பூவிதழ் புன்னகை - Page 68
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
அதுவும் ஒரு காரணம் நான் அவரை பிரிஞ்சு போனதுக்கு.'' ரெக்கார்டரில் பதிவாகியிருந்த பவித்ராவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ராதாவிற்கு மேலும் பவித்ரா மீது பரிதாபம் தோன்றியது.
''நீங்க பவித்ராவிற்கு நெருங்கிய சொந்தம்ங்கறதுனாலதான் அவளோட பேச்சை உங்களுக்கு ரெக்கார்ட் பண்ணி, அதை உங்களை கேட்க வச்சேன். இதோ இப்பவே இதை டெலிட் பண்ணிடறேன்.'' என்று கூறிய மாலினி, அவள் கூறியபடி பவித்ராவின் பேச்சை டெலிட் செய்தாள்.
''இப்ப புரியுதா ராதா? பவித்ராவின் உள் மனசு பாதிப்புக்கு பாரபட்சமான வளர்ப்புதான் காரணம். இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. பவித்ரா நல்லபடியா ஒத்துழைக்கறதுனால அவளை சீக்கிரமா குணப்படுத்திடலாம்.'' மாலினி கூறியதை கேட்டு சந்தோஷப்பட்டாள் ராதா.
பவித்ரா கூறியிருந்த அந்த விஷயங்கள் எல்லாமே... ஒரே காரணத்தைத்தான் வெளிப்படுத்தின. சுற்றும், முற்றும் உள்ளவர்களால் பள்ளிக்கூட, கல்லூரித் தோழிகள் உட்பட அனைவராலும் புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், பாரபட்சமாக நடத்தப்பட்டாள். மற்றவர்களின் அந்த பாரபட்சமான நடவடிக்கைகள் அவளை வெகுவாக இழிவுபடுத்துவதாக உணர்ந்தாள்.
அந்த உணர்வுதான் அவளது மனநிலையை பாதித்திருந்தது. இதைப் புரிந்து கொண்ட டாக்டர் மாலினி, படிப்படியாக அவளுக்கு வைத்தியம் செய்ய வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டாள்.
''ராதா... இந்தப் பெண்ணுக்கு இன்னும் ரொம்ப நாளைக்கு ட்ரீட்மென்ட் தேவைப்படாது. ஆனா நான் எழுதிக் குடுக்கற மாத்திரைகளை நாள் தவறாம சாப்பிடறது ரொம்ப முக்கியம். ஒழுங்கா மாத்திரை சாப்பிட்டா... முழுசா குணமாகிடும்.''
''சரிங்க டாக்டர். எங்க விஜயராகவன் ஸார் உங்களைப் பத்தி ரொம்ப பெருமையா சொன்னார். நீங்க திறமைசாலின்னு. ஆனா... உங்களைப் பார்க்கற வரைக்கும் நீங்க இவ்ளவு சின்னப் பொண்ணா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை...''
''படிச்சு முடிச்சதுமே இந்த க்ளினிக்கை ஓப்பன் பண்ணிட்டேன். மனோதத்துவ ரீதியான மருத்துவத் துறை எனக்கு ரொம்ப பிடிச்ச துறை. நம்ப நாட்டில மனரீதியான பாதிப்பை யாருமே பொருட்படுத்தறது இல்லை. அதுக்கு ஒரு முக்கியமான காரணம்,
70
மனநலம் பாதிச்சவங்களோட வித்தியாசமான நடவடிக்கைகளை அவங்களோட குடும்பத்துல இருக்கற யாரும் புரிஞ்சுக்கறதில்லை. மனநலம் பாதிச்சவங்களோட பேச்சு, கடுமையா இருந்தா... ‘அவன்... அல்லது அவள் எவ்ளவு திமிரா பேசறான் பாரு...’ அப்பிடின்னு குடும்பத்தினரே அவங்க மேல கோபப்பட்டு திட்டுவாங்களே தவிர மனநல பாதிப்பு இருக்குமோ’ன்னு யாரும் நினைக்கிறதில்லை. இதனால, பல குடும்பங்கள்ல பிரிவினை நடந்திருக்கு. உறவுகள் பிரிஞ்சிருக்காங்க. குடும்பத்தினரோட அலட்சியத்தினால... பாதிக்கப்பட்டவங்களோட மனநோய் மேலும் வளர்ந்து, குடும்பத்துல எல்லோரோட நிம்மதியும் நிலைகுலைஞ்சு போகுது. பாதிக்கப்பட்டவங்களோட வாழ்க்கையும் பாழாகிப் போகுது.
பொதுவா உடம்புக்கு ஒரு வியாதி..., வலின்னா... உடனே டாக்டர்ட்ட ஓடறவங்க, மனசுக்கு ஒரு பிரச்னைன்னா சைக்யாட்ரிஸ்ட்டை சந்திக்கிறதில்லை. ஆலோசனை கேக்கறதில்லை. சைக்யாட்ரிஸ்ட்ன்னு சொன்னாத்தான் பயப்படறாங்கன்னு, மனநல ஆலோசகர்னு சொல்லிப்பார்த்தாலும் கூட பிரயோஜனம் இல்லை. மனநல பாதிப்பு அப்பிடின்னா... ‘பைத்தியம்’ன்னும் ‘சைக்யாட்ரிஸ்ட்’ன்னா... பைத்தியங்களுக்கு வைத்தியம் பண்ற டாக்டர்ன்னும் தவறான கணிப்பு இருக்கு.
அதனாலதான், பாதிக்கப்பட்டவங்களை மனநல ஆலோசகர்ட்ட கூட்டிட்டுப் போக முயற்சி செஞ்சா... ‘எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’ அப்பிடின்னு கேட்டு, வைத்தியம் பார்த்துக்க வர்றதுக்கு மறுப்பாங்க. அவங்களோட ஒத்துழைப்பு இல்லாம, எந்த ட்ரீட்மென்ட்டும் குடுக்க முடியாது.
இப்ப பவித்ரா விஷயத்துல அந்தப் பிரச்னையே இல்லை. தன்னோட மாறுபட்ட நடவடிக்கைகளுக்கு மனநலக் குறைவும் காரணமா இருக்கலாம்ன்னு சொன்னதும் புரிஞ்சுக்கிட்டு மறுத்துப் பேசாம ட்ரீட்மென்ட்டுக்கு வர்றதுக்கு பவித்ரா சம்மதிச்சிருக்காங்க. அதனாலதான் அவங்களோட வாழ்க்கையில ஒரு மறுமலர்ச்சி ஏற்படப்போகுது. ‘தனக்கு எந்த நோயும் இல்லை..., பாதிப்பும் இல்லை, நான் இப்படித்தான் இருப்பேன். எனக்காக யாரும், எதுவும் செய்ய வேண்டாம்’ன்னு பவித்ரா அலட்சியப்படுத்தி இருந்தா... அவங்களோட மனநல பாதிப்பு, நாளடைவில் அதிகமாகி, விபரீதமான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள்தான் மிஞ்சி இருக்கும். உங்களோட முயற்சியிலதான் பவித்ரா ட்ரீட்மெண்ட்டுக்கு வந்திருக்காங்க. எழுபது சதவிகிதம் ட்ரீட்மெண்ட் முடிஞ்சாச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல முழுசா முடிஞ்சுடும். அதுக்கப்புறம் நான் நிறுத்தச் சொல்ற வரைக்கும் மாத்திரைகளை தவறாம சாப்பிடணும். சாப்பிட்டப்புறம்...? புதுசா ஒரு பவித்ராவைப் பார்க்கப் போறோம். அவங்க குடும்பம் ஒண்ணாகப் போகுது. என்கிட்ட வைத்தியம் பார்த்துக்க வர்றவங்க, பரிபூரணமா குணமாகி, அவங்க பிரச்னை இல்லாம வாழறதைப் பத்தி தெரிஞ்சுக்கும்போது, ஏற்படற சந்தோஷம் போல வேற சந்தோஷமே எனக்கு கிடையாது. பணம் வாங்கிட்டுத்தான் வைத்தியம் பண்றேன்னாலும் ஒவ்வொரு பேஷண்ட்டோட பிரச்னைகளையும் அலசி, ஆராய்ஞ்சு, உண்மையான அக்கறையோட கவனிக்கிறேன். என்னோட இந்த கவனம்தான் எனக்கு நல்ல பேரையும் புகழையும் குடுத்திருக்கு...’’
‘‘குடுத்து வச்சவ டாக்டர் இந்த பவித்ரா. அமிர்தம்மாவும், அப்பாவும் உங்களைப்பத்தி சொல்லி... உங்ககிட்ட அவ வந்த நேரம் நல்ல நேரம். உங்களால அவளோட வாழ்க்கை நிம்மதியான வழியை நோக்கிப் போகுது. இது, நிச்சயமா உங்களாலதான்...’’
‘‘என்னால மட்டும் இல்லை. கடவுள் அருள் கூடி வந்தா.. எல்லாமே நம்பளைத் தேடி வரும். நான் படிச்ச படிப்புக்கு பலன் இருக்கறதை உணரும் போது பெருமிதமா இருக்கு...’’ மாலினியின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.’’
‘‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதுக்குன்னு பேசின காலம் மறைஞ்சு போய், பெண்கள் நிறைய படிச்சு, பல துறைகள்ல சாதனை புரியற காலம் மலர்ந்திருக்கு. இது நீங்க ஒரு முன்உதாரணம். நீங்க இன்னும் மேல மேல முன்னேறி, புகழ் பெறணும். பவித்ராவை உண்மையான அக்கறையோட கவனிச்ச உங்களோட அன்பை என்னிக்கும் மறக்க முடியாது. நாங்க கிளம்பறோம்...’’
நன்றி நிறைந்த வார்த்தைகளால் பேசி, அங்கிருந்து கிளம்பினாள் ராதா. அவளுடன் இருந்த பவித்ராவும் கிளம்பினாள்.
புன்னகை மாறாத இன்முகத்துடன் அவர்களுக்கு விடை கொடுத்தாள் டாக்டர் மாலினி.
71
பவித்ராவிற்குரிய வைத்தியம் முழுமை அடைந்தது. அவளும் முழுமையாக குணம் அடைந்தாள். அவளது மனது பண்பட்டு, பக்குவமாகி இருந்தது. பெண்மைக்குரிய விசேஷ இயல்புகளுடன் புதுப்பிறவி எடுத்திருந்த பவித்ராவிடம் தன்மையாக பேசி, அவளை வினோத்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் ராதா.
பவித்ராவின் கைகளைப் பிடித்து, வினோத்தின் கைகளுக்குள் சேர்த்து வைத்தாள்.
‘‘இதோ.. மஞ்சுவுக்கு ஒரு அம்மா. மஞ்சுவோட அம்மா. மஞ்சுவோட அம்மா மட்டுமில்ல... உன்னோட அன்பு மனைவியும்கூட.’’
வினோத்தின் கைகளுக்குள் தன் கைகள் அடங்கிக் கொண்ட உணர்வில், வெட்கப்பட்டாள் பவித்ரா.