அந்த நாள் ஞாபகம் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
சந்தேகப் புத்தி கொண்ட ஒரு மனிதன் அவன். அதே நேரத்தில் அவனின் இன்னொரு பக்கம் மிகவும் மென்மையானதாக இருக்கிறது. ஒரு ஓவியன் என்ற வகையில் அவனிடம் ஏகப்பட்ட திறமைகள் இருந்தாலும், அதிர்ஷ்ட தேவதை எந்தக் காலத்திலும் அந்தமனிதனுக்கு அருள் செய்யவே இல்லை என்பதே உண்மை. அவன் தான் கண்ட கனவுகளை கேன்வாஸில் வரையலாம் என்று பார்த்தால், அவனால் அது முடியவே இல்லை. விளைவு- அவன் ஒரு வகையான விரக்தியுணர்வில் மூழ்கிப்போய் உட்கார்ந்து விடுகிறான்.
கதாநாயகன் தாஸ்தாயெவ்ஸ்கிதான் என்பது உறுதியாகத் தெரிந்த வுடன் என்னால் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. “ஆனால், மிஸ்டர் தாஸ்தாயெவ்ஸ்கி, நீங்கள் இந்தக் கதாநாயகனோடு இவ்வளவு ஈடுபாட்டுடன் இருப்பதற்கான காரணம்?”
“உனக்கு அந்த ஆளைப் பிடிக்கலைன்னு எனக்குத் தெரியும்...”
“ஆனா, உண்மை நீங்க சொல்றதுக்கு நேர் எதிரானது. நான் அந் தக் கலைஞனை மிகவும் விரும்புகிறேன். அவன் நல்ல இதயத்துக்குச் சொந்தக்காரன். எவ்வளவு தூரம் அவன் மனம் கஷ்டங்களாலும் கசப்பான அனுபவங்களாலும் பாதிக்கப்பட்டிருக்கு! அதையெல்லாம் தாங்கிக்கொண்டு அவன் எந்த அளவிற்கு வாழ்க்கையைச் சந்திக்கி றான்! வேற யாராவது இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தா, நிச்சயம் கடுமையான மனம் கொண்டவர்களாக மாறிடுவாங்க. ஆனா... உங்களுடைய கதாநாயகன் இப்போதும் மற்றவர்கள்மேல் அன்பு செலுத்துறான். அவர்களுக்கு உதவி செய்யவும் தயாரா இருக்கான். ஓ... நீங்க அந்த அப்பாவி மனிதன்கிட்ட ரொம்பவும் கொடூரமா நடந்துக்கறீங்க...”
“சரிதான். நான் ஒத்துக்கறேன். அவனுக்கு மென்மையான ஒரு இதயம் இருக்கு. நீ அதைப் புரிஞ்சுக்கிட்டதுக்காக நான் எந்த அளவுக்கு சந்தோஷப்படுறேன் தெரியுமா? அந்தக் கலைஞனின் வாழ்க்கையில் ஒரு இளம் பெண் திடீர்னு வந்து நிற்கிறா. இது அந்தக் கதாநாயகனைப் பொறுத்தவரை விதியே நிர்ணயிச்ச ஒண்ணுன்னுதான் சொல்லணும். அந்தப் பெண்ணுக்கு அன்னா, உன்னோட வயசு... இல்லாட்டி உன்னை விட ரெண்டு வயசு அதிகமா இருக்கும். அவ்வளவுதான். நாமவேணும்னா அவளை "அன்னா'ன்னே கூப்பிடுவோம். கதாநாயகின்னு அவளை இனி நாம் சொல்லக் கூடாது. "அன்னா'ன்ற பேரு எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு...”
அவர் இப்படிச் சொன்னதும் எனக்கு ஞாபக்தில் வந்தது அன்னா கார்வின் க்ருக்கோவ்ஸ்கயாவைத்தான். கொஞ்சகாலம் தாஸ்தாயெவ்ஸ்கியின் மனைவியாக இருந்தவர் அந்தப் பெண். இருவருக்கும் ஒத்துவராத விஷயங்கள் நிறைய இருப்பது தெரிய வரவே, தாஸ்தாயெவ்ஸ்கியுடன் இணைந்து வாழும் வாழ்க்கை தனக்குசரிப்பட்டு வராது என்று சொல்லி, அவரிடமிருந்து அந்தப் பெண் விவாகரத்து வாங்கிப் பிரிந்து விட்டார். அந்தச் சமயத்தில் என் பெயரும் "அன்னா'தானே என்பதை நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. தாஸ்தாயெவ்ஸ்கி சொன்ன கதையில் எனக்கும் பங்கு இருக்கிறது என்பதை என்னவோ நான் எண்ணவே இல்லை. அன்னாகார்வின் க்ருக்கோவ்ஸ்கயாவிடமிருந்து சில நாட்களுக்கு முன்பு தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்திலிருந்துதான் இந்த நாவலுக்கான கருவை தாஸ்தாயெவ்ஸ்கி உருவாக்கியிருக்கிறார் என்று நான் தவறுதலாகப் புரிந்து கொண்டேன். அந்தக் கடிதத்தைப் பற்றி முன்பொரு முறை என்னிடம் தாஸ்தாயெவ்ஸ்கியே கூறியிருக்கிறார்.
கதாநாயகனை அவர் எப்படி உருவாக்கினாரோ, அப்படி அவர் கதாநாயகியைப் படைக்கவில்லை. கதாநாயகி அன்னா வசீகரமாகவும், எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பதாகவும், பிறரிடம் பேசும்போது புத்திசாலித்தனமான பெண்ணாகவும் இருந்தாள். அந்தக் காலத்தில் நான் பெண்களின் புற அழகிற்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருந்ததால், என்னையும் அறியாமல் நான் அவரிடம் கேட்டேன்:
“உங்களின் கதாநாயகி நல்ல அழகியா?”
“அவள் அழகி அல்ல. ஆனால் அவள் யாரையும் ஈர்க்கக் கூடியவள். அதைத்தான் என்னால சொல்ல முடியும். அவளோட முகம் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு...”
தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு ஏமாற்று வேலை செய்து கொண்டிருக்கி றார் என்று நான் நினைத்தேன். என் இதயம் பலவித சிந்தனைகளால் மிகவும் குழம்பிப்போய் கல்லாகி விட்டிருந்தது. அன்னா கார்வின் க்ருக்வோவ்ஸ்கயாவிற்கு எதிராக என் மனதில் ஒரு பயங்கர திரை திடீரென்று உருவாகி எழுந்தது. நான் சொன்னேன்: “உங்களுக்குஅன்னாவை ரொம்பவும் பிடிச்சிருக்கு. நீங்க கதையில் சித்தரிக்கிற மாதிரிஅவள் உண்மை வாழ்க்கையில் இருக்காளா என்ன?”
“நிச்சயமா... நான் அவளை கவனமாகப் பார்த்து, அவளின் ஒவ்வொருநடவடிக்கையையும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கேன். அந்த கலைஞன் அவள் ஓவியம் கத்துக்க வர்றப்போ அவளைப் பார்ப்பான். அவன்ஒவ்வொரு முறை அவளைச் சந்திக்கிறப்பவும், அவள் தனக்குச் சொந்த மானவள்ன்ற எண்ணம் அவன் மனசுல உண்டாகும். அவளிடம் மட்டுமே தன் வாழ்க்கையின் ஆனந்தம் அடங்கியிருக்கு என்று உறுதியாக நம்பி னான் அந்த ஓவியன். ஆனா, தன்னோட மனசுல இருக்குற எண்ணத்தை எப்படி அவன் வாழ்க்கையில நடைமுறைக்குக் கொண்டு வர்றது? அதுதான் அவனுக்குத் தெரியல. நடுத்தர வயதைக் கொண்டவனும், நோய்கள் உள்ளவனும், பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டிருப் பவனுமான அந்த ஓவியனால் சந்தோஷத்துடன் துள்ளித் திரியிற, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிற ஒரு இளம் பெண்ணை எப்படி அடைய முடியும்? அந்த ஓவியனைக் காதலிக்கிறதுன்னா, அந்த இளம் பெண்ணைப் பொறுத்தவரை, அதை ஒரு பெரிய தியாகம்னுதான் சொல்ல முடியும். அந்த ஓவியனுடன் வாழும் வாழ்க்கையை நினைச்சுப் பார்த்து ஒருநாள் அவள் வருத்தப்படப் போவதென்னவோ நிச்சயம். அவள் அந்த ஓவியனைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதுன்றது நடைமுறையில் சாத்தியமான ஒண்ணுதானா? நான் அப்படி நாவலைப் படைக்கிற பட்சம், மனரீதியாக நான் ஒரு மிகப் பெரிய தவறைச் செஞ்சிட்டேன்னு பலரும் என்னைப் பார்த்து திட்ட மாட்டாங்களா? இந்த விஷயத்துலதான் அன்னா, எனக்கு நீ உதவணும். நான் இதுக்கு மேலே என்ன செஞ்சா நல்லா இருக்கும்? சொல்லு...”
“இதுல என்ன இருக்கு? நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க? நீங்க சொல்றபடி அன்னா ஒரு தெளிவான சிந்தனை கொண்ட பெண்ணுன்னா,அந்த ஓவியனை அவள் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலாமே! இதுல என்ன தப்பு இருக்கு? அந்த ஓவியன் ஒரு நோயாளியாகவோ பணமில்லாதவனாகவோ இருந்துட்டுப் போகட்டும். புற அழகையும் சொத்தையும் பார்த்துத்தான் காதல் உருவாகுதுன்னு நீங்க நினைக் கிறீங்களா? நிச்சயமா கிடையாது. இதுல தியாகத்துக்கு எங்கே இடம் இருக்கு? அவள் உண்மையாகவே அந்த ஓவியனைக் காதலிக்கிறதா இருந்தா, இதுல வருத்தப்பட்டு நிக்கிறதுக்கு இடமே இல்லை...”
நான் இவ்வளவு விஷயத்தையும் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னேன். தாஸ்தாயெவ்ஸ்கி என்னையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருந்தார். “அவளால் வாழ்க்கை முழுவதும் அந்த ஓவியனைக் காதலிக்க முடியும்னு நீ நம்புறியா, அன்னா?”