அந்த நாள் ஞாபகம் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6392
தாஸ்தாயெவ்ஸ்கியின் மனம் சுருங்கிப் போய்விட்டதை என்னால் உணர முடிந்தது. ஆல்கின் பெரும்பாலும் என்னைத்தான் அவரிடம் அனுப்பி வைப்பார் என்று சொல்லி அவரின் கவலையைப் போக்க நான் முயன்றேன். ஆனால், முன்கூட்டியே அவரிடம் இதைப் பற்றி சூசகமாகச் சொன்னதுகூட ஒருவிதத்தில் சரி என்றே நினைத்தேன்.
இரவு பதினொரு மணி ஆனபோது தாஸ்தாயெவ்ஸ்கி எங்களிடம் விடைபெற்றுக் கொண்டார். ஆல்கினிடம் அனுமதி வாங்கிக் கொண்டு புதிய நூல்கள் எழுதுவதில் அவருக்கு உதவியாக நான் கட்டாயம் பணியாற்ற வரவேண்டும் என்று என்னிடம் அவர் சத்தியம் வாங்கிக் கொண்டார். அவர் சென்ற பிறகு, நான் சாப்பாட்டு அறைக் குள் வந்தேன். என் இதயம் முழுமையான நிறைவுடன் இருந்தது. எங்களின் உரையாடல் அந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருந்தது. சிறிது நேரம் சென்ற பிறகு, வேலைக்காரி ஒரு செய்தியுடன் வந்தாள். தாஸ்தாயெவ்ஸ்கி வந்த காரில் இருந்த இருக்கையை, அதன் டிரைவர் பக்கத்தில் எங்கோ போயிருந்த நிமிடத்தில் யாரோ திருடி எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அதற்கு நஷ்டஈடு தருவதாக தாஸ்தாயெவ்ஸ்கி வாக்களித்த பிறகுதான் அந்த டிரைவர் அமைதியாக இருந்திருக்கிறான்.
இந்தச் சம்பவத்தைக் கேட்டு நான் மிகவும் கவலையடைந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு எங்கள் மேல் தேவையில்லாத ஒரு வெறுப்பு உண்டாகியிருக்கலாம். அவர் நிச்சயம் இந்த குக்கிராமத்தைத் தேடி இனி வரப்போவதில்லை என்று நினைத்திருக்கலாம் அல்லவா? சந்தோஷம் இழையோடிக் கொண்டிருந்தஅந்த மாலை நேரம் விரும்பத்தகாத இந்தச் சம்பவத்தால் கறை படிந்து போனபோது, என்னுடைய இதயம் கவலையில் மூழ்கி விட்டது.
9
தாஸ்தாயெவ்ஸ்கி எங்கள் வீட்டிற்கு வந்துபோன மறுநாள் நான் என் சகோதரியின் வீட்டிற்குச் சென்றேன். அவளின் பெயர் மரியா ஸ்வாத்கோவ்ஸ்கயா. அவளின் கணவர் பெயர் க்ரிகோரியேவிச். அவர்களிடம் நானும் தாஸ்தாயெவ்ஸ்கியும் இணைந்து எப்படி நாவல் எழுதுவதில் ஈடுபட்டோம் என்பதைச் சொன்னேன். ஒருமாத காலமாக நான் நாவல் எழுதும் வேலையில் தாஸ்தாயெவ்ஸ்கியுடன் ஈடுபட்டதால் எப்போ தாவது ஒருமுறைதான் அவர்களைப் பார்க்கவே என்னால் வரமுடிந்தது. அதனால் அவர்களிடம் சொல்வதற்கான விஷயங்கள் என்னிடம் நிறைய இருந்தன. நான் வாய்க்கு வாய் அவர்களிடம் தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிச் சொன்னேன். இடையில் என் சகோதரி சில சந்தேகங்களைக் கேட்டாள். நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் கவனத் துடன் அவள் கேட்டாள். நான் எந்த அளவிற்கு தாஸ்தாயெவ்ஸ்கியின் மனதில் என் வேலையின் மூலம் இடம் பிடித்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்ட என் சகோதரி, நான் புறப்படுகிற நேரத்தில் என்னிடம் சொன்னாள்: “தாஸ்தாயெவ்ஸ்கி மேல நீ இந்த அளவுக்கு ஆசை வச்சிருக்கிறது உண்மையிலேயே நல்லது இல்ல. நீ மனசுல கனவு கண்டுக்கிட்டு இருக்குற எந்த விஷயமும் நடைமுறையில் சாத்தியமாகப் போறது இல்ல. கடவுளே... நீ சொல்ற மாதிரி அந்த மனிதர் ஏகப்பட்ட பிரச்சினைகள்ல சிக்கிக்கிட்டு இருக்குறவராகவும், உறவுக்காரங்களோட தொல்லைகளைக் கொண்ட ஆளாகவும் இருந்தார்னா...”
தாஸ்தாயெவ்ஸ்கிமீது அப்படியெல்லாம் ஆசைகள் எதுவும் நான் வைக்கவில்லை என்றும், அப்படிப்பட்ட கனவுகளெல்லாம் என்னிடம் இல்லவே இல்லையென்றும், புகழ்பெற்ற அந்த எழுத்தாளருடன் இணைந்து பணியாற்றினோமே என்ற சந்தோஷமும், அவர் என்னுடைய திறமையைப் பார்த்துப் பாராட்டின விஷயமும் மட்டுமே தற்போதைக்கு என்னுடைய மனதில் இருக்கின்றன என்பதையும் என் சகோதரியிடம் தெளிவாக விளக்கிச் சொன்னேன்.
இருந்தாலும், என் சகோதரி சொன்ன அந்த வார்த்தைகள் நான் அவ ளின் வீட்டை விட்டுத் திரும்பி வருகிறபோது, என் மனதைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. என் வீட்டை அடைந்த பிறகு கூட நான் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை என் சகோதரி கூறியது உண்மைதானா? நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் மீது ஆசை வைத்திருக்கிறேனா என்ன? அவர்மீது காதல் என்ற உணர்வு என்னிடம் அரும்பி விட்டிருக்கிறதா? நான் இதுவரை சந்தித்திராத உணர்வு அலைகள் எனக்குள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனவா? என் மனதிற்குள் அப்படிப்பட்ட கனவுகள் உண்டாகி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனவா? இப்படிப்பட்ட ஒரு விஷயம் வாழ்க்கையில் சாத்தியமாகக் கூடியதுதானா? இதுதான் காதல் என்ற உணர்வு என்றால், நான் இப்போது என்ன செய்வது? நான் இனிமேலும் நாவல் எழுதும் வேலையில் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு உதவியாக இருக் கலாமா? இல்லாவிட்டால் அவரே நம்புகிற மாதிரி ஏதாவது காரணத்தைச் சொல்லி, அந்த வேலையிலிருந்து என்னை நானே விலக்கிக் கொள்ளலாமா? தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், அவரை நேரில் கொஞ்ச நாட்களுக்குப் பார்க்காமல் இருந்தால் நிச்சயம் அவரைப் பற்றிய நினைவுகள் மனதை விட்டு நாளடைவில் மறைந்து போகவே செய்யும். புதிய வேலைகளில் கவனத்தைச் செலுத்தும் பட்சம், என்னுடைய பழைய மனநிலைக்கு என்னால் மீண்டும் வரமுடியும். என் மனதில் எப்படி இப்படியொரு மாற்றம் உண்டானது? ஒருவேளை என் சகோதரி சொன்னதில் தவறு இருக்குமோ? தாஸ்தாயெவ்ஸ்கியுடன் நான் கொண்ட பழக்கம் என் மனதில் என்ன பாதிப்பை உண்டாக்கி விட்டிருக்கிறது? இதனால் விபரீத விளைவு ஏதாவது உண்டாகுமோ? என்னுடைய வேலை ஸ்டெனோக்ராஃபராகப் பணியாற்றுவது. நான் ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருந்தது உண்மை. தொழிலில் ஈடுபடுவதுடன், பல விதப்பட்ட உயர்ந்த விஷயங்களையும் தாஸ்தாயெவ்ஸ்கியுடன் பணியாற்றியதன் மூலம் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படி யென்றால் நான் எப்படி பாழாய்ப் போய்விட்டதாக எண்ண முடியும்? ஒரு ஸ்டெனோக்ராஃபர் என்ற வகையில் தாஸ்தாயெவ்ஸ்கியை விட்டு விலகுவது என்பது அவ்வளவு நல்ல ஒரு செயலாக எனக்குப் படவில்லை. எனக்குச் சமமான திறமையைக் கொண்ட இரண்டு மாணவிகள் தங்களுக்கு வேலை கிடைத்ததும், ஸ்டெனோக்ராஃபி படிப்பையே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தாஸ்தாயெவ்ஸ்கியைப் பொறுத்தவரை சுருக்கெழுத்து உதவியுடன் நாவல் எழுதுவதையே இனி பின்பற்றுவது என்ற முடிவில் இருக்கிறார்.
எந்தவொரு முடிவுக்குமே என்னால் வர முடியவில்லை. எந்த வழியில் போவது என்று முடிவெடுக்க முடியாமல் நான் குழம்பிப் போய் நின்றேன்.
மறுநாள் நவம்பர் ஆறாம் தேதி என்னுடைய பெரியம்மாவின்பிறந்தநாள். நான் அவருடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கவில்லை என்றாலும், அவ்வப்போது வேலை இல்லாத நேரங்களில் அவரைப் போய் பார்ப்பதுண்டு. அந்தப் பெரிய வீட்டில் எப்போது பார்த்தாலும் விருந்தினர்கள் கூட்டமாகவே இருக்கும். அங்கே போய் சிறிது நேரம் இருந்தால், சில நாட்களாக என்னைப் போட்டு அலைக்கழித்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் இருந்து கொஞ்ச நேரமாவது விடுதலை பெற்று இருக்க முடியும் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.