நீ மட்டுமே என் உயிர்! - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6613
32
சங்கரின் அலுவலகம்! அந்தக் கட்டடத்தின் உள்ளும், புறமும் பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் அலங்கரித்திருந்த நேர்த்தியைக் கண்டு பிரமித்துப் போனான் தீபக். வெளிநாட்டு நாகரிகத்திற்கு ஈடாக இருந்த சங்கரின் அலுவலகத்தில் சங்கரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தான் தீபக்.
அங்கே வரவேற்பாளர் பணியில் அமர்த்தப்பட்டிருந்த இளம்பெண் ஷர்மிளா. அவனை உட்கார வைத்த அவளது கனிவையும், பணிவையும் வெகுவாக ரசித்தான் தீபக்.
சில நிமிடங்களில் கமகமக்கும் ஃபில்டர் காபியை மிக அழகிய பீங்கான் கப்பில் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள் ஷர்மிளா.
"ப்ளீஸ் ஹேவ் தி காபி ஸார். மை பாஸ் வில் பி கமிங் நௌ..."
"ஓ.கே. மேடம். தேங்க்ஸ்."
காபியை வாங்கிக் கொண்ட தீபக், அதை ரசித்துக் குடித்தான். அவன் குடித்து முடித்த அதே நேரம், சங்கர் அலுவலகத்திற்குள் நுழைந்து, நேராக அவனது அறைக்குச் சென்றான்.
தீபக்கின் அருகே வந்தாள் ஷர்மிளா.
"இப்ப வந்தாரே... அவர்தான் என்னோட பாஸ். நீங்க பார்க்க வந்திருக்கற மிஸ்டர் சங்கர். அஞ்சு நிமிஷம் கழிச்சு அந்த ரூமுக்குள்ள போங்க. பாஸ் ஒரு அஞ்சு நிமிஷம் சாமி கும்பிடுவாரு..."
"சரி மேடம். அஞ்சு நிமிஷம் கழிச்சுப் போறேன்..."
"ஓ.கே.தேங்க்யூ." தேனில் குளித்தெழுந்த குரலால் அவனுக்கு நன்றி கூறினாள் ஷர்மிளா.
ஐந்து நிமிடங்கள் கழித்துச் சங்கரின் அறைக்குள் சென்றான் தீபக்.
"ஸார்... என் பேர் தீபக்..."
"தெரியும். என்னோட செக்ரட்டரி சொன்னாங்க. பிரபாகரோட வக்கீல் மிஸ்டர் சுந்தரத்துகிட்ட ஜூனியரா இருக்கீங்களாமே! ஏன் நிக்கறீங்க? உட்காருங்களேன்..."
"தேங்க்யூ ஸார்..." கூறியபடியே உட்கார்ந்தான் தீபக்.
"பிரபாகர் ஸார் மூலமா உங்களைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டிருக்காராம் எங்க சீனியர் லாயர் சுந்தரம் ஸார். உங்களோட மேனேஜ்மென்ட் திறமை, உங்க தயாரிப்புகளோட உயர்ந்த தரம், இதைப்பத்தியெல்லாம் பிரபாகர் ஸார் நிறையச் சொல்லி இருக்காராம். உங்களை மீட் பண்ணதில எனக்கு ரொம்ப சந்தோஷம் ஸார்..."
"சந்தோஷம் உங்களுக்கு மட்டுமில்லை மிஸ்டர் தீபக்! எனக்கும்தான். ஏன் தெரியுமா? பிரபாகர் அறிமுகப்படுத்தி அனுப்பி வைக்கற நபர்ன்னா நிச்சயமா திறமையானவரா இருப்பார், அவரால என்னோட பிரச்னைகளெல்லாம் தீர்வாயிடுங்கற சந்தோஷம்! என்ன மிஸ்டர் தீபக்! நான் சொல்றது சரிதானே?..."
"சரி இல்லை ஸார்..."
"என்ன?!..."
"ஆமா ஸார். என்னை நீங்க மிஸ்டர் தீபக்ன்னு கூப்பிடறது... நீங்க... நாங்கன்னு பேசறது சரி இல்லைன்னு சொல்றேன் ஸார்..." என்று தீபக் கூறியதும் வாய்விட்டுச் சிரித்தான் சங்கர்.
தீபக்கும் சிரித்தான்.
"ஒரு பெரிய நிறுவனத்தோட மேனேஜிங் டைரக்டரான நீங்க இவ்வளவு ஃப்ரீயா பழகறதுனால என்னோட டென்ஷன் மாயமாப் போயிடுச்சு...."
"வெரிகுட்... தீபக்! எங்க ஃபேக்டரியில வேலை செய்யற தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஃபைல்ஸ் எல்லாம் நீங்க... ஸாரி... நீ... பார்க்கணும். என்னோட செக்ரட்டரி கம் ரிஸப்ஷனிஸ்ட் ஷர்மிளா கிட்ட எல்லா விபரமும் சொல்லி இருக்கேன். அவங்க உன்னை, அது சம்பந்தப்பட்ட செக்ஷனுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. ஷி வில் ஹெல்ப் யூ..."
"ஓ.கே. ஸார். நான் போய்ப் பார்க்கறேன்."
"சரி, தீபக்..."
தீபக் எழுந்து போக முயற்சிக்கும் பொழுது, அந்த அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு பூப் போன்ற ஒரு பெண், புயலென உள்ளே நுழைந்தாள்.
"அப்பா... என்னப்பா நீங்க?! என்னோட கார் சாவியையும் சேர்த்து எடுத்துக்கிட்டு வந்துட்டீங்க?!..." அழகான அந்தப் பெண் செல்லமாய்ச் சிணுங்கியபடி பேசினாள். அவள் மட்டுமா பேசினாள்?! அவளது கயல் விழிகளும் பேசின. குறும்பு மின்னும் அந்தக் கண்கள்! துடிக்கும் செம்பவழ உதடுகள்! செழுமையிலேயே பிறந்து செல்வச் சூழ்நிலையிலேயே வளர்ந்த அவள் வாதுமைப் பருப்பில் வடித்தெடுத்த சிற்பம் போல் இருந்தாள். வைத்த கண் எடுக்காமல் அவளது அழகை அள்ளிப் பருகினான் தீபக். அவனை அறியாமல் அவ்விதம் ரசித்த அவன், ஓரிரு நிமிடங்களில் தன்நிலை உணர்ந்தான்.
"அட என்ன சரணுமா நீ? இதோ பக்கத்துல இருக்கு நம்ம பங்களா... இவ்வளவு கிட்டக்க இருந்து ஸ்கூட்டர்ல வர்றதுக்கு இத்தனை சிணுங்கலா? ஸாரிம்மா. தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன். இந்த உன்னோட கார் சாவி... பார்த்து சரணும்மா. ரொம்ப கவனம்! நீ இன்னும் சரியா கார் ஓட்டப் பழகலை. நீ ஓட்டறதைப் பார்க்க எனக்குப் பயமா இருக்கு."
"நான் என்ன... சின்னப் பாப்பாவா? இப்படி பயப்படறீங்க! குடுங்கப்பா சாவியை..." சாவியை வாங்கிக் கொண்டு மான் போலத் துள்ளி ஓடினாள் சரண்யா. அவள் போகும் போது கூட தீபக்கைப் பார்க்கவில்லை.
'சங்கர் ஸாரின் மகள்! பேர் சரண்யா! தீபக்கின் மூளை இந்த விஷயங்களைப் பதிவு செய்து கொண்டது. சரண்யா என்ற பெயர் அவனது இதயத்தில் அதிர்வுகளைத் தோற்றுவித்தது.
'முக்கியமான வேலையா என்னை இங்கே அனுப்பி இருக்காரு சுந்தரம் ஸார். இவ்வளவு பெரிய நிறுவனத்துல லீகல் அட்வைஸரா என்னை அப்பாயிண்ட் பண்ண சான்ஸ் இருக்கும். என்னோட முன்னேற்றத்துக்கு முதல்படியா இந்த சரண்யா ஹொஸைரி நிறுவனத்துல கால் வச்சிருக்கேன். ஆனா என்னோட கண்கள்? முதலாளியோட மகளைக் கண் கொட்டாமல் ரசிக்குதே... இது தப்பு. என் மனசை அலைபாய விடக்கூடாது.' தனக்குத் தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டான் தீபக். சங்கரின் அறையை விட்டு வெளியேறினான். ஷர்மிளாவுடன் லேபர் சம்பந்தமான பிரிவிற்குச் சென்று, யாரைப் பார்க்க வேண்டுமோ அவரைப் பார்த்தான். அவரிடம் ஃபைலைப் பெற்றுக் கொண்டு கிளம்பினான்.
33
சங்கரிடம் தன் சாவியை வாங்கிக் கொண்ட சரண்யா, அவளுக்காகச் சங்கர் வாங்கிக் கொடுத்திருந்த புதிய ஹூண்டாய் அக்ஸெண்ட் காரில் ஏறினாள். காரை ஸ்டார்ட் செய்தாள். ஆக்ஸிலேட்டரை மிக அதிகமாக அழுத்தினாள். எனவே கார் வேகம் எடுத்தது. வேகத்தைக் கண்ட சரண்யா பயந்து போனாள். டென்ஷனாகப் போன சரண்யா, ப்ரேக்கை மிதிக்க வேண்டும் என்று கூடத் தோன்றாமல் திணறினாள். ஸ்டீயரிங்கைச் சீராகத் திருப்பாமல் விட்டபடியால் கார் நேர்கோட்டில் செல்லாமல் தாறுமாறாக ஓடியது. ஏ.ஸி. குளிரிலும் பயத்தில் தெப்பமாய் நனைந்து போனாள் சரண்யா.
சங்கரின் அலுவலகத்திலிருந்து வெளியேறித் தன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த தீபக், ஏதோ ஒரு கார் தாறுமாறாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தன் ஸ்கூட்டரின் வேகத்தைக் கூட்டி, சற்று முன் சென்றான். காருக்குள் சரண்யா இருப்பதைப் பார்த்தான். திடுக்கிட்டான்.