அந்த நாள் ஞாபகம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
அவர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் எளிமையாக- அதே சமயம் சரியான பதில்களைச் சொன்னேன். நான் சொன்ன பதில்கள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன என்று பின்னர் ஒருநாள் அவர் என்னிடம் சொன்னார். தனியார் அலுவலகங்களில் வேலைக்குப் போகிறபோது எந்த மாதிரியெல்லாம் கட்டுப்பாடுகளுடன் நாம் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எனக்கு நானே முன்கூட்டியே சில முடிவுகளை மனதிற்குள் எடுத்துக் கொண்டிருந்தேன். அதாவது- நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தொழில் ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தையே பாதிக்கிற மாதிரியான காரியங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் செய்யக் கூடாது என்பதில் திடமான கொள்கையைக் கொண்டிருந்தேன். அப்படி நாம் நடந்துகொள்ளும் பட்சம், யாராக இருந்தாலும் தங்கள் விருப்பப்படி நம்மிடம் நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? தாஸ்தாயெவ்ஸ்கியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகத்தில் ஒரு சிறு புன்னகையைக் கூட பார்க்க முடியாது. நான் அப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு நடந்தது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ஒழுக்கத்துடன்- அதே சமயம் ஒருவித மரியாதையுடன் நடந்து கொண்ட விதத்தில் அவர் மிகவும் சலனமடைந்து போனார் என்பதை பின்னாட்களில் அவரே என்னிடம் கூறியிருக்கிறார். எதையுமே மறுத்துப் பேசும் ஏகப்பட்ட பெண்களை வாழ்க்கையில் சந்தித்த ஒரு மனிதர் தாஸ்தாயெவ்ஸ்கி. அப்படிப்பட்ட பெண்களிடம் வருத்தப் படும்படியான பல அனுபவங்கள் அவருக்கு ஏற்கெனவே கிடைத் திருக்கின்றன. அவர்களிடமிருந்து மாறுபட்ட ஒரு பெண்ணாக என்னை அவர் பார்த்தார். என்னுடன் உரையாடுவதில் பல நேரங்களில் அவர் தன்னையே இழந்தார்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, ஃபெதோஸ்யா இரண்டு டம்ளர்களில் பால் கலக்காத தேநீர், ரொட்டி, எலுமிச்சம் பழம் ஆகியவற்றுடன் உள்ளே வந்தாள். ஒரு தட்டு நிறைய பலகாரங்களும் இருந்தன. தேநீர் அருந்திய பிறகு, எங்கள் உரையாடல் மேலும் சுவாரசியமும் சுவையும் கொண்டதாக மாறியது. ஆத்மார்த்தமான பேச்சாகவும் அது அமைந்தது. பல வருடங்களாக நமக்கு நன்கு அறிமுகமான ஒரு மனிதரைப்போல் தாஸ்தாயெவ்ஸ்கி திடீரென என் மனதிற்குத் தோன்றினார். மனதில் உண்டான அந்த மாற்றம் ஒரு வகையில் சந்தோஷத்தையே தந்தது.
எங்களின் உரையாடல் குறிப்பிட்ட ஒரு கட்டத்தை அடைந்தபோது, பெட்ரஷவ்ஸ்கி (தாஸ்தாயெவ்ஸ்கியும் அடங்கிய ஒரு புரட்சியாளர்கள் கூட்டம்) அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லி வந்தபோது, உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார் தாஸ்தாயெவ்ஸ்கி. அவர்களைப் பற்றி அவர் மிகவும் குறைப்பட்டுச் சொன்னார். “டெம்யா நாவ்ஸ்கி பரேட் மைதானத்தில் மற்ற குற்றவாளிகளுடன் நான் நின்று கொண்டிருந்த காட்சியை இப்போது நினைச்சுப் பார்க்கிறேன். எங்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் தண்டனை கிடைக்கப் போகிறது. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கப்போவது ஐந்தே ஐந்து நிமிடங்களே. எனக்கு முன்னால் காலம் முடிவே இல்லாமல் கிடப்பதாக நான் உணர்ந்தேன். மரண உடைகள் எங்களுக்கு அணிவிக்கப்பட்டு விட்டன. மூணு வரிசையா எங்களை நிறுத்தியிருந்தாங்க. நான் மூணாவது வரிசையில் எட்டாவது ஆளா நின்றிருந்தேன். முதலில் இருந்த மூணுபேர்களை தூண்களோடு சேர்த்துக் கட்டியிருந்தாங்க. ரெண்டு மூணு நிமிடங்கள்ல முதல் இரண்டு வரிசையில் நின்றிருக்கும் நபர்கள் சுட்டுக் கொல்லப்படுவாங்க. அதற்குப் பிறகு எங்களின் வரிசை. நான் எந்த அளவுக்கு அப்போ வாழணும்னு துடிச்சேன் தெரியுமா? வாழ்க்கை எவ்வளவோ மதிப்பு கொண்ட ஒண்ணா அப்போ எனக் குப்பட்டது. ஒருவேளை உயிருடன் வாழ நேர்ந்தால், அதை எந்த அளவிற்குப் பயனுள்ளதாக, நன்மைகள் நிறைஞ்சதாக ஆக்கமுடியும்னு ஒரு நிமிடம் நினைச்சுப் பார்த்தேன். நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதைப்போலபழைய நினைவுகள் என் மனசுல கடந்து வந்துச்சு. மீண்டும் அதே அனு பவங்களுடன் வாழும் ஒரு வாழ்க்கைக்காக நான் ஏங்கினேன்... திடீர்னு ஒரு மாற்றத்தை என்னால் உணர முடிஞ்சது. என் இதயமே அப்போ நின்றுவிடும்போல் இருந்தது. என்னுடைய நண்பர்களின் கட்டுகள் நீக்கப்பட்டன. ஒரு புதிய தண்டனைச் சட்டத்தை அப்போ அங்கு வாசிச்சாங்க. நான்கு வருட கடுமையான வேலை எனக்கு தண்டனையாக அளிக்கப்பட்டது. அப்படியொரு சந்தோஷம் தரக்கூடிய ஒரு நாளை நான் வாழ்க்கையில் அதுவரை சந்திச்சதே இல்லைன்றதுதான் உண்மை. எனக்கு வாழ்க்கை திரும்பவும் கிடைச்சிருக்கு. அலெக்ஸியேவ் கோட்டையில் நான் என்னுடன் இருந்த ஒரு கைதியோடு சேர்ந்து என்னை மறந்து பாட்டு பாடினேன். சைபீரியாவுக்கு என்னைக் கொண்டு போறதுக்கு முன்னாடி என்னோட சகோதரன் மிகயீல்கிட்ட நான் விடை பெற்றேன். தண்டனை எனக்கு அளிக்கப்பட்ட நாளான்று நான் என்னோட அண்ணனுக்கும் மருமகனுக்கும் எழுதின கடிதங்களை இப்பவும் பத்திரமாக என்கிட்ட வச்சிருக்கேன்.”
அவர் சொன்ன அந்தச் சம்பவம் இதயத்தையே பிளப்பதுபோல் இருந்தது. அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டு என் உடலே நடுங்கியது. எவ்வளவு திறந்த மனதுடன் தன் வாழ்க்கையில் நடைபெற்ற அந்தச் சம்பவத்தை மிகப் பெரிய மனிதரான தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் விளக்கிச் சொல்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவர் மேல் எனக்கு இனம் புரியாத மரியாதை உண்டானது. அன்று காலையில் தான் முதன்முறையாகப் பார்த்த பெண்ணிடம் தன் வாழ்க்கைச் சம்பவத்தை விவரித்து ஒரு மனிதர் கூறுவது என்றால்... அது சாதாரண விஷயமா என்ன? ஆரம்பத்தில் அதிகம் பேசாத, கர்வம் கொண்ட மனிதராக இருப்பார் தாஸ்தாயெவ்ஸ்கி என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் தன் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றையும் விளக்கி என்னிடம் கூறியபோது, என்னால் ஆச்சரியப்படவே முடிந்தது. அப்போது அவர் வாழ்ந்து கொண்டிருந்த சூழலைப்பற்றி பின்நாட்களில் என்னிடம் கூறியபோதுதான் அவர் அப்படி மனம் திறந்து எல்லா விஷயங்களையும் பேசியதற்கான காரணமே எனக்குப் புரிந்தது. அவர் அப்போது தனிமனிதனாக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. கடன்காரர்களின் தொல்லையும், பகைவர்களின் தொந்தரவும்கூட அவரை ஒவ்வொரு நாளும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. யாரிடமாவது தன் மனதில் உள்ள எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்ற நிலையில் அப்போது அவர் இருந்திருக்கிறார். மற்றவர்களின் விருப்பங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளக்கூடிய அதே நேரத்தில், தன்னுடைய சொந்தப் பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூறத் தயங்காத ஒரு மனிதராகவும் தாஸ்தாயெவ்ஸ்கி இருந்தார். நான் பார்த்த முதல் நாளிலேயே எந்தவித செயற்கைத்தனமான போர்வையும் இல்லாமல் திறந்த மனிதராக அவர் நடந்து கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.