அந்த நாள் ஞாபகம் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
நான் ரஷ்ய எழுத்தாளர்களைப் பற்றிக் கேட்டேன். அப்போதுதான் அவரால் இயல்பான நிலைக்கே வர முடிந்தது. எழுத்தாளர்களைப் பற்றி அவர் மிகவும் அமைதியான மனதுடன்- அதே நேரத்தில் உற்சாகம் மேலோங்கப் பேசினார். அவர் அப்போது பேசிய சில விஷயங்கள் இப் போதுகூட என் மனதில் அப்படியே பதிந்திருக்கின்றன.
கவிஞர் நெக்ரஸோவ், தாஸ்தாயெவ்ஸ்கியின் இளமைக் காலத்திலிருந்தே அவரின் நெருங்கிய நண்பராக இருந்தார். நெக்ரஸோவின் படைப்புகளை தாஸ்தாயெவ்ஸ்கி மனம் திறந்து பாராட்டிச் சொன் னார். "மைக்கோவ் ஒரு அருமையான கவிஞர் மட்டுமல்ல; நல்ல திறமைசாலி; நல்ல மனிதர்' என்றார் தாஸ்தாயெவ்ஸ்கி. துர்கனேவ் ஒரு மிகப்பெரும் எழுத்தாளர் என்றார் அவர். துர்கனேவ் வெளிநாட்டில் வசிப்பதால், ரஷ்யாவிற்கும் ரஷ்ய மக்களுக்கும் அவருடன் நேரடித் தொடர்பு இல்லாதது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதை வருத்தத்துடன் சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.
சிறிது இடைவேளைக்குப் பிறகு நாங்கள் மீண்டும் எழுத்து வேலையில் ஈடுபடத் தொடங்கினோம். மீண்டும் அவர் மனக் குழப்பத்தில் ஆழ்ந்து போனார். அதற்கு மேல் அவரால் கதையைச் சொல்ல முடியவில்லை. கொஞ்சமும் அறிமுகமில்லாத ஒருவருடன் இணைந்து புத்தகம் படைப்பது என்பது, அவருக்கு மிகவும் கஷ்டமான ஒரு காரியமாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
நான்கு மணி ஆனவுடன், நான் இருக்கையை விட்டு எழுந்தேன். இதுவரை எழுதியதை மறுநாள் பன்னிரண்டு மணிக்கு ஒழுங்குபடுத்தி விரித்து எழுதிக் கொண்டு வருவதாகச் சொன்னேன். வீட்டை விட்டு கிளம்புகிற நேரத்தில் அவர் தான் பயன்படுத்தும் ஒரு கட்டுத் தாள்களை என்னிடம் கொண்டு வந்து தந்தார்.
5
இப்படித்தான் நாங்கள் இருவரும் இணைந்து புத்தகம் எழுதும் வேலையில் ஈடுபட்டோம். தினமும் பகல் பன்னிரண்டு மணிக்கு நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டிற்கு வருவேன். நான்கு மணி வரை நாங்கள் தொடர்ந்து வேலை செய்வோம். மத்தியில் உணவு அருந்துவதற்காக கொஞ்சம் இடைவேளை விடுவோம். இடையில் ஒன்றிரண்டு முறை இளைப்பாறிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இடைவேளை விட்டுக் கொள்வதும் உண்டு. இந்த புதிய பாணியில் நாவல் எழுதும் பழக்கத்திற்கு தாஸ்தாயெவ்ஸ்கி தன்னைச் சரிப்படுத்திக் கொண்டதை எண்ணிய போது, உண்மையிலேயே நான் சந்தோஷப்பட்டேன். ஒவ் வொரு நாள் அதிகம் ஆக ஆக, அவரிடம் தளர்வு நிலை மாறிஅவர் நல்ல நிலைக்கு வந்து கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது. இந்த முறையுடன் இணைந்து அவர் தன் வேலையைச் செய்ய பழகிக் கொண்டிருந்தார். பக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவருக்குஉற்சாகமும் மனதில் நம்பிக்கையும் உண்டாகத் தொடங்கின. குறிப்பிட்ட கால அளவிற்குள் இந்தப் புத்தகத்தை நாம் முடித்துவிட முடியும் அல்ல வா என்று பல முறை அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
இடையில் நேரம் கிடைக்கிறபோது தன்னுடைய வாழ்க்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற பல உணர்ச்சிகரமான சம்பவங்களை அவர் என்னிடம் மனம் திறந்து கூறவும் செய்தார். அவரின் அந்த சோகக் கதைகளைக் கேட்டு என் இதயத்தில் அவர் மேல் ஒருவித இரக்கம் உண்டானது. அவருக்கு உண்டான அந்த துக்ககரமான நிகழ்ச்சிகளின் நினைவுகள் அவரை எந்த நேரமும் விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.
அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூட வெளியே வரவில்லையே என்று முதலில் நான் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன். அவ ரின் குடும்பப் பின்னணி எப்படி, அவரின் வீட்டைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் அனைவரும் வேறு எங்காவது வசித்துக் கொண்டிருக்கி றார்களோ என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைத்தேன். அதைப்பற்றி எனக்கு- சொல்லப்போனால்- எதுவுமே ஆரம்ப நாட்களில் தெரியாமல் இருந்தது. நான் முதல் நாள் வந்தபோது வீட்டில் வைத்துப் பார்த்தேனே ஒரு இளைஞனை- அவனைத் தவிர அந்த வீட்டில் வேறு யாரையுமே பார்க்கவில்லை. ஒருநாள் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை விட்டு வெளியேறி நான் தெருவில் கால் வைத்து நடக்க ஆரம்பித்தபோது, ஒரு இளைஞன் என் முன் வந்து என்னைத் தடுத்து நிறுத்தினான். அவன் முதல் நாள் நான் வந்தபோது பார்த்த இளைஞன்தான். மிகவும் அருகில் அவனைப் பார்த்தபோது, பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு அவன் இருந்தான். வெளிறிப்போய் மஞ்சள் நிறத்தில் இருந்தான். கண்களில் மஞ்சள் புள்ளிகள். பற்கள் முழுக்க கறை.
“என்னைத் தெரிகிறதா?” அந்த இளைஞன் என்னைப் பார்த்துக் கேட்டான். தொடர்ந்து அவன் சொன்னான்:
“நான் உங்களை அப்பாவோட வீட்ல பார்த்திருக்கேன். நீங்க வேலை செய்யறப்போ, அங்கே நான் வர விரும்பல. ஆனால் ஸ்டெனோக் ராஃபியைப் பற்றி நான் தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். கொஞ்ச நாட்கள் கழிச்சு, நான் அதைப் படிக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு நீங்க அதைச் சொல்லித் தரமுடியுமா?” அவன் என் கையிலிருந்த ப்ரிஃப்கேஸை வெடுக்கென்று பிடுங்கி, அடுத்த நிமிடம் அதைத் திறந்து நான் எழுதிய தாள்களை எடுத்துப் பார்த்தான். அவனின் அந்தச் செயலைப் பார்த்து நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுவிட்டேன். அவனின் இந்த வினோத நடவடிக்கைக்குப் பதிலாக நான் எப்படி நடந்து கொள்வது என்றே எனக்குப் புரிபடவில்லை.
அவன் மீண்டும் தாள்களை இருந்தபடியே வைத்துவிட்டு, “ம்... சும்மா விளையாட்டுக்காகப் பண்ணினேன்” என்று சொன்னான். மிகப் பெரிய மனிதரான தாஸ்தாயெவ்ஸ்கிக்கு இந்த மாதிரியான சிறு பிள்ளைத்தனமான குணத்தைக் கொண்ட ஒரு பையன் எப்படிப் பிறந்தான் என்று ஆச்சரியத்துடன் நான் நின்றேன்.
ஒவ்வொரு நாளும் என்னிடம் தாஸ்தாயெவ்ஸ்கி பழகும் முறையிலும் நடந்து கொள்ளும் விதங்களிலும் ஒருவிதமான நெருக்கமும் தெளிவான அணுகுமுறையும் தெரிந்தது. "சின்ன மாடப்புறா' என்றோ, "சின்ன தேவதை' என்றோ, "அன்புள்ள அன்னா' என்றோ என்னை அழைத்து, தான் என்மீது கொண்டிருக்கும் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தினார். ஒரு குழந்தைமீது ஒரு மனிதன் கொண்டிருக்கும் பாசமும் வாஞ்சையுமே அது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என்ன இருந்தாலும், ஒரு பள்ளி மாணவியைவிட கொஞ்சம் வளர்ந்திருக்கும் ஒருத்திதானே நான்!
நான் இருப்பதால், அவரின் மனதில் இருந்த பாரம் சற்றாவது குறைந்து போயிருந்ததில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியே. நாவல் எழுதும் வேலை படுவேகமாகப் போய்க் கொண்டிருந்ததாலும், வெகு சீக்கிரமே இதை முடித்துவிட முடியும் என்று நான் உறுதியான குரலில் கூறி இருந்ததாலும் அவர் மிகவும் உற்சாகத்துடன் இருந்தார்.