பூவிதழ் புன்னகை - Page 33
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8115
''வேற்று பெண்களிடம் வேட்கை கொண்டு திரியும் ஆண்களுக்கு மாற்று இருக்கிறதா என்றால்... இல்லை எனும் உண்மையைத்தான் கூற வேண்டும். அந்த உண்மை கசப்பானது.
பிற பெண்களை நாடி, தேடி ஓடி, அப்பெண்களுடன் கூடிக் களிக்கும் ஆண்களின் இந்த மனசாட்சியற்ற செயலுக்குக் காரணம், அவளது மனைவி என்று கூறப்படுகிறது. ஓரிரு நபர்களின் விஷயத்தில் வேண்டுமானால் மனைவி காரணமாக இருக்கக் கூடும். பெரும்பாலான ஆண்கள் விஷயத்தில் இக்கருத்து மிகத் தவறானது.
வீட்டில், மனைவி மிக மிக அருமையாக, அறுசுவை விருந்து சமைத்துப் பரிமாறினாலும் ஹோட்டல்களுக்கு சென்று அங்கே வழங்கப்படும் உணவு வகைகளை 'ஆகா... ஓகோ...! என்று பாராட்டி, புகழ்ந்து, ரசித்து சாப்பிடும் ஆண்கள் எப்படி தன் மனைவியைக் குறை சொல்ல முடியும்? அவர்களின் மனோபாவம் அப்படி எனும்போது எவராலும் திருத்த முடியாது. சமையல் அறை சமாச்சாரம்தான் இப்படி என்றால் படுக்கையறை சமாச்சாரமும் அப்படித்தானே இருக்கும்? யாரும் யாரையும் குறை சொல்வதால் எந்த பலனும் இல்ல. அவரவரிடம் உள்ள குறைகளை அவரவர் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். எளிதில், எதிலும் திருப்தி அடையாதவர்களை என்ன செய்ய முடியும்? இவர்களை வக்கிர புத்தி உள்ளவர்கள் என்று சொல்லலாம். மன நோயாளிகள் என்று கூட சொல்லலாம். மனநல ஆலோசகர்களிடம் தகுந்த ஆலோசனை பெறலாம். மனநல மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளைக் கேட்டு, தங்களை சரி பண்ணிக் கொள்ளலாம். கணவன் மனைவி இருவரும் மனம் திறந்து பேசிக் கொள்வது மிக அவசியம். பணம் படைச்ச பெரிய மனிதர்கள் மட்டுமல்ல சாதாரண கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தில் கூட இப்படிப்பட்ட பிரச்னைகள் நிகழ்கின்றன. பெரும் பணக்காரர்களாக இருந்தாலும் கூட... மனைவியைத் திவிர பிற பெண்களின் தொடர்பு உள்ளவர்களை 'சின்ன வீடு வச்சிருக்கான்' என்று தான் சொல்வார்கள். இந்த ஆண்கள் அப்பிடி சொல்றதைக் கூட பெருமையாக நினைச்சுக்குவாங்க.
திருமணமாகாத பெண்கள் பாதை மாறிப் போய், காதல் வலையில் சிக்கி, காதலனிடம் தன்னை இழந்து, அவனது ஆசைக் கழிவால் உண்டாகிய கருவை சுமக்க நேரிடும் போது? அவளுக்கு உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுது. அந்த மாற்றங்களால் தரும் தோற்றம் அவளது இருட்டு வாழ்க்கையை உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டுது. மார்பகங்கள் விரிந்து, வயிறு மேடாகி, அவளது உருவமே அவளது மறைமுக உறவை வெளிப்படுத்திடுது.
ஆனா... ஆம்பளைகளுக்கு இது போல எந்த அடையாளமும் இல்லை. அதனால அவனுக்கு எந்த ஒரு மான பங்கமும் கிடையாது. 'எனக்கு இந்தப் பொண்ணு பழக்கம்... 'நான் இவ கூட படுத்திருக்கேன்.' 'அவ கூட படுத்திருக்கேன்' 'எனக்கு பல பெண்ணுங்க கூட டச் உண்டுப்பா...' என்று ஏதோ வீரதீர பராக்கிரம காரியங்களை செஞ்சுட்ட மாதிரி காலரை தூக்கி விட்டுப்பாங்க. அவங்களுக்கு என்னமோ அது ஆண்மை நிறைஞ்ச சாகஸம்னு நினைப்பு! ஆண்மைங்கறது உடல் ரீதியாக பெண்களுடனான உடல் உறவு மட்டுமில்ல... தன்னைப் பெத்த தாய், தான் தாலி கட்டின பொண்ணு, கண்ணு கலங்காம வாழறதுல அக்கறையா இருந்து அவளை அரவணைச்சு ஆதரிச்சு, அன்பா வாழறதுதான் முழுமையான ஆண்மை. உடல் உணர்ச்சிகளால் ஆண்மையை வெளிப்படுத்தறதை விட மன உணர்வுகளால, மென்மையான பெண்மையை தன்மையா ஆளுமை செய்றதுதான் ஒரு ஆண் மகனுக்கு அழகு. கம்பீரம். இதைப் புரிஞ்சுக்காம பூஞ்சோலைகள்ல்ல பல மலர்களைத் தேடி அலையற கருவண்டுகள் மாதிரி கண் போன போக்குல கால் போக... வாழற ஆண்கள்... கண்டிக்கப்பட வேண்டியவங்க... தண்டிக்கப்பட வேண்டியவங்க...''
''மேடம்... ஒரு மனநல ஆலோசகரான நீங்க... உங்க சார்பான மருத்துவத் துறையில் எவ்ளவோ சாதிச்சிருக்கீங்க. ஆனா... இப்ப... இந்த நேர் காணல்கள் நிகழ்ச்சியில் உங்க பேச்சுல ஒரு எரிமலை பொங்கற மாதிரி ஒரு உணர்வு தென்படுது எங்களுக்கு...'' மனநல ஆலோசகர் லட்சணாவை பேட்டி காணும் பெண்மணி கேட்டார்.
''ஆமா. என்னையும் அறியாம என் மனசுல இருக்கறதை கொட்டிட்டேன். நீங்க சொன்னது போல.... என் உள்ளத்துக்குள்ள பொங்கற எரிமலை, இந்த நிகழ்ச்சி மூலமா வெடிச்சுருக்கு. ஏன்னா... என்னோட வாழ்க்கையிலயும் சில முரண்பாடுகள். அந்த முரண்பாடுகள் என் வாழ்க்கையை இடிபாடுகளுக்கு உட்படுத்தாம காப்பாத்தறது என்னோட இந்த மருத்துவத் தொழில். இதுக்கு மேல என்னோட பெர்ஸனல் பத்தி பேச விரும்பலை. அது தேவையும் இல்லை. ஆனா... இந்த நிகழ்ச்சி மூலமா... குறைஞ்ச பட்சம் நாலு ஆண்களாவது திருந்தினா அது போதும் எனக்கு...''
''நிச்சயமா நீங்க நினைக்கறது நடக்கும் மேடம்... உங்க பொன்னான நேரத்தை இந்த நிகழ்ச்சிக்காக செலவிடறதுக்கு இதயம் டி.வி. சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவிச்சுக்கறோம்.''
''நானும் இதயம் டி.வி.க்கு என்னோட நன்றிகளை தெரிவச்சுக்கறேன். நோயற்ற வாழ்வுங்கற குறைவற்ற செல்வம் கிடைச்சு, நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்...''
மனநல ஆலோசகர் திருமதி லட்சணா, கை கூப்பி நன்றி செலுத்தினார். 'பட்' என்று டி.வி.யை அணைத்தாள் மிருணா.
''என்ன டார்லிங்... மொக்கை ப்ரோக்ராம்மைப் போய் பார்த்துக்கிட்டிருக்கீங்க...?''
''ஆமா டியர். என்னமோ அந்த அம்மா ஆண் குலத்தை சீர்திருத்தப் போறாங்களாம். எப்பிடியோ... இந்த சேனல்காரங்களுக்கு அரைமணி நேரம் ஓட்டறதுக்கு ஒரு விஷயம் கிடைச்சுடுச்சுல்ல...''
''அதைச் சொல்லுங்க. சரி... சரி... நாம இனி தூங்கப் போலாமா?''
''நிஜம்மா தூங்கறதுக்குத்தான் கூப்பிடறியா?'' குறும்பாக கேட்ட திலீப்பின் கன்னத்தில், தன் விரல்களால் குத்தினாள் மிருணா.
''சீ... சீ... ய்...'' செல்லமாக சிணுங்கியவளை அலக்காகத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்கு சென்றான் திலீப். மிருணாவின் செயல்முறை சாகஸங்களை அவன் சத்தியமான அன்பு நடவடிக்கைகளாக உணர்ந்தான். ஏமாந்து கொண்டிருந்தான்.
36
டிப்பார்ட்மென்ட்டல் ஸ்டோரில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தான் வினோத். ஜெல்லி மிட்டாய் என்றால் மஞ்சுவிற்கு பிடிக்கும் என்று அதில் இரண்டு எடுத்து ட்ராலியில் போட்டான். வண்ண வண்ணமான அட்டைப் பெட்டிகளிலும், கண்ணாடி பாட்டில்களிலும் அடைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கண்களைக் கவர்ந்தன.
அது போன்ற டிப்பார்ட்மென்டல் ஸ்டோர், வணிக வளாகம் இவற்றிற்கு சென்று நிதானமாக சுற்றிப் பார்த்து, பொருட்களை எடுத்துப் பார்ப்பதிலும் பிடித்தவற்றை வாங்குவதிலும் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது வினோத்தின் வழக்கம்.