நீ மட்டுமே என் உயிர்! - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6613
"நான் தனி ஆள்ன்னு யாருப்பா சொன்னா? நானே அப்படி நினைக்காதப்ப நீங்க ஏன் அப்படி நினைச்சு உங்களை வருத்திக்கறீங்க?..."
"நீ உன் மனைவியைப் பிரிஞ்சு வாழறதுக்கு என்ன காரணமோ எனக்குத் தெரியல. ஆனா... எங்க கூடவே உன்னையும், உன் குடும்பத்தையும் சேர்ந்து வாழும்படி நான் சொல்லியிருந்தா.... உனக்கு எந்தக் கஷ்டமும், எந்தப் பிரிவும் வந்திருக்காது இல்லையா?"
"இல்லைப்பா. நீங்க நினைக்கறது தப்பு. மனுஷனாப் பிறந்த ஒவ்வொருத்தருக்கும் இன்னது நடக்கும்னு இருந்தா அது நடந்தே தீரும். இங்கே இருந்தா நடந்திருக்காது... அங்கே இருந்ததுனாலதான் நடந்ததுங்கற வாதமே தேவை இல்லைப்பா. மறுபடியும் சொல்றேன்ப்பா. நான் தனி ஆள் இல்லை. எனக்காக என்னோட அப்பா நீங்க... இதோ என்னோட அம்மா, என் தங்கை பெற்ற மகள் இப்ப என்னோட மகளாய் என் சரண்யா... நீங்கதான் என் உலகம். என் குடும்பம். என் குடும்பத்துக்கு அடுத்தபடியா நான் நேசிக்கறது நம்ம ஃபேக்டரி. புதுத் தொழில்ல கவனம் செலுத்தி என்னோட கடந்த காலத்தை மறந்து நான் நிம்மதியா இருக்கணும்ன்னு ஆசைப்பட்டீங்க. உங்க ஆசைப்படியே நான் நிம்மதியா இருக்கேன்.... சரண்யாவை வளர்த்து ஆளாக்கிட்டோம். அவளுக்குக் கல்யாணத்தைப் பண்ணிவச்சு நம்ப கடமையை நிறைவேத்தணும். அப்பா அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு என் மேல பாச மழை பொழியற சரண்யாவோட அன்பில சரணாகதி அடைஞ்சுட்டேன்ப்பா. என் மனசுல எந்த ஏக்கமும் இல்லை. விதியின் விளைவால நடக்க வேண்டியது எல்லாமே நடந்தே தீரும்ப்பா. இதுக்கு உதாரணமா ஒண்ணு சொல்றேன்... நான் மதுரையில இருந்து நம்ப வீட்டுக்கு வந்து மறுபடியும் உங்க கூடச் சேர்ந்து வாழ ஆரம்பிச்ச புதுசுல என்னை மறுகல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அம்மா கெஞ்சினாங்க. எதுக்காக? என்னோட மகன்களைக் கூட்டிட்டு வந்து, அவங்களை வளர்க்கறதுக்காக. எனக்குப் பிள்ளை வளர்க்கற வயசாப்பா அப்படின்னு சொல்லி அம்மா என்னை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. ஆனா என்ன நடந்துச்சு? பிள்ளை வளர்க்கற வயசு இல்லைன்னு சொன்ன அம்மாவைத் தன் குழந்தையை வளர்க்க விட்டுட்டு நம்ம நிர்மலா உயிரை விட்டுட்டா. நினைச்சோமா இப்படியெல்லாம் நடக்கும்ன்னு? அதனாலதாம்பா சொல்றேன். என்னைப் பத்தி கவலைப்படாதீங்க. நீங்க உடம்புக்கு ஒண்ணும் வந்துடாம ஆரோக்கியமா இருக்கணும். உங்க உடல்நிலை பத்தின கவலை இல்லாம அம்மா நிம்மதியா இருக்கணும். நாம எல்லாரும் சேர்ந்து ஜோரான மாப்பிள்ளை ஒருத்தனைப் பார்த்து நம்ம சரண்யாவோட கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்தணும். இதைத் தவிர எனக்கு வேற சிந்தனைகளே இல்லைப்பா."
சங்கர் பேசிய ஆறுதல் வார்த்தைகளால் மனம் தெளிவு பெற்றார் முத்தையா. மகனின் அன்பான பேச்சு அவரது முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது.
"இவ்வளவு பாசம் வச்சிருக்கற உனக்காகவாவது என்னோட ஆரோக்கியத்தை நான் கவனிச்சுப்பேன் சங்கர்."
முத்தையா, கண்களில் கண்ணீர் மல்க, சங்கரிடம் பேசினார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வசந்தாவின் கண்களும் பனித்தன.
"டாக்டர் குடுக்கற மாத்திரைகளை விட உன்னோட வார்த்தைகள் அவரோட பி.பி.யைக் குறைச்சுடும்ப்பா சங்கர்..." சங்கரைப் பாராட்டினாள் வசந்தா. சங்கர் பேசிய பின், இறுக்கமான சூழ்நிலை மாறி இதமான ஒரு மனநிலை ஏற்பட்டது அனைவருக்கும்.
27
ஃபேக்டரியில் சங்கர் வாங்கிப் போட்ட மிஷின்கள், இரண்டு ஷிஃப்ட் ஓடும் அளவிற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தன. பத்து நாட்களுக்கு ஒரு முறை பிரபாகர் வந்து சங்கரைச் சந்திப்பதும், சங்கர் பிரபாகரைச் சந்திப்பதும் வழக்கமாக இருந்தது. அவர்களது சந்திப்புகள் அவர்களது நட்பின் நெருக்கத்தை மேலும் வளர்த்தன. அவர்களின் மனங்களை இணைத்தன.
பன்னாட்டுத் தொழிலதிபர்களின் தொடர்பு, தேசிய அளவில் சங்கருக்கு நல்ல பெயர் கிடைத்தது.- பல தொழில் அதிபர்கள் தங்கள் புதிய ஷோரூம் மற்றும் தொழில் நிறுவனங்களைத் துவக்கி வைப்பதற்குச் சங்கரை அழைத்தனர். அதைத் தங்கள் கௌரவமாகக் கருதினர்.
ஏற்கெனவே செல்வந்தர்களான அவர்களது குடும்பம் மேன்மேலும் பொருளாதார ரீதியாகப் பெரும் செல்வச் செழிப்பான குடும்பமாக ஆகியது. முத்தையாவும் சங்கர் மற்றும் சரண்யாவின் நலன் கருதிப் பழைய கவலைகளை மறந்து உடல் நலம் தேறினார். சங்கரின் உழைப்பையும், அதன்மூலம் உயர்ந்த நிலையையும் கண்டு சந்தோஷப்பட்டார்.
28
அழகிய பார்க் ஒன்றில் ஸ்ரீதரும், அவனது காதலி வாணியும் அருகருகே உட்கார்ந்து ஆனந்தமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். புல்வெளியின் மீது கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த வாணி, தன் கையால் புல்லைக் கிள்ளிக் கிள்ளிப் போட்டபடியே இருந்தாள்.
"என்ன வாணி?! வந்ததுல இருந்து பார்க்கறேன். எதுவுமே பேசமாட்டேங்கற? புல் என்ன தப்பு பண்ணுச்சு? அதைப் போய்க் கிள்ளிக்கிட்டிருக்க!"
"புல் ஒண்ணும் தப்பு பண்ணலை. தப்பு பண்ணினது நீங்க..."
"நானா? தப்பா? என்ன தப்பு? எக்குதப்பா நீதான் பேசறே..." கிண்டல் கலந்து பேசிய ஸ்ரீதரை முறைத்துப் பார்த்தாள்.
"ஒண்ணும் தெரியாத அப்பாவி போல மூஞ்சியை வச்சுக்கிட்டா சரியா போச்சா? டி.வி. டான்ஸ் ப்ரோக்ராம்ல ரீல் ஜோடி கூட ஆடினீங்களே?! எப்படி ஆடினீங்க? ரியல் ஜோடி மாதிரி கட்டிப்பிடிச்சு... ச்... ச... நீங்க அந்த ப்ரோக்ராம்ல முதல் முதல்ல ஆடப்போனப்ப என்கிட்ட என்ன சொன்னீங்க? சும்மா... ஊறுகா தொட்டுக்கற மாதிரிதான் தொட்டு ஆடுவேன் அப்பிடின்னீங்க. ஆனா என்ன பண்றீங்க? தயிர் சாதம் சாப்பிடறமாதிரில்ல ஆடறீங்க? ச்சி... கண்றாவி...’’
‘‘அடிப்பாவி... உதாரணம் சொல்றதுக்கு வேற எதுவும் உனக்குத் தோணலியா?’’
‘‘தோணுச்சு. அப்பிடியே உங்களைக் கடிச்சுக் குதறிட மாட்டோமான்னு தோணுச்சு. போயும் போயும் இப்படி ஒருத்தரைப் போய்க் காதலிக்கிறோமேன்னு தோணுச்சு. டி.வி.யில இப்படி ஒரு ப்ரோக்ராமை ஏன்தான் நடத்தறாங்களோன்னு தோணுச்சு...’’
‘‘வாணி... நான் சொல்றதைக் கேளு. தொட்டு ஆடறதெல்லாம் நான் விருப்பப்பட்டு ஆடறது கிடையாது. டான்ஸ் மாஸ்டர் என்ன சொல்றாங்களோ, எப்பிடி ஆடச்சொல்றாங்களோ அதை நான் கேட்டே ஆகணும். என்னோட இஷ்டத்துக்கு நான் ஆட முடியாது. ஆடவும் கூடாது. டான்ஸ் ஒரு கலை. அந்தக் கலை உணர்வோடதான் ஆடறேனே தவிர வேற எந்தத் தப்பான நோக்கமும் எனக்குக் கிடையாது. உன்னோட பொஸஸிவ் நேச்சர் எனக்குப் புரியுது. ஆனா அதுக்கு என்னால ஒண்ணும் பண்ண முடியாது. ஏன்னா டான்ஸை என் உயிருக்குயிரா நேசிக்கிறேன். நீயும், டான்சும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி.