பூவிதழ் புன்னகை - Page 43
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8115
''வாழ்க்கையில முதன்மையான விஷயமே ஸ்வாதியோட படிப்புதான்... அதுலதான் என் வாழ்க்கையோட பிடிப்பு. வேற என்ன இருக்கு எனக்கு?''
''சரி... சரி... விரக்தி ஆகாத. இன்னிக்கு சாயங்காலம் மஞ்சு வரேன்னிருக்கா. ஸ்கூல் விட்டு வர்ற வழியில நேரா இங்க கூட்டிட்டு வந்துடறேன்...''
''எனக்கும் மஞ்சுவைப் பார்க்கணும். ராத்திரிக்கு உனக்கும், மஞ்சுவுக்கும் சேர்த்து சமைச்சுடறேன். இங்கேயே சாப்பிட்டுக்கலாம்.''
''சரி ராதா. நான் கிளம்பறேன். ஏதாவது வாங்கணுமா?''
''மைதா மாவும், பனீரும் வாங்கிட்டு வா வினோத். நைட்டுக்கு பரோட்டாவும், பனீர் குருமாவும் பண்ணிடறேன்.
''சரி ராதா..'' என்ற வினோத் அங்கிருந்து கிளம்பினான்.
49
ஆராதனாவின் காம்பவுண்டு சுவர் ஓரமாக தன் பைக்கை நிறுத்தினான் ஸ்ரீநிவாஸ். விஜயராகவன் இருக்கும் இடம் தேடிச் சென்று அவரை சந்தித்தான்.
''என்னடா ஸ்ரீநிவாஸ்... எப்பிடி இருக்க? நீ ஒருத்தனாவது அடிக்கடி பார்க்க வர்றியே... அது வரைக்கும் சந்தோஷம்!''
''என்ன பெரியப்பா... இப்பிடி சொல்லிட்டீங்க? எனக்கும், எங்கம்மா, அப்பாவுக்கும் எவ்வளவு உதவி செஞ்சுருக்கீங்க? நன்றி மறக்கறதைப் போல ஒரு பாவப்பட்ட செயல் எதுவுமே இல்லையே பெரியப்பா. அது சரி... பெரியமா எப்பிடி இருக்காங்க? எங்கே இருக்காங்க?''
''பெரியமா எங்க இருப்பா? அவளோட ரூமே கதியா கிடக்கா... அன்பா அவளைப் பார்த்துக்க நாதி இல்லாததுனால நாளுக்கு நாள் நலிந்து போறா... ஏதோ... என்னால இந்த ஸ்டிக்கைப் பிடிச்சாவது நடக்க முடியறதுனால இந்த மட்டுக்கும் ஏதோ வாழ்க்கை ஓடுது...''
''அதைப்பத்திதான் பெரியப்பா பேச வந்தேன். இனி மேல் பெரியம்மாவைப் பத்தின கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை... நான் சாப்பிட்டுக்கிட்டிருக்கற மெஸ் ஓனர் ஒரு லேடி. அவங்க பேர் ராதா. நான் அவங்களை ராதா அக்கான்னு கூப்பிடுவேன். ரொம்ப நல்லவங்க. அவங்களோட சமையல் சூப்பரா இருக்கும். அவங்க சமையல் போலவே அவங்க குணமும் நல்ல குணம். அன்பானவங்க. பொறுமையானவங்க. கண்ணியமான குடும்பத்தை சேர்ந்தவங்க. அவங்களோட குடும்ப வாழ்க்கையில சில பிரச்னைகள். அதனால அவங்க கணவரை விட்டு பிரிஞ்சுருக்க வேண்டிய சூழ்நிலை...''
''அதைப் பத்தி நமக்கென்ன ஸ்ரீநிவாஸ்? இப்ப... யார் குடும்பத்துலதான் பிரச்னை இல்லை? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை. அந்த ராதா நல்லவங்கன்னு நீ சொல்ற. அவங்களைப் பத்தி மட்டும் சொல்லு. அது போதும்...''
''ராதா அக்கா, அவங்க நடத்தற மெஸ்ல வர்ற வருமானத்துலதான் குடும்ப வண்டியை ஓட்டணும். அவங்களுக்கு ஒரு பொண்ணு. அவளோட படிப்பு செலலையும் பார்த்துக்கணும். மெஸ்ஸை விரிவு படுத்தற மாதிரி... நிறைய பேர் சாப்பிட வர ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா... அவங்களோட பொருளாதார நிலைமை ஒத்து வரலை. அவங்களோட உறவுக்காரர் வினோத்ன்னு ஒருத்தர். அவர்தான் உதவி செய்யறார். இருந்தாலும் எவ்ளவுதான் ஒருத்தர்ட்ட தொடர்ந்து உதவி கேட்டுக்கிட்டே இருக்க முடியும்? இதையெல்லாம் நினைச்சு ராதாக்கா குழம்பிப் போய் இருந்தாங்க. ஒரு விஷயம் பெரியப்பா... அந்த வினோத் அண்ணாவுக்கு உங்களைத் தெரியுமாமே....''
''வினோத்தா? ஞாபகம் இல்லையேப்பா. நேர்ல பார்த்தா அடையாளம் தெரியும்...''
''பல வருஷத்துக்கு முன்னால உங்களோட காரை அவர் வாங்கினாராம்... அவருக்கு உங்களைப் பத்தி நல்லா தெரியுமாம்...''
''சரிப்பா... மேல சொல்லு...''
''அந்த ராதாக்காகிட்ட இங்க நம்ம 'ஆராதனா'வுல வேலை பார்க்க சம்மதமான்னு கேட்டேன். வேலையை விட உங்களையும், பெரியம்மாவையும் நல்லபடியா பார்த்துக்கற பொறுப்பை ஒத்துக்கணும்ன்னு சொன்னேன். வினோத் அண்ணாவை கலந்து பேசிட்டு 'சரி'ன்னு சொல்லிட்டாங்க. நீங்க ஒரு தடவை இன்ட்டர்வ்யூ பண்ணிக்கறீங்களா பெரியப்பா...?''
''அட... என்னப்பா... பொல்லாத இன்ட்டர்வ்யூ! யார் யாரோ... முன்ன... பின்ன... தெரியாதவங்களையெல்லாம் வேலைக்கு வச்சுட்டு நான் படற அவஸ்தைதான் உனக்குத் தெரியுமே... இப்ப... நீ பார்த்து இவ்வளவு தூரம் அந்தப் பெண்ணைப் பத்தி நல்லவிதமா அபிப்ராயம் சொல்றப்ப... நான் எதுவும் யோசிக்கவே வேண்டியதில்லை. இங்கே வந்து அந்தப் பொண்ணு ராதா கூட வேற யார் யார் தங்குவாங்க?''
''ராதாக்காவும், அவங்க பொண்ணு ஸ்வாதி மட்டும்தான் இங்கே தங்குவாங்க. வினோத் அண்ணனும், அவரோட பொண்ணும் ராதா அக்காவைப் பார்க்க வருவாங்க.''
''அதைப் பத்தி ஒண்ணும் இல்லை. அந்தப் பொண்ணோட பேர் என்ன சொன்ன? தாராவா...?''
''இல்லை பெரியப்பா. ராதா. ராதா அக்காவுக்கு சம்பளம் மட்டும் கொஞ்சம் பார்த்து குடுங்க பெரியப்பா...''
''அதுகென்ன ஸ்ரீநி... தாராளமா குடுக்கலாம். பணம் ஒரு பெரிய விஷயமா என்ன? எங்க ரெண்டு பேரையும் அக்கறையோட கவனிச்சுக்கிட்டு, இந்த 'ஆராதனா'வையும் நல்லபடி பராமரிச்சா... போதும். ஏற்கெனவே இருக்கற ஆளுகளை மேற்பார்வை பண்ணி, வேலை வாங்கத் தெரிஞ்சவங்களா இருக்கணும். குறிச்ச நேரத்துக்கு பெரியம்மாவுக்கு சாப்பாடும், மருந்தும் குடுக்கணும். அவ இப்பிடி நலிஞ்சு போறதுக்குக் காரணம் மன உளைச்சல் மட்டும் இல்ல. அவ கூட இருந்து, உள்ளன்போடு சேவை செய்யறதுக்கு ஆள் இல்லாம தவிக்கறதுனாலயும்தான் அவ நாளுக்கு நாள் தேய்ஞ்சு போறா. அந்தக் குறை இல்லாம அவளைப் பார்த்துக்கணும். புதுசா வர்றவங்க, பணம் எவ்ளவு கேட்டாலும் குடுக்கத் தயாரா இருக்கேன்... மத்தபடி அவங்களை இன்ட்டர்வ்யூ பண்ணனும்ங்கற அவசியமெல்லாம் இல்லை. நீ சொல்றதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அவங்களை வந்து சேரச் சொல்லு...''
''அவங்க அந்த வீட்டை காலி பண்றதுக்கு ஒரு வாரம் டைம் கேட்டிருக்காங்க பெரியப்பா. ஒண்ணாந்தேதி வருவாங்க...''
''நாளைக்கே... ஏன்... இன்னிக்கே கூட வரச் சொன்னா நல்லதுதான்...''
''இல்ல பெரியப்பா... அவங்க அந்த வீட்டுக்குக் குடுத்திருக்கற அட்வான்ஸை ஒண்ணாந்தேதிதான் குடுப்பாங்க...''
''அட... அந்த அட்வான்ஸ் தொகையை நான் குடுத்துடறேன். வரச் சொல்லு ஸ்ரீநி...''
''நான் போய் அவங்ககிட்ட பேசிப் பார்க்கறேன் பெரியப்பா. நான் அந்த விஷயத்தைப் பத்தி பேசிக்கிட்டு இருந்ததுல பெரியமாவை பார்க்கவே இல்லை...''
''வா... போய் பார்க்கலாம்...''
இருவரும் அமிர்தாவின் அறைக்கு சொன்றனர். அதை அறை என்று சொல்வது பொருந்தாது. ஒரு வீட்டின் ஹால் அளவிற்கு இருந்தது. 'சில்' என்ற ஏ.ஸியின் குளிர்ச்சியில், ரோஸ்வுட் கட்டிலில் ரத்ன கம்பளம் விரிக்கப்பட்ட பட்டு மெத்தையில் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அமிர்தா. மெலிந்த தேகம். தொள தொள வென்றிருந்த நைட்டிக்குள் எங்கோ இருந்தது அவளது உடல். சுவாஸம் சீராக இல்லாமல் சிறு ஒலியுடன் வந்து கொண்டிருந்தது. கைகள் வறண்டு போன சருமத்துடன் காணப்பட்டது. ஒரு காலத்தில் மிக அழகாக இருந்திருக்கக் கூடிய முகம் என்று இப்போதும் அந்த வனப்பும், லட்சணமும் மிச்சமாய் அடையாளம் வைத்திருந்தது.