பூவிதழ் புன்னகை - Page 62
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8113
''அவளுக்கு அம்மா ஞாபகம் ரொம்ப வந்துடுச்சு. அவளுக்கு அம்மா வேணுமாம்.''
''ஓ... அந்த ஏக்கமா? சின்னப் பிள்ளைதானே? மனசு ஏங்கத்தான் செய்யும். அது சரி... இரு உனக்கு காப்பி எடுத்துக்கிட்டு வரேன்....'' ஓரிரு நிமிடங்களில் மணக்கும் காஃபியுடன் வந்தாள் ராதா.
''உன் கையால போடற அசத்தலான காஃபியை என் வாழ்நாள் முழுசும் குடிக்கணும்...''
''அதுகென்ன? நீ என்னை எப்ப பார்க்க வந்தாலும் உன்னோட ஃபேவரிட் காஃபி குடுக்காம விட்டுடுவேனா?''
''விட்டுடக்கூடாதேன்னுதான் நானும் பார்க்கறேன்....''
''என்ன...?!''
''இல்லை... இல்லை உன் காப்பியை மிஸ் பண்ணிடக் கூடாதேன்னு சொல்ல வந்தேன்.''
''எத்தனையோ மிஸ் பண்ணிட்டோம். ஒரு காஃபியை மிஸ் பண்றது பெரிய விஷயமா என்ன?''
''மிஸ் பண்ணினதை மறுபடியும் அடைய சான்ஸ் கிடைச்சா...?''
''நீ என்ன சொல்ற? இன்னிக்கு நீ ஏதோ ஒரு குழப்பத்துல பேசற மாதிரி இருக்கு? என்ன ஆச்சு உனக்கு?''
''எனக்கு ஒண்ணும் ஆகல. மஞ்சுவுக்குத்தான்...''
ராதா அதிர்ச்சியானாள்.
''மஞ்சுவிற்கு என்ன ஆச்சு?''
''சச்ச... அவளுக்கு ஒண்ணும் ஆகல. அவ நல்லா இருக்கா....''
''அப்பாடா ஒரு நிமிஷம் நான் ஆடிப் போயிட்டேன் மஞ்சுவுக்கு என்னமோ ஏதோன்னு. திடீர்ன்னு மொட்டைகட்டையா பேசி என்னை பயமுறுத்திட்ட....''
''பயந்து கிடக்கறவன் நான்...''
''என்ன ...?! பயப்படறியா...? எதுக்கு?''
''அ... அ... அது... வந்து... உன்கிட்ட ஒண்ணு கேக்கணும். ஆனா... தயக்கமா இருக்கு.''
''கேக்கணும்ங்கற முடிவுலதானே வந்திருக்க...? கேளு. புதுசா என்கிட்ட என்ன தயக்கம்?''
''நான் தயங்கறதுக்கு காரணம்... இந்த விஷயம் நீயும் நானும் சம்பந்தப்பட்டது..''
''விஷயத்தை சொல்லாம ஏதேதோ சுத்தி வளைக்கற?! மனசுல இருக்கறதை தெளிவா சொல்லு...''
''சொ... சொல்லத்தான் நினைக்கிறேன்...''
''நினைச்சத சொல்லுன்னுதான் நானும் சொல்றேன்...''
''சொல்றேன் ராதா... நேத்து மஞ்சு ரொம்ப அப்ஸெட் ஆகிட்டா. அவளுக்கு மனசு சரியில்லை. அ... அ... அவ... அவளுக்கு ஒரு அம்மா வேணுமாம்.''
''சின்ன குழந்தைதானே... அம்மாவோட பிரிவு அவளை தாக்கறது இயல்புதானே? நீதான் அவளோட அம்மா அவ கூட இல்லைங்கற உணர்வு ஏற்படாம பார்த்துக்கணும்...''
''நான் நல்லாதான் பார்த்துக்கறேன். அவளுக்கு எந்தக் குறையும் வைக்கல. அவளுக்காக... நான் அவ கூட இருக்கணும்ங்கறதுக்காக எனக்கு வந்த எக்ஸ்போர்ட் ஆர்டஸைக்கூட நிறைய விட்டிருக்கேன்....''
''நீ விட்டது பொருளாதார ரீதியானது. ஆனா அவ அம்மா, மஞ்சுவை விட்டுடுப்போனது மஞ்சுவுக்கு மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தறது. எப்பிடியோ பணத்துக்காக, மகளோட பாதுகாப்பை உதாசீனம் செய்யாம, ஒரு நல்ல அப்பாவா இருக்க...''
தான் பேச வந்த விஷயத்தை வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டதாக எண்ணி, இதயத்தில் ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் படபடக்க மிகுந்த தயக்கத்துடன் பேச ஆரம்பித்தான் வினோத்.
''ஒரு நல்ல அம்மாவா.... நீ... நீ... மஞ்சுக்கு அம்மாவாயிட்டா.... நல்லா இருக்கும்னு... மஞ்சு சொல்றா...''
ராதாவின் புருவங்கள்.... கேள்விக்குறி உணர்வை பிரதிபலிக்கும் விதமாக உயர்ந்தன.
''நான் அவளுக்கு அம்மாதானே? அவளை என் மகள் போலத்தானே நேசிக்கிறேன்?...''
''உன் நேசமும், பாசமும் நிரந்தரமா தனக்குக் கிடைக்கணும்ன்னா.... நீ.... நீ... அவளுக்கு நிஜ அம்மாவா.... கிடைக்கணும்னு சொல்றா...''
''அதென்ன வினோத்...? நிஜ அம்மா... நிழல் அம்மா...? அம்மான்னா தாய்மை நிரம்பியவ. அந்த தாய்மையை மஞ்சுவுக்கு வழங்கறதுக்கு நான் தயாரா இருக்கேன்.''
''மஞ்சு என்ன சொல்றாள்ன்னா... 'ராதா ஆன்ட்டியும் நீங்களும் கல்யாணம் பண்ணிக்கோங்களேன்' அப்படின்னு...''
இதை எதிர்பார்க்காத ராதாவின் புருவங்கள் மறுபடியும் உயர்ந்தன.
''அப்படின்னு மஞ்சு சொல்றாள்ன்னு நீ சொல்றியா...?''
''சொன்னது மஞ்சு. அதைப்பத்தி கேக்கறது நான். பதில் சொல்ல வேண்டியது நீ....'' பேச்சைத் துவங்கும் வரை தயங்கிய வினோத், விஷயத்தை ஆரம்பித்தபின் ஓரளவு சகஜமாக பேசினான்.
''இந்தக் கேள்விக்கு அவ்ளவு சீக்கிரம் பதில் சொல்லிட முடியுமா? எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்....''
''சரி. ஆனா... உன்னோட பதில்... மஞ்சுவுக்கு அம்மா கிடைக்கிற விதமா இருக்கனும்.''
''மஞ்சுவுக்கு ஒரு நல்ல அம்மா கிடைப்பா.'' எந்தவிதமான அதிர்ச்சியையோ... கலக்கத்தையோ வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகை பூ ஒன்றை உதிர்த்தாள் ராதா.
'ஹயோ... இந்தப் புன்னகை... அன்று என்னை மயக்கிய புன்னகை. இந்தப் புன்னகை பூவிதழ் மலர்ந்தால்... என் வாழ்வும் மறுமலர்ச்சி அடையும். என் மஞ்சுவின் வாழ்வும் மலரும்.' எண்ண ஓட்டங்கள் வினோத்தின் இதயத்தில் முட்டி மோதின.
''என்ன வினோத்? திடீர்னு மௌனமாயிட்ட?!...''
'இவ எப்பிடி இவ்ளவு சகஜமா பேசறா?!... நான் கேட்க விஷயங்களும் சாதாரணமான விஷயங்கள் இல்லையே?'
ராதா பேசத் துவங்கினாள்.
''என்ன வினோத்...? கேட்டதுக்கு நான் அதிர்ச்சி அடையலியேன்னு உன்னோட நினைப்பு ஓடுதில்ல? நான் கல்லை மட்டும் இல்லை கடப்பாரையையும் முழுங்கினவ. என்னோட கணவர் என்னை விட்டுட்டு போனதுல இருந்து என் கண்ல ஒரு சொட்டு கண்ணீர் கூட வர்றதில்லை. அந்த அளவுக்கு எனக்கு துணிச்சல் வந்திருக்கு. எதைப்பத்தியும் கவலைப்பட மாட்டேன். கலங்க மாட்டேன். ஆண்டவன் எனக்கு நிறைய மனோதிடம் குடுத்திருக்கார்...''
ராதா பேசியதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல், அவளிடம் மீண்டும் கேட்டான் வினோத்.
''எனக்கு உன்னோட பதில்?''
''அதான் சொன்னேனே. மஞ்சுவுக்கு நல்ல அம்மா கிடைப்பாள்ன்னு....''
''அ.... அப்பிடின்னா.....?''
''உஷ்... நான்தான் டைம் கேட்டிருக்கேன்ல?''
''ஓகே ராதா... நான் கிளம்பறேன்.''
வினோத் அங்கிருந்து கிளம்பினான்.
65
தன்னிடம் 'மஞ்சுவிற்கு ஒரு அம்மா வேண்டும்' என்று கூறி அதன் காரணமாக 'தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா?' என்று வினோத் கேட்டதை நினைத்து அவன் மீது பரிதாபம்தான் தோன்றியது ராதாவிற்கு.
'வாழ்க்கையையே புரட்டிப் போடும் புரட்சிகரமான ஒரு கேள்வியை வெகு எளிதாகக் கேட்டுவிட்டான் வினோத்! வெகு சுலபமான விஷயங்கள்தான். தாலி கட்டி, தன்னுடன் சில காலம் வாழ்ந்த பெண், ஏன் தன்னை விட்டுப் போனாள்? 'சுதந்திரம் இல்லை. கட்டுப்பாடு பிடிக்கலை' அப்பிடிங்கற காரணங்களை, பவித்ரா சொன்னாள்ன்னா...?! அதை அலட்சியப்படுத்திட்டு அவ போனா போகட்டும்ன்னு விட்டுடறா? அவ அப்பிடி பேசறதுக்குரிய அடிப்படைக் காரணங்களை ஆராய்ஞ்சு பார்க்க வேண்டாமா ? சச்ச... வினோத்தை குறை சொல்ற நான் மட்டுமென்ன?! பவித்ரா ஏன் இப்பிடி பண்றா ? அதுக்கு என்ன காரணம்ன்னு இதுவரைக்கும் யோசிச்சேனா? என்னோட இடைவிடாத வேலைகள்னால... அதைப்பத்தி சிந்திக்கவே இல்லையே? வேலைகள்... கடமைகள்ன்னு அந்த சிந்தனையே இல்லாம போயிட்டுது.