அந்த நாள் ஞாபகம் - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
உன்னை அதிகமா பார்க்கப் பார்க்க என்னோட விருப்பமும் கூடிக்கிட்டே இருந்தது. இன்னைக்கு இந்த உலகத்திலேயே உன் முகம் அளவுக்கு நான் விருப்பப்படுறது ஒண்ணுமே இல்ல. எனக்கு நீ ஒரு உலக அழகி. எனக்கு மட்டுமில்ல...” குழந்தையைப்போல மனம் திறந்து சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.
“முதல் நாள்ல இருந்தே உன்னோட நடவடிக்கைககள் ஒவ்வொண்ணை யும் நான் மிகவும் கவனமாகப் பார்த்துக்கிட்டே இருந்தேன். தனக் குள்ளே ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு மரியாதையுடன் எல்லா விஷயங்கள்லயும் நீ நடப்பதை நான் தவறாம கவனிச்சேன். எந்த அளவிற்கு நாகரீகமாக- எல்லாரும் மதிக்கிற மாதிரி நடந்து காட்டும் பெண்ணாக இவள் இருக்கிறாள்னு நானே உன்னை ஆச்சரியத்துடன் பார்ப்பேன். இப்படியொரு இளம் பெண்ணும் இந்த உலகத்துல இருக்கத்தான் செய்கிறாள்ன்றதை நினைச்சுப் பார்க்குறப்போ எனக்கே ரொம்பவும் சந்தோஷமா இருக்கும். பேச்சுக்கு நடுவே கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் என்னுடைய வாயிலிருந்து ஒரு வார்த்தை தேவை யில்லாமல் வந்து விழவே, உன்னுடைய முகபாவம் அந்த நிமிடமே மாறிப் போனதை நான் கவனிக்காம இல்ல... நீ என்னையே உற்றுப் பார்த்தே. அதற்குப் பிறகு நான் உன்னுடன் பேசுறப்பல்லாம் ரொம்பவும் கவனமா இருந்துதான் பேசுவேன். நான் ஏதாவது பேசி, உனக்கு அது பிடிக்காமப் போயி... எதற்கு வீண் வம்புன்னு மிக மிக எச்சரிக்கையா இருப்பேன்- உன்கிட்ட பேசறப்ப மட்டும். நீ என்னுடைய பிரச்சினைகளை உணர்ந்து அதில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டதையும், எனக்குக் கட்டாயம் உதவி செஞ்சே ஆகணும்னு மனப்பூர்வமா நினைச்சு செயல் பட்டதையும் பார்த்து நான் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போயிட்டேன். என்னோட தலைக்குமேல தொங்கிக்கிட்டு இருந்த ஆபத்தைப் பார்த்து உன் முகத்துல என் மேல எந்த அளவுக்கு இரக்கம் தெரிஞ்சதுன்றதை நான் பார்த்தப்போ... அப்பப்பா... உண்மையாவே சொல்றேன்... ஆடிப் போயிட்டேன். நான் எனக்குள்ளேயே கேட்டுக் கிட்டேன்... என்னோட நண்பர்கள் பலரும் உறவுக்காரங்களும் என் மேல அன்பு வச்சிருக்குறவங்களும் எனக்கு உதவி செய்றதா பல முறை சொல்லியிருக்காங்க. ஆனா... அவங்க எல்லாருமே வாயால பேசுறதோட நின்னுக்கிட்டாங்க. வெறும் வார்த்தைகள் மட்டுமே... எல்லாத்தையும் இழந்து நிற்கிறதுக்காக என்னை அவர்கள் பழி சுமத்தினாங்க. எனக்கு அந்த ஆபத்துல இருந்து தப்பிக்கிறதுக்கு வேற என்னதான் வழி இருக்கு? அவுங்க யாருமே என்னோட உண்மையான மனசைப் புரிஞ்சுக்கல. அப் படி இருக்குறப்போதான்... எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒரு இளம்பெண், அதைச் செய்றேன் இதைச் செய்றேன்னு வார்த்தைகளை அள்ளி வீசாமல்... என்னைப் பற்றி அது இதுன்னு குற்றம் சொல்லாமல்... எனக்காக உண்மையிலேயே உதவ முன்வந்தாள்... அவள் வார்த்தைகளை வச்சு என்கிட்ட விளையாடல. நாவல் முடியிற கட்டத்தை நெருங்கிக்கிட்டு இருந்தப்போ விரக்தியடைஞ்சு போயிருந்த என்னோட இதயத்துல ஒரு வெளிச்சம் தோண ஆரம்பிச்சுச்சு. குறிப்பிட்ட நாள்ல புத்தகம் முடிவடையப் போறது உறுதின்னு மனசுல பட ஆரம்பிச்சது. ஒவ்வொரு நாளும் நீ முடிச்சுக் கொண்டு வர்ற பக்கங்களை நாம எண்ணிப் பார்ப் போம்- உனக்கு ஞாபகத்துல இருக்கா? நாம இந்த முயற்சியில நிச்சயம் வெற்றி பெறுவோம்னு அப்பப்போ நீ சொல்றப்போ நான் எந்த அள வுக்குப் பலமுள்ள மனிதனா மாறினேன்னு உனக்குத் தெரியுமா? உன்னு டைய இதயம்தான் எந்த அளவிற்கு கருணையின் வடிவமா இருக்குன்னு நான் ஆச்சரியப்பட்டு நின்னிருக்கேன். நீ எனக்கு உதவி செய்யணும்னு நினைச்சு செயல்பட்டது ஆத்மார்த்தமானது. நீ என்னை முழுமையான அழிவுல இருந்து காப்பாத்துறதுக்காகப் பாடுபட்டே. நான் ஒரு தனி மனிதனா தத்தளிச்சிக்கிட்டு இருந்தப்போ... நீ செஞ்ச அந்த உதவி... நீ காட்டின அந்த அன்பு... அடடா... சத்தியமா சொல்றேன், நான் மனம் நெகிழ்ந்து போயிட்டேன். உன்னுடைய செயல் என் மனசுக்கு எவ்வளவு ஆறுதலா இருந்துச்சு தெரியுமா?
அப்போத்தான் என் மனசுல உன் மேல காதல்ன்ற ஒண்ணு உண்டாக ஆரம்பித்தது. உன்னுடைய அழகான முகத்தை நான் நினைச்சுப் பார்ப்பேன். உன்னைப்பற்றி பல விதங்கள்லயும் சிந்திச்சுப் பார்ப்பேன். "சூதாட்டக்காரன்' முடியுறப்பதான் நாம ஒவ்வொரு நாளும் பார்த்துக் கிட்டு வர்றது ஒரு முடிவுக்கு வரப் போகுதுன்றதையே நான் உணர்ந் தேன். இரண்டு பேரும் பார்க்கவே முடியாம பிரியறதா? அதை என் னால நினைச்சுப் பார்க்கவே முடியல... நீ இல்லாம என்னால வாழவே முடியாதுன்றதை நான் உணர்ந்தேன். அதற்குப் பிறகுதான் உன்னைத் திருமணம் செய்துக்கணும்ன்ற முடிவுக்கு நான் வந்தது...”
“நீங்க எதற்காக என்கிட்ட நேரடியா உங்க காதலைச் சொல்லல...? எதற்காக இன்னொரு கதையைச் சொல்லி சுத்தி வளைச்சு என்கிட்ட இந்த விஷயத்துக்கு வரணும்?”- நான் அவரைப் பார்த்துக் கேட்டேன்.
“என்னுடைய அன்பான அன்னாவே...” உணர்ச்சிவசப்பட்ட நிலை யில் தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “நீ எந்த அளவிற்கு எனக்குப் பொருத்தமானவளா இருக்கேன்றதை நினைச்சுப் பார்த்தப்போ எனக்கு மனசுல வெறுப்புதான் உண்டாச்சு. உன்னைக் கல்யாணம் பண்ணிக் கணும்னு நான் நினைக்கிறதே ஒரு தப்பான எண்ணம்னு என் மனசுல பட ஆரம்பிச்சது. நம் ரெண்டு பேருக்குமிடையே இருக்கும் வயது வித்தியாசத்தை நீயே நினைச்சுப் பாரேன்... நாம ரெண்டு பேருமே எந்த அளவுக்கு மாறுபட்ட நிலையில் நின்னுகிட்டு இருக்கோம்ன்றதை ஒரு நிமிடம் நினைச்சுப் பாரு... சொல்லப்போனா... நான் ஒரு மனப் போராட்டத்துல சிக்கிக்கிட்டேன்.. என்ன செய்றதுன்னு தெரியாம, என்ன முடிவு எடுக்குறதுன்னு தெரியாம அல்லாடுறேன். என்னைப் பற்றி நினைக்கிறப்போ எனக்கே வெறுப்பா இருக்குது. நோய்களோட போராடிக்கிட்டு... தனிமையா, விரக்தியடைஞ்ச மனநிலையில் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு... இதுதான் நான்! ஆனால் நீ? உயிரோட்டத் துடன் இருக்கே நீ. துடிப்பான இளமை! நான் என்னோட வாழ்க்கையைப் பெரும்பாலும் வாழ்ந்து முடிச்சிட்டேன். எவ்வளவு கஷ்டங்கள் அனுபவிக்கணுமோ அவ்வளவு கஷ்டங்களையும் நான் பார்த்தாச்சு. உன்னோட வாழ்க்கை சந்தோஷமய மானதுன்றது மட்டுமில்ல... வாழ்க்கை பலவித ஆனந்த நிலைகளுடன் உனக்கு முன் னாடி திறந்து கிடக்குது. எல்லாத்துக்கும் மேலே நான் பணம் அத்தனையும் இழந்து, வறுமையில சிக்கிக்கிட்டு, கழுத்தை நெரிக்கிற கடன் பிரச்சினைகள்ல மாட்டிக்கிட்டு... இப்படிப்பட்ட ஒரு அவல நிலையில் இருக்கேன் நம்மோட எதிர்காலம் எப்படி இருக்கும்? வேணும்னா கஷ்டங்களை அனுபவிச்சிக்கிட்டு வாழலாம்... கொஞ்ச நாட்கள் கழிச்சு ஒருத்தரையொருத்தர் குறை சொல்லிக்கிட்டு பிரியலாம். இல்லாட்டி அதற்கு நேர்மாறாக... உண்மையான காதலுடன் ஒருவரையொருவர் மனப்பூர்வமா விரும்பி வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை சந்தோஷத்துடன் வாழலாம்.”