அந்த நாள் ஞாபகம் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
என்னுடைய வீட்டில் இருந்து அவர்களின் வீடு மிகவும் தூரத்தில் இருந்தது. இரவு வருவதற்கு முன்பு நான் அந்த வீட்டுக்குப் போய் விடவேண்டும் என்று நினைத்தேன். ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு வரும்படி ஒரு ஆளை அனுப்பிவிட்ட பிறகு, பியானோவிற்குப் பக்கத்தில் வந்து நான் அமர்ந்தேன். பியானோவின் ஓசையில் வாசல் மணி ஒலித்தது என் காதில் கேட்கவில்லை. திடீரென்று ஒரு மனிதர் வீட்டுக்குள் நுழைந்த காலடிச் சத்தம் என் காதுகளில் விழுந்தது. யாரென்று நான் திரும்பிப் பார்த்தேன். அவ்வளவுதான்- அடுத்த நிமிடம் ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டேன். தாஸ்தாயெவ்ஸ்கி வீட்டிற்குள் நின்றிருந்தார். என்னுடைய மனதில் அப்போது உண்டான சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவரின் முகத்தில் இனம் புரியாத ஒரு பதட்டமும் வெட்கமும் தெரிந்ததை என்னால் காண முடிந்தது. நான் அவரை வரவேற்பதற்காக எழுந்து நின்றேன்.
“அன்னா, நான் என்ன செய்தேன்னு உனக்குத் தெரியுமா? நீ இல்லாம நான் இவ்வளவு நாட்களா எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டுட்டேன் தெரியுமா? இன்னைக்குக் காலையில நான் நினைச்சேன்- இங்கே வந்து உன்னைப் பார்க்குறதுன்றது சரியான ஒரு செயலாக இருக்குமான்னு. இவ்வளவு சீக்கிரம் இரண்டாவது தடவையா வீட்டுக்கு நான் வர்றதைஉங்கம்மா விரும்புவாங்களான்னு நான் சந்தேகப்பட்டேன். போன வியாழக்கிழமை நான் இங்கே வந்தேன். இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. இதோ இன்னொரு தடவை இங்கே வந்திருக்கேன். நான் இங்கே வரக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா, பாரு... இங்கே என்னையும் மீறி வந்து நின்னுக்கிட்டு இருக்கேன்.”- என் கரத்தைப் பற்றி அழுத் தமாக குலுக்கியவாறு தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்.
“ஏன் இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க? நீங்க எப்போ வேணும்னா லும் இந்த வீட்டுக்கு வரலாம். எனக்கும் அம்மாவுக்கும் உங்களோட வரவு சந்தோஷத்தையே தரும்...”
நான் ஏற்கெனவே மனதில் உருவாக்கி வைத்திருந்த தீர்மானங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் நொறுங்கிக் கீழே விழுந்தன. என் மனதில் உண்டான மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. நாங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறைக்குள் குளிர் காய்வதற்கேற்ற வசதி இல்லாமல் இருந்தது. அறை மிகவும் குளிர்ச்சியடைந்துபோய் இருந்தது. தாஸ்தாயெவ்ஸ்கியும் இதை உணர்ந்தார்.
“இந்த அறை ரொம்பவும் குளிருது. இன்னைக்கு சொல்லப்போனா குளிர் அதிகம். அன்னா, நீகூட இன்னைக்கு ரொம்பவும் அமைதியாவே தெரியிற...” சாம்பல் நிறத்தில் இருந்த என்னுடைய சில்க் ஆடையைப் பார்த்தவாறு தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “வேற எங்காவது புறப் பட்டுக்கிட்டு இருந்தியா?”
நான் பெரியம்மாவைப் பார்க்கப் போகும் விஷயத்தைச் சொன்னதும், அங்கு போவதற்குத் தான் தடைக்கல்லாக இருக்க விரும்பவில்லை என்றும், அங்குவரை தானே வண்டியில் கொண்டுபோய் விடட்டுமா என்றும் என்னிடம் அவர் கேட்டார். நான் அதற்குச் சம்மதித்தேன். நாங்கள் இருவரும் புறப்பட்டோம். வண்டி ஒரு வளைவில் திரும்பிய போது, தாஸ்தாயெவ்ஸ்கி நான் எங்கே கீழே விழுந்துவிடப் போகிறேனோஎன்று என்னுடைய இடுப்பில் தன் கைகளால் சுற்றிப் பிடித்தார். தொடர்ந்து என் கைகளில் முத்தமிட்டார். இடையை வளைத்துப் பிடித்தது, கைகளில் முத்தமிட்டது எல்லாவற்றையும் ஒன்றுமே கூறா மல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். “பயப்படாதீங்க... நான் கீழே விழுந்திட மாட்டேன்.”- நான் சொன்னேன்.
“நீ இந்த வண்டியில இருந்து கீழே விழுந்தா அவ்வளவுதான்.” -தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்.
நான் அதற்கு விழுந்து விழுந்து சிரித்தேன். தொடர்ந்து எங்களுக் கிடையே இருந்த திரை விலகியது. யாத்திரை தொடர்ந்தது. பயணம் முழுக்க நாங்கள் இருவரும் படு உற்சாகத்தில் இருந்தோம். என் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் எங்குபோய் மறைந்தனவோ தெரியவில்லை. பிரிகிற நேரத்தில் தாஸ்தாயெவ்ஸ்கி என் கைகளைப் பிடித்து அன்புடன் குலுக்கியவாறு சொன்னார்: “ரெண்டு நாட்கள் கழிச்சு, புதிய ஒரு நாவல் எழுத உதவி செய்ய நீ கட்டாயம் வரணும்...”
10
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்- 1866 நவம்பர் 8. அன்றுதான் என்மீது கொண்டிருந்த காதலை தாஸ்தாயெவ்ஸ்கி மனம் திறந்து கூறி, என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்பும் விஷயத்தைச் சொன்னார். அந்த நாள் கடந்துபோய் இப்போது ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன. அந்த அன்பு இழையோடிய நாளைப் பற்றிய நினைவுகள் இத்தனை ஆண்டுகள் கடந்துபோன பிறகும் இப்போதுகூட அப்படியே பசுமையாய் மனதில் ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு மாதத்திற்கு முன்புதான் எல்லாமே நடந்தது என்பது மாதிரி தோன்றுகிறது எனக்கு.
அது நல்ல பிரகாசமான ஒருநாள். நல்ல குளிர் வேறு இருந்தது. சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம் தாண்டித்தான் என்னால் தாஸ்தாயெவ்ஸ்கி வீட்டிற்கே போய் சேர முடிந்தது. ஒரு பித்துப் பிடித்த மனிதரைப்போல அவர் எனக்காகக் காத்து அமர்ந்திருக்கிறார். நான் வந்திருக்கும் ஓசையைக் கேட்டதுதான் தாமதம், அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து ஓடி வந்தார் தாஸ்தாயெவ்ஸ்கி.
“கடைசியில நீ வந்துட்டே...” அவர் என் தலையில் இருந்த துணியை அகற்றவும், அணிந்திருந்த கோட்டைக் கழற்றவும் உதவியவாறு சொன் னார். நாங்கள் இருவரும் அவரின் படிக்கும் அறைக்குள் நுழைந்தோம். அறையில் நல்ல வெளிச்சம் இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை- தாஸ்தாயெவ்ஸ்கி மிகவும் உற்சாகமான ஒரு மனிதராக இருந்தார். முகத்தில் நல்ல ஒளி தெரிந்தது. மகிழ்ச்சி நிரம்பிய மனிதராக அவர் இருப்பதைப் பார்த்தவுடனே புரிந்துகொள்ள முடிந்தது. எப்போதும் இருப்பதைவிட அன்று அவரின் ஒவ்வொரு அசைவிலும் இளமை தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
“நீ வந்ததை நினைச்சு நான் எவ்வளவு சந்தோஷப்படுறேன் தெரியுமா? நீ சொன்ன வாக்கை ஒருவேளை மறந்துட்டியோன்னு நான் நினைச்சிட்டேன்...”
“அப்படியொரு எண்ணம் உங்களுக்கு எப்படி வந்துச்சு? நான் பொதுவா வாக்குறுதி கொடுத்தா, அதை எந்தக் காலத்திலும் மீற மாட்டேன்...”
“மன்னிக்கணும். எனக்குத் தெரியும், நீ சொன்ன வாக்குப்படி நடப்பேன்னு. உன்னைத் திரும்பவும் இங்கு பார்க்க நேர்ந்ததுக்காக நான் எவ்வளவு சந்தோஷப்படுறேன் தெரியுமா?”
“உங்களைப் பார்க்குறதுக்கு நானும்தான் சந்தோஷப்படுறேன். நீங்க இப்போ ரொம்பவும் உற்சாகமா இருக்கீங்க. ஏதாவது புதுசா சொல்லப் போறீங்களா என்ன?”
“நிச்சயமா சொல்லத்தான் போறேன். நான் ஒரு கனவு கண்டேன். ரொம்ப ரொம்ப அதிசயமான ஒரு கனவு. அந்த மூலையில் இருக்குற பெட்டியைப் பார்த்தியா? ஒரு சைபீரிய நண்பர் எனக்குப் பரிசாகத் தந்த பெட்டி அது. என்னோட கையெழுத்துப் பிரதிகளையும், எனக்கு வர்ற கடிதங்களையும் அதுல போட்டு வச்சிருக்கேன்.