பூவிதழ் புன்னகை - Page 53
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
எக்காரணத்தைக் கொண்டும் அழவேமாட்டேன்னு சொன்ன நான், இன்னிக்கு வரைக்கும் அழவே இல்லைம்மா. இதுக்குக் காரணம் உங்களோட பாசம்ங்கற பாதுகாப்பு கவசம்தான்மா. எவ்வளவு மன அழுத்தம் ஏற்பட்டாலும் என்னோட கண்ல ஒரு சொட்டு கண்ணீர் கூட வர்றதில்லம்மா. அந்த அளவுக்கு திடமான தைரியம் வந்துருச்சும்மா. இனி அந்த மன அழுத்தம் கூட வராம இன்னும் துணிச்சலா இருப்பேன்மா...''
கனவில் வந்த அம்மாவிடம் வாய்விட்டு பேசி, ஆறுதல் அடைந்தாள் ராதா. துன்ப நினைவுகள் அறவே நீங்கி, தெளிவு பெற்றதால் மீண்டும் ஆழ்ந்து தூங்கினாள் ராதா. வான்வெளியில் வட்ட வடிவ நிலா எட்டிப்பார்த்தது. அந்த நள்ளிரவில், சந்திரனின் சக்தி, ராதா மீது பாய்ந்தது.
58
காலண்டரின் தாள்கள் மூன்று மாதங்களுக்குக் கிழிக்கப்பட்டன. காற்றின் வேகத்தைவிட காலத்தின் வேகம் இருந்தது. உண்மையான கவனிப்பாலும், அன்பான சேவையினாலும் அமிர்தம் மிக சகஜமாக எழுந்து நடமாடவும், குளிப்பது, உடை மாற்றுவது போன்ற வேலைகளை தானே செய்து கொள்வது என்று உடல்நலம் தேறி இருந்தாள். மனதாலும் பழைய பாதிப்பு இன்றி, கிடைத்ததை ஏற்றுக் கொள்வேன் என்ற பக்குவத்திற்கு மாறி இருந்தாள்.
ராதாவையும், ஸ்வாதியையும் தனது குடும்ப அங்கத்தினர்களாகவே எண்ணினாள். ஸ்வாதி மீது உயிரையே வைத்திருந்தாள். தூய்மையான அன்பை உணர்ந்த மனம், பஞ்சு போல லேஸாகி இருந்தது. ராதாவையும் தான் பெற்றெடுத்த மகள் போல பாவித்து, பாசம் செலுத்தினாள். உரிமையுடன் ராதாவின் குடும்ப விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசுவாள்.
ஒரு நாள் மாலை நேரம். தேனீர் வேளை. ராதா கொண்டு வந்து கொடுத்த சுவை மிகுந்த தேனீரை ரசித்துக் குடித்தனர் அமிர்தமும், விஜயராகவனும்.
''நீ குடிச்சுட்டியாம்மா ராதா?'' அன்புடன் கேட்டார் விஜயராகவன்.
''குடிச்சுட்டேன்ப்பா. எனக்கு மூன்றரை மணிக்கு டீ குடிச்சே ஆகணும். உங்களுக்கு நாலு மணிக்குதானே டீ டைம்?...'' புன்னகையுடன் மென்மையாகப் பேசிய ராதாவைப் பார்த்து நெகிழ்ந்தார் விஜயராகவன்.
''உன் புருஷன் உன்னைத் தேடறானா? அதுக்கு ஏதாவது முயற்சி செய்யறானா?''
அப்போது அமிர்தம் குறுக்கிட்டாள்.
''அவன் எதுக்கு ராதாவை தேடப் போறான்? வேற எவ கூடவோ வாழறான்ல?''
''சில ஆம்பிளைங்க, சுவரில் அடிச்ச பந்து மாதிரி மறுபடியும் பெண்டாட்டிகிட்ட வந்து சேர்வானுங்க. இந்தப் பெண்களும், புருஷன்காரன் தேடி வந்துட்டா மனசு இளகி அவனை மறுபடி சேர்த்துப்பாங்க. அது வரைக்கும் அவன் இன்னொருத்தி கூட வாழ்ந்ததை பொருட்படுத்த மாட்டாங்க. மன்னிக்கற தயாள குணம், நம்ம நாட்டுப் பெண்களுக்கு நிறையவே உண்டு. 'நீ எனக்கு வேண்டாம்'ன்னு உதாசீனம் பண்ணிட்டு போற புருஷன் மறுபடியும் மனைவிகிட்ட வந்து 'நீ எனக்கு வேணும்'ன்னு வர்றது வெட்கத்துக்கரிய செயல். அவனோட ஆண்தன்மை அறவே அற்றுப் போற அடாத செயல். மானக்கேடான செயல். தனக்கு இஷ்டமானவளோட போனவன் தனக்கு அங்கே ஏதோ கஷ்டம்ன்னதும் பழையபடி மனைவியைத் தேடி வர்றது மானக்கேடான செயல்...''
''அப்பா... நீங்க சொல்றது சரிதான். ஆனா அப்பிடி திரும்ப வர்ற நிலைமை ஏற்படறது ஒரு வகையில அவங்களுக்கு தண்டனை போலத்தானே? கூனிக்குறுகிப் போய்தானே வந்து சேரணும்? வீராப்பெல்லாம் வீணாப் போன இழிவான விஷயம்தானே? கால்ல விழுந்து கெஞ்சின போதெல்லாம் தள்ளி விட்டுட்டு போனவன், தன்மானம் இழந்து மறுபடி வர்றது பரிதாபத்திற்குரிய விஷயம். ஒரு பெண்ணை, உடன் வாழ வந்த மனைவியை பரிதவிக்க விட்டுட்டு போனவன், பரிதாபத்துக்குரியவனா ஆகற நிலைமை அவனுக்கு மோசமான தண்டனை. அதே சமயம் பெண்கள் பக்கமும் நாம யோசிச்சுப் பார்க்கணும். இன்னிக்கு இருக்கற இளமை தர்ற தென்புலயும், உடல் வலிமையிலயும் தைரியமா எதிர் நீச்சல் போடலாம். ஆனா... ஐம்பது, அறுவது வயசுக்கு மேல? பெத்தெடுத்த பிள்ளைகளும் அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துப் போயிட்ட பிறகு? தனிமை... இனிமைங்கறதெல்லாம் வாய் வார்த்தையா பேசறதுக்கு வேண்ணா நல்லா இருக்கும், வார்த்தை மட்டுமே வாழ்க்கையாகிடாது. நடைமுறை வாழ்க்கையில... தனிமை... மிகக் கொடுமையானது. தனிச்சு நின்னு ஜெயிச்சுட்டா மட்டும் உணர்வுகள் உயிரிழந்து போயிடுமா? அது போராட்டம். போராடி வெற்றி பெற்றாலும்... ஒரு கால கட்டத்துல... ஒரு புள்ளியா தனிமைங்கற சூழ்நிலை, ஆதங்கப்படுத்தும். தனிமை... எப்பவும் இனிமை இல்லை. அது வெறுமை. வெற்றிடத்தை... வெறுமை எப்பிடி நிரப்பும்? அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி, மகள், மருமகள்... இப்பிடி சொந்த பந்தங்கள் இருந்தாலும் 'கணவன்'ங்கற ஒரு துணை, ஒரு உறவுதான் பெண்களுக்கு கௌரவம். மரியாதை, வயோதிக காலத்துல ஒருத்தருக்கெருத்தர் உறுதுணையா இருக்க முடியும்ன்னா... அது, கணவன் -மனைவி உறவால மட்டும்தான். தம்பதிகளுக்குள்ள யார் உடல் நலத்தோட தென்பா இருக்காங்களோ அவங்க, கணவனுக்கோ... மனைவிக்கோ கை குடுத்து உதவியா இருக்கலாம். தள்ளாத வயசுலயும் தள்ளிப் போகாத இந்த தம்பதியர் உறவுதான் பெண்களுக்கு ஒரு பெரிய பலம். எந்த வயசுலயுமே, சாய்ஞ்சுக்க, புருஷனோட தோள் இருந்தா... அது ஒரு பெரிய பலம்தான். கணவன்ங்கற பந்தம் அரண் போல பெண்ணைப் பாதுகாப்பது. இது போல பல விஷயம் இருக்கு. 'நான் என்னோட சொந்தக் கால்ல நிக்கறேன். நின்னு நிரூபிச்சுட்டேன்...' அப்பிடின்னு பெருமைப்பட்டுக்கலாம். அது உண்மைதான்.
ஆனா... வீட்டுக்குள்ள குத்து விளக்கா வாழற பொண்ணு, காலத்தோட கட்டாயத்துல வெளில போய் 'பல இடங்கள்ல்ல பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்போது எவ்ளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கும்?! பெண்களா இருக்கறதுனாலயே சில இடங்கள்ல்ல... சில மனிதர்களால இழிவான இக்கட்டுகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதையெல்லாம் சமாளிச்சு, தன் பெண்மையையும் காப்பாத்தி, சுத்தமான பெண்மணியா வாழறதுக்கு நிறைய கஷ்டப்படணும், அந்தக் கஷ்டங்களெல்லாம் கண்ணீர்ல நீராடி, போராடி முடிஞ்சு ஓய்ஞ்சு கிடக்கறப்ப... மனம் கலந்து உரையாடறதுக்கு ஒரு துணையை தேடி நெஞ்சம் ஏங்கும். அந்த ஏக்கம், தூக்கத்தைத் தொலைக்கும். துக்கத்தைக் கொடுக்கும். ஓடி ஓடி உழைக்கறப்ப எதையும் யோசிக்க நேரம் இருக்காது. ஆனா கரை ஏறி ஒதுங்கி நிக்கறப்ப? தனிமையின் துன்பம், நிறைய யோசிக்க வைக்கும். வாழ்க்கையின் அந்த ஒரு காலகட்டத்துல மனைவிக்கு, கணவனின் துணையும், கணவனுக்கு, மனைவியின் துணையும் நிச்சயமா தேவைப்படும். உடல் ரீதியான எந்தவித ஈர்ப்புக்கும் இடம் இல்லாத உளரீதியான எல்லாவித அமைதிக்கும் அந்தத் துணை அத்யாவசியம்.