பூவிதழ் புன்னகை - Page 46
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
52
கறுப்பு க்ரானைட்டில் தங்க வண்ணத்தில் 'ஆராதனா' என்று செதுக்கப்பட்டிருந்த நேர்த்தியை ரஸித்தபடி, பங்களாவை பிரமித்துப் போய் பார்த்தாள் ராதா.
'இவ்ளவு பெரிய வீடா? இது வீடா அல்லது மாளிகையா?' என்ற திகைப்பில் ஆழ்ந்துவிட்ட ராதாவை, கலைத்தது வினோத்தின் குரல்.
''வா ராதா. உள்ளே போலாம்'' என்று அழைத்த அவனுடன் அந்த பங்களாவின் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போக முற்பட்டாள் ராதா.
''நில்லுங்க'' என்று அதட்டலான குரல் கேட்டது. இருவரும் திரும்பினார்கள்.
தொந்தியும் தொப்பையுமாக ஒரு ஸெக்யூரிட்டி அங்கே நின்றிருந்தான்.
அவன் அணிந்திருந்த யூனிஃபார்ம் மிக மிக அழுக்காக காணப்பட்டது. கன்னங்கரேல் என்றிருந்த அவனது முகத்தில் அவனது கண்களில், தென்பட்ட சிகப்பு நிறம், தினந்தோறும் அவன் 'குடிக்கும்' பழக்கம் உள்ளவன் என்பதைக் காட்டியது.
அந்தக் காலை நேரத்திலேயே 'ஊத்திக் குடித்துவிட்டு வந்திருந்தான் என்பதையும் அவனது தளர்ந்த நடை வெளிப்படுத்தியது. ஆனால் குரல் மட்டும் உரக்க, கர்ணகடூரமாக ஒலித்தது.
''நீங்க யாரு? யாரைப் பார்க்க வந்தீங்க?''
யார் என்று கேட்டது வேண்டுமானால் நியாயமானது. ஆனால் 'யாரைப் பார்க்க வந்தீங்க?' என்று கேட்டது அபத்தமாக இருந்தது.
அந்த பங்களாவில் குடி இருக்கும் அதன் உரிமையாளர் 'விஜயராகவனையன்றி வேறு யாரைப் பார்க்கப் போகிறோம்' என்ற சிந்தனையில் இருந்த வினோத், அந்த ஸெக்யூரிட்டிக்கு வேண்டா வெறுப்பாக பதில் அளித்தான்.
''நாங்க, விஜயராகவன் ஸாரைப் பார்க்க வந்திருக்கோம். அவருக்கு நாங்க வர்றது தெரியும். பங்களா வாசல்ல இருந்து என்னோட மொபைல்ல கூப்பிடுங்கன்னு ஸார் சொல்லி இருந்தார். நாங்க கூப்பிட்டு பேசிக்கறோம். நீங்க, உங்க வேலையைப் பாருங்க'' என்ற வினோத், மொபைலில் விஜயராகவனை அழைத்தான். அவர் உள்ளே வரச் சொன்னதும் ராதாவுடன் உள்ளே சென்றான்.
பெரிய மைய ஹாலின் பிரம்மாண்டம் கண்டு இருவரும் பிரமித்துப் போயிருக்க, கையில் கைத்தடியுடன் அங்கே வந்தார் விஜயராகவன்.
கம்பீரமான கனவானாகத் தோற்றம் அளித்த விஜயராகவன் மீது இருவருக்கும் பெரிய மரியாதை தோன்றியது. இருவரும் அவரைப் பார்த்து கை கூப்பி வணங்கினார்.
''மரியாதை மனசுல இருந்தா போதும். வாங்க.'' இருவரையும் அன்புடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
வருகையாளர்களை சந்திப்பதற்கென்றுள்ள பிரத்யேகமான அறைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த இருக்கைகளில் உட்கார வைத்தார்.
''ஸார்... உங்களை எனக்குத் தெரியும்... என்னை...'' வினோத் ஆரம்பித்ததும் அவர் சிரித்தார்.
''வயசு ஆச்சுப்பா. அதனால ஞாபகம் இல்லை. வாழ்க்கையில இது வரைக்கும் எத்தனையோ நபர்களை சந்திச்சுருக்கேன். ஆனா எல்லாரையும் ஞாபகம் வச்சுக்க முடியலை. இப்ப நீங்க... பங்களா வாசல்ல இருந்து மொபைல்ல கூப்பிட்டு உங்க பேர் சொன்னீங்க. அது கூட எனக்கு மறந்து போச்சு. ஆனா... வீட்ல எனக்கும், என் மனைவிக்கும் 'ஹெல்ப்' பண்றதுக்காக ஒரு பெண்மணியை கூட்டிட்டு வந்திருக்கேன்னு சொன்னது மட்டும் ஞாபகம் இருக்கு...''
''என் பேர் வினோத். இவங்க பேர் ராதா. என்னோட மாமா பொண்ணு. திருமண வாழ்க்கையில பிரச்னை. அதனால தனிச்சு நிக்க வேண்டிய நிர்ப்பந்தம். ராதாவுக்கு பன்னிரெண்டு வயசுல ஒரு மகள் இருக்கா. அவ படிக்கறா...''
''போதும்ப்பா. பாவம் இந்தப் பொண்ணு அவ முன்னாடியே அவளோட பிரச்னைகளைப் பேசறது அவளுக்கு தர்ம சங்கடமா இருக்கும். எல்லா விஷயங்களையும் ஸ்ரீநிவாஸ் சொல்லி இருக்கான். ராதா எங்களுக்கு அனுசரணையா இருந்தா... அது போதும்...''
பெரியவரின் கண்ணியமான பேச்சில் அவர் மீது மேலும் அதிக மதிப்பு உண்டானது வினோத்திற்கும், ராதாவிற்கும்.
'வேலைக்காக' என்றுகூட குறிப்பிடாமல் 'ஹெல்ப் பண்றதுக்கு' என்றும் 'இந்த வேலை செய்யணும், அந்த வேலை செய்யணும்' என்று கட்டளையாக சொல்லாமல் 'அனுசரணை' என்ற கௌரவமான வார்த்தையை உபயோகப்படுத்தி அவர் பேசியது குறித்து 'இத்தனை பெரிய பணக்காரர்... இவ்ளவு பண்பானவராக இருக்கிறாரே...' என்று வியந்தனர்.
வினோத் அவரிடம் விடை பெற்றான். ''ஸார், ராதாவை இப்ப இங்க விட்டுட்டுப் போறேன். சாயங்காலம் எனக்குள்ள வேலைகள் முடிஞ்சதும், ராதாவோட துணிமணி, தட்டு முட்டு சாமான்களை எடுத்துட்டு வரேன். வரும் போது ராதாவோட மகள் ஸ்வாதியையும் ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்துடறேன்...''
''சரிப்பா. ஆனா வீடு தேடி வந்த உனக்கு ஒரு வாய் காஃபிகூட குடுக்க முடியலை. சமையல் உதவி செய்யற பொண்ணு இன்னிக்கு லீவு போட்டுட்டா...''
''அதனால என்ன ஸார்.. பரவாயில்ல. இனி ராதா இங்கேதானே இருக்கப் போறா. வர்றப்பயெல்லாம் ராதா, காஃபி போட்டு குடுப்பா. ராதாவோட காஃபி பிரமாதமா இருக்கும் ஸார். சரி ஸார் நான் கிளம்பறேன்.'' என்றவன், ராதாவிடமும் விடை பெற்ற பின் அங்கிருந்து கிளம்பினான்.
53
ராதாவை அழைத்துச் சென்று பங்களா முழுவதையும் சுற்றிக் காட்டினார் விஜயராகவன். அதன்பின் அவரது மனைவி அமிர்த்தத்திடம், ராதாவை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அமிர்த்தத்தைப் பார்த்த அந்த விநாடி நேரம், ராதாவிற்கு அவளது அம்மா வனஜாவின் ஞாபகம் வந்தது. வனஜாவின் உருவம், முகசாயல் இவற்றை ஒத்திருந்தது அமிர்தத்தின் உருவமும், முகசாயலும்.
''அம்மா...'' என்று தன்னை அறியாமலே அமிர்தத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் ராதா. இதை எதிர்பார்க்காத அமிர்தம் அந்த அணைப்பில் திக்கு முக்காடினாள்.
தொளதொளத்த நைட்டிக்குள்ளிருந்த மெல்லியத் தேகத்தில் காணப்பட்ட அமிர்தத்தை தன் முதல் பார்வையிலும், அணைப்பிலும் ஈர்த்துக் கொண்டாள் ராதா.
'என் அம்மாதான் என்னை இங்கே கொண்டு வந்து விட்டிருக்காங்க' என்ற நம்பிக்கை, ராதாவின் மனதில் துளிர்த்தது.
''உங்களைப் பார்த்தும் என்னோட அம்மா ஞாபகம் வந்துருச்சும்மா. எங்கம்மா கொஞ்சம் உடம்பு பூசலா இருப்பாங்க. நீங்க இளைச்சுப் போயிருக்கீங்க. இதுதான் வித்தியாசம். எங்கம்மாதான் தெய்வமா இருந்து என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க...''
''ரொம்ப சந்தோஷம்மா...'' தட்டுத் தடுமாறி, திக்கியபடி பேசினாள் அமிர்தம்.
அதன்பின் சமையலறைக்கு சென்று பெரியவருக்கு காஃபியும், அமிர்தத்திற்கு ஹார்லிக்சும் கலந்து எடுத்து வந்து கொடுத்தாள். சாய்வாகப் படுத்திருந்த அமிர்தத்தை நன்றாக நிமிர்ந்து உட்காரச் சொன்னாள்.
''என்னால முடியாதும்மா... என்னால முடியாதும்மா...'' என்ற அமிர்த்தத்தை செல்லமாகக் கண்டித்தாள்.
''உங்களால முடியும். உங்களுக்கு உடம்புக்கு ஒன்றுமே இல்லை. மனச் சோர்வுதான். அதனாலதான் ஓய்ந்து போய் படுத்து... படுத்து பழக்கமாகியிடுச்சு. நடந்தது எதையும் நினைச்சுக்கிட்டே இருக்காம... 'இதோ இந்த நிமிஷம், இது என்னோட நிமிஷம்...