பூவிதழ் புன்னகை - Page 71
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
பிரேத பரிசோதனை முதற்கொண்டு, கைரேகை மற்றும் பிற தடயங்கள் வரை புலன் ஆராய்ந்தனர் ப்ரேம்குமாரின் தலைமையில் செயல்புரிந்த காவல் துறையினர்.
திலீப்பும், மிருணாவும் ஏற்கனவே குடியிருந்த பழைய வீட்டிற்கும் சென்று விசாரித்தார் பிரேம்குமார்.
அங்கே, அக்கம் பக்கம் குடி இருந்தவர்கள் மூலமாகக் கிடைத்த தகவல்கள் மிருணாவின் கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியாக இருந்தன.
திருமணம் செய்து கொள்ளாமல் திலீப்புடன் சேர்ந்து வாழ்ந்த மிருணா, திலீப்புடன் சேர்ந்து வாழ்ந்ததற்கு முன், வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், அவனுடன் அடிக்கடி மிருணா சண்டை போடுவாள் என்றும் அது தொடர்பான முக்கியமான தகவல்களையும் கூறினர். எனவே குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்றன.
74
விஜயராகவன் கொடுத்த வீட்டில், ராதாவும், ஸ்வாதியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். காலையில் தன் வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்து, ஸ்வாதிக்கு லன்ஞ்ச் தயார் பண்ணிக் கொடுத்துவிட்டு ‘ஆராதனா’ பங்களாவிற்கு சென்று அங்கே எந்த மாற்றமும் இல்லாமல் அமிர்தத்திற்கும், விஜயராகவனுக்கும் சேவைகள் செய்து வந்தாள் ராதா. அவளுடன் பணியாற்றும் மற்ற ஊழியர்களுடன் அன்புடன் பழகி, சேவையையே தன் வாழ்வாக அமைத்துக் கொண்டாள் ராதா. அந்த சேவை மனப்பான்மையில் மனநிம்மதி அடைந்தாள். ‘ஆராதனா’ பங்களாவை அழகுப்படுத்தி அதில் ஆத்ம திருப்தி அடைந்தாள்.
தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, தனது வீட்டில் அனைவரையும் ஒருங்கிணைத்து விருந்திற்கு ஏற்பாடு செய்து, அமிர்தம்மா, விஜயராகவன், ஆராதனாவில் பணிபுரியும் ஊழியர்கள், வினோத், பவித்ரா, மஞ்சு ஆகிய எல்லோரையும் அன்புடன் அழைத்தாள் ராதா.
ராதாவின் வீட்டில் அனைவரும் ஒன்று கூடினர். ஸ்வாதியும், மஞ்சுவும் அனைவரோடும் அரட்டை அடித்து மகிழ்ந்தனர்.
ஃப்ரிட்ஜில் பால் இல்லாததைப் பார்த்த ராதா, என்ன செய்வது என்று யோசித்தாள்.
தான் சென்று வாங்கி வருவதாகக் கூறி உடனே கிளம்பி வெளியேறினான் வினோத். பால் வாங்கிக் கொண்டு திரும்பி வந்த வினோத்தின் முகம் வெளிறிப்போய் இருந்தது. வாட்டமாகவும் இருந்தது.
‘‘ஏன் ஒரு மாதிரியா இருக்க வினோத் ?. போகும்போது நல்லாத்தானே இருந்த? என்ன ஆச்சு? தலை வலிக்குதா? காஃபி போடட்டுமா?” கேட்ட ராதாவிற்கு மௌனத்தையே பதிலாகக் கொடுத்தான் வினோத்.
‘‘என்னப்பா... ஏன் டல்லா இருக்கீங்க?’’ என்று மஞ்சுவும் ‘‘என்னங்க... என்ன ஆச்சு? முகம் மாறிப் போய் ஏதோ யோசனையா இருக்கீங்க?’’ என்று பவித்ராவும், ‘‘அங்க்கிள்.. திடீர்னு சோகமாயிட்டிங்களே... என்னன்னு சொல்லுங்க அங்க்கிள்’’ என்று ஸ்வாதியும் ஆளாளுக்கு கேட்டுத் துளைக்க, தன் கையில் இருந்த செய்தித்தாளை காண்பித்தான் வினோத்.
படித்துப் பார்த்த அனைவரும் திடுக்கிட்டனர், ஸ்வாதியைத் தவிர.
‘‘ஏன் அங்க்கிள்... இந்த சந்தோஷமான சூழ்நிலையில... யாரைப் பத்தியோ... ஏதோ கேவலமா வந்திருக்கிற நியூஸைப் பார்த்துட்டு நீங்க அப்ஸெட் ஆகற தேவையே இல்லாத விஷயம்... எங்க மூடையும் கெடுக்காதீங்க...’’
‘‘அது யாரைப் பத்தியோ இல்லைம்மா. உங்க... உங்க... அப்பா...’’
‘‘ப்ளீஸ் ஸ்டாப் இட் அங்க்கிள். அது என்னோட அப்பா மேட்டர்னு தெரிஞ்சுதான் பேசினேன். பேப்பர்ல வந்திருக்கற நியூஸ் வேற யாரையோ பத்திதான். அதுக்கும் நம்பளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்க வீட்ல, நாம எல்லாரும் ஒண்ணு கூடி இருக்கற இந்த அழகான நேரம் பாழாகிட வேண்டாம் வினோத் அங்க்கிள்.’’
மௌனமாக அங்கிருந்து அகன்றான் வினோத். ‘‘என்னம்மா... நீங்களும் அதிர்ச்சியாகி, அப்ஸெட் ஆகிட்டீங்களா?’’ ராதாவிடம் கேட்டாள் ஸ்வாதி.
‘‘நீதான் சொல்லிட்டியே... அது யாரோ... நமக்கும் அந்த மேட்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு. எனக்கும் அப்படித்தான். தப்பு செய்றவங்களுக்கு தப்பாம தண்டனை கிடைக்கும். அவருக்கு சீக்கிரமாவே கிடைச்சிருக்கு. நம்பளை நடுத்தெருவுல நிறுத்தின அவர், தலைமறைவா... எந்தெந்த தெருக்கள்ல ஓடிக்கிட்டிருக்காரோ... ஓடட்டும். வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடட்டும். எனக்கு அதிர்ச்சியும் இல்லை. நான் அப்ஸெட் ஆகவும் இல்லை. பாசம் இருந்தாத்தானே பரிதவிக்கிறதுக்கு? துரோகம் செஞ்ச அவருக்கு நான் ஏன் தியாகம் செய்யணும்? என்னைப் பொறுத்தவரைக்கும் அவரோட நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கெட்ட கனவு. கனவுக்கு யாராவது அழுவாங்களா? உன் அம்மாவான என்னை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா...?’’
‘‘அம்மா...’’ என்று ராதாவைக் கட்டிக் கொண்டாள் ஸ்வாதி.
‘‘மதிய சாப்பாட்டுக்கு இன்னும் எவ்வளவு வேலை இருக்கு? ஆளாளுக்கு வேலையை பார்க்க வாங்க...’’ ராதா கூறியதும் அனைவரும் அங்கே வந்தனர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையைக் கொடுத்தாள் ராதா. ராதாவை புரிந்து கொண்ட அமிர்தம்மாவும், விஜயராகவனும் அவளைப் பார்த்து புன்னகை புரிந்தனர். மறுபடியும் அங்கே சந்தோஷமான சூழ்நிலை உருவாக ஆரம்பித்தது.
75
திலீப்புடன் சேர்ந்து வாழ்வதற்கு முன் மிருணா இன்னொரு நபருடன் வாழ்ந்து வந்த தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ப்ரேம் குமாரின் குழு, அந்தக் குறிப்பிட்ட நபரைப் பற்றிய விசாரணையில் ஈடுபட்டனர்.
மிருணாவின் மொபைல் மூலமாக அந்த நபரைக் கண்டுபிடித்து விசாரித்தனர். அவன் பெயர் பிரசாத். மிருணாவுடன் சேர்ந்து வாழ்ந்தது, பணம்... பணம்... என்று மிருணா, பணத்திற்காக அலைந்தது, தான் ஓட்டாண்டியான பின்னர் தன்னைப் பிரிந்து சென்றது அத்தனையையும் கூறிய அவன், மிருணாவை கொலை செய்தது தான் இல்லை என்று சாதித்தான். அவன் சாதித்துப் பேசுவதற்கு ஏற்றபடி, அவன் சம்பந்தப்பட்ட தடயங்கள் ஏதும் இல்லை.
ஆனால் மிருணாவிடம் பணம் கேட்டு வாக்குவாதம் நடத்தி, கோபத்துடன் அவளது கழுத்தை அழுத்திய திலீப் அங்கிருந்து சென்ற பிறகு மிருணாவின் வீட்டிற்கு சென்ற பிரசாத், தன் பணம், வீடு, சொத்துக்களை கைப்பற்றிக் கொண்டு தன்னை ஒரு பிச்சைக்காரனாக்கிவிட்ட மிருணாவிடம் பணம் கேட்டும், அவள் கொடுக்க மறுத்தபடியால் அவனுக்கும் கோபம் தலைக்கேறி, அவளது கழுத்தைத் திருகி கொலை செய்த உண்மை மறைந்து போனது.
மிருணாவைக் கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பிரசாத் அங்கே சென்றான். எனினும், மிருணா பணம் கொடுக்காதபடியால் உணர்ச்சிவசப்பட்டு கோப வெறி ஏறி, வெகு சில நிமிடங்களிலேயே அவளைக் கொலை செய்திருந்தான் பிரசாத். முன்னேற்பாடாக சென்றிருந்தபடியால் மிருணாவைக் கழுத்தை அழுத்தி கொலை செய்வதற்கு முன், கைகளில் உறைகளை அணிந்து கொண்டிருந்தான் பிரசாத்.
திலீப், மிருணாவின் கழுத்தை நெறித்தபோது, அவளது கண்கள் செருகியது நிஜம் என்றாலும் அவளது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்படவில்லை. திலீப்பிற்கு மிருணாவைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.