நீ மட்டுமே என் உயிர்! - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6613
"நீ எத்தனை வசதி பண்ணிக் குடுத்தாலும் தொழிலாளிங்க ஒண்ணு நினைச்சுட்டாங்கன்னா... உனக்கு எதிராத்தான் கொடி பிடிப்பாங்க. இதுக்கு ஏன் நீ கவலைப்படற? நம்ப பக்கம் சட்ட ரீதியா எல்லா விஷயங்களும் கரெக்டா இருக்கறப்ப நாம ஸ்ட்ராங்கா இருக்கலாம். இதுக்கெல்லாம் நீ உன்னை வருத்திக்க வேண்டியதே இல்லை. நல்ல லாயராப் பார்த்து இந்த மேட்டரை அவங்க கிட்ட விட்டுடு. அவங்க பார்த்துப்பாங்க. மிஷின்ல வேலை பார்க்கும் போது தொழிலாளிக்கு அடிபடறது, விபத்து நேரிடறது இதெல்லாம் நடக்கறதுதான். இதுக்கு நாம என்ன பண்றது... இப்படிப்பட்ட விஷயத்துக்கெல்லாம் லாயர்ங்கதான் சரி. நம்ம கம்பெனி நிர்வாகத்துக்காகத் தனிப்பட்ட வக்கீல் யாரையாவது நிரந்தரமா நியமனம் பண்ணு. நம்ம கேசுங்க எல்லாத்தையும் அந்த வக்கீல் பார்த்துப்பாரு. நீ ரிலாக்ஸ்டா இரு..."
"நல்ல ஐடியா சொன்னீங்கப்பா. ஆனா நல்ல திறமையான வக்கீலா யார் இருக்காங்கன்னு விசாரிக்கணும்..."
"நம்ம பிரபாகர்கிட்ட விசாரியேன்..."
"ஆமாப்பா. பிரபாகர்கிட்டதான் கேக்கணும்."
"கேளு. கேட்டு நம்ம நிர்வாகம் சம்பந்தப்பட்ட எல்லா சட்டப் பிரச்னைக்கும் லீகல் அட்வைஸரா அந்த ஆளையே வச்சுக்க. உதவியா இருக்கும். டென்ஷன் இல்லாம நீ மத்த வேலையைப் பார்க்கலாம்."
"ஆமாப்பா, நாளைக்கு முதல் வேலையா வக்கீல் விஷயமா பிரபாகர்கிட்ட பேசிடறேன்," என்று கூறியவனின் முகத்தில் டென்ஷனும், கவலையும் மறந்து புன்னகை வந்தது.
இதைக் கண்ட சரண்யா மறுபடியும் துள்ளிக் குதித்தாள். புள்ளிமான் போல ஓடி வந்து சங்கரின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
"டென்ஷன் மாயமாயிடுச்சு அப்பாவுக்கு. சொல்லுங்கப்பா... இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டீங்க. வெளில எங்கயாவது போலாமா?" கிளிப்பிள்ளை போலக் கொஞ்சிப் பேசிக் கெஞ்சிய சரண்யாவின் தேன் மொழியில் மனம் லேசானான் சங்கர்.
"நீ எங்கே போகணும்ன்னு ஆசைப்படறியோ... அங்கேயே போகலாம்."
"அப்படின்னா நானே ப்ரோகிராம் சொல்லட்டுமா?"
"ஓ... சொல்லேன்..."
"முதல்ல ஸ்பென்ஸர் ப்ளாஸா போய் அங்கே வெஸ்ட் ஸைட்ல எனக்கு டிரஸ் வாங்கறோம். அப்புறம் அல்ஸா மால் போய் எனக்குத் தைக்க குடுத்த சுடிதார் ஸெட்டை வாங்கறோம். அதுக்கப்புறம் க்ரீன் பார்க் போய் டின்னர் சாப்பிடறோம். வீட்டுக்கு வர்றோம். இதுதான் நான் போடற ப்ரோக்ராம். சரியாப்பா?"
"என் சரணும்மா சொன்னா சரிதான்." சங்கர் சம்மதித்ததும் குஷியாகக் கிளம்பினாள் சரண்யா.
"அம்மா, நீங்களும் அப்பாவும் வாங்களேன். வீட்ல நைட்டுக்கு எதுவும் சமைக்க வேண்டாம்னு சமையல்காரம்மாட்ட சொல்லிடுங்க. நிதானமா போயிட்டு வரலாம்."
வசந்தாவிடம் கூறினான¢ சங்கர்.
"சரிப்பா. இதோ கிளம்பிடறோம்." வசந்தா எழுந்தாள்.
சங்கர் முகம் கழுவி விட்டு ஐந்து நிமிடங்களில் தயாரானான். வேறு உடை மாற்றிக் கொண்டு வந்தாள் சரண்யா.
"அப்பான்னா எங்கப்பாதான் அப்பா!" என்று சங்கரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக வெளியில் கிளம்பினார்கள்.
31
சென்னை நகரத்தின் பிரபல வக்கீல்களில் ஒருவரான சுந்தரம் என்பவரிடம் ஜூனியராகச் சேர்ந்திருந்தான் தீபக். முதல் முறையிலேயே தீபக்கின் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொண்டார் சுந்தரம். தீபக்கின் திறமைகள் அவரது மேற்பார்வையில் மேலும் மெருகு பெற்றன.
"வெரிகுட் தீபக். நீ எடுத்துக் குடுக்கற பாயிண்ட்ஸ் இந்த கேசுக்குப் பெரிய பக்கபலமா இருக்கு. உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினாரே வேதாசலம்! அவருக்குத்தான் நான் நன்றி சொல்லணும்."
"நான்தான் ஸார் அவருக்குப் பெரிசா நன்றிக் கடன் பட்டிருக்கேன். அவர் எங்களுக்கு எந்தவிதமான உறவோ ரத்த பந்தமோ கிடையாத. ஆனாலும் உதவி செஞ்சாரு. எங்க அம்மா வேலை செய்யற பங்களாக்காரங்களுக்குச் சொந்தக்காரர் அவர். எங்க அம்மா கஷ்டப்பட்டு எங்களை வளர்க்கறதைக் கண்கூடா பார்க்கறவர். அதனால உங்ககிட்ட என்னை அறிமுகப்படுத்தி, உதவி செஞ்சாரு."
"வேதாசலம் நல்ல மனுஷன். அவரோட உதவி செய்யற மனப்பான்மையினால உனக்கு மட்டுமல்ல. பல பேருக்கு நல்லது நடக்குது. எப்படித் தெரியுமா? அவரும், அவரோட மனைவியும் சேர்ந்து முதியோர் இல்லம் நடத்தறாங்க. உதவி இல்லாத பல முதியோர் அங்கே வந்து நிம்மதியா இருக்காங்க. வேதாசலத்தோட பொண்ணும், பையனும் வெளிநாட்டில செட்டில் ஆகிட்டாங்க. எங்க பிள்ளைங்க வெளிநாட்டுக்குப் போயிட்டாங்க. நாங்க இங்கே தனியா கிடக்கறோம்னு புலம்பாம, ஒரு நல்ல வழியில ஈடுபட்டு மத்தவங்களுக்கு உதவி செய்யற அவரோட மனித நேயம் பாராட்டுக்குரியது. வணக்கத்துக்குரியது."
"ஆமா ஸார். எங்கம்மா கூட வேதாசலம் ஐயாவைப் பத்தி பெருமையா சொல்லிக்கிட்டிருப்பாங்க... எங்களோட கஷ்டகாலத்துலயும் நல்ல காலமா அவரை மாதிரியும், உங்களைப் போலவும் பெரிய மனசு உள்ளவங்களைச் சந்திக்க வச்சிருக்காரு கடவுள்."
"உன்னோட பேச்சு அனுபவ ரீதியா இருக்கு. அதனால தெளிவாவும் இருக்கு. உன்னோடதிறமைகள் இன்னும் நிறைய வெளிப்படணும். பிரபாகர்ன்னு ஒரு எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்றவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவரோட இன்னொரு நண்பருக்கு லீகல் அட்வைஸர் வேணும்ன்னு கேட்டாராம். பிரபாகர் என்கிட்ட சொன்னாரு. எனக்கு உன்னோட ஞாபகம்தான் வந்துச்சு. பிரபாகரோட ஃப்ரெண்ட் மிஸ்டர் சங்கர்கிட்ட உன்னை அனுப்பறேன். அவரோட அட்ரஸை வாங்கிக்க. பெரிய புள்ளி. பிரபலமான தொழிலதிபர்..."
"தொழிலதிபர்ன்னா... என்ன நிறுவனம் ஸார் அவரோடது?"
"சரண்யா ஹொஸைரி ப்ராடக்ட்ஸ். அதாவது பின்னலாடைத் தயாரிப்பு நிறுவனம் நடத்தறாரு. நைட்டீஸ், ஜட்டி, பனியன், ஸ்கர்ட்ஸ் இப்படி ஏகப்பட்ட ரகங்கள் தயாரிக்கிறாரு. சொந்தமா மிஷின்கள் வச்சு தயாரிச்சு வெளி நாடுகளுக்குக் கூட அனுப்பறாரு. உள் நாட்டிலயும் ப்ராண்ட் நேம் போட்டு எக்கச்சக்கமா தயாரிக்கிறாரு. அவரோட ஃபேக்டரி தொழிலாளர்கள் சம்பந்தமா சில பிரச்னைகள் உருவாயிருக்காம். இது சம்பந்தமா அவரோட நிறுவனத்துக்காக லீகல் அட்வைஸர் நிரந்தரமா தேவைப்படுதாம். அதுக்காகத்தான் உன்னை அவர்கிட்ட அனுப்பறேன். சங்கரைப் போய்ப் பாரு. நீ நல்ல பேர் எடுக்கணும். உன்னைச் சங்கருக்கு அறிமுகப்படுத்தி அனுப்பற எனக்கு நல்ல பேர் எடுத்துக் குடுக்கணும்."
"என் மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கிற உங்களோட பேரை நிச்சயமா நான் காப்பாத்துவேன் ஸார். மிஸ்டர் சங்கரோட அட்ரஸ் குடுங்க ஸார்."
"இதோ..." தன் ப்ரீஃப்கேஸில் இருந்து சங்கரின் விசிட்டிங் கார்டை எடுத்து தீபக்கிடம் கொடுத்தார் சுந்தரம்.
"தேங்க்யூ ஸார். நான் நாளைக்குக் காலையிலேயே அவருக்கு போன் பண்ணி அவரோட அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டு போய்ப் பார்த்துடறேன் ஸார்."
"ஆல் தி பெஸ்ட் தீபக்." சுந்தரம் வாழ்த்தி அனுப்பியதும் அங்கிருந்து கிளம்பினான் தீபக்.