அந்த நாள் ஞாபகம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
கடன் பத்திரங்களில் கையொப்பமிட்டு கடன்கள் வாங்கப்பட்டிருந்தன. கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த கடன் தொகையால் தாஸ்தாயெவ்ஸ்கி மூச்சு விட முடியாமல் தடுமாறினார். அந்தக் காலத்தில் இருந்த முறையைப் பின்பற்றி கடனை ஒழுங்காக திருப்பித் தராததால், சிறைக்குள் தாஸ்தாயெவ்ஸ்கி அனுப்பப்படுவது உறுதி என்ற சூழ்நிலை உண்டானது.
உடனடியாக அடைக்க வேண்டிய கடன் தொகை மட்டும் மூவாயிரம் ரூபிள்கள் இருக்கும். தன்னால் முடிந்த வழிகளில் எல்லாம் அவர் பணத்தை திரட்ட முயற்சித்துப் பார்த்தார். ஆனால் எந்த வழியுமே ஒழுங்காகக் கைகூடி வரவில்லை. அப்படி நிலைகுலைந்து அவர் உட் கார்ந்திருந்தபோது, அவரின் உண்மையான சூழ்நிலையை பதிப்பகம் நடத்திக் கொண்டிருந்த ஸ்டெல்லோவ்ஸ்கி அறிய நேரிட்டது. தாஸ்தாயெவ்ஸ்கியை இந்தச் சூழ்நிலையில் எப்படியும் ஏமாற்றி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார் அவர். தாஸ்தாயெவ்ஸ்கியின் நூல்களை மூன்று தொகுதிகளாகத் தான் பிரசுரித்து வெளியிடுவதற்கு சன்மானத் தொகையாக மூவாயிரம் ரூபிள்கள் தருவதாகச் சொன் னார் ஸ்டெல்லோவ்ஸ்கி. ஒரு புதிய நாவலை நவம்பர் 1-ஆம் தேதிக்கு முன்னால் தாஸ்தாயெவ்ஸ்கி எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனை வேறு. அதற்கு சன்மானம் எதுவும் கிடையாது.ஆனால், வாக்குக் கொடுத்தபடி நடக்காவிட்டால் தாஸ்தாயெவ்ஸ்கி அதுவரை எழுதியிருக்கிற நூல்களும் இனி எழுத இருக்கின்ற நூல்களும் ஸ்டெல்லோவ்ஸ்கிக்குச் சொந்தமாகிவிடும். அதுதான் தாங்க முடியாத ஒரு கொடுமை. தாஸ்தாயெவ்ஸ்கியின் நிலைமை அந்த அளவிற்குப் படுமோசமாக இருந்தது. யார் என்ன நிபந்தனை சொன்னாலும்அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் அப்போதைக்கு அவர்இருந்தார். இல்லாவிட்டால் சிறைக்குப் போவதைத் தவிரஅவருக்கு வேறு வழியே இல்லை. பணம் அவர் கையில் வந்ததுதான் தாமதம், கடன் கொடுத்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அதைத் தட்டிப் பறித்துக் கொண்டு போனார்கள். எழுதிக் கொடுத்த பல கடன் பத்திரங்களும் பொய்யானவையாக இருந்தன. எல்லாவற்றுக்கும் பின்னால் ஸ்டெல்லோவ்ஸ்கி நின்றிருந்தார். இசைக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் ஏமாற்றி, நயவஞ்சகம் செய்து ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருந்த ஒரு பயங்கரமான மனிதராக இருந்தார் ஸ்டெல்லோவ்ஸ்கி. இக்கட்டான நேரங்களில் ஆட்களை எப்படி வளைத்து வலையில் மாட்டுவது என்பதை நன்கு தெரிந்து செயல்பட்ட மனிதராக அவர் இருந்தார். தாஸ்தாயெவ்ஸ்கியின் நூல்கள் அனைத்தும் மக்களின் ஒட்டுமொத்த வரவேற்பைப் பெற்றவையாக இருந்த அந்த நேரத்தில், அவர் கொடுத்த மூவாயிரம் ரூபிள்கள் என்பது மிக மிக சாதாரண தொகை என்பதே உண்மை. 1866-ஆம் வருடம் நவம்பர் முதல் தேதிக்கு முன்னால் ஒரு சிறிய நாவலை முழுமையாக எழுதித் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததுதான், அந்த ஒப்பந்தத்திலேயே கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் போடப்பட்டிருந்த ஒரு விஷயம். அதை மட்டும் தாஸ்தாயெவ்ஸ்கி செயல்படுத்தவில்லையென்றால், அவருக்குப் பலவிதத்திலும் பிரச்சினையே. அவரை இந்நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் மோசடிக்காரரான அந்த பதிப்பாளரின் ஆசையே.
1866-ல் தாஸ்தாயெவ்ஸ்கி, "குற்றமும் தண்டனையும்' என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தை எழுதினார். அதை எழுதுவதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. அந்த அளவுக்கு சிரமப்பட்டு உழைத்த பிறகு, மீண்டும் ஒரு நாவலை எழுதி முடிப்பது என்றால் சாதாரண விஷயமா என்ன?
மழைக் காலம் வந்தது. தாஸ்தாயெவ்ஸ்கி மாஸ்கோவில் இருந்து திரும்பி வந்தார். ஸ்டெல்லோவ்ஸ்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வர இன்னும் ஆறோ எட்டோ வாரங்கள்தான் மீதியிருந்தன. அதற்குள் திட்டமிட்டபடி புத்தகத்தை எழுதி முடிப்பது என்பது நிச்சயமாக முடியாத காரியமே என்ற முடிவுக்கு வந்துவிட்டார் தாஸ்தாயெவ்ஸ்கி. அவரின் இந்த தர்மசங்கடமான நிலைமையை அறிந்த அவரின் சில நண்பர்கள்- மைக்கோவ், மில்யுக்கோவ், டால்கோமோஸ் ட்டியேவ் ஆகியோர் சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை தாஸ்தாயெவ்ஸ்கியிடம் சொன்னார்கள். அதன்படி எல்லாரும் ஒன்று சேர்ந்து தனித் தனியாக ஒவ்வொருவரும் ஒரு அத்தியாயத்தை எழுதுவது- அதன்படி குறிப்பிட்ட கால அளவிற்குள் முழுப் புத்தகத்தையும் முடித்து ஸ்டெல்லோவ்ஸ்கியின் கையில் ஒப்படைத்து விடுவது- இதுதான் அவர்களின் திட்டம். இதில் தாஸ்தாயெவ்ஸ்கியின் வேலை என்னவென்றால், தன் நண்பர்கள் எழுதிய ஒவ்வொரு அத்தியாயத்தையும் பார்த்து, தேவையில்லாத விஷயங்களை நீக்கி புத்தகத்தைத் தயார் பண்ணுவதுதான். நண்பர்கள் சொன்ன அந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் அவர். பிறர் எழுதும் ஒரு புத்தகத்தின் ஆசிரியர் என்று தன் பெயரைப் போட்டுக் கொள்வதைவிட, பேசாமல் ஸ்டெல்லோவ்ஸ்கியின் கடுமையான ஒப்பந்தத்திற்குக் கீழ்ப்படிந்து விடுவதே மேல் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். அப்போதுதான் அவரின் நண்பர்கள் ஒரு ஸ்டெனோக்ராஃபரை துணைக்கு வைத்து இந்த வேலையை எளிதில் முடிக்கலாமே என்ற எண்ணத்தை அவர்மனதில் ஊன்றியிருக்கிறார்கள். மில்யுக்கோவிற்கு நன்கு தெரிந்த ஸ்டெனோக்ராஃபி ஆசிரியர் திரு. ஆல்கின்.
ஆல்கின் தாஸ்தாயெவ்ஸ்கியைப் போய் பார்த்திருக்கிறார். ஸ்டெ னோக்ராஃபரை உடன் வைத்துக் கொண்டு புத்தகத்தை எழுதி முடிக்க முடியுமா என்ற தன் சந்தேகத்தை மிகவும் தயக்கத்துடன் ஆல்கினிடம் அவர் கேட்டிருக்கிறார். சொல்லப்போனால் இந்த விஷயத்தில் அவ ருக்கு சரியான நம்பிக்கையே வரவில்லை. எனினும், காலம் கடந்து கொண்டே இருந்ததால், உண்மை நிலைமையைப் புரிந்து கொண்டு இந்த ஒரு ஏற்பாட்டிற்கு சம்மதிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.
உலக அனுபவங்கள் எனக்கும் அந்த நாட்களில் ஓரளவுக்கு கிடைத் திருந்தன என்றாலும், ஸ்டெல்லோவ்ஸ்கி நடந்து கொண்ட கடுமையான முறை எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
தேநீர் குடித்து முடித்ததும், தாஸ்தாயெவ்ஸ்கி நாவலைக் கூற ஆரம்பித்தார். தொடர்ந்து கதையைச் சொல்வதில் அவர் மனதில் ஏதோ தடுமாற்றம் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. என்னவோ சிந்தனையில் ஆழ்ந்து போன அவர் அடிக்கொரு தரம் கதை கூறுவதை நிறுத்திக் கொண்டிருந்தார். அவ்வப்போது எழுதியதை மீண்டும் படித்துக் காட்டும்படி கேட்டார். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். தான் மிகவும் களைப்படைந்து போய்விட்டதாகவும், சிறிது ஓய்வு எடுக்க தான் விரும்புவதாகவும் சொன்னார்.
முதல் நாள் பகல் நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததைப்போல, நாங்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசத் தொடங்கினோம்.அவர் இயல்பாக இல்லை என்பது தெரிந்தது. ஒரு விஷயத்தை விட்டு இன்னொரு விஷயத்துக்கு தாவிக் கொண்டே இருந்தார். என் பெயர் என்ன என்று மீண்டும் என்னைப் பார்த்து கேட்டார். பிறகு அவரே அதைமறந்தும் போனார். நான் புகை பிடிப்பதில்லை என்று ஏற்கெனவே இரண்டு முறை கூறிய பிறகும், என்னைப் பார்த்து அவர் சிகரெட்டை எடுத்துக் கொள்ளும்படி நீட்டினார்.