அந்த நாள் ஞாபகம் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
ஒரு புதிய புத்தகத்தை என் கையில் தந்து அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்படி சொன்ன தாஸ்தாயெவ்ஸ்கி, எமிலியாவை சுவருக்கு அருகில் நிற்க வைத்து என்னவோ பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மைக்கோவ் அங்கு வந்தார். அவர் என்னைப் பார்த்து வணக்கம் சொன்னாலும், என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். சகோதரரின் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த தாஸ்தாயெவ்ஸ்கி, “நாவல் எப்படி போய்க்கிட்டு இருக்கு?” என்று மைக்கோவ் கேட்டதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. அதற்கு நான்தான் பதில் சொன்னேன். நேற்றே நாவல் முற்றிலுமாக முடிவடைந்து விட்டது என்றும், நாவலின் கடைசி பாகத்தை இப்போது தான் தாஸ்தாயெவ்ஸ்கியின் கையில் கொண்டு வந்து கொடுத்தேன் என்றும் சொன்னேன் நான். அவ்வளவுதான்- என் பக்கம் வேகமாக ஓடி வந்த மைக்கோவ் என்னை இதுவரை அடையாளம் தெரியாமல் இருந்ததற்காக மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். தன் கண்களில் உள்ள பிரச்சினையே இதற்குக் காரணம் என்றார் அவர். உண்மையிலேயே அவரின் கண்களில் சில பிரச்சினைகள் இருந்தன. நான் அணிந்திருந்த புதிய ஆடையில் என்னை அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
நாவலைப் பற்றி என்னிடம் திரும்பத் திரும்ப பல கேள்விகளையும் கேட்டார் மைக்கோவ். நாவலைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பதை அவர் தெரிந்து கொள்ள விரும்பினார். "சூதாட்டக்காரன்' என்னை மிகவும் கவர்ந்த ஒரு நாவல் என்பதால், மனம் திறந்து அதைப் பாராட்டி நான் சொன்னேன். சாதாரணமாக, நாம் பார்க்க முடியாத மிகவும் அற்புதமான கதாபாத்திரங்கள் (பாட்டியைப்போல) பலவும் அருமையான உயிரோட்டத்துடன் நாவலில் படைக்கப்பட்டிருக்கின்றன என்றேன் நான். சுமார் இருபது நிமிடங்கள் நானும் மைக்கோவும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த எளிமையான, யாரும் விரும்பக்கூடிய குணத்தைக் கொண்ட கவிஞருடன் என்னால் எந்தவித தடங்கலும் இல்லா மல் உரையாட முடிந்தது. மைக்கோவ் என்னிடம் நடந்து கொண்ட முறையைப் பார்த்து, சிலையென நின்று விட்டாள் எமிலியா. சுருக்கெழுத்து எழுதக்கூடிய ஒரு சாதாரண பெண்ணுடன் இந்த அளவிற்கு அவர் ஏன் மரியாதையுடன் நடந்து கொள்கிறார் என்று அவள் நினைத்திருப்பாள் என்று நினைக்கிறேன்.
மைக்கோவ் அங்கிருந்து போனவுடன், எமிலியாவை எதற்குத் தேவை யில்லாமல் மனக்கிலேசத்திற்கு ஆளாக்க வேண்டும் என்று நினைத்த நான், அங்கிருந்து நீங்கலாமா என்றெண்ணினேன். தன்னுடைய சகோதரரின் மனைவியின் நடத்தை காரணமாகவே நான் புறப்பட எண்ணுகிறேன் என்பதைப் புரிந்து கொண்டார் தாஸ்தாயெவ்ஸ்கி. நான் இப்போது போக வேண்டாம் என்று என்னை கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். தன்னுடைய சகோதரரின் மனைவியின் நடவடிக்கையால் என் மனதில் உண்டான வருத்தத்தை மாற்றும் வேலையில் அவர் இறங்க முயற்சிப்பது தெரிந்தது. வாசற்படி வரை வந்த அவர் தன்னை என்னுடைய வீட்டிற்கு அழைத்திருக்கும் விஷயத்தை எனக்கு ஞாபகப்படுத்தினார். நான் அவரை அழைத்திருப்பதை மறக்கவில்லை என்றேன்.
“அப்போ நான் நாளைக்கு வரலாமா?”
“நாளைக்கு நான் வீட்ல இருக்கமாட்டேன். பழைய ஒரு தோழியோட வீட்டுக்குப் போறேன்...”
“அதற்கு அடுத்த நாள்?”
“அன்னைக்கு எனக்கு ஒரு ஸ்டெனோக்ராஃபி லெக்சர் இருக்கு...”
“அப்படின்னா நவம்பர் ரெண்டாம் தேதி?”
“அதாவது புதன்கிழமை. அன்னைக்கு நான் ஒரு நாடகத்துக்குப் போக வேண்டியதிருக்கே!”
“கடவுளே! இந்த வாரம் முழுவதும் உனக்கு வேலைகளா? இதெல்லாம் வேணும்னே சொல்ற சாக்குப் போக்குகள்னு என் மனசுல ஒரு சந்தேகம்... அன்னா, நான் உன் வீட்டுக்கு வர்றதை நீ விரும்பலியா? இப்போவாவது உண்மையைச் சொல்லு...”
“நிச்சயமா இல்ல. நீங்க எங்களோட வீட்டுக்கு வர்றதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும். நவம்பர் மூணாம் தேதி வாங்க. வியாழக்கிழமை சாயங்காலம் ஏழு மணிக்கு. சரியா?”
“வியாழக் கிழமைக்கு முன்னாடி முடியாதா? வியாழக்கிழமை வர்றதுக்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கு! அவ்வளவு நாளும்அன்னா, உன்னை நான் பார்க்காமல் எப்படி இருக்குறது?”
உண்மையாகவே தாஸ்தாயெவ்ஸ்கி அப்போது அப்படிச் சொன் னதை- வெறும் மரியாதை நிமித்தமான ஒன்றாகவே நினைத்தேன்.
8
அந்த இனிமையான நாட்கள் முடிந்துவிட்டன. தாஸ்தாயெவ்ஸ்கி யுடன் நான் பேசிய சம்பவங்களும் உரையாடிய நிகழ்ச்சிகளும் அவ ருடன் நான் நாவலை உருவாக்க செலவழித்த நிமிடங்களும் என் மனதின் அடித்தளத்தில் வலம் வந்து எனக்கு தாங்க முடியாத ஒரு ஆனந்தத்தை அளித்துக் கொண்டிருந்தன. நான் மீண்டும் என்னுடைய ஸ்டெனோக்ராஃபி வகுப்பிற்குள் நுழைந்தேன். எனினும், முன்பு மாதிரி என்னால் அந்த வகுப்பில் முழுமையாக ஒன்ற முடியவில்லை. ஏதோ பாலைவனத்தில் என்னை விட்டதைப்போல் நான் உணர்ந்தேன். தாஸ்தாயெவ்ஸ்கி என் வீட்டிற்கு வருவதாகச் சொன்ன விஷயம் மட்டுமே அப்போது என் மனதில் இருந்தது. நானோ என் தாயோ நிச்சயம் தாஸ்தாயெவ்ஸ்கியை வீட்டிற்கு வரவழைக்கக்கூடிய அள விற்கு தகுதி உடையவர்கள் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை என் மனதில் கொண்டு வந்தேன். நிச்சயம் அந்த அளவிற்கு மிகப்பெரிய மனிதர் அவர்! நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எல்லாமே அந்த நாவலைச் சுற்றிய விஷயங்களைத்தாம். ஆனால், இப்போது எங்கள் வீட்டிற்கு தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு விருந்தாளியாக வருகிறார். அவரை நாங்கள் எந்தவித குறைவும் இல்லாமல் வரவேற்று, பார்க்க வேண்டி இருக்கிறது. அவர் வீட்டிற்கு வரும்போது அவரிடம் என்ன பேசுவது என்று இப்போதே பலவிதத்திலும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். கிராமப் புறத்தில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு வருவதென்றால் மிகவும் கஷ்டப்பட்டு பயணம் செய்தே அவர் வரவேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தபோது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மிகவும் களைத்துப்போய் அவர் எங்கள் வீட்டிற்கு வரப் போகிறார் என்பதையும், என்னுடன் செலவழித்த தருணங்களை மனதில் அசை போட்டுப் பார்த்து, இந்த அளவிற்குத் தன்னுடன் பழகத் தகுதியில்லாமல் இருக்கும் ஒரு பெண்ணுடன் தனக்கு அறிமுகம் உண்டாகிவிட்டதே என்பதற்காக அவர் வருத்தப்படப் போவது நிச்சயம் என்பதையும் இப்போதே மனதில் நான் எண்ணிப் பார்த்தேன். தாஸ்தாயெவ்ஸ்கியை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் அடித்தளத்தில் அரும்பினாலும், ஒருவேளை அவர் எங்கள் வீட்டிற்கு வரப்போகும் விஷயத்தை ஒரேயடியாக மறந்து போனாலும் போயிருக்கலாம் என்ற எண்ணமும் அதே நேரத்தில் எழாமல் இல்லை.