அந்த நாள் ஞாபகம் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
இயற்கையாகவே நல்ல விஷயங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்பதை மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் பெண் நான் என்பதால், எதற்குத் தேவையில்லாமல் கண்டபடி மனதைப் போட்டு அலைக்கழிக்க வேண்டும் என்று நினைத்து, அவ்வகை சிந்தனைகள் மனதில் எழாமல் பார்த்துக் கொண்டேன். முன்பு என்னுடன் பள்ளியில் படித்த ஒரு சினேகிதியைப் பார்க்கப் போனேன். அடுத்த நாள் நாடகம் பார்ப்பதற்காகப் போனேன். ஸ்டெனோக்ராஃபி வகுப்புக்கும் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். நாவலை வெற்றிகரமாக முடித்ததற்காக ஆல்கின் என்னை மனம் திறந்து பாராட்டினார். என்னை சிபாரிசு செய்ததற்காகப் பாராட்டி ஆல்கினுக்கும் தாஸ்தாயெவ்ஸ்கி கடிதம் எழுதியிருந்தார். என்னுடைய பூரணமான ஒத்துழைப்பு இருந்ததால்தான் குறிப்பிட்ட கால அளவிற்குள் நாவலை எழுதி முடிக்க முடிந்தது என்றும், சுருக்கெழுத்து உதவியுடன் நாவல் எழுதும் இந்த உத்தியை தான் மிகவும் விரும்புவதாகவும், இனி வரும் காலத்திலும் இதே உத்தியைத் தொடர தான் உத்தேசிப்பதாகவும் தாஸ்தாயெவ்ஸ்கி ஆல்கினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நவம்பர் மூன்றாம் தேதி காலையில் இருந்தே நான் தாஸ்தாயெவ்ஸ்கியை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் முழு மூச்சாக இறங்கிவிட்டேன். பல சந்தர்ப்பங்களில் அவர் எனக்கு வாங்கித் தந்த பலகாரங்களையும், அவருக்கு மிகவும் விருப்பமான மிட்டாய்களையும் அவருக்காக எடுத்து வைத்தேன். அந்த முழு நாளும் நான் ஏகப்பட்ட பரபரப்புடன் இருந்தேன். ஏழு மணி ஆனவுடன், என்னிடம் ஒருவித பதைபதைப்பு வந்து தொற்றிக்கொண்டது. மணி ஏழரை அடித்தது. எட்டானது.தாஸ்தாயெவ்ஸ்கி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஒருவேளை அவர் மனம் மாறியிருக்கலாம்- இல்லாவிட்டால் இங்கு வரப்போகும் விஷயத்தையே முற்றிலுமாக மறந்து போயிருக்கலாம். இப்படிப் பல விதத்திலும் நான் சிந்தித்தவாறே ஒருவித குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தேன். சரியாக எட்டரை மணிக்கு வாசற்கதவில் பொருத்தியிருந்த அழைப்பு மணி அடித்தது. நான் கதவை நோக்கி வேகமான ஓடிச்சென்றேன்.
“ஓ... இந்த வீட்டை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”
“அப்படித் தேடி அலைஞ்சு கண்டுபிடிச்சது எனக்கு மிகவும் பிடிச் சிருந்தது. நான் இங்கே வந்ததால் அன்னா, உனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே! ஒவ்வொரு வீடா நான் ஏறி இறங்கி இந்த முகவரி எங்கே இருக்குன்னு கேட்டேன். யாருக்குமே இந்தத் தெரு எங்கே இருக்குன்னு தெரியல. கடைசியில் ஒரு நல்ல மனிதர் என்னோட வாடகைக் கார்ல ஏறி இங்கே வந்து இந்த வீட்டை காட்டித் தந்தாரு...”
தாஸ்தாயெவ்ஸ்கி பேசிக்கொண்டிருந்தபோது என் தாயார் அங்கு வந்தாள். என் தாய்க்கு தாஸ்தாயெவ்ஸ்கியை அறிமுகப்படுத்தி வைத்தேன். பெண்களிடம் மரியாதை செலுத்தும் நிமித்தமாக அவர் என் தாயின் கையில் முத்தமிட்டார். ஸ்டெல்லோவ்ஸ்கிக்கு குறிப்பிட்ட கால அளவிற்குள் நாவலை முடித்துத் தரவேண்டும் என்பதற்காக தான் மனக்கிலேசத் தில் சிக்கிக் கிடந்ததையும், இந்த விஷயத்தில் நான் செய்த உதவிக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை என்றும் என் தாயிடம் கூறினார் தாஸ்தாயெவ்ஸ்கி.
நாங்கள் முன்கூட்டியே நினைத்தது போலவே பல தகிடுதத்த வேலை களைச் செய்ய ஆரம்பித்தார் ஸ்டெல்லோவ்ஸ்கி. தாஸ்தாயெவ்ஸ்கி நாவலுடன் அந்த மனிதரைத் தேடிச் சென்றபோது, அவர் தன்னுடைய முகவரியில் இல்லாமல் வேறு எங்கோ போயிருந்தார். அந்த ஆள் எப்போது திரும்பி வருவார் என்ற விஷயம் அவரின் வேலைக் காரனுக்குக்கூட தெரியவில்லை. தாஸ்தாயெவ்ஸ்கி அடுத்த நிமிடம் ஸ்டெல்லோவ்ஸ்கியின் அலுவலகத்திற்கு ஓடினார். அந்த அலுவலகத் தின் குமாஸ்தா கையெழுத்துப் பிரதியை தன் கையில் வாங்கத் தயாராக இல்லை. தனக்கு அதைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டான் அவன். மிகவும் தாமதமாக வந்த தாஸ்தாயெவ்ஸ்கி அந்தக் கையெழுத்துப் பிரதியுடன் வக்கீலின் அலுவலகத்தைத் தேடிப் போயிருக்கிறார். கையில் கொண்டு போயிருந்த நாவலின் கையெழுத்துப் பிரதியை அங்கே கொடுத்துவிட முயற்சித்திருக்கிறார். அங்கு காரியம் நடக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால் அங்கு முக்கியமான ஒரு அதிகாரியைக்கூட பார்க்க முடியவில்லை. நாள் முழுக்க தாஸ்தாயெவ்ஸ்கி படாதபாடுபட்டிருக்கிறார். கடைசியில் இரவு பத்து மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ஒரு போலீஸ்காரர் நாவலை வாங்கிக் கொண்டு ஒரு ரசீதை அவர் கையில் தந்திருக்கிறார்.
முன்பு எப்போதும் இருப்பதைப்போல சாதாரணமாக அமர்ந்து நாங்கள் தேநீர் குடித்தோம். நான் மனதில் இப்படி நடக்க வேண்டும், அப் படி நடக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருந்ததை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்தேன். எவ்வளவோ விஷயங்கள் மனதில் அரும்பி பொங்கி தலைகாட்டியது. தாஸ்தாயெவ்ஸ்கியின் நடத்தை என் தாயை மிகவும் கவர்ந்துவிட்டது. மிகப்பெரிய எழுத்தாளர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வரப்போகிறார் என்பதை அறிந்து என் தாய் மிகவும் பதைபதைப்புடன் இருந்ததென்னவோ உண்மை. ஆனால், தாஸ்தாயெவ்ஸ்கி சாதாரண மக்களுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதை நன்கு தெரிந்திருந்த ஒரு மனிதராக இருந்தார். முன்னேற்பாட்டுடன் தாஸ்தாயெவ்ஸ்கியுடன் ஆரம்பத்தில் பழகும் நபர்கள் காலப்போக்கில் எப்படி அவருடன் மிகவும் நெருக்கமாய் பழகி விடுகிறார்கள் என்பதைப் பின்னர் பல நேரங்களில் தெரிந்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
ஒரு வார இடைவேளைக்குப் பிறகு தான் "குற்றமும் தண்டனையும்' என்ற நூலின் தொடர்ச்சியைப்போல ஒரு புதிய நூலை எழுதத் திட்டமிட்டிருப்பதாகவும், அதை எழுதுவதற்கு என்னுடைய ஒத்து ழைப்பு கட்டாயம் தேவை என்றும் பேச்சுக்கு நடுவே குறிப்பிட்டார் தாஸ்தாயெவ்ஸ்கி. இனி தான் எழுத இருக்கும் எல்லா படைப்புகளுக்கும் என்னுடைய உதவி கட்டாயம் தேவை என்றும், நானும் உடன் இருக்க நாவல் எழுதுவது என்பது மிகவும் எளிதான வேலையாக இருக்கிறது என்றும், இந்தக் கூட்டு முயற்சி தன் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதால், இந்த ஒத்துழைப்பை இனி வரும் நாட்களிலும் நான் கட்டாயம் தரவேண்டும் என்றும் மிகவும் கெஞ்சி என்னை கேட்டுக் கொண்டார் அவர்.
“நானும் அப்படி உங்களோடு சேர்ந்து வேலை செய்றதுக்காகச் சந்தோஷப்படுறேன்.” நான் சொன்னேன்: “ஆனா, ஆல்கின் இதைப்பற்றி என்ன நினைப்பார்னு எனக்குத் தெரியல. புதிய வேலைக்கு அவர் வேற யாராவது ஒரு மாணவியை அனுப்பிட்டார்னா?”
“அன்னா, நான் உன்னோட வேலை செய்ற பாணியோடு பழகிப் போயிட்டேன். நீ வேலை செய்ற முறை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. நிலைமை அப்படி இருக்குறப்போ, உனக்குப் பதில் இன்னொரு மாணவியை என்கிட்ட ஆல்கின் அனுப்பி வைப்பார்னு நான் நினைக்கல. அன்னா,உனக்கு இந்த வேலையில தொடர்ந்து ஈடுபட விருப்பமில்லைனாஅதை இப்பவே சொல்லிடு. அப்படி உனக்கு இஷ்டமில்லைன்னா, நிச்சயம் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்!”