பூவிதழ் புன்னகை - Page 55
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
அவருக்காக, அவரோட அன்புக்காக நான் முயற்சி எடுக்கறதை புரிஞ்சுக்கிட்டு, எனக்கு உறுதுணையா இருந்திருந்தா... என் ஆர்வத்தைத் தூண்டிவிடற தூண்டுகோலா எனக்கு உதவி இருந்தா... அவருக்கு சரிசமமா, எல்லா விஷயங்களையும் தெரிஞ்சு வச்சிருப்பேன். அதனால அவர் மனசுலயும் இடம் பிடிச்சு, என்னோட வாழ்க்கை ஆனந்தமா இருந்திருக்கும், அவரோட அன்புக்காக நான் மெனக்கெடுவதை அவர் புரிஞ்சுக்கவே இல்லை. அவரோட அம்மா, அப்பா சொன்னாங்கன்னு ஏனோ தானோன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. காதல்ங்கற உணர்வு இல்லாம, கல்யாண வாழ்க்கையின் அடையாளமா எனக்கு என் மகள் ஸ்வாதி பிறந்தா. கடமைங்கற குடும்ப நேயம் கூட இல்லாம கடனேங்கற விதிப்படிதான் என்னோட வாழ்க்கை ஓடுச்சு. எதிர்பார்ப்புகளை எதிர்த்து நின்னு 'என்னோட வாழ்வு இதுதான். இப்படித்தான்'னு எனக்கு நானே ஒரு எல்லை வகுத்துக்கிட்டு என் குடும்ப வண்டியை ஓட்டினேன். அவர்ட்ட எதைப்பத்தியும் வாக்குவாதம் பண்ணமாட்டேன். அப்பிடி இருந்தும் எதுக்கெடுத்தாலும் கோபப்படுவாரு. ஸ்வாதி மேல கொஞ்சம் பாசமா இருந்தார். நாளடைவில 'இன்னொருத்தி கூட தொடர்பு ஏற்பட்டப்புறம் அந்த பாசமும் விட்டுப் போச்சு. எங்களை எங்க சொந்த வீட்ல இருந்து வெளியேறச் சொன்னார். என்னதான் அந்த வீடு அவரோட சம்பாத்தியத்துல வாங்கினதுன்னாலும் நாங்க யார் ? அவரோட மனைவி, மகள் தானே ? எங்களை ஏன் விரட்டணும் ? நடுத்தெருவுல நிக்கவச்சது மாதிரி விட்டுட்டு போயிட்டார். வீட்டை காலி பண்ணச் சொல்லி தொந்தரவு குடுத்தார்.
கண்ணைக் கட்டி காட்டில விட்டது போல கதிகலங்க வச்சுட்டுப் போயிட்டார். பொண் குழந்தையை வச்சுக்கிட்டு, அன்னிக்கு நான் பட்ட கஷ்டம்! 'எதிர்காலம் என்ன ஆகும்? இதோ... அடுத்த நிமிஷம் என்ன செய்யப் போறோம்?' அப்பிடிங்கற திகில் உணர்வுல என் வயித்துக்குள்ள ஏற்பட்ட படபடப்பு ! நான் சாகற வரைக்கும் அன்றைய நாளை மறக்கவே மாட்டேன்...''
''சரிம்மா... பழசைப் பத்தி நினைச்சோ... பேசியோ... என்ன ஆகப்போகுது? மன அழுத்தம்தான் அதிகமாகும். அதையெல்லாம் மறந்துட்டு உன் மகள் ஸ்வாதியை வளர்த்து ஆளாக்கு. அவளோட படிப்புக்கு நாங்க பொறுப்பு. வேற என்ன தேவைப்பட்டாலும் எங்ககிட்ட கேக்கறதுக்கு நீ தயக்கமோ... கூச்சமோ பட வேண்டியதில்லை. நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டுக்கிட்டிருந்த எங்க ரெண்டு பேரோட ஆரோக்கியம் மேம்பட்டது மட்டுமல்ல... ஆயுளும் கூடுதலான சுகத்தை அனுபவிச்சிக்கிட்டிருக்கோம். அதுக்குக் காரணம் உன்னோட அன்பான, உண்மையான சேவைதான்மா. எங்களை கவனிச்சுக்கறதுக்காக இங்கே எத்தனையோ பேர் வந்தாங்க. அவங்களெல்லாம் கிடைச்சதை சுருட்டிக்கிட்டு போறதுலதான் குறியா இருந்தாங்க. சரி, வேலைக்கு, சம்பளத்துக்கு வந்தவங்கதான் அப்பிடி இருக்காங்கன்னு, உறவுக்காரங்களைக் கொண்டு வந்து வச்சா... அவங்களும் பணத்தேவைக்குதான் வந்தாங்க. இது வரைக்கும் வந்தவங்கள்ல்ல... நீ ஒருத்திதான்மா சேவைக்காக வந்தவ. சொந்தபந்தங்களுக்கு இல்லாத அக்கறையும், அன்பும் உன்கிட்ட நிறைய இருக்கு. எங்களோட சொத்துக்களைக் குறி வச்சு வந்தவங்கதான் சொந்தக்காரங்க. ரத்த சம்பந்தமோ... உறவு முறையோ இல்லாத நீ... எங்களை பரிவோடயும், பாசத்தோடயும் பார்த்துக்கற. எத்தனை தடவை கூப்பிட்டாலும் முகம் சுளிக்காம, எங்க தேவைகளை கேட்டு, கேட்டு செய்யற. உன்னைப் போல ஒரு பொண்ணு எங்களுக்கு இருந்திருந்தா... பொன்னை விட பெரிசா மதிச்சு கொண்டாடி இருப்போம். நாங்க பெத்த பொண்ணு, இந்திய மண்ணை விட அந்நிய மண்ணுதான் பெரிசுன்னு போயிட்டா. இப்ப... நீ எங்க மகள்தான். உன்னோட மகள் ஸ்வாதி எங்க பேத்தி. இப்பிடித்தான் நாங்க உன்னையும், ஸ்வாதியையும் நினைக்கிறோம். நீதான் எப்பவும் ஒரு அடி தள்ளி நின்னே பழகற. உனக்கு இந்த வீட்ல இந்தக் குடும்பத்துல... சகல விஷயத்துலயும் முழு உரிமை இருக்கும்மா. எப்பவும், ஏதோ ஒரு தயக்கத்துல... ஏதோ ஒரு யோசனையிலேயே இருக்க. உரிமை எடுத்துக்காம நீ பழகறது எங்களுக்கு கஷ்டமா இருக்குமா...''
''ஐய்யிய்யோ... உங்களை கஷ்டப்படுத்தற பாவியா நான் இருக்கக் கூடாதுப்பா. உங்களைப் பார்த்த முதல் சந்திப்புலயே என்னைப் பெத்தவங்களாத்தான் நான் நினைக்கறேன். மதிக்கறேன். அமிர்தம்மாவை முதல் முதல்ல பார்த்தப்ப... அங்கே அமிர்தம்மாவையா நான் பார்த்தேன்? என்னோட பெத்த அம்மாவைத்தான் பார்த்தேன். என்னோட இந்த கஷ்ட காலத்துல உங்களோட உதவிக்கரங்கள் எனக்கு கிடைச்சதுக்கு பூர்வ ஜென்மத்துல நான் புண்ணியம் பண்ணி இருக்கணும். பணமோ... இருக்கறதுக்கு குடுத்த இடமோ வயிறார குடுத்த சாப்பாடோ... இதையெல்லாம் விட ஆத்மாத்தமான அன்பைக் குடுக்கறீங்களே... உங்களை விட்டு தள்ளி நின்னு பழகுவேனா? எனக்கு எப்ப, எது வேண்ணாலும் உங்ககிட்ட உரிமையோட கேட்பேன். கேட்காமலே வாரி வாழங்கறீங்க. இதுக்கு மேல என்ன வேணும்ப்பா எதுக்கு?''
''எங்களுக்கு நீ வேணும்மா. எங்க அந்திமக் காலம் வரைக்கும் நீ எங்களுக்கு எங்க கூடவே வேணும். நீ இங்கே வேலைக்கு சேர்ந்தவளா? இல்லவே இல்லை. விட்டுப் போன எங்க ரத்த பந்தங்களுக்கு மாற்று பந்தமா இறைவன் குடுத்த சொந்தம் நீ. காலையில நாலு மணிக்கு எழுந்திருச்சு, வீட்டை பராமரிச்சு, சமையல் பண்ணி, அதுவும் பத்து பேருக்கு சமைச்சு, வீட்டுல, மேல் வேலை செய்யறவங்களை மேற்பார்வை பார்த்து, தோட்டக்காரனையும், ஸெக்யூரிட்டியையும் கண்காணிச்சு, இதுக்கு நடுவுல அமிர்த்தத்துக்கு பேச்சுத் துணையா இருந்து, அவளுக்கு தைலம் தேய்ச்சுவிட்டு, குளிக்க வச்சு, எங்க ரெண்டு பேருக்கும் மருந்து குடுத்து, ஸ்வாதிக்கு ஸ்கூலுக்கு சாப்பாடு ரெடி பண்ணி, கடைகண்ணிக்கு போய் சாமான் வாங்கறது, லாண்டரி துணியை அனுப்பறது, அதை கணக்கு பார்த்து வாங்கறது... ரெண்டு வேளை சாமி ரூமை சுத்தம் பண்ணி, பூஜை பண்றது, செலவு கணக்கு எழுதறது, அப்போதைக்கு அப்போது ஷோ கேஸ்ஸை அடுக்கறது, திரைத்துணியை மாத்தறது... ராத்திரிக்கு டிபன் பண்றது, நடுவுல காஃபி, டீ போடறது, விருந்தாளிங்க வந்துட்டா அவங்களை கவனிக்கறது... இப்பிடி நாள் முழுக்க வேலை வேலைன்னு ஓடியாடி உழைச்சுக்கிட்டே இருக்க. உனக்கு நாங்க எந்த வகையில உதவி செஞ்சா... எங்களுக்கு திருப்தியா இருக்கும்ன்னு எங்களுக்கே புரியலை...''
''அடுத்தது என்ன?'ன்னு அதிர்ச்சியில அலை மோதிக்கட்டிருந்த என்னோட இக்கட்டான சூழ்நிலையில... அந்தப் பையன் ஸ்ரீநிவாஸ் வந்து உங்களைப் பத்தி சொல்லி உங்களோட அறிமுகம் கிடைச்சுது. நிர்க்கதியா இருந்த நான் உங்களோட நிழல்ல ஒதுங்கி, பாதுகாப்பாகவும் இருக்கேன். பஞ்சம், பட்டினிங்கற கொடுமை இல்லாம... நல்லபடியா இருக்கேன்.