தூரம் சென்றவள், மறுபடி 'ரிவர்ஸி'ல் திரும்பி வந்து ''அப்பப்ப... அங்கங்க... உங்க ராதாகூட உங்களைப் பார்க்கிறேனே...'' என்று நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
''கைக்கு பணம் வந்த உடனே வாய் கிழியுது பார்த்தியா உனக்கு?'' என்று கூறிய வினோத், ட்ராலியைத் தள்ளிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
37
இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு... புரண்டு படுத்தாள் ராதா. பாரங்களை சுமந்து சுமந்து, பாறாங்கல்லாய் இறுகிப் போன மனதில் ஈரம் கசியாமல் திடமான தைரியத்தை உருவாக்க முயற்சித்தாள் அவள்.
பக்கத்தில் படுத்திருந்த ஸ்வாதி நடு இரவில் எழுந்தாள்.
''என்னம்மா... தூங்கலியா? அப்பா... வீட்டைக் கேட்டுட்டார்ன்னு கவலைப்படறீங்களா? எனக்குக் கூட பயம்மா இருக்கும்மா...''
கோழி, தன் குஞ்சுகளை அணைத்துக் கொள்வது போல, ஸ்வாதியை தன் நெஞ்சுடன் சேர்த்து அனைத்துக் கொண்டாள் ராதா.
''பயப்படாதடா, அம்மா இருக்கேன்ல...''
''எனக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்ச வீடும்மா. என்னோட ரூம் கூட எனக்குப் பிடிச்சதும்மா. ஆனா... அப்பா... அவரைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலைம்மா. ஒரே வெறுப்பா இருக்கு...''
''அவர்தான் நம்ம கண்காணாம போயிட்டார்ல?''
''வீட்டுக்கு என்னம்மா செய்யப் போறீங்க?''
''நீ சின்னப் பொண்ணு. அதையெல்லாம் யோசிக்காதே... நான் பார்த்துக்கறேன். உன்னோட ஞாபகமெல்லாம் படிப்புல மட்டும்தான் இருக்கணும்ன்னு சொல்லி இருக்கேன்ல? மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன். இப்ப பேசாம தூங்கு...''
''இவ்ளவு நடந்தும், அப்பா இப்பிடி 'ஒரு மாசத்துல வீட்டைக் குடுக்கணும்'ன்னு திடீர்னு வந்து சொல்லிட்டு போனப்புறமும் கூட நீங்க எப்பிடிம்மா அழாம இருக்கீங்க?''
''நான்தான் சொன்னேனே... 'இனி நான் அழவே மாட்டேன்'னு. தென்றல் காற்று கூட புயலா மாறுதுல்ல? அதே காத்து, சிறு தணலா இருக்கற கரியை பெருந்தீயா' எரிய வைக்குதில்ல? அது போலத்தான் இதயத்துல... துன்பம் புதையப் புதைய... அது இரும்பா மாறி... சுமைகளை சுலபமா சுமக்கும். இப்ப... இப்பிடிப்பட்ட சுமைதாங்கிதான் உன் அம்மா. உனக்காக சுமப்பேன். அமைப்பேன் உனக்கொரு நல்ல வாழ்க்கையை. நீ அமைதியா தூங்கு. இந்த சின்னஞ்சிறு வயசுல வேற சிந்தனைகளே உனக்கு வேண்டாம்...'' அன்புடன் ஸ்வாதியின் தலைமுடியைக் கோதி, அவளைத் தூங்க வைத்தாள் ராதா.
ஸ்வாதிக்கு தைரியம் சொல்வது போல, தனக்குத் தானே தைரியமூட்டிக் கொண்டாளே தவிர, ராதாவிற்கும் எதிர்காலம் குறித்து, துக்கம் ஒரு பந்து போல நெஞ்சை அடைத்தது. தூக்கமின்றி விடியும் வரை சிரித்தாள். பெண்ணாகப் பிறந்துவிட்ட தன் நிலையை நினைத்தாள். இவ்விதமே அவளது இரவு கழிந்தது. பொழுது விடிந்தது.
38
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கே உரிய ஆடம்பரங்களையும், அலங்காரங்களையும், அழகையும் அடக்கிக் கொண்டு ஆனந்த மயமாகக் காட்சி அளித்தது 'ஆதவா' ஹோட்டல்.
அங்கே இருந்த விசாலமான ஓர் அறைக்குள்ளும் அலங்காரம் மனதை அள்ளியது. பெரும் செல்வந்தர்கள் மட்டுமே செலவு செய்து விருந்து கொடுக்கும் அந்த ஆதவன் ஹோட்டலின் அந்த அறையை தன் பிறந்தநாள் விருந்துக்காக ஏற்பாடு செய்திருந்தாள் மிருணா.
அவளது நண்பர்கள், சிநேகிதிகள், அலுவலக அதிகாரிகள் என்று அநேகர் அங்கே கூடி இருந்தனர். மிக விலை உயர்ந்த நவீன உடையில் காணப்பட்ட மிருணா, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். திலீப்பின் கைகளோடு கைகள் கோர்த்தபடி அனைவரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி, உபசரித்தாள் மிருணா. அன்றைய செலவுக்கென்று திலீப்பிடம் பெருந்தொகையைக் கேட்டிருந்தாள். அவ்ளவு பெரிய தொகை செலவு செய்வதில் திலீப்பிற்கு உடன்பாடு இல்லை.
எனினும், மிருணாவின் விழி வீச்சிற்கும் பசப்பல் மொழிப் பேச்சிற்கும் அடிமையாகி, க்ரெடிட் கார்ட் தேய்ப்பதற்கு ஓப்புக் கொண்டான். அத்தனை பெரிய தொகையை சமாளிப்பதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டதால் க்ரெடிட் கார்ட் தேய்ப்பதற்கு முடிவு செய்தான்.
அது போக, அவளது உடைக்கும். அவனே ஏகமாக செலவு செய்திருந்தான். உணவு வகைகளும், மது வகைகளும் அணி வகுத்திருந்தன. வந்திருந்த அனைவரும் அவரவர் இஷ்டத்திற்கு குடிப்பதும், உண்பதுமாக இருந்தனர்.
மிருணாவைப் பாராட்டிப் பேசினர். அவள் ஏற்பாடு செய்திருந்த ஆடம்பரமாக அந்த விருந்திற்காக அவளைப் புகழ்ந்து துதி பாடினர். அந்த முகஸ்துதியில் அகமும், முகமும் மலர்ந்தாள் மிருணா.
விருந்து மிக விமர்சையாகக் களை கட்டியது. அதன் பிறகு அனைவரும் நடனம் என்ற பெயரில் மது போதையில் தங்களை மறந்து அலங்கோலமாக ஆடினார்கள். ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடிக் கொண்டிருந்த அவ்விடத்தில் தமிழ்ப் பண்பாடும் பாரம்பர்ய கலாச்சாரமும் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. அழிந்து கொண்டிருந்தது.
நடு இரவிற்கு மேல் வரை நிகழ்ந்த அந்தக் களியாட்டம், ஏறத்தாழ விடியும் பொழுதே முடிந்தது.