அந்த நாள் ஞாபகம் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
நான் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு எழுத்தாளருக்கு அவரின் படைப்பு வேலையில் உதவுகிறேன் என்பது மட்டுமல்ல; அவரின் இழந்துபோன மன தைரியத்தை அவருக்கு மீண்டும் வரச் செய்வதற்கும் நான் ஒரு வகையில் காரணமாக இருந்தேன். இந்த விஷயத்தை நினைத்துப் பார்த்தபோது, எனக்கே என்மீது பெருமையாகக்கூட இருந்தது.
புகழ்பெற்ற ஒரு எழுத்தாளரைப் பற்றி நான் கொண்டிருந்த அச்சம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டிருந்தது. ஒரு மாமாவுடனோ,இல்லாவிட்டால் ஒரு பழைய நண்பருடனோ எப்படி நாம் பழுகுவோமோ, அந்த மாதிரி எந்தவித தயக்கமும் இல்லாமல் நெருக்கமாக நான் தாஸ்தாயெவ்ஸ்கியுடன் பழகினேன். அவரின் வாழ்க்கையில் நடைபெற்ற பல திருப்பமான நிகழ்ச்சிகளைப் பற்றி அவரிடம் நான் கேட்டேன். நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லத் தயா ராக இருந்தார். பீட்டர்பால் கோட்டையில் தான் எட்டுமாத காலம் இருட்டறையில் கைதியாக அடைக்கப்பட்டிருந்ததையும், சிறைச் சுவருக்கு வெளியே கைதிகள் எப்படி ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள் என்பதையும் எனக்கு விவரித்தார் அவர். கடுமையான குற்றவாளிகளுடன் சைபீரியா சிறைகளில் தான் இருந்த நாட்களை என்னிடம் அவர் விளக்கமாகக் கூறினார். தன்னுடைய வெளிநாட்டுப் பயண அனுபவங்களைப் பற்றியும், பிறநாட்டு மக்களைப் பற்றியும்அவர் எனக்கு விவரமாகச் சொன்னார். மாஸ்கோவில் அவருக்கு உறவி னர்கள் இருக்கிறார்கள் என்றார். ஒரு கட்டத்தில் தான் திருமணம் ஆன மனிதர் என்பதையும், மூன்று வருடங்களுக்கு முன்புதான் அவ ருடைய மனைவி மரணத்தைத் தழுவியதாகவும் சொன்னார். இறந்து போன மனைவியின் ஓவியத்தை அவர் என்னிடம் காட்டினார். அந்த ஓவியம் என் மனதில் பெரிய பதிவு ஒன்றையும் உண்டாக்கவில்லை. மரணத்திற்கு முன்பு நோய்வாய்ப்பட்டுக் கிடந்திருந்த வேளையில், அந்தப் பெண்ணை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மரணமடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னால், கிட்டத்தட்ட அவர் ஒரு நடமாடும் பிணத்தைப்போல இருந்த காலகட்டத்தில் அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. நான் கொஞ்ச மும் விரும்பாத அந்த இளைஞன் தாஸ்தாயெவ்ஸ்கிக்குப் பிறந்த மகன் அல்ல என்பது தெரிந்தபோது, ஒருவிதத்தில் அந்தச் செய்தி என் மனதில் நிம்மதியையே தந்தது. தாஸ்தாயெவ்ஸ்கியின் மனைவிக்கு இருந்த முதல் கணவனுக்குப் பிறந்த மகன்தான் அந்த முட்டாள்தனமான இளைஞன். அவன் தரும் தொல்லைகளையும், கண்டபடி உண்டாக்கும் கடன்களையும் தாஸ்தாயெவ்ஸ்கி பலவித பிரச்சினைகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு தாங்கிக் கொண்டார். பணம் சம்பாதிப்பதற்காக அந்த இளைஞன் எந்த மாதிரியெல்லாம் தவறான வழிகளில் சென்றிருக்கி றான் என்பதைப் பின்னாட்களில்தான் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. தாஸ்தாயெவ்ஸ்கியின் கதைகள் முழுவதும் சோகமயமானவையே. ஒருமுறை அவரைப் பார்த்து நான் கேட்டேன்: “நீங்க ஏன் எப்பவுமே சோகமயமான சம்பவங்களை மட்டுமே நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? வாழ்க்கையில நாம மனம் திறந்து சொல்ற அளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் இருக்கு!”'
“மகிழ்ச்சி! அப்படிப்பட்ட ஒண்ணை நான் வாழ்க்கையில் இதுவரை அறிந்ததே இல்லை. நான் மனதில் அடையணும்னு ஆசைப்பட்ட சந்தோஷத்தை இதுவரை அடைஞ்சதே இல்லைன்றதுதான் உண்மை. இப்பக்கூட சொல்லப்போனால்- நான் அதற்காக காத்துக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நான் என்னோட நண்பர் ராம்கலுக்கு (சைபீரியாவில் இருந்தபோது, தாஸ்தாயெவ்ஸ்கிக்கு உதவிய கவர்னர்) ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதுல இவ்வளவு சோகங்கள் வாழ்க்கையில் நடந்த பிறகும், ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்த பிறகும்... வாழ்க்கையில் இனியும் நல்லது நடக்கும்ணும், மகிழ்ச்சியான நிமிஷங்கள் கட்டாயம் வரவே செய்யும்ணும் நான் குறிப்பிட்டிருந்தேன்.”
தாஸ்தாயெவ்ஸ்கியின் அந்த வார்த்தைகளில்தான் எந்த அளவிற்கு கவலை இழையோடியிருக்கிறது! அவர் கனவு கண்ட ஆனந்தமயமான வாழ்க்கை அவர் பாதி தூரத்தைக் கடந்த பிறகும் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் முழுமையான நம்பிக்கையுடன் அந்த சந்தோஷமான வாழ்க்கைக்காக அவர் இப்போதும் காத்திருக்கவே செய்கிறார்.
ஒருநாள் மிகவும் மனதில் வேதனை மண்டிவிட்டிருந்த வேளையில் அவர் என்னிடம் சொன்னார்: “அன்னா, இப்போதைக்கு என்னோட வாழ்க்கையில மூணு வழிகள் தெரியுது. ஒரு வழி- ஜெருசலேமுக்கு புனித யாத்திரையா போயிடறது. இரண்டாவது வழி- ஐரோப்பாவுக்கு சூதாட்டக்காரனா போறது. மூணாவது வழி- இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு வாழுறது!”
இந்த வழிகளில் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும், வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் பிறக்கப்போவது உறுதி என்ற திடமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. என்னுடன் ஒரு நெருங்கிய நட்புணர்வு தோன்றியதால், இதைப் பற்றி என்னுடைய கருத்தைக் கூறும்படி அவர் கேட்டார்.
கள்ளங்கபடமில்லாமல் திறந்த மனதுடன் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வது என்பது குழப்பமான ஒரு விஷயம் என்று என் மனதில் பட்டது. ஜெருசலேமுக்கு புனித யாத்திரை போவதும், சூதாட்டத்தில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்வதும் சாத்தியமான விஷயங்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய நண்பர்களின் வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் ஆனந்தம் ததும்பும் சூழ்நிலைகளை நான் பார்த்திருப்பதால், மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுப்பதே சரியான ஒரு விஷயமாக இருக்கும் என்ற என் அபிப்ராயத்தைச் சொன்னேன் நான். மீண்டும் ஒரு திருமணத்தைச் செய்து அருமையான ஒரு குடும்ப வாழ்க் கையை வாழ்வது- இதுதான் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு நான் கூறிய மொழி.
“நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னா நீங்க சொல்றீங்க? என்னை யார் திருமணம் செய்ய சம்மதிப்பாங்க? நான் எந்த மாதிரியான ஒரு பெண்ணை மனைவியாகத் தேர்ந்தெடுப்பது? ஒரு அறிவாளியையா, இல்லாட்டி ஒரு அமைதியான பெண்ணையா?” தாஸ்தாயெவ்ஸ்கி என்னைப் பார்த்துக் கேட்டார்.
“கட்டாயம் ஒரு அறிவாளியான பெண்ணை...”'
“நிச்சயமா முடியாத விஷயம். நான் அமைதியான குணத்தைக் கொண்ட ஒரு பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பேன். அவள்தான் என்னை அன்போட பார்த்துக்குவா!”
இதற்கிடையில் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்- எனக்கு திருமண ஆலோசனை வந்திருக்கிறதா என்று. இதற்கு முன்பு இரண்டு இளைஞர்கள் என்னைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்றும், ஆனால் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் நான் அவருக்கு பதில் சொன்னேன்.
“காரணம்- அவர்களை நான் மதிக்கிறேன். ஆனால், காதலிக்க வில்லை” என்றேன்.
“காதல்... நீங்க சொல்றது சரிதான். வெறும் மதிப்பை மட்டும் வச்சிக்கிட்டு, எப்படி ஒரு மனிதனைத் திருமணம் செய்ய முடியும்?” தாஸ்தாயெவ்ஸ்கி உரத்த குரலில் சொன்னார்.