
சுராவின் முன்னுரை
நான் மொழிபெயர்த்த முற்றிலும் மாறுபட்ட ஒரு படைப்பு ‘அந்த நாள் ஞாபகம்’. இது கதை அல்ல; வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. உலகப் புகழ் பெற்ற இலக்கியவாதியான தாஸ்தாயெவ்ஸ்கியிடம் (Dostoevsky) ஸ்டெனோ க்ராஃபராக வேலைக்குச் சேர்ந்த அன்னா (Anna) எழுதிய நூல் இது.
இளம் பெண்ணான அன்னாமீது நடுத்தர வயதைத் தாண்டிய- உடலில் பல நோய்களையும் கொண்ட – பலவகைப்பட்ட பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் தாஸ்தாயெவ்ஸ்கி கொண்ட காதலை மையக் கருவாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூலை நான் மிகுந்த ஈடுபாட்டுடன் மொழி பெயர்த்திருக்கிறேன்.
அன்னாவைப் போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட – இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண் நமக்கு காதலியாகக் கிடைக்கமாட்டாளா என்று தாஸ்தாயெவ்ஸ்கி ஏங்கியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
தாஸ்தாயெவ்ஸ்கிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அன்னாமீது இந்த நூலைப் படிக்கும் எல்லாருக்கும் ஒரு நெருங்கிய ஈடுபாடு உண்டாகும் என்பது மட்டும் நிச்சயம். இந்நூலை மொழி பெயர்த்ததற்குக் காரணமே அதுதான்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook