பூவிதழ் புன்னகை - Page 60
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
''அப்பா... அப்பா.....''
மஞ்சு உரக்க குரல் கொடுத்ததும் வினோத், சிந்தனை கலைந்தான்.
''எ... எ... என்னடா...?''
''என்னப்பா நான் பாட்டுக்கிட்டு பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க என்னடான்னா எதுவுமே பேசாம ஏதோ யோசிக்கிறீங்க?''
''அ... அது... அது ஒண்ணுமில்லம்மா...''
''அது ஒண்ணுமில்லன்னா நான் கேட்டது...?''
''அது... அது வந்து ராதா ஆன்ட்டியை கேக்கணும்மா...''
''இன்னிக்கே கேளுங்கப்பா ப்ளீஸ்....''
''எனக்கு கொஞ்சம் டைம் கொடும்மா...''
''சரிப்பா... ஆனா நான் நைஸா நழுவக் கூடாது. நீங்க கேக்கலைன்னா... நான் கேட்டுடுவேன்.''
''ஐய்யய்யோ... நீ இதப்பத்தி எல்லாம் கேட்கக்கூடாதுடா. ஒரு வாரத்துக்குள்ள நானே கேக்கறேன்.''
''நிஜம்மா....'' கண்கள் விரிய ஆவலுடன் கேட்டாள் மஞ்சு.
''நிஜம்மா கேக்கறேன்.''
''அப்பா நல்ல அப்பா'' என்று கூறி வினோத்தின் கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள் மஞ்சு.
'தாய் அன்புக்காக ஏங்கும் என் மகள் மஞ்சுவின் ஆசை நிறைவேறுமா? மஞ்சு கேட்ட ஒரு கேள்வி என்னோட உள் மனசையும் உசுப்பி விட்டுடுச்சா...? எனக்கே என்னை புரியலையே? ராதா சம்மதிச்சா எனக்கும் சந்தோஷமாதான் இருக்கும்?'
தன் ஆசைக் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு அயர்ந்து தூங்கிவிட்டாள் மஞ்சு. அவள் தூங்கிய பிறகு, வினோத்தின் எண்ணங்கள் மேலும் விழித்துக் கொண்டன.
'நாளைக்கே ராதாவைப்போய் பார்த்து இந்த விஷயத்தை பேசணும். ரொம்ப தயக்கமா இருக்கு. ஆனா கேக்கணும்னு தோணுது. புன்னகைப் பூ பூத்த என் ராதா என் வாழ்க்கைத் தோட்டத்துல பூக்கப் போறாளா? என் மகள் மஞ்சுவுக்கு ராதா... அம்மாவா... ? நினைச்சுப் பார்க்கவே இனிக்கிற இந்த விஷயம்... நிஜமாவே நடந்துட்டா...'
'யே.......' என்று அவன் உள்ளம் குதூகலித்தது.
62
''ராதா... வக்கீலை வச்சு உயில் எழுதிட்டோம். எங்க ரெண்டு பேர் பேர்ல இருக்கற சொத்துக்களை எங்க மகள், மகன் ரெண்டு பேருக்கும், சில சொத்துக்களை தர்ம ஸ்தாபனங்களுக்கும், சில காலி நிலங்களை பள்ளிக் கூடங்களுக்கும் எழுதியாச்சு. அம்மா, அப்பாங்கற சொந்தங்கள் தூரத்துல இருந்தாலும் பரவாயில்லை. வெளிநாட்டு வாழ்க்கைதான் முக்கியம்ன்னு போயிட்ட எங்க பிள்ளைகளுக்கு, எங்களோட 'சொத்துக்கள் தூரத்துல இருக்கு, வேண்டாம்'ன்னு சொல்லிடுவாங்களா? பெத்த கடனுக்கு அவங்களுக்கு தேவைக்கு மேல எழுதி வச்சுட்டோம். இங்கே இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துல ஆயிரத்து முன்னூறு சதுர அடியில் அழகான ஒரு வீடு இருக்கு. அதை உன்னோட பேருக்கு எழுதிட்டோம். இதைக் கேட்ட ராதாவிற்கு வியர்த்தது. பதற்றமாகியது.
''அப்பா... வீடா? எனக்கா? வேண்டவே வேண்டாம்ப்பா. நீங்க என் மேல காட்டற கருணையும், அன்பும், பாசமும் பல கோடி சொத்துக்களுக்கு மேலானது. தயவு செஞ்சு சொத்து எழுதி வச்சு.... என்னை அந்நியப்படுத்தாதீங்கப்பா. அமிர்தம்மா... நீங்க அப்பாவுக்கு எடுத்து சொல்லக் கூடாதாம்மா...?'' சிரித்தார் விஜயராகவன்.
''அந்த வீட்டை உன் பேருக்கு எழுதச் சொன்னதே அமிர்தம்தான்...''
''அம்மா....''
''அம்மான்னு வாய் நிறைய, மனசார கூப்பிடற... நீ அம்மா குடுக்கற வீட்டை ஒத்துக்க மாட்டியா?... அப்பிடின்னா 'அம்மா'ன்னு நீ கூப்பிடறதுக்கு என்ன அர்த்தம்?'
உரிமையோடு கோபித்துக் கொண்ட அமிர்தம்மாவின் கைகளைப் பிடித்து, தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள் ராதா. தொடர்ந்து பேசினாள்.
''அம்மா... வீட்டை சந்தோஷமா ஏத்துக்கிட்டாலும் உங்க பிள்ளைங்க, உறவுக்காரங்களோட ஏச்சுக்களுக்கு நான் ஆளாக நேரிடும். என்னால உங்க குடும்பத்துல எதுக்காக வீணான சலசலப்பு?''
''நாங்க இருக்கும்போதே.... எங்க ஆயுசு காலத்துலயே, உன் பேருக்கு அந்த வீட்டை மாத்தி எழுதினது மட்டுமில்ல... உன்னை அந்த வீட்ல குடி வச்சு, நீயும், ஸ்வாதியும் அங்கே சந்தோஷமா வாழறதைப் பார்த்துட்டுத்தான் நாங்க கண் மூடுவோம். எந்த சலசலப்பும் வராது. கைகலப்பும் வராது. நீ கவலைப்படாதே. இந்த நிமிஷம் முதல் அது உன்னோட வீடு. எங்க மகள் ராதாவோட வீடு...''
அதற்கு மேல் வேறு ஏதும் மறுத்துப் பேச இயலாதவளாக, அவளைக் கட்டிப் போட்டது விஜயராகவன்- அமிர்தம்மா தம்பதியின் பாசம்.
''அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நல்ல நாள். காலையில் எட்டு மணிக்கு அந்த வீட்ல பால் காய்ச்சறோம். பால் போல உன் மனசல சந்தோஷம் பொங்கி வழியணும். அதை நாங்க பார்க்கணும்.''
''அடுத்த வாரமேவா?'' உணர்ச்சிக் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டாள் ராதா.
''ஆமாம்மா. அடுத்த வாரமேதான். உனக்கு புடவை, ஸ்வாதிக்கு புது ட்ரெஸ், இதெல்லாம் வாங்கறதுக்கு குமரன் ஸில்க்ஸ் போகணும். நாளைக்கு காலையில ரெடியா இரு. குமரன் ஸில்க்ஸ் உரிமையாளர்கள்ல்ல ஒருத்தர் குமார். நல்ல மனுஷன். நாங்க மூணு பரம்பரையா குமரன் ஸில்க்ஸ்லதான் எங்க குடும்பத்து விசேஷங்களுக்கு துணிமணிகள் எடுக்கறோம். ராசியான கடை. வீட்டுக்குள்ள நல்லபடியா நடக்க ஆரம்பிச்சுட்ட அமிர்தம், குமரன் ஸில்க்சுக்கு 'நானும் வரேன்'ங்கறா. அந்த அளவுக்கு அவளை நீ ஆரோக்கியசாலியாக்கிட்ட.''
''நான் என்னப்பா செஞ்சுட்டேன்? மனதளவு பாதிக்கப்பட்டிருந்த அம்மா... பாசம் செலுத்தற உறவுகள் கிடைச்சதும் உடல்நலம் தேறிட்டாங்க. என்னால என் இதயம் முழுசும் இருக்கற அன்பைத் தர முடிஞ்சுது. வேற என்ன நான் செஞ்சுட்டேன்?''
''இதுக்கு மேல வேற என்னம்மா செய்யணும்? இதயம் இருக்கற எல்லாருமே அன்பை வழங்கறவங்களாவா இருக்காங்க? எல்லாருக்கும்தான் இதயம் இருக்கு...''
''உங்க கூட பேசி ஜெயிக்க முடியுமாப்பா? உங்களுக்கும், அம்மாவுக்கு ஓட்ஸ் கஞ்சி காய்ச்சணும் நான். போய் ரெடி பண்றேன்...''
''சரிம்மா. பம்பரமா சுழலற. ஸ்வாதி பெரிய ஆளாகி, உனக்கு ஓய்வு குடுப்பா...''
''ஓய்வா? எனக்கா? உயிர் மூச்சு... என்னிக்கு ஓய்வு எடுக்குதோ... அன்னிக்கு கிடைக்கற ஓய்வு போதும்ப்பா. அது வரைக்கும் உழைச்சுகிட்டே இருக்கணும். அந்த அளவுக்கு எனக்கு உடல்நலம் நல்லா இருந்து, போய்ச் சேரணும்...''
''ஏம்மா... இந்த நல்ல நேரத்துல 'போய்ச் சேரணும்' அது இதுன்னு பேசற?''
''ஸாரிம்மா. எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் அவங்களுக்கப்புறம் எனக்காகன்னு அவங்களோட பூர்வீக வீட்டை ஆசையா வச்சிருந்தாங்க. அதைத்தான் கல்யாணக் கடன்னு சொல்லி, என்னை ஏமாத்தி வித்து, என் கணவர் அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டார். இப்ப... என்னைப் பெத்தவங்களா நீங்க எனக்கு வீடு குடுக்கறீங்க. இந்த சந்தோஷமான தருணத்துல நான் ஏதேதோ பேசிட்டேன். எதையாவது ஒண்ணை இழந்துதான் இன்னொண்ணை அடைய நேரிடும்ன்னு சொல்லுவாங்க.