அந்த நாள் ஞாபகம் - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
இந்தக் கேள்வியைக் கேட்டதும் அதற்குமேல் கேள்வியைத் தொடராமல் தனக்குத்தானே ஒரு கட்டுப்பாடு போட்ட மாதிரி நின்றிருந்தார் தாஸ்தாயெவ்ஸ்கி. இந்தக் கேள்வியை சொல்லப் போனால் அவர்மிகவும் தாழ்ந்த குரலிலேயே கேட்டார். “அந்த ஓவியன் நான்தான்னு வச்சுக்கோ. நான் உன்னைப் பார்த்து என்னோட காதலை வெளிப் படுத்துறேன்னு வச்சுக்கோ. அப்போ நீ வாழ்க்கை முழுக்க என்னுடன் இருப்பியா? சொல்லு... உன்னோட பதில் என்ன?” என்று கேட்டபோது, தாஸ்தாயெவ்ஸ்கியின் முகம் பலவித குழப்பங்களுடன் இருப்பது தெரிந்தது. நாங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்பதையும், நான் சொல்லக்கூடிய பதில் தாஸ்தாயெவ்ஸ்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இல்லையென்றால், மனரீதியாக அந்த மனிதர் தகர்ந்து போகப் போவது நிச்சயம் என்பதையும் நான் அறியாமல் இல்லை. எனக்கு மிகவும் விருப் பமான அந்த முகத்தைப் பார்த்தவாறு நான் சொன்னேன்: “நான் சொல்ற பதில் இதுதான். நான் உங்களைக் காதலிப்பேன். அந்தக் காதல் வாழ்க்கையின் இறுதி வரை கட்டாயம் இருக்கும்!”
அதற்குப் பிறகு தாஸ்தாயெவ்ஸ்கி காதல் மேலோங்க என்னிடம் சொன்ன வார்த்தைகளை என்னால் இங்கு வெளிப்படுத்த முடியவில்லை. நான் என் காதலை அவரிடம் வெளிப்படுத்திய பிறகு நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றவை என்பது மட்டும் உண்மை.
என் வாழ்க்கையில் நடைபெற்ற அந்தச் சம்பவத்தால் நான் சிலை என ஆகிவிட்டேன். அடக்க முடியாத அளவிற்கு எனக்குள் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடியது. என்னால் ஒருவிதத்தில் இதையெல்லாம் நம்பக்கூட முடியவில்லை. ஒரு மணிநேரம் கழிந்த பிறகு தாஸ்தாயெவ்ஸ்கி தன்னுடைய எதிர்காலத் திட்டங்களைச் சொல்லி, அதற்கு என்னுடைய அபிப்பிராயம் என்ன என்பதைக் கேட்டார். நான் சொன்னேன்:”அதைப் பற்றி இப்போ எப்படி என்னால சொல்ல முடியும்? நான் இப்போ சந்தோஷத்துல திக்கு முக்காடிப்போய் இருக்கேன்...”
அடுத்தடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றி ஒரு தெளிவான தீர்மானம் மனதில் உண்டாகாததாலும், எப்போது திருமணம் செய்து கொள்வது என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாததாலும் காதல் விஷயத்தை யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பது என்ற முடிவுக்கு நாங்கள் இருவருமே வந்தோம். என் தாயிடம் மட்டும் உண்மையைச் சொல்லி விடுவது என்று தீர்மானித்தோம். அடுத்த நாள் மாலையில் எங்கள் வீட்டிற்குத் தான் வருவதாகவும், அந்த நிமிடத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாகவும் என்னிடம் சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.
அவர் ஹாலுக்கு என்னுடன் வந்தார். கோட்டை அணிய எனக்கு அவர் உதவினார். நான் வெளியே புறப்பட்டபோது என்னைத் தடுத்து நிறுத்திய தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “அன்னா... இப்போ எனக்கு புரிஞ்சிருச்சு- அந்த சின்ன வைரக்கல்லுக்கு என்ன ஆச்சுன்னு...”
“என்ன சொல்றீங்க? அந்தக் கனவோட முடிவு உங்களுக்கு இப்போ ஞாபகத்துல வந்துருச்சா?”
“இல்ல... நான் அந்தக் கனவைப் பற்றி இப்போ ஒண்ணும் நினைக்கல. ஆனா, நான் கடைசியில அந்தச் சிறு வைரத்தைத் தேடிப் பிடிச் சிட்டேன். அந்த வைரத்தை என்னோட வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை பத்திரமா என்கிட்டயே வச்சு பாதுகாப்பேன்...”
“நீங்க தப்பா நினைக்கிறீங்க. அது வைரக்கல் ஒண்ணுமில்ல... சாதாரண கூழாங்கல் அது...”
நான் உரத்த குரலில் சொன்னேன்.
“இல்ல. இந்தத் தடவை என்கிட்ட எந்த தப்பும் நடக்கலைன்னு என்னால உறுதியான குரல்ல சொல்ல முடியும்.” கம்பீரமான குரலில் சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.
11
ஒரு மாலை நேரத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது தாஸ்தாயெவ்ஸ்கி என்னைப் பார்த்துக் கேட்டார்:
“அன்னா, நீ என்னைக் காதலிப்பதாக உனக்குத் தோன்றிய முதல் நாள் உனக்கு ஞாபகத்துல இருக்கா?”
நான் சொன்னேன்: “உங்களுக்குத் தெரியாதா? நான் சின்னப் பிள்ளையாயிருந்த காலத்திலிருந்தே தாஸ்தாயெவ்ஸ்கின்ற பேரு எனக்கு நல்லா தெரிஞ்ச பேரு. பதினஞ்சு வயசுல இருந்தே நான் உங்களுடனேஇல்லாட்டி நீங்க படைச்ச உங்களோட கதாபாத்திரத்துடனோ காதல் கொண்டுதான் இருக்கேன்...”
நான் இப்படிச் சொன்னதும் தாஸ்தாயெவ்ஸ்கி விழுந்து விழுந்து சிரித்தார். அவர் நான் கூறியதை மிகவும் ரசித்தார். அதே நேரத்தில் என்னைக் கிண்டல் பண்ணினார்.
“மனசுல என்ன இருக்கோ, அதைத்தான் நான் உங்ககிட்ட சொன்னேன். என்னோட தந்தை ஒரு புத்தகப் பிரியர். சமகால இலக் கியத்தைப் பற்றி பேசறப்ப அவர் சொல்வார்: "இன்னைக்கு நமக்கு மத்தியில இருக்குற எழுத்தாளர்கள் எப்படிப்பட்டவர்கள்? என் காலத் தில் புஷ்கினும் கோகோளும் ஷுக்கோவ்ஸ்கியும் இருந்தாங்க. இளைஞர் கள் மத்தியில் தாஸ்தாயெவ்ஸ்கி நல்ல பெயருடன் இருந்தார். அவரோட "ஏழைகள்' நூலுக்கு அப்படிப்பட்ட ஒரு பேரு! ஏதோ ஒரு அரசியல் குற்றத்திற்காக சைபீரியாவில் தண்டனை அனுபவிச்சிக்கிட்டு இருக் காராம் அவர்! நினைச்சுப் பார்க்கவே ரொம்ப அவமானா இருக்கு. அவரைப் பற்றி இப்போ எந்தவித தகவலும் இல்லாமலே போச்சு!”.
தாஸ்தாயெவ்ஸ்கியின் சகோதரர்கள் "வ்ரெம்யா' என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிப்பதைத் தெரிந்த என்னுடைய தந்தை எந்த அள விற்குச் சந்தோஷப்பட்டார் தெரியுமா? கடைசியில் தாஸ்தாயெவ்ஸ்கி திரும்பி வரப்போகிறார் என்பது தெரிந்து என் தந்தை அடைந்த மகிழ்ச் சிக்கு அளவே இல்லை. தாஸ்தாயெவ்ஸ்கி இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக அவர் கடவுளுக்கு நன்றி சொன்னார்.
1861-ஆம் ஆண்டு கோடை காலத்தில் நாங்கள் "பெதர்ஹோஃபி' என்ற இடத்தில் இருந்தோம். என் தாய் வெளியே போகிறபோது "வ்ரெம்யா' இதழை வாங்கிக் கொண்டு வரும்படி நானும் என் சகோதரி யும் அவளிடம் கெஞ்சுவோம். அப்படி அம்மா வாங்கிக்கொண்டு வந்த வுடன் என் தந்தைதான் முதலில் அதைப் படிப்பார். அந்த அப்பிராணி மனிதர் அந்தக் காலகட்டத்தில் ஒரு நோயாளியாக இருந்தார். உணவு உண்ட பிறகு படித்துக் கொண்டிருக்கும்போதே அவர் உறங்கி விடுவார். நான் அவருக்கு அருகில் மெதுவாக ஊர்ந்துபோய் அவரின் மடிமேல் கிடக்கும் பத்திரிகையை எடுத்துக் கொண்டு தோட்டத்தை நோக்கி ஓடுவேன். யாருடைய தொந்தரவும் இல்லாமல் தாஸ்தாயெவ்ஸ்கியின் கதையை எங்காவது ஒரு மூலையில் போய் அமர்ந்து நான் படிக்க முயற்சிப்பேன். ஆனால், அப்படி நான் நினைப்பேனே தவிர, நடைமுறை யில் அது சாத்தியமே இல்லாமல் போய்விடும். என்னுடைய அக்கா மரியா ஓடிவந்து, என்னைவிட மூத்தவள் என்ற அந்தஸ்தைப் பயன் படுத்தி என் கையில் இருந்த அந்தப் பத்திரிகையை அவள் பிடுங்கிக் கொள்வாள். அந்த இதழில் பிரசுரமாகியிருக்கும் தாஸ்தாயெவ்ஸ்கியின் தொடர்கதையைப் படிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை அவள் தன் காதுகளிலேயே போட்டுக் கொள்ள மாட்டாள்.