அந்த நாள் ஞாபகம் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
“சரி... நாம இதைக் கொஞ்சம் சோதனை பண்ணித்தான் பார்ப்போமே! என்னுடன் இணைந்து இந்தக் காரியத்தில் ஈடுபடுறது உங்களுக்குக் கஷ்டமா தெரிஞ்சதுன்னா, அந்த விஷயத்தை உடனடியா என்கிட்ட நீங்க சொல்லத் தயங்கக் கூடாது. நிச்சயமா நான் அதற்காக வருத்தப்பட மாட்டேன்...”
அவர் இந்த வெள்ளோட்டத்திற்குத் தயாரானார். "ரஷ்யன் ஹெரால்ட்' என்ற நாளிதழில் பிரசுரமாகியிருந்த ஒரு கட்டுரையை தாஸ்தாயெவ்ஸ்கி வாசித்தார். நான் அதை சுருக்கெழுத்தில் எழுதினேன். அவர் மிகவும் வேகமாக அந்த நாளிதழைப் படித்தார். கொஞ்சம் மெதுவாகப் படித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் தாழ்மையான குரலில் சொன்னேன் நான்.
பிறகு நான் அதை மிகவும் வேகமாக எழுதினேன். தாஸ்தாயெவ்ஸ்கியோ படுவேகமாக வாசித்தார். நான் மிகவும் மெதுவாக எழுதுகிறேன் என்று என்மீது குறை சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.
நான் அவரிடம் சொன்னேன்: “நான் இப்போ சுருக்கெழுத்துல நீங்க சொல்றதை எழுதுறேன். இதை வீட்டுக்குக் கொண்டு போய் ராத்திரி உட்கார்ந்து விரிவாக எழுதி நாளைக்குக் கொண்டு வர்றேன். அப்போ நீங்க இந்தக் குறையைச் சொல்ல மாட்டீங்க!”
நான் அவர் சொல்லச் சொல்ல எழுதியதில், ஒரு முக்கிய விஷயத்தை எழுதாமல் விட்டுவிட்டேன் என்பதை அவர் கண்டுபிடித்தார். பிறகு... நான் எழுதியதில் ஒரு எழுத்து தெளிவாக இல்லாமல் மிகவும் சிறியதாக இருப்பதாகச் சொன்னார். அவர் ஏதோ மனக்குழப்பத்தில் இருப்பதாக எனக்குப் பட்டது. அவரின் மன ஓட்டங்கள் சீரான நிலையில் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் பெயர் என்ன என்று மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டுத் தெரிந்துகொண்டே இருந்தார் அவர். அறைக்குள் இப்படியும் அப்படியுமாய் நடந்துகொண்டே இருந் தார். நான் அங்கு இருப்பதையே அவர் மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். அந்த மிகப் பெரிய இலக்கியவாதியின் சிந்தனை ஓட்டத்திற்கு நான் எங்கே தடைக்கல்லாக இருந்துவிடப் போகிறேனோ என்ற எண்ணத்துடன் நான் அங்கேயே அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.
மேலும் ஏதாவது சொல்லி எழுதும் அளவிற்கு தன் இப்போதைய மனநிலை இல்லை என்று சொன்ன தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் மீண்டும் இரவு எட்டு மணிக்கு வரமுடியுமா என்று கேட்டார். புதினத்தை அப்போது ஆரம்பிக்கலாம் என்றார். அது என்னால் முடியாத விஷயமாக எனக்குப் பட்டது. வீட்டுக்குத் திரும்பப் போய்விட்டு, மீண்டும் இரவில் வருவதென்றால்...? இருந்தாலும் நாவல் எழுதும் விஷயமாக இருக்கிறதே என்று அவர் சொன்னதற்கு வருகிறேன் என்று தலையை ஆட்டினேன்.
நான் புறப்படும்போது பின்னால் நின்றிருந்த தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “ஒரு பெண்ணை சுருக்கெழுத்து எழுதுறதுக்காகஅனுப்பி வைக்கிறேன்னு ஆல்கின் சொன்னப்போ, உண்மையிலேயே நான் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். அதற்கு என்ன காரணம் தெரியுமா?”
“தெரியாது. என்ன காரணம்?”
“ஆம்பளைன்னா என்கிட்ட வேலை பார்க்குறது ரொம்ப கஷ்டம்!”
என்னால் எளிதில் வேலை பார்க்க முடியுமா? எனக்கே தெரியவில்லை. இருந்தாலும், அந்த நேரத்திற்கு சிரித்து வைத்தேன்.
3
மனம் இடிந்த நிலையில்தான் நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை விட்டு வெளியேறினேன். எனக்கு அவரைப் பிடிக்காமல் போக வாய்ப்பு இருப்பது மாதிரி என் மனதில் பட்டது. அவரின் நடவடிக்கைகள் எனக்கு அவ்வளவாகத் திருப்தியைத் தரவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து செய்த வேலை சிறப்பான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும் என்ற என் கற்பனை இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோனதுபோல் உணர்ந்தேன். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி மிகவும் சந்தோஷத்துடன் இருந்த என் தாயின் மனம் இந்த விஷயத்தைத் தெரிந்தால் மிகவும் கவலையில் ஆழ்ந்துவிடுமே என்ற ஒரே வருத்தம்தான் அப்போது எனக்கு இருந்தது.
நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது மதிய நேரம் தாண்டியிருந்தது. அங்கிருந்து என் வீடு மிகவும் அதிகமான தூரத்தில் இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசிய மில்லாமல் மிகவும் அருகிலேயே வசித்துக் கொண்டிருக்கும் என் உறவினர்களைப் பற்றி அப்போது மனதில் நினைத்துப் பார்த்தேன். அவர்கள் வீட்டுக்குப்போய் உணவு அருந்திவிட்டு, மாலையில் திரும்ப வும் தாஸ்தாயெவ்ஸ்கியைப் பார்க்க நான் தீர்மானித்தேன்.
நான் சந்தித்த புதிய மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்ட என்னுடைய உறவினர்கள் நான் கூறியதை மிகவும் ஆர்வத்துடன் கேட்டனர். தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி அவர்கள் பல கேள்விகள் கேட்டனர். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரவு எட்டு மணி ஆனபோது நான் மீண்டும் தாஸ்தாயெவ்ஸ்கியின் வாடகை வீட்டைத் தேடி வந்தேன். ஃபெதோஸ்யா என்ற பெயரைக் கொண்ட அந்த வயதான வேலைக்காரிதான் அப்போது வந்து கதவைத் திறந்தாள். காலையில் காத்திருப்பதைப்போல, இப்போதும் சாப்பாட்டு அறையில் நான் தாஸ்தாயெவ்ஸ்கிக்காகக் காத்திருந்தேன். நான் வந்திருக்கும் செய்தியைக் கூறுவதற்காக வேலைக்காரி உள்ளே போனாள். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்தக் கிழவி என்னைப் படிக்கும் அறைக்குள் போகச் சொன்னாள். நான் தாஸ்தாயெவ்ஸ்கியைத் தாண்டிப்போய் ஒரு சிறிய மேஜைக்கு அருகில் போய் அமர்ந்தேன். அப் படி நான் அமர்ந்தது தாஸ்தாயெவ்ஸ்கிக்கு வசதியாக இல்லை போல் பட்டிருக்க வேண்டும். அங்கிருந்த பெரிய மேஜைக்கு அருகில் போய் உட்காரும்படி என்னைச் சொன்னார். அங்கிருந்து எழுதுவதுதான்எனக்கு வசதியாக இருக்கும் என்றார் அவர். அவர் சொன்னதை எந்த வித பதிலும் இல்லாமல் நான் கேட்டுக் கொண்டேன். "குற்றமும் தண்டனையும்' போன்ற புகழ் பெற்ற நூல்களை அந்த மேஜையில் வைத்துதான் தாஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார்.
தாஸ்தாயெவ்ஸ்கி சிறிய மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்க,அவர் எழுதும் மேஜைக்கு அருகில் நான் அமர்ந்தேன். என் பெயரை அப்போது அவர் மீண்டும் கேட்டார். என் குடும்பப் பெயரை நான் சொல்ல, சமீபத்தில் மறைந்துபோன இளம் எழுத்தாளரான ஸ்னத் கின், அவரின் ஞாபகத்தில் வந்தார். என்னுடைய சொந்தக்காரரா அவர் என்று தாஸ்தாயெவ்ஸ்கி கேட்டார். பெயர்களில் இவ்வாறு நெருங்கிய ஒற்றுமை இருப்பது கொஞ்சமும் எதிர்பார்க்காமலே இருப்பதுதான் என்று சொன்னேன் நான். தொடர்ந்து என் குடும்பத்தைப் பற்றி அவர் விசாரித்தார். நான் எங்கு பள்ளிப் படிப்பை படித்தேன் என்பதையும், சுருக்கெழுத்து பயில்வதற்கான ஆர்வம் எப்படி உண்டானது என்பதையும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.