அந்த நாள் ஞாபகம் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
“நாம பார்க்கக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன?”- நான் கேட்டேன்.
“சரி... எங்கே வச்சு பாக்குறது? நீயே சொல்லு...”
“ஏதாவது ஒரு நண்பரோட வீட்ல... நாடக சாலையில்... சங்கீத சாலையில்...”
“அன்னா, உனக்குத் தெரியாதா நான் அதிகமா வெளியே போறதில்லைன்னு? நாடகத்திற்கோ இசையைக் கேட்பதற்கோ நான் போறதுன்றது ரொம்பவும் அபூர்வமான ஒண்ணு. வெளியே அப்படியே சந்திச்சாலும், ஒண்ணோ ரெண்டோ வார்த்தைகள்தாம் நாம பரிமாறிக்க முடியும். அதை நான் விரும்பல. அன்னா, நீ ஏன் உன்னோட வீட்டுக்கு என்னைக் கூப்பிடக் கூடாது? உன் குடும்பத்தைச் சேர்ந்தவங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கக் கூடாது?”
“கட்டாயம் நீங்க என் வீட்டுக்கு வரணும். அப்படி நீங்க வர்ற விஷயம் நாங்க மிகவும் மகிழ்ச்சியடைகிற ஒண்ணுன்றது மட்டும் உண்மை. ஆனாஒரே ஒரு விஷயத்திற்காகத்தான் நான் பயப்படுகிறேன். நானும் என் தாயும் உங்களை வீட்டுக்குக் கூப்பிடுற அளவுக்குத் தகுதியுள்ளவர்கள் இல்லை...”
“நான் எப்போ வீட்டுக்கு வரணும்?”
“முதல்ல நாவல் முடியட்டும். அதற்குப் பிறகு நாம இந்த விஷயத்தைத் தீர்மானிக்கலாம்.” நான் சொன்னேன்.
“இப்ப நம்ம முன்னாடி இருக்குற முக்கிய விஷயம் நாவலை முடிக்கிறதுதான் இல்லியா?”
ஸ்டெல்லோவ்ஸ்கிக்கு நாவலை முடித்துத் தர வேண்டிய இறுதி நாளான நவம்பர்- 1 விரைவில் நெருங்கிக் கொண்டிருந்தது. தன் கையெழுத்துப் பிரதியை வாங்கிக் கொள்ளாமல் ஸ்டெல்லோவ்ஸ்கி ஏதாவது சாக்குப் போக்குகள் சொன்னாலோ, இல்லாவிட்டால் தான் போகும் நேரத்தில் அங்கு இல்லாமல் வேறெங்காவது போய் அந்த ஆள் ஒளிந்து கொண்டாலோ என்ன செய்வது என்பதையும் தாஸ்தாயெவ்ஸ்கி நினைத்துப் பார்க்காமல் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை உண்டானால், தன்னுடைய எதிர்காலம் மிகவும் கேள்விக் குறியான ஒன்றாகிவிடும் என்பதை எண்ணி ஒருவித பதைபதைப்பு அவ ரிடம் உண்டானது. அவர் சந்தேகப்படுவது மாதிரி ஏதாவது நடந்தால், அப்படி நடப்பதிலிருந்து தன்னை அவர் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பது பற்றி வெளியே விசாரித்து அவருக்கு வழிகள் சொல்வதாக நான் கூறினேன். மாலையில் வீட்டுக்குப் போனதும், எனக்கு நன்கு தெரிந்த ஒரு வக்கீலைப் பார்த்துவிட்டு வரும்படி என் தாயை அனுப்பினேன். ஒரு வக்கீலிடமோ மாவட்ட அளவில் உள்ள ஒரு காவல் துறை அதிகாரியிடமோ நாவலின் கையெழுத்துப் பிரதியை ஒப்படைக்க வேண்டும். (ஸ்டெல்லோவ்ஸ்கி வசிக்கும் பகுதியாக அது இருக்க வேண்டும்). கையெழுத்துப் பிரதியை யார் வாங்கினாலும், அவர்களிடமிருந்து முறையான ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் தெரிந்து கொண்ட இந்த வழிகள் சரியானவையாக எனக்குப் பட்டன. தாஸ்தாயெவ்ஸ்கி இது பற்றி வெளியே விசாரித்த நபர்களும் இதே வழிகளைக் கையாளச் சொல்லி இருக்கிறார்கள்.
7
அக்டோபர் 29-ஆம் தேதி- நாங்கள் நாவலை எழுதுவதற்காக வேலை செய்த கடைசி நாள். "சூதாட்டக்காரன்' முழுமையாக முடிந்தது. அக்டோபர் 4 முதல் 29 வரை- மொத்தம் 26 நாட்கள். புத்தகம் வெற்றிகரமாக முடிந்ததால், அதைக் கொண்டாடும் வகையில், ஒரு ரெஸ்டாரெண்டில் நண்பர்களுக்காக (மைக்கோவ், மில்யுக்வோவ் போன்றவர்கள்) ஒரு விருந்து ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் காலையிலேயே கூறிவிட்டார் தாஸ்தாயெவ்ஸ்கி.
“ஏதாவது ரெஸ்டாரெண்டுக்கு இதற்கு முன்னாடி ஏதாவது விஷயத்திற்காக...?”- தாஸ்தாயெவ்ஸ்கி கேட்டார்.
“இல்லை. ஒருநாளும் போனதில்லை.”
“ஆனா... இந்த விருந்துக்கு அன்னா, நீ கட்டாயம் வரணும். வருவே இல்ல? என்னோட பார்ட்னர் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கணும்ன்றதுக்காக நான் குடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பிட்ட நாள்ல நாவல் முடிவடைஞ்சதுன்னா, அதற்குக் காரணம் அன்னா, நீதான்... அதனால அன்னா... நீ கட்டாயம் வந்தே ஆகணும். வருவே இல்ல?”
என் தாயிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று இதற்கு நான் பதில் சொன்னாலும், அந்த இடத்திற்குப் போவதாக இல்லை என்று நான் ஏற்கெனவே மனதில் தீர்மானம் எடுத்துவிட்டேன். அமைதியான குணத்தைக் கொண்டவளும், கூச்ச சுபாவம் உடையவளுமான நான் அந்த இடத்திற்குப் போவதற்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாதவள் என்பது எனக்குத் தெரியும்.
அக்டோபர் 30-ஆம் தேதி நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை அடைந்தபோது, என்றைக்கும் இல்லாத மாதிரி அன்று விசேஷமான முறையில் என்னை அவர் வரவேற்றார். நான் அறைக்குள் நுழைந்தபோது, அவரின் முகம் வழக்கத்தைவிட மிகவும் பிரகாசமாக இருந்தது. நான் அன்று எழுதிக் கொண்டு வந்த பாகம் நாங்கள் கணக்குப் போட்டிருந் ததைவிட அதிகமாக இருப்பது தெரியவரவே, நாங்கள் மிகவும் சந்தோஷமடைந்தோம். நாவல் முற்றிலும் முடிவடைந்து விட்டது என்றும், அதை முதலிலிருந்து ஒரு தடவை படித்துப் பார்த்துவிட்டு ஏதாவது சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தால் செய்துவிட்டு,அதை ஸ்டெல்லோவ்ஸ்கியிடம் கொடுக்க வேண்டும் என்றார் தாஸ்தாயெவ்ஸ்கி. பேசிய முறைப்படி என் கையில் ஐம்பது ரூபிளை அவர் என்னிடம் கொடுத்தார். என் கைகளை அன்புடன் பிடித்துக் குலுக்கினார். மனம் திறந்து நான் செய்த உதவிக்கு நன்றி கூறினார்.
அன்று தாஸ்தாயெவ்ஸ்கியின் பிறந்த நாள் என்பது எனக்குத் தெரியும். என்றைக்கும் இல்லாதது மாதிரி அன்று நான் சில்க்கால் ஆன ஆடை அணிந்திருந்தேன். நீளமாக இருக்கும் அந்த ஆடை எனக்கு மிகவும் நன் றாக இருப்பதாகவும், அந்த ஆடையில் நான் உயரமாகத் தெரிவதாகவும், அந்த ஆடையில் நான் மிகவும் அழகாக இருப்பதாகவும் சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி. அவர் அப்படி என்னைப் பாராட்டியதைக் கேட்டு உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அந்த நல்ல நிமிடங்கள் அடுத்த சில நொடிகளிலேயே இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்தன. தாஸ்தாயெவ்ஸ்கியின் சகோதரர் மிகயீலின் மனைவி எமிலியா அப்போது அங்கு வந்தாள். தாஸ்தாயெவ்ஸ்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக அவள் வந்திருந்தாள். தன்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகளில் இருந்து மீட்டவள் என்று என்னை எமிலியாவிற்கு தாஸ்தாயெவ்ஸ்கி அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த அளவிற்கு உயர்வாக என்னைப் பற்றி அவர் கூறியும், எமிலியா அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவளின் பார்வையும் நடத்தையும் நான் விரும்பக்கூடிய அளவிற்கு இல்லை என்பதே உண்மை. அவள் அப்படி நடந்து கொண்டதைப் பார்த்து ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டேன். அவளின் நடத்தையை நினைத்து மனதிற்குள் மிகவும் நான் வருத்தம் கொண்டேன் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். தாஸ்தாயெவ்ஸ்கி, எமிலியா அங்கு இருப்பதையே கொஞ்சமும் கணக்கில் எடுக்காமல் என்னுடன் நெருங்கிய நட்புணர்வுடன் பேசிக் கொண்டிருந்தார்.