அந்த நாள் ஞாபகம் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
நாங்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நாவல் எழுதும் வேலையை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இரவு நீண்டு கொண்டே இருந்தது. அதை உணர்ந்தபோது மனதில் பயம் உண்டானது. வீட்டிற்கு நான் சீக்கிரம் போயாக வேண்டும். என் தாய் நான் இன்னும் வீட்டுக்கு வராமல் இருப்பது குறித்து இப்போதே கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நேராக வீட்டிற்கு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இங்கு நான் எதற்காக வந்திருக்கிறேன் என்பதை அவரிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், அவருக்கே அது ஞாபகத்தில் வந்ததைப்போல அவரே திடீரென்று எழுந்து, அறைக்குள்ளேயே சிகரெட்டைப் புகைத்தவாறு, இப்படியும் அப்படியுமாய் நடக்கத் தொடங்கினார். அவர் நாவலைச் சொல்லத் தொடங்குகிறார் என்பதைப் புரிந்துகொண்டு நான் அதைச் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கத் தயாரானேன். கொஞ்ச நேரம் சொல்லிய பிறகு, நான் எழுதியதைப் படிக்கும்படி அவர் சொன்னார். சில வார்த்தைகள்தான் நான் வாசித்திருப்பேன். அதற்குள் அவர் என்னை நிறுத்தச் சொன்னார்:
“என்ன? நான் ரூளற்றின்பர்க் என்றா சொன்னேன்?”
“ஆமா... நீங்க அப்படித்தான் சொன்னீங்க!”
“நிச்சயமா இருக்க முடியாது!”
“மன்னிக்கணும்... அப்படிப்பட்ட பேர்ல ஒரு நகரம் உங்களோட நாவல்ல வருதா?”
“ஒரு சூதாட்ட மையத்தைப் பற்றியதுதான் கதை. அது இருக்குற இடத்தோட பேரு ரூளற்றின்பர்க்!”
“அதுதான் சொல்றேன்... நீங்கதான் அந்தப் பெயரைச் சொன்னீங்க. பிறகு எப்படி எனக்கு அந்த ஊரோட பேர் தெரியும்?”
“சரிதான்.” தாஸ்தாயெவ்ஸ்கி தன் நிலையை ஒப்புக்கொண்டார்: “நான் வேற ஏதோ சிந்தனையில் இருந்துட்டேன்!”
அந்தச் சம்பவம் அதோடு முடிந்துவிட்டது குறித்து உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைந்தேன். தாஸ்தாயெவ்ஸ்கி அன்று மிகவும் களைப் படைந்து போயிருந்தாலும், மனக்குழப்பத்துடன் இருந்ததாலும் இப்பயொரு சம்பவம் நடந்திருக்கிறது என்று நானே என் மனதில் எண்ணிக் கொண்டேன். அவரே தன் நிலையைப் புரிந்து கொண்டதைப் போல, இதற்குமேல் இந்த வேலையைத் தொடர்ந்தால் நன்றாக இருக்காது என்றும், நான் இதுவரை சொன்னவற்றை விரித்து நாளை எழுதிக் கொண்டு வரவேண்டுமென்றும், மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு சந்திக்கலாம் என்றும் சொன்னார். சரியான நேரத்திற்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
இரவு பதினொரு மணிக்கான பெல் அடித்தது. நான் குடியிருப்பது பெஸ்கி மாவட்டத்தில் என்று சொன்னபோது, நகரத்தின் அந்தப் பகுதிக்கு தான் இதுவரை வந்ததே இல்லை என்றார் தாஸ்தாயெவ்ஸ்கி. அந்த இடம் எங்கே இருக்கிறது என்பதுகூட தனக்குத் தெரியாது என்றார். வீடு அதிக தூரத்தில் இருக்கும் பட்சம், வேண்டுமானல் துணைக்கு ஒரு வேலைக்காரனை அனுப்பி வைக்கவா என்று கேட்டார். நான் தேவை யில்லை என்று மறுத்து விட்டேன். அவர் வாசற்படி வரை என்னுடன் வந்தார். வேலைக்காரி விளக்குடன் வந்து நான் வெளியே வரும்வரை உதவினாள்.
அன்று நடந்த விஷயங்களை என் அம்மாவிடம் நான் சொன்னேன். நானே விரும்பாத சில சின்னஞ்சிறு விஷயங்களை அவளிடம் சொல்ல வில்லை. தாஸ்தாயெவ்ஸ்கி எந்த அளவிற்கு மென்மையான மனதைக் கொண்ட மனிதராகவும், இதயசுத்தி உள்ள ஒரு நபராகவும் இருக்கிறார் என்பதை மட்டுமே நான் அம்மாவிடம் சொன்னேன். அதற்கு முன்பு நான் அப்படிப்பட்ட ஒரு மனிதரைச் சந்தித்ததில்லை அல்லவா? அத்தகைய ஒரு அனுபவத்தை நானே வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்ப்பதால், அது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். என் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக திறமைசாலியும், கருணை மனம் கொண்டவரும், அதே நேரத்தில் சோகங்கள் கொண்டவராகவும், சதா நேரமும் கவலையில் ஆழ்ந்து போயிருக்கும் ஒரு மனிதராகவும் உள்ள ஒரு ஆளை அப்போதுதான் பார்க்கிறேன். மொத்தத்தில் தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு நல்ல மனிதர் என்ற முடிவுக்கு நான் வந்தேன். வாழ்க்கையில் அப்படிப்பட்ட மனிதரைச் சந்தித்ததற்காக மனப்பூர்வமாக நான் சந்தோஷப்பட்டேன்.
களைப்பு அதிகமாக இருந்ததால் படுக்கையில் போய் விழுந்தேன். எப்போதும் எழுப்புவதைவிட சீக்கிரம் என்னைப் படுக்கையைவிட்டு எழுப்ப வேண்டும் என்று என் தாயிடம் சொன்னேன். சொன்ன நேரத்திற்குள் வேலையை முழுமையாக முடித்து தாஸ்தாயெவ்ஸ்கியைப் போய் பார்க்க வேண்டுமே!
4
மறுநாள் நான் சீக்கிரமாகவே எழுந்து வேலையில் இறங்கினேன். தாஸ்தாயெவ்ஸ்கி சொன்ன கதையின் பகுதி அந்த அளவுக்கு எளிதாக இருக்கவில்லை. எனினும், அதை விரித்து எழுத எழுத எனக்கேமிகவும் ஆர்வம் பெருகியது. முடிந்தவரை சிறப்பாக அதை எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், அதை நன்றாக முடிக்க வேண்டும் என்றால், அதற்கு நிறைய நேரம் பிடிக்கும். நான் எவ்வளவு வேகமாக முயற்சி செய்தும், தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை நான் அடைந்தபோது, அரை மணி நேரம் தாமதமாகி விட்டது.
தாஸ்தாயெவ்ஸ்கி பயங்கர மனக்குழப்பத்துடன் அப்போது அமர்ந் திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
“வேலை ரொம்பவும் கஷ்டமாக இருக்குன்னு அன்னா, நீங்க இதை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டீங்கனு நான் நினைச்சேன். உங்க வீட்டு முகவரியை வேற எனக்கு நீங்க தரல. நேற்றைக்கு நான் சொன்ன பகுதி வீணாயிடுமோன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன்.” அவர் சொன்னார்.
“தாமதமாக வந்ததுக்காக நான் வருத்தப்படுறேன்.” -நான் அவரி டம் மன்னிப்புக் கேட்டேன்: “ஒண்ணை மட்டும் நான் உறுதியா சொல்றேன். நான் இந்த வேலை வேண்டாம்னு சொல்லிட்டுப் போறதாஇருந்தால், அந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டு, எழுதி முடிச்ச பகுதியை உங்க கையில சேர்த்துட்டுத்தான் போவேன். அதை நீங்க புரிஞ்சுக்கங்க!”
“நான் கவலைப்படுறதுக்குக் காரணம் இருக்கு.” தாஸ்தாயெவ்ஸ்கி விளக்கினார்: “நவம்பர் 1-ஆம் தேதிக்கு முன்னாடி இந்தப் புத்தகத்தை நான் முடிச்சே ஆகணும். ஆனா, உண்மை என்னன்னா... இந்த நிமிடம் வரை கதையோட அவுட் லைன் கூட தயாராகல...”
அதைப் பற்றி மேலும் விளக்கமாகக் கேட்ட பிறகுதான், அவர் எந்த அளவுக்கு ஒரு சதி வலையில் விழுந்து கிடக்கிறார் என்ற உண்மையே எனக்கு தெரிய வந்தது.
தாஸ்தாயெவ்ஸ்கியின் சகோதரர் மிகயீல் ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். பத்திரிகையின் பெயர் "வ்ரெம்யா!' திடீரென்று அவர் மரணத்தைத் தழுவ, அவர் வாங்கியிருந்த கடன்கள் அனைத்தும் தாஸ்தாயெவ்ஸ்கியின் தலைமீது வந்து விழுந்தன. சகோதரனின் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் தாஸ்தாயெவ்ஸ்கியே ஏற்றுக் கொண்டார்.