அந்த நாள் ஞாபகம் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
நான் கண்ட கனவுல இந்தப் பெட்டிக்குப் பக்கத்துல உட்கார்ந்து நான் தாள்களைப் பொறுக்கி கட்டிக்கிட்டு இருக்கேன். தாள்களுக்கு மத்தியில் ஒளி வீசிக்கிட்டு இருக்கிற ஒரு பொருளைப் பார்த்தேன். ஒளி வீசிக்கிட்டிருக்கிற ஒரு சிறு நட்சத்திரத்தைப் போல அது இருந்துச்சு. அதைக் கையை நீட்டிப் பிடிக்க முயற்சித்தேன். ஆனா, அது கையில சிக்காம வழுக்கி வழுக்கி போய்க்கிட்டே இருந்துச்சு...”
“பிறகு?”
“அதுதான் பிரச்சினையே. அதற்குப் பிறகு அந்தக் கனவு எனக்குஞாபகத்துல இல்ல. தொடர்ந்து பல கனவுகள். கனவுல ஏன் அப்படிநடந்துச்சுன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. ஆனா, ஒரு வித்தியாச மான கனவு அதுன்றது மட்டும் உண்மை!”
“ஆளுங்க பொதுவாகக் சொல்வாங்க- கனவுகளுக்கு நேர் மாறாகத்தான் வாழ்க்கையில சம்பவங்கள் நடக்கும்னு.” ஏதோ வாய்க்கு வந்த படி நான் கூறிவிட்டேனே தவிர, அப்படிக் கூறியதற்காக நான் உண்மை யிலேயே வருத்தப்பட்டேன். நான் இவ்வாறு கூறிய அடுத்த நிமிடம் தாஸ்தாயெவ்ஸ்கியின் முகம் இருண்டு போய்விட்டது.
“அப்போ என்னோட வாழ்க்கையில சந்தோஷமான நிகழ்ச்சிகள் எதுவுமே நடக்க வாய்ப்பே இல்லைன்னு நீ சொல்றியா? என் கனவுகள் எல்லாமே தேவையில்லாத ஒரு வீண் எதிர்பார்ப்பு மட்டும்தானா?” -வருத்தம் தோய்ந்த குரலில் அவர் கேட்டார்.
“எனக்கு கனவுகளைப் பற்றி என்ன தெரியும்? சொல்லப்போனால், கனவுகள்ல எனக்கு நம்பிக்கையே இல்லை...”
தாஸ்தாயெவ்ஸ்கியின் உற்சாகமான மனநிலை என்னால் மாறிப் போனதற்காக நான உண்மையிலேயே வருத்தப்பட்டேன். அவர் இழந்த அந்த உற்சாக நிமிடங்களை மீண்டும் அவரிடம் கொண்டு வருவதற்காக நான் முயன்றேன். எனக்கு வரக்கூடிய கனவுகளைப் பற்றி அவர் கேட்டதற்கு, நான் சொன்னேன்: “என் கனவுல என்னோட ஒரு பழைய ஹெட்மிஸ்டரஸ் அடிக்கடி வருவாங்க. எப்போ பார்த்தாலும் அவங்க என்னைப் பற்றி ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதற்குப் பிறகு... எங்களோட பூந்தோட்டச் சுவர்ல இருந்து என் மேல வேகமா பாய்ந்து வந்து விழுற பூனை.. ஓ... உயிரே என்னை விட்டுப் போறது மாதிரி நான் பயந்து போயிடுவேன்...”
“சரிதான்... நீ சரியான ஒரு குழந்தை... உண்மையிலேயே ஒரு குழந்தைதான் நீ...” அன்பான ஒரு பார்வையுடன் தாஸ்தாயெவ்ஸ்கி என்னைப் பார்த்துச் சிரித்தார்: “சரி... பெரியம்மாவோட பிறந்தநாள் விருந்து எப்படி இருந்துச்சு?”
“நல்லா பொழுது போச்சு. விருந்து முடிஞ்சவுடனே, வயசான கிழவர்களெல்லாம் சீட்டு விளையாட ஆரம்பிச்சாங்க. இளைஞர்கள் படிப்பு அறையில் உட்கார்ந்து பல விஷயங்களையும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அங்கே பார்க்குறதுக்கு அழகான இரண்டு இளைஞர்கள் வேற இருந்தாங்க...”
இன்னொரு முறை தாஸ்தாயெவ்ஸ்கியின் முகம் இருண்டது. இதுவரை இருந்த சமநிலை லேசாக அவரிடம் மாறிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. வலிப்பு என்பதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது நேரடியாக எனக்குத் தெரியாது அல்லவா? அப்படிப்பட்ட ஒரு நோய் வருவதற்கான அறிகுறிகள்தான் இப்போது உண்டாகிக் கொண்டிருக்கின்றனவோ என்று நான் சந்தேகப்பட்டேன். அவ்வளவு தான்- ஆடிப் போனேன்.
நான் எப்போது அந்த வீட்டிற்குப் போனாலும், கடைசியாக அந்தவீட்டை விட்டுப் போனபிறகு நான் என்னவெல்லாம் செய்தேன்,. எதைப் பற்றியெல்லாம் சிந்தித்தேன் என்று தாஸ்தாயெவ்ஸ்கியிடம் விளக்கிச் சொல்வது எனக்கு வாடிக்கையான ஒன்றாக இருந்தது. கடந்துபோன நாட்களில் அவர் என்ன செய்தார் என்று அவரை நான் விசாரித்தேன்.
“ஒரு புதிய நாவலுக்கான கரு என் மனசுல உதிச்சது...” அவர் சொன்னார்.
“அப்படியா? நல்ல கருவா?”
“நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா.. ஒரு விஷயம். நாவலை எப்படி முடிக்கிறதுன்னுதான் தெரியல. ஒரு திருமணமாகாத பெண் ணோட எண்ணங்கள்தான் அந்த நாவலோட முக்கியமான விஷயம். நான் மாஸ்கோவில் இருந்தா, மருமகள் சோனியாகிட்ட இதைப்பற்றி கேட்டிருப்பேன். ஆனா, இங்க... அன்னா, உன்கிட்டதான் கேட்க வேண்டியிருக்கு...”
ஒரு பெரிய எழுத்தாளர் கேட்கப் போகும் விஷயத்திற்குப் பதில் சொல்ல நான் தயாரானேன்.
“இந்த நாவல்ல யார் கதாநாயகன்?”
“இளமையின் முதல் கட்டத்தைத் தாண்டிய ஒரு கலைஞன்தான் கதாநாயகன். கிட்டத்தட்ட என்னோட வயசுன்னு வச்சுக்கயேன்...”
“தயவு செய்து முழுக் கதையையும் சுருக்கமாகச் சொல்றீங்களா?” நான் புதிய நாவலின் கதையைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்.
என்னுடைய கேள்விக்குப் பதிலாக அவர் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். எனக்குத் தெரிந்தவரை அது சுயசரிதை என்றுதான் நான் சொல்வேன். கதாபாத்திரங்களும் சூழ்நிலைகளும் மட்டும் மாற்றப் பட்டிருந்தன. என்னிடம் அவர் இதற்கு முன்பு பேசிய பல விஷயங்களும் நாவலில் முழுமையாக இடம் பெற்றிருந்தன. தன்னுடைய முதல் மனைவியைப் பற்றியும், மற்ற சொந்தக்காரர்களைப் பற்றியும் மிகவும் விளக்கமாக தன் கதையில் வெளிப்படுத்தி இருந்தார் தாஸ்தாயெவ்ஸ்கி.
இந்தப் புதிய நாவலில் துன்பங்கள் நிறைந்த இளம் பிராயத்து வாழ்க்கையும், மரியாதைக்குரிய ஒரு தந்தையின் அகால மரணமும் உண்டு. விதியின் சில விளையாட்டுகளால் (அவற்றில் ஒரு நோயும் அடக்கம்) கதாநாயகன் தன்னுடைய கலை உலக வாழ்க்கையை விட்டு பத்து வருட காலம் விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அதற்குப் பிறகு அவன் மீண்டும் வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறான். (ஒரு கலைஞனின் புதிய பிறவி). அவன் ஒரு இளம்பெண் மீது காதல் கொள்கிறான். முதல் மனைவியின் மரணம், சொந்தங்களின் மரணம்(அன்பு கொண்ட ஒரு சகோதரியின்), வாழ்க்கையில் சந்தித்த பல வேதனையான நிகழ்ச்சிகள், கடன்கள், வறுமை... இப்படி நாவல் நீண்டு போய்க் கொண்டிருக்கிறது.
நாயகனின் மனநிலை, அவனின் தனிமை வாழ்க்கை, குடும்பத்தில் இருந்தும் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும் கிடைத்த கசப்பான அனுபவங்கள், ஒரு புதிய வாழ்க்கை வாழவேண்டும் என்ற வேட்கை, அன்பிற்கான ஏக்கம், புதிய மகிழ்ச்சியைத் தேடிச் செல்லும் அவனின் கடுமையான அலைச்சல்கள்- எல்லா விஷயங்களும் மிகப்பெரிய ஒரு கலைஞனின் பார்வையில் தெளிவாகவும் விரிவாகவும் கூறப்பட்டிருந் தன. கதாசிரியர் தன் சொந்த வாழ்க்கையின் கண்ட சம்பவங்களின் ஒட்டுமொத்த சாரமே இந்த நாவல் என்பதைக் கதையைப் படித்த நிமிடத்திலேயே யாரும் புரிந்து கொள்ள முடியும்.
தன்னுடைய நாயகனைச் சித்தரிக்கிறபோது, தேவையில்லாமல் அவர்அந்தக் கதாபாத்திரத்தை இருளடைந்து போன ஒன்றாகப் படைக்க வில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் வயது நாவலாசிரியரின் வயதைவிடகூடுதலாக இருந்தது. வாதம் பாதிக்கப்பட்டு தளர்ந்துபோன ஒரு கையுடன்வாழ்கிறான் அந்த ஓவியன்.