பூவிதழ் புன்னகை - Page 70
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
உள்ளத்திற்குள் தொக்கி நின்ற கேள்விக்கு ‘பளிச்’ என்ற ஒரு பதில் கிடைத்த மகிழ்ச்சியில் வினோத்தும், அவனது பிளவுபட்ட இல்லற வாழ்க்கையில் நிலவு போல பவித்ராவை இணைத்து வைத்த நிம்மதியில் ராதாவும் திளைத்தனர்.
அப்போது, தன் முதுகில் பூக்கூடையை சுமப்பது போல மஞ்சுவை சுமந்து கொண்டு வந்தாள் பவித்ரா. அதுநாள் வரை தென்படாத ஒரு குதூகலம், மஞ்சுவின் முகத்தில் தென்பட்டதைக் கண்டு வினோத் வியந்தான். மகிழ்ந்தான். அவனது அன்பான இயல்பிற்கும், அவனது திருமண வாழ்விற்கும் ஓர் அர்த்தம் பிறந்தது.
‘‘என்ன பவித்ரா... வினோத்ட்ட நிறைய பணம் வாங்கிட்டு வா. ஷாப்பிங் போகலாம்...’’ தமாஷ் செய்தாள் ராதா.
‘‘ஷாப்பிங்கும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். எனக்கு இவரும், மஞ்சுவும் போதும்.’’
ராதாவின் தோள் மீது அன்பு பொங்க... சாய்ந்து கொண்டாள் பவித்ரா.
72
அலுவலகத்தில் கையாடல் செய்த பணத்தைத் திரும்பி வைப்பதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், மிருணாவிடம் பணம் கேட்டு கெஞ்சினான் திலீப்.
ஒய்யாரமாய்... ஓய்வாய் ஸோஃபாவில் சாயந்து அமர்ந்து, ஆங்கில பத்திரிகை ஒன்றை படித்துக் கொண்டிருந்த மிருணாவின் கால் பக்கம் சென்று உட்கார்ந்தான் திலீப்.
‘‘இன்னும் ரெண்டு நாள் தான் மிருண் டைம் இருக்கு. ஆபீஸ்ல பணத்தை வைக்கணும். எப்பிடியாவது அட்ஜஸ் பண்ணி, அந்தப் பணத்தை வச்சுடலாம்னு சொல்லித்தானே அந்த ‘லேண்ட்’டை வாங்கின? எதுவும் செய்யாம இப்பிடி நீ சும்மா இருந்தா... என்ன பண்றது? உன்கிட்ட இருக்கற பணத்துல இருந்து அந்தத் தொகையைக் குடு’’
‘‘என்கிட்டயா? அவ்ளவு பணமா...?’’
‘‘என்ன மிருணா? எனக்கு என்னவோ ஒண்ணுமே தெரியாத மாதிரி சொல்ற? எனக்கு தெரிஞ்சு. உனக்கு எவ்ளவு பணம், நகைகள் குடுத்திருக்கேன்? உன்னோட சம்பளப் பணத்துல இருந்து எதுக்குமே நீ செலவு செய்றதில்லை. உன்கிட்ட எப்பிடி பணம் இல்லாமப் போகும்?’’
‘‘ம்கூம் என்கிட்ட இல்லை...’’
‘‘இருக்கறதை இல்லைன்னு இப்பிடி அப்பட்டமா பொய் சொல்றியே? அவசரத்துக்கு, அவசியத்துக்குத்தானே கேக்கறேன்? நிச்சயமா உனக்கு திரும்ப குடுத்துடுவேன் மிருணா...’’
வழக்கமாக அவனிடம் குழைந்து பேசும் மிருணா அன்று ‘என்ன நடந்தால் எனக்கென்ன?’ என்கிற ரீதியில் பேசாமல் இருந்தாள்.
மீண்டும் பணம் கேட்டான் திலீப்.
‘‘நீ பணம் குடுத்தாத்தான் என் வேலை பிழைக்கும். இல்லைன்னா என்னோட வேலை பறிபோயிடும். நீ பணம் குடுத்தாத்தான் என் மானம் பிழைக்கும். இல்லைன்னா என்னோட மானம் கப்பலேறிடும். நீ பணம் குடுத்தாத்தான் என் கௌரவம் பிழைக்கும். இல்லைன்னா... என்னோட கௌரவம் போய், இழிவான நிலைமையாகிடும். ப்ளீஸ் மிருணா...’’
‘‘திரும்ப திரும்ப கெஞ்சினா?! குடுத்துடுவேனா? முடியாது...’’
‘‘உனக்காகத்தானே ஆபீஸ்ல இருந்து பணம் எடுத்தேன்? லேண்டையும் உன் பேர்ல வாங்கி இருக்க. காரை வித்து பணத்தை வச்சுடலாம்னு பார்த்தா அதுவும் உன் பேர்ல வாங்கி இருக்க? வாங்கின சொத்துக்கள் எல்லாமே உன் பேர்ல இருக்கு! கடைசி வரை கணவன், மனைவியா வாழ்வோம்னு நீ சொன்னதை நம்பினேனே? நம்ப வச்சு கழுத்தறுத்திட்டியே? மத்த எல்லாத்தையும் நீ வச்சுக்க. ஆபீஸ்ல கட்ட வேண்டிய பணத்தை மட்டும் குடு. எக்கச்சக்கமான நகைகள் வாங்கிப் போட்டேனே? அதில கொஞ்சம் குடுத்தா கூட போதும். பணமாக்கி, என் ஆபீஸ்ல கட்டிருவேன்...’’
‘‘நகையோ... பணமோ... எதுவும் தர முடியாது. கெட் அவுட்...’’
மிருணா பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் விதிர்விதிர்த்துப் போனான் திலீப். பின்னர் சமாளித்து பேசினான்.
‘‘என்னையா வெளியே போகச் சொல்ற? இது என்னோட வீடு. என் மனைவி, மகள் ரெண்டு பேரையும் துரத்தி விட்டுட்டு. உன் கூட வாழ வந்த இந்த வீடு, என்னோட வீடு...’’
இதைக் கேட்டு எகத்தாளமாக சிரித்தாள் மிருணா.
‘‘இது உங்க வீடா? அது அப்போ? இப்போ? இது என் வீடு. என்னோட பேர்ல இருக்கற என்னோட வீடு... பத்திரத்தை எடுத்து பாருங்க...’’
‘‘அடிப்பாவி! இந்த வீட்டையும் உன் பேர்ல மாத்திட்டியா?’’
அபகரிக்கணும்னு நினைச்சா... எதை வேண்ணாலும், எப்பிடி வேண்ணாலும் மாத்தலாம்...’’
தான் மிருணா மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான மோக மயக்கத்தில் அவள் கேட்ட பேப்பர்களில் எல்லாம் கையெழுத்து போட்டது நினைவு லேசாக நிழலாடியது.
‘‘என்னை ஏமாத்திட்டியே...’’
‘‘ஏமாந்து போறங்வங்க இருந்தா... ஏமாத்தறவங்க... ஏமாத்திக்கிட்டேதான் இருப்பாங்க. ஆல் தி பேப்பர்ஸ் ஆர் வெரி பெர்ஃபெக்ட். யூ கான்ட் டூ மி எனிதிங். யு கேன் நாட் கெட் எனி மனி ஃப்ரம் மி. யூ கேன் கோ...’’
அவளது ஆங்கில அறிவில் தன் அறிவு மங்கிப் போன திலீப்பின் மனம் இன்று அவதிப்பட்டது.
‘‘வெறும் பணத்துக்காகவா என் கூட வாழ்ந்த...?’’
‘‘பின்னே? வெறும் ஆணாகிப் போனவங்க கூட வாழ்றதுக்கு நான் என்ன பைத்தியமா?’’
ஓர் கணம் வாயடைத்துப் போன திலீப்பிற்கு மறுகணம் கோபம் எரிமலையாய் பொங்கியது.
அதுவரை மிருணா மீது கொண்டிருந்த அபரிமிதமான ஆசையும், மாறாத மோகமும் அப்போது ஆத்திரமாக மாறியது...
‘‘அத்தனை சொத்துக்களையும் நீயே வச்சுக்கோ. என் ஆபீஸ்ல திரும்பி வைக்க வேண்டிய பணத்தை மட்டும் குடு...’’ கோபமாகக் கத்தினான்.
‘‘குடுக்க முடியாது...’’ மிருணாவும் கத்தினாள்.
‘‘குடுக்கப் போறியா? இல்லியா?’’ பற்களை நறநறவென்று கடித்தபடி கேட்டான் திலீப்.
‘‘முடியாது...’’
‘‘முடியாதா? என் கோபத்தைக் கிளறாதே... பணத்தைக் குடு...’’
‘‘முடியாது...’’
மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசிய மிருணாவின் கழுத்தை தன் இரண்டு கைகளாலும் அழுத்தினான்.
திலீப் அழுத்தியதில் மிருணாவின் கண்கள் செருகியது. அப்போதும் அவள் ‘பணம் குடுக்க முடியாது, பணம் குடுக்க முடியாது’ என்றே கூறினாள்.
பண வெறியில் இருந்த மிருணா, எந்த சலசலப்பிற்கும் அஞ்சாமல் இருந்தாள்.
திலீப்பின் கைகள் மிருணாவின் கழுத்தை அழுத்திக் கொண்டிருப்பதை இரண்டு கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன.
73
பெங்களூர் ‘சிவாஜி நகர்’ ஏரியாவில் உள்ள ‘ஜெய் அப்பார்ட்மென்ட்டில் இளம்பெண் கொலை. இவளது பெயர் மிருணா. இவளது கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளாள். விசாரணையில் இவள், திருமணம் செய்து கொள்ளாமல் திலீப் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள் என்பது தெரியவந்துள்ளது... செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக மிருணா கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகி இருந்தது.
மிருணாவின் கொலை பற்றி புலன் விசாரணை செய்வதற்கு இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் நியமிக்கப்பட்டார்.