பூவிதழ் புன்னகை - Page 64
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
ராதா, வேண்டுமென்றே மறைமுகமாக பவித்ராவின் வாழ்க்கை பற்றியும், அவளுக்கு ஆதரவாகப் பேசுவது போலவும் நடித்தாள். அந்த நடிப்பை நம்பி, அது வரை எதிர்ப்பு தெரிவித்த பவித்ரா... ராதாவின் பேச்சை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள். ராதா தொடர்ந்தாள்.
''உன்னோட இந்த சுதந்திரமான வாழ்க்கைக்கு இடையூறு செய்யவா நான் வந்திருக்கேன்? உன்னோட இந்த ஜாலியான வாழ்க்கை காலியாகிப் போயிடக் கூடாதேங்கற அக்கறையில உன்னை எச்சரிக்க வந்திருக்கேன். புரியல? சட்டப்படி வினோத் உனக்கு புருஷனாக இருக்கற வரைக்கும்தான் நீ அவன்ட்ட பணம் கேக்கறப்பெல்லாம் அவனும் பணத்தை தூக்கிக் குடுப்பான். ஆனா... அதே சட்டப்படி நீ அவனோட மனைவி இல்லைன்னு ஆகி, உன்னோட இடத்துக்கு வேற ஒருத்தி வந்துட்டாள்ன்னா? உனக்கெதுக்கு அவன் பணம் குடுக்கணும்?'' இதைக் கேட்டதும் பவித்ரா அதிர்ச்சி அடைந்தாள். மலங்க மலங்க விழித்தாள்.
''என்னம்மா பவித்ரா? இப்பிடி ஒரு கோணத்துல உன் வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்கலை போலிருக்கு? இப்பிடி ஷாக் ஆகற? வினோத் என்ன கேனயன்னு நினைச்சுட்டியா? குழந்தையையும் தானே பார்த்துக்கிட்டு, உனக்கும் பணத்தை அள்ளி குடுத்துக்கிட்டு... இப்பிடியே அவனோட வாழ்க்கையும் ஓடும்.... அந்த ஓட்டத்துல நீயும் உன்னோட பணத் தேவையை ஓட்டிடலாம்ன்னு கணக்கு போட்டுட்ட. அப்பிடித்தானே ? தப்பும்மா, தப்பு. உன்னோட கணக்கு தப்புக் கணக்கு. கணக்குப் பாடத்துல தப்பு வாங்கினா படிக்கற க்ளாஸ்லதான் ஃபெயில் ஆகுவோம். ஆனா குடும்பக் கணக்குல தப்பு பண்ணினா வாழ்க்கையே ஃபெயில் ஆகிடும். அவன் நினைச்சிருந்தா... உன்னைத் தன் காலடியில விழ வைக்கறதுக்கு உன்னோட வேலையையே தூக்கி, உன்னை பந்தாட முடியும். அவனோட பவர் பத்தி தெரியாம இருக்க. அவனுக்கு நல்ல செல்வாக்கு இருக்கு. அதை வச்சு உன்னை ஒண்ணும் இல்லாதவளா பண்ண முடியும். அவன் உன் மேல பாசம் வச்சிருக்கான். அதனாலதான் அப்பிடி செய்யல. சுதந்திரப் பறவையா வாழணும்னு நினைச்ச நீ எதுக்காக குடும்பக் கூட்டுக்குள்ள வந்த? கூட படுத்து, ஒரு குழந்தையையும் பெத்துப் போட்டதுக்கப்புறம்தான் தெரிஞ்சுதா உன்னோட வாழ்க்கையில சுதந்திரம் இல்லைன்னு ? முதல்ல சுதந்திரம்ன்னா என்னன்னு தெரிஞ்சுக்க. புருஷனையும் பிள்ளையையும் விட்டுட்டு இஷ்டப்படி சுத்தி திரியறதுக்குப் பேர் சுதந்திரம்னு நீ நினைச்சா நீ ஒரு முட்டாள் பெண். புருஷனோட அன்பு ஒரு சிறை விலங்கு மாதிரி. கட்டிப் போட்டாலும் அந்த அன்பு விலங்குக்குள்ள சிக்கி வாழறதுதான் உண்மையான சுதந்திரம். புருஷனோட இதயச் சிறைக்குள்ள தண்டனை என்ன தெரியுமா? அவன் வழங்கற அன்பும், பாசமும். புருஷனுக்கு அடங்கிப் போடறது ஓர் கட்டுப்பாடா? ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் பண்ணுங்க. ஒருத்தர்க்கு ஒருத்தர் உதவியா இருங்க. அந்த சமையல் சாம்ராஜ்யத்துலயும் சந்தோஷ சமாச்சாரம் அடங்கி கிடக்கு. புரிஞ்சுக்க. வினோத் உன்னை எந்த விதத்துலயும் அதிகாரமா கட்டுப்படுத்தற ஆள் இல்லை. உன் மனசுக்குள்ள தேவை இல்லாம எதையோ உருவகப்படுத்தி, அந்த உருவகம் குடுக்கற தவறான உணர்வுகளால தவிக்கற. குடும்பத்தைத் தவிர்க்கற. அது போகட்டும். குண்டு கண்களோட, குறுகுறுப்பான கண்களோட... உன்னோட குழந்தை மஞ்சுவைப் பிரிஞ்சு உன்னால எப்பிடி வாழ முடியுது? தாய்மைன்னாலே தியாகம்தானே? நம்பளோட அத்தனை உணர்வுகளையும், ஆசைகளையும் தியாகம் செஞ்சுதான் குழந்தையை வளர்க்க முடியும். குழந்தைப் பேறே இல்லாம வேதனைப்படற பெண்களைப் போய்ப் பாரு. இப்ப உள்ள வாழ்க்கை முறை மாற்றங்களால குழந்தையின்மை பிரச்சனை பரவலாக இருக்கு. எங்கேயே ஏதோ ஒரு குழந்தை இன்மை சிகிச்சை மையம் இருந்த நிலை மாறி... இப்ப எக்கச்சக்கமான குழந்தையின்மை சிகிச்சை மையங்கள் உருவாகி இருக்கு. நீ என்னடான்னா... பெத்துப் போட்ட குழந்தையை விட்டுட்டு தனிமை, இனிமைங்கற. விடுதலை, சுதந்திரம்ங்கற. ஒரு ஆம்பளை குழந்தைக்கு சமைச்சுக் குடுத்து தூங்க வச்சு, ஆபிஸ்க்கும், ஸ்கூலுக்கும் அல்லாடிக்கிட்டு இருக்கான். இந்தக் கஷ்டமெல்லாம் இல்லாம சுதந்திரமா இருக்கணும்னு அவன் நினைச்சிருந்தா... மறு கல்யாணம் பண்ணிக்கிட்டு உனக்கு 'டாட்டா' சொல்லிட்டு போயிருப்பான்...''
இதைக் கேட்டதும் நெஞ்சில் திகிலாகிப் போன பவித்ரா, ராதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
''நான் இப்ப என்ன பண்ணனும் ? சொல்லுங்க...''
''முதல்ல என்னை உன் வீட்டுக்குள்ள கூப்பிடணும். அதுதான் மரியாதை.'' சிரித்தபடியே ராதா கூறினாள்.
இதைக் கேட்ட பவித்ரா, ''ஸாரி... உள்ள வாங்க ராதா'' என்று கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். ராதாவை ஸோபாவில் உட்கார வைத்தாள். ஃப்ரிட்ஜை திறந்து குளிர்ந்த காஃபியை எடுத்து ராதாவிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட ராதா மென்மையாக பேச ஆரம்பித்தாள்.
உன்னைப் பத்தி, வினோத் என்ன, தெரியுமா சொல்வான்? 'அவ ஒரு குழந்தை மாதிரி அப்பிடின்னு. அதுக்கேத்த மாதிரி உன்னை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல பார்த்த அன்னிக்கு நானும் உன்னை புரிஞ்சுக்கிட்டேன். நீ ஒரு குழந்தை மட்டுமில்ல பச்சைக் குழந்தைன்னு. உன் மனசுல ஏற்பட்ட ஏதோ தாக்கத்துலதான் நீ வித்தியாசமான விதமா நடந்துக்கறன்னு புரிஞ்சு போச்சு. அப்பவே என் மனசுல ஒரு பொறி தட்டுச்சு. உன்னை ஏன் ஒரு ஸைக்யாட்ரிஸ்ட்ட கூட்டிட்டுப் போனா என்னன்னு? ஆனா... எனக்கும் நேரம் இல்லாத சூழ்நிலை... அதைப்பத்தி வினோத்ட்ட பேசக் கூட முடியலை. இப்ப நானே உன்னைத் தேடி வர்ற மாதிரி வாய்ப்பு உருவாகிடுச்சு. வினோத் இன்னும் உன்னைத்தான் நினைச்சுக்கிட்டிருக்கான்....'' ராதாவிற்கு தான் சொல்வது பொய் என்று தெரிந்தது. தெரிந்தும் பொய்யை உண்மை போல பேசினாள். 'ஒரு நன்மை நடக்குதுன்னா... அதுக்கு பொய் சொல்றதுல தப்போ இல்லை. ஒருத்தருக்கு உதவி செஞ்சு, அந்த உதவியால அவங்களோட வாழ்க்கையில முழுமையான நன்மை கிடைக்குங்கறதுக்காக நாம சொல்ற பொய், சத்தியமாயிடும். மனசார செய்யற உதவிக்கு அந்த சக்தியும், வலிமையும் இருக்குன்னு ஆன்மிகப் பெரியவர் ஒருவர் சொன்னது அவளது நினைவில் மோதி, பொய் சொல்கிறோம் என்ற குற்ற உணர்வு நீங்கிடும்' என்று ராதா நினைத்தாள். அவளது உள் மனம் பேசுவதை நிறுத்திய பின் அவள் தைரியமாக இயங்கினாள். அதன் எதிரொலியாக, இன்னொரு பெண்ணான பவித்ராவின் வாழ்வை செப்பனிடும் அளவுக்கு செயல் புரிய ஆரம்பித்திருந்தாள். தொடர்ந்து பேசினாள்.
''உன்னோட மனநிலை சரி இல்லை. உன்னோட உள் மனசுல எதுவோ பாதிப்பு ஏற்பட்டிருக்கு. இதைப் பத்தி நான் பேசறதைவிட... மனோதத்துவம் படிச்ச ஒரு மனநல ஆலோசகர் , உன்கிட்ட பேசினா நல்லா இருக்கும்...''