பூவிதழ் புன்னகை - Page 48
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
ராதா... வேடிக்கையாகப் பேசியதைக் கேட்டு மூவரும் சிரித்தனர்.
''அக்கா... நாங்க இப்பிடி வாய் விட்டு, மனசு விட்டு சிரிச்சு பல நாளாச்சுக்கா... ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காதுன்னு ஒரு பழைய சினிமா பாட்டு இருக்குக்கா. அந்த மாதிரி... ஆடிப் பாடாட்டாலும்... இப்பிடி சிரிச்சு பேசினாக்கூட வேலை செய்யற தென்பு வருதுக்கா...''
''சரி... சரி... அதுக்காக... எப்பப் பார்த்தாலும் பேசறதும், சிரிக்கறதும், ஆடறதும், பாடறதுமா இருந்துடக் கூடாது, கொஞ்சம் வேலையும் அப்பப்ப செய்யணும்...'' கிண்டலாக ராதா கூறியதும், மூவரும் சிரித்தனர்.
''ஐய்யா, அம்மா ரெண்டு பேரும் சாப்பிட்டதும் நீங்களும் சாப்பிட்டிருங்க. அதுக்கப்புறம் வழக்கமா கும்பகர்ண தூக்கம் போடப் போயிடக் கூடாது. இன்னும் ஒரு வாரம் நீங்க கடுமையா உழைக்கணும். பங்களா முழுசும் க்ளீன் பண்ணணும். வேண்டாத பொருட்களையெல்லாம் கழிச்சு, குப்பையில போட்டுட்டு, வேண்டிய பொருட்களை ஒழுங்கா அடுக்கி வச்சி, தூசு, தும்பு இல்லாம எல்லா இடத்தையும் 'பளிச்'ன்னு துடைச்சு வைக்கணும். எப்பிடியும் முழு பங்களாவையும் சுத்தம் பண்ண ஒரு வாரம் ஆகிடும். அதுக்கப்புறம் மத்யானம் சாப்பிட்டப்புறம் ரெண்டு மணியில இருந்து நாலு மணி வரைக்கும் உங்களுக்கு ரெஸ்ட். நல்லா தூங்கி முழிங்க. ஆனா... சொன்ன டைம் வரைக்கும்தான் ரெஸ்ட். அதுவும் ஒரு வாரத்துல பங்களாவை க்ளீன் பண்ணி முடிச்சாத்தான். புரிஞ்சுக்கோங்க. 'தூங்காதே தம்பி தூங்காதே'ன்னு எம்.ஜி.ஆர். பாடினதைக் கேட்டிருக்கீங்கள்ல்ல? 'நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள், நாட்டைக் கெடுத்ததுடன், தானும் கெட்டார்'ன்னு அந்தப் பாட்டுல வர்ற வரியைக் கேளுங்க. உங்க தூக்கத்தை நீங்க தூங்க வைப்பீங்க. சுறுசுறுப்பாயிடுவீங்க.''
''சரிங்கக்கா.'' மூவரும் கோரஸ்ஸாக கூறினார்கள். ''சரி, இப்ப போய் சமையலறையில, கரப்பானுக்கு மருந்து அடிச்சிருக்கோம்ல, அங்க போய் சுத்தம் பண்ணுங்க. நான் ஐய்யாவுக்கும், அம்மாவுக்கும் சாப்பாடு குடுக்கறேன்.
மூவரும் அங்கிருந்து போனார்கள்.
54
''ஹாய்... டார்லிங்...'' பரிச்சயமான குரல் கேட்டுத் திரும்பினான் வினோத். அங்கே பவித்ரா ஒரு கையில் ஹேண்ட்-பேக், மறு கையில் மொபைலும் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
'என்னமோ... கூடவே இருந்து குதூகலமா குடும்பம் நடத்தறவ மாதிரி கூப்பிடறதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை...' மனத்திற்குள் ஓடிய எண்ணத்தை வெளிக்காட்ட முடியாத எரிச்சலுக்கு ஆளானான் வினோத்.
''என்ன? செலவுக்கு பணம் வேணும்னுதானே வந்திருக்க? பெத்துப் போட்ட பொண்ணு, தாய் இல்லாம பரிதவிக்கிறாளேங்கற அக்கறை இல்லாம நீ ஊர் சுத்தறதுக்கும், ஊதாரித்தனமா செலவு பண்றதுக்கும் பணத்துக்கு வந்து நிக்கறியே... வெட்கமா இல்ல?''
''உங்ககிட்ட பணம் கேட்டு வாங்கறதுல எனக்கென்ன வெட்கம்?...''
''சரி... அதுக்கு வெட்கம் தேவை இல்லை. என்னோட பேரை சொல்லி பணம் வாங்கிட்டு திரும்பக் குடுக்காம ஏமாத்திக்கிட்டிருக்கியே அதுக்கு வெட்கமா இல்ல?''
''போட்டுக் குடுத்துட்டாரா அந்த ஆளு?''
''பணம் குடுத்தவன் விட்டு வைப்பானா?''
''அவருக்கு நீங்க பணம் குடுத்து ஸெட்டில் பண்ணி இருப்பீங்களே...''
''பின்னே? என் பேரைச் சொல்லி பணம் வாங்கிகிட்டு, திரும்பக் குடுக்காம இருந்தா... என்னோட மானம்ல்ல பறி போகும்? அப்பிடி என்னதான் செலவு உனக்கு?''
''இப்பிடி கேட்டு... கேட்டு... என்னைக் கட்டுப்படுத்தறதுதான் எனக்குப் பிடிக்கலை. நான் ஒரு சுதந்திரப் பறவையா என் இஷ்டத்துக்கு வாழணும்...''
''சரிம்மா தாயே... உன்னோட புராணத்தை மறுபடி ஆரம்பிச்சுடாதே. 'நீ உன் இஷ்டப்படி வாழ்ந்துக்கோ'ன்னு தானே உன்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்...''
''நீங்க விட்டாலும்... என்னால உங்களை விட்டுட முடியுமா...?''
''பணத்துக்காக நீ பேசற இந்த டைலக் எல்லாம் வேஷம்ன்னு எனக்குத் தெரியும். நான் கிளம்பணும். வழியை விடு...'' வினோத்தின் காரை வழி மறித்து நின்றிருந்த பவித்ரா, சிறிதும் நகராமல் அப்படியே நின்றாள். அவன் முன் தன் கையை நீட்டினாள்.
''ஜஸ்ட்... ஒரு ஃபைவ் தௌசண்ட் குடுங்க. போயிடறேன். எனக்கு உடம்பு சரி இல்லை... மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்சுக்குதான் கேட்கறேன். அடி வயிறு வலிக்குது. ஸ்கேன் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க...''
''எத்தனை தடவை ஸ்கேன் பண்ணுவ? பொய் சொல்றதைக் கண்டுபிடிக்கற ஸ்கேனிங் மிஷின்தான் வாங்கணும்...''
''சச்ச... இந்த தடவை நிஜம்மாவே வயித்து வலி ஸ்கேனிங்தான்.'' உண்மையை உளறிவிட்ட பவித்ரா, நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
''பரவாயில்லை. உண்மையை உளறினதுக்கு ரொம்ப நன்றி. இப்ப கிளம்பறியா?''
''ப்ளீஸ்... நிஜம்மாவே மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்சுக்குத்தான் பணம் கேக்கறேன்...''
'பணம் வாங்காம இவ நகர மாட்டா. எனக்கு முக்கியமான மீட்டிங் வேற இருக்கு' என்று நினைத்த வினோத், பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து, அவளிடம் கொடுத்தான். அவனது முகத்தில் வேண்டா வெறுப்பு தென்பட்டது.
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத பவித்ரா, பணத்தைக் கண்டதும் பற்கள் அனைத்தும் தெரியும்படி சிரித்துக் கொண்டே பணத்தை வாங்கிக் கொண்டு, அடுத்த வினாடி அவளது காரில் ஏறி, மறைத்தாள்.
55
'ஆராதனா' பங்களாவில் ராதாவிற்கும், ஸ்வாதிக்கும் நன்றாக ஒத்துப் போனது. அவர்கள் இருவர்க்கென நல்ல, பெரிய அறையைக் கொடுத்திருந்தார் விஜயராகவன். ராதா மறுத்தும், அவர் வலுக்கட்டாயமாக அந்த அறையை அவர்களுக்கென அமைத்துக் கொடுத்தார்.
விசாலமான அறை! ஜன்னல்களில் திரைகள் போடப்பட்டிருந்தன. டி.வி., ஸ்வாதிக்கென கம்ப்யூட்டர், ஏ.ஸி., ஃபேன் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார் விஜயராகவன். கம்ப்யூட்டரைப் பார்த்ததும் ஸ்வாதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ராதாவிற்கு மட்டும் மனம் நெருடியது. 'இன்னிக்கு இத்தனை வசதி...! நாளைக்கு வேற இடம் மாறிட நேர்ந்தா...?' என்ற கேள்விக்குறியே அந்த நெருடலுக்குக் காரணம்.
ஸ்வாதியின் சந்தோஷம், தற்காலிகமானதுதானே என்ற உணர்வில் சஞ்சலப்பட்டாள்.
மொபைலில் அழைத்த வினோத்திடம் அது பற்றி கூறினாள்.
''ஏன், எதையும் நெகடிவ்வாவே நினைக்கற? பேசற? வசதிகள் வேணும்ன்னு நீயா அவர்ட்ட கேட்ட? அவர்தானே குடுத்தார். எல்லாம் நல்லதுக்குத்தான்னு நினைக்கப் பழகு. உனக்கு ஏ.ஸி. வேண்டாம்ன்னா ஃபேன் போட்டுக்கோ. படிக்கற பிள்ளை ஸ்வாதி. கம்ப்யூட்டர் அவளுக்கு படிக்கறதுக்கு உபயோகமா இருக்கும். மத்தபடி உனக்கு அங்கே வேற ஒண்ணும் பிரச்னை இல்லையே?''
''சச்ச... வேற எந்த பிரச்னையும் இல்லை. என்னோட அம்மா, அப்பாவை ஞாபகப்படுத்தற ஐய்யாவும், அம்மாவும் எனக்கு தெய்வங்கள் மாதிரி. ஐய்யாவை 'அப்பா'ன்னு கூப்பிடச் சொல்லி, அப்பிடித்தான் கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். அவங்க ரெண்டு பேரும் என் மேல அவங்க மகள் மாதிரிதான் அன்பு செலுத்தறாங்க... பங்களா முழுசும் சுத்தம் பண்ணி, சூப்பராயிடுச்சு.