பூவிதழ் புன்னகை - Page 50
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8114
ஆண்டவன் விதிச்ச விதிப்படிதான் என்னோட தாம்பத்ய வாழ்க்கை இருந்துச்சு. கழுத்துல தாலி கட்டினவனால கைவிடப்பட்டாலும், வயித்துல பிறந்த குழந்தையை நான் விட்டுட முடியுமா? மனதைத் திடப்படுத்திக்கிட்டு, மனவலிமையை வலிந்து உருவாக்கிகிட்டு, ஸ்வாதியோட எதிர்காலத்துக்காக தைரியமா, என்னோட பிரச்னைகளை எதிர்கொள்றேன்.
உங்க பிள்ளைங்க, உங்க கூடவே இந்த அழகான பங்களாவுல சேர்ந்து வாழ்வாங்கன்னு நினைச்சீங்க. அந்த நினைப்புல, ஏராளமான கனவுகளோட இந்த 'ஆராதனா'வை சகல சௌகர்யமா கட்டினீங்க. உங்க பிள்ளைங்களுக்கு, இந்த ஆராதனாவுல, உங்களோட அன்பை அனுபவிச்சு வாழக் குடுத்து வைக்கலை. வெளிநாட்ல இயந்திர கதியான வாழ்வின் ஓட்டத்தோட அவங்களும் சேர்ந்து ஓடி, ஓடி... என்ன சுகத்தைக் காணப் போறாங்க? ஓடற அவங்க, தொடர்ந்து ஓட முடியாம ஒரு இடத்துல நிக்கும்போது... அவங்களுக்காக யார் இருப்பாங்க? வெளிநாட்டு வாழ்க்கைங்கற மோகத்துல... வேகமா ஓடிக்கிட்டிருக்காங்க. வாழ்க்கையின் எஞ்சிய காலம்ங்கற ஒரு நிலை வரும்போது திரும்பிப் பார்ப்பாங்க. அப்ப... அவங்களுக்காக எதுவுமே இருக்காது. யாருமே இருக்க மாட்டாங்க. அவங்களோட மோகம்தானே அவங்களோட பிள்ளைகளுக்கும் இருக்கும்? சுவரில அடிச்ச பந்து திரும்பி வந்து அடிக்கும்தானே? அதனால... நடந்தது எதையும் நினைச்சுக்கிட்டே இருக்காம, 'இதோ இந்த நிமிஷம்... நோய் நொடி இல்லாம, சௌக்கியமா இருக்கோமா... அந்த சந்தோஷத்தையும், நிம்மதியையும் அனுபவிச்சு வாழ்வோம்'ன்னு வாழணுமே தவிர, 'ஐய்யோ... எனக்கு இப்பிடி ஆயிடுச்சே... என் பிள்ளைங்க என் கூட சேர்ந்து வாழலியே'ன்னு அதையே நினைச்சுக்கிட்டு... வருத்தப்பட்டுக்கிட்டு... அதனால மனச்சோர்வை அனுபவிக்கிட்டிருந்தா... உடம்புக்கு வரக் கூடாத நோய்கள் எல்லாம் வரும். நாள்பட்ட மன அழுத்தத்துனால புற்று நோய் கூட வந்துடுதாம். நல்லது, கெட்டது... எல்லாத்துக்குமே நம்ப மனசுதான் காரணம். 'மனமது செம்மையானால் மருந்தெதுவும் தேவையில்லை' அப்பிடின்னு பெரியவங்க சொல்லுவாங்க. மனசை ஏன் நாம நல்லதை நினைக்கறதுக்கு மட்டுமே பழக்கம் பண்ணி வைக்கக் கூடாது? மனசை அடக்கற கடிவாளம் நம்மகிட்டதான் இருக்கு. உங்க பிள்ளைகளுக்கு உங்க கடமையை நீங்க செஞ்சீங்க. அந்தக் கடமைக்கு பிரதிபலனா சில எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அது மனித இயல்பு. தாய்மையின் பரிதவிப்பு. ஆனா அந்த உங்களோட எதிர்பார்ப்புகளை உங்க பிள்ளைங்க புரிஞ்சுக்கலைன்னா. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்? துயரத்துல துவண்டு போகாம 'யாரை நம்பி நான் பிறந்தேன்... போங்கடா போங்க'ன்னு நீங்க ஆரோக்யமா இருந்து... 'எனக்கு எந்தக் கவலையும் இல்லை, எந்தக் குறையும் இல்லை'ன்னு வாழ்ந்து காட்டணும்.
நம்ப உடல் நலம் நல்லா இருந்தா... பல வழிகள்ல்ல எத்தனையோ பேருக்கு உதவி செய்யலாம். நம்பளை மாதிரி, உறவுகளுக்கு ஏங்கி கஷ்டப்படறவங்களுக்கு நம்பளால முடிஞ்ச உதவியை செஞ்சு... அவங்களுக்கு இல்லாத உறவுகளை, நாம நம்மளோட அன்பால உருவாக்கலாம். இந்த முயற்சியில நமக்கு ஏற்பட்ட துன்பங்களை மறக்கலாம். புனிதமான சேவைகள்ல்ல ஈடுபடற மனசு இருந்தா... எந்த நோயும் நம்பளை சீக்கிரமா அணுகாது. மன பாதிப்புக்கும், உடல் பாதிப்புக்கும் சம்பந்தம் இருக்கு. என்னோட கணவர்... என்னை கொடுமைப்படுத்தினதையே நினைச்சுக்கிட்டு நான் மூலையில முடங்கிக் கிடந்திருந்தா... என்னோட மனநலம் பாதிக்கும். அது என் உடல் நலத்தைத் தாக்கும். அதனால என் மகளோட வளர்ப்பு சரியான முறையில இருக்காது. அப்பாவும் சரி இல்லாம, அம்மா நானும் படுத்துக்கிட்டா...? அந்த பிஞ்சு மனசு எத்தனை பாடுபடும்? பெத்தவங்களோட பிரிவினையால பிள்ளைங்க ஒரு குறிப்பிட்ட வயசுல தடம் மாறிடுவாங்க. பருவ வயசுலதான் பெரும்பாலும் இது நடக்கும். இந்த வயசுல, எவனோ ஒருத்தன் வந்து, 'நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன். உனக்காகத்தான் உயிரோட வாழறேன். நீ இல்லாம நான் இல்லை' அப்பிடி இப்பிடின்னு உருகி உருகி பேசுவான். அப்ப, அந்தப் பிள்ளைக்கு 'அன்பு செலுத்த நமக்கு அம்மாவுக்கும் மனசு சரி இல்லாம... அப்பாவும் உதாசீனப்படுத்தறவரா இருக்கறாரு. இதோ இவன்தான் எனக்கு சகலமும். இவன்தான் எனக்கு ஏற்றவன். இவன் எனக்கு இனிய துணையா- என்னோட கடைசி காலம் வரைக்கும் என் கூடவே இருப்பான். இவனே என்னோட உலகம்'ன்னு அசைக்க முடியாத ஆணித்தரமா நம்பிடுவா. அவன் நல்லவனா... கெட்டவனா... அவனோட வார்த்தைகள் உண்மையான அன்பின் வெளிப்பாடுதானா... என்னை எனக்காக மட்டுமே நேசிக்கிறானா... அப்பிடிங்கற எந்த சிந்தனையும் இல்லாம... அவன்ட்ட சரணாகதி அடைஞ்சுடுவாங்க. பெத்தவங்க சேர்ந்து வாழலை, அம்மா அன்பு செலுத்த முடியாத நிலை... இது போன்ற பலவீனங்களைப் பயன்படுத்தி, பெண் பிள்ளைகள்ட்ட, நாடகமாடி ஏமாத்தற ஆண்கள் ஏராளம். அதனாலதான் நான் என் மகள் ஸ்வாதிட்ட என்னோட உள்ளத்துல இருக்கற அத்தனை அன்பையும் கொட்டறேன். என்னோட துயரத்தைத் தூக்கிப் போட்டுட்டு, 'உனக்காக அம்மா நான் இருக்கேன்'னு வாழ்ந்து நிரூபிக்கிறேன். அவங்க அப்பாவோட அன்பையும் சேர்த்து அவளுக்கு நான் அள்ளி வழங்கறேன். அதிர்ஷ்டவசமா, அவ அவங்கப்பாவோட தவறான போக்கைப் புரிஞ்சுக்கிட்டா. அவரை வெறுத்துட்டா. புரிஞ்சுக்கலைன்னா... என்னமோ நான்தான் தப்பு பண்ணின மாதிரி ஆகிடும். பெண் பிள்ளையை வளர்க்கறது ரொம்ப கஷ்டம். அதுவும் இந்தக் காலத்துல பெண்கள் ஈஸியா ஏமாந்துடறாங்க. அதுக்குக் குடும்பப் பின்னணியும் ஒரு காரணம். அதனாலதான் நான் என் இதயத்துல, இறந்த காலத்தைப்பத்தி யோசிக்கறதே இல்லை. வேலைகள்ல்ல மூழ்கி என்னோட மனசை அலைபாய விடாம நிதானப்படுத்திக்கிறேன்.''
நீண்ட நேரம், வாழ்க்கையின் யதார்த்தங்களை பற்றி மிகத் தெளிவாகப் பேசிய ராதாவை பிரமிப்புடன் பார்த்தாள் அமிர்தம். ராதாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
''என் பிள்ளைங்க போனா என்னம்மா? எனக்கு நீ இருக்க. நீ என்னோட மகள். ஸ்வாதி என்னோட பேத்தி. உனக்கு இல்லாமப் போன உன்னோட அம்மா, அப்பாவா நானும், அவரும் இருக்கோம். இருப்போம். நீ சொன்ன மாதிரி உறவுகளுக்காக ஏங்கறவங்களுக்கு புது உறவைக் குடுக்கறதுல, வறண்டு கிடக்கற பாலைவனமா இருக்கற இதயம், பூத்துக் குலுங்கற பசுஞ்சோலையா மாறுதும்மா ராதா. படுத்த படுக்கையா கிடந்த என்னை... உன்னோட அன்பினாலயும், அறிவுரைகள்ன்னாலயும் ஆரோக்யசாலியா மாத்திக்கிட்டிருக்க... உன்னை இன்னும் சீக்கிரமே பார்த்திருந்தா, பழகி இருந்தா... என்னோட வாழ் நாட்கள் வீணாகிப் போகாம இருந்திருக்கும். இனி... எப்பவும் பழசை நினைக்கவும் மாட்டேன். வேதனையை சுமக்கவும் மாட்டேன். எனக்குள்ள, என்னை அழுத்திக்கிட்டிருந்த பாரம்... பறந்து போச்சு... எல்லாமே உன்னாலதான்மா ராதா....'' என்று உணர்ச்சி வசப்பட்ட அமிர்தா, எழுந்தாள்.